அபகூக் 3 : 1 (RCTA)
இறைவாக்கினர் அபாக்கூக் என்பவரின் மன்றாட்டு; புலம்பல்களுக்குரிய பண்ணில் பாடுக:
அபகூக் 3 : 2 (RCTA)
ஆண்டவரே, உமது புகழைப்பற்றிக் கேள்விப்பட்டேன், ஆண்டவரே, உம் செயல்களைக் கண்டு அஞ்சுகிறேன். காலப்போக்கில் அவற்றை மீண்டும் செய்யும், காலப்போக்கில் அவற்றை அனைவரும் அறியச் செய்யும்; கோபத்திலும் இரக்கத்தை நினைவுகூரும்.
அபகூக் 3 : 3 (RCTA)
தேமானிலிருந்து கடவுள் வருகிறார், பாரான் மலையிலிருந்து பரிசுத்தர் வருகிறார்; அவருடைய மகிமை வானத்தை மூடியுள்ளது, அவர் புகழால் மண்ணுலகம் நிறைந்துள்ளது.
அபகூக் 3 : 4 (RCTA)
அவருடைய பேரொளி பகலைப் போல் இருக்கிறது, அவர் கையினின்று ஒளிக்கதிர்கள் வெளிப்படுகின்றன, அவை அவரது வல்லமையைப் போர்த்தியுள்ளன.
அபகூக் 3 : 5 (RCTA)
அவருக்கு முன்பாகக் கொள்ளைநோய் வருகிறது; அவருடைய அடிச்சுவடுகளில் காய்ச்சல் தொடர்கிறது.
அபகூக் 3 : 6 (RCTA)
அவர் நின்றால், நிலம் நடுங்குகிறது; அவர் பார்த்தால் மங்களினங்கள் திடுக்கிடுகின்றன. அப்போது, தொன்று தொட்டிருக்கும் மலைகள் சிதறுகின்றன, பண்டுமுதல் அவர் மலரடிகளைத் தாங்கி நின்ற பழங்காலக் குன்றுகள் அமிழ்ந்து போகின்றன.
அபகூக் 3 : 7 (RCTA)
கூஷாவின் கூடாரங்கள் அஞ்சுவதைக் கண்டேன், மாதியான் நாட்டுக் கூடாரங்கள் நடுங்குகின்றன.
அபகூக் 3 : 8 (RCTA)
ஆண்டவரே, நீர் உம்முடைய குதிரைகள் மேலும், வெற்றித் தேர் மேலும் ஏறி வரும் போது, ஆறுகளின் மீதோ நீர் சினங் கொண்டீர்? ஆறுகள் மேலோ உமது ஆத்திரம் பொங்கிற்று? கடல் மீதோ நீர் சீற்றம் கொண்டீர்?
அபகூக் 3 : 9 (RCTA)
நாணேற்றிய வில்லைக் கையிலேந்துகிறீர், அம்பறாத்தூணியை நீர் அம்புகளால் நிரப்புகிறீர். நிலத்தை ஆறுகளால் கிழிக்கிறீர்.
அபகூக் 3 : 10 (RCTA)
உம்மைப் பார்க்கும் போது மலைகள் நடுங்குகின்றன, பெரும் வெள்ளங்கள் பாய்ந்தோடுகின்றன; ஆழ்கடலானது தன் ஓசையை எழுப்புகிறது, தன் கைகளை மேலே உயர்த்துகின்றது.
அபகூக் 3 : 11 (RCTA)
பறந்தோடும் உம் அம்புகளுடைய ஒளியின் முன்னும், மின்னலைப் போலப் பளிச்சிடும் உம் ஈட்டியினுடைய சுடரின் முன்னும் எழுந்து வரும் கதிரவனின் ஒளி மறக்கப்படுகிறது; நிலாவும் தன் இருப்பிடத்திலே நின்று விடுகிறது.
அபகூக் 3 : 12 (RCTA)
கோபத்தோடு மண்ணுலகின் மேல் நடந்து போகிறீர், ஆத்திரத்தோடு மக்களினங்களை நசுக்குகிறீர்.
அபகூக் 3 : 13 (RCTA)
உம் மக்களை மீட்கவும், நீர் அபிஷுகம் செய்தவரை மீட்கவும் நீர் புறப்படுகிறீர்; கொடியவனின் வீட்டைத் தரைமட்டமாக்குகிறீர், பாறைவரையில் அதன் அடிப்படையை வெளியே புரட்டுகிறீர்.
அபகூக் 3 : 14 (RCTA)
எளியவனை மறைவாக விழுங்குபவனைப் போல, மகிழ்ச்சியோடு என்னைச் சிதறடிக்கச் சூறாவளி போலப் பாய்ந்து வருகிற அவனுடைய படைவீரர்களின் தலைகளை உம் ஈட்டிகளால் பிளக்குகிறீர்.
அபகூக் 3 : 15 (RCTA)
உம்முடைய குதிரைகளால் பெருங்கடலை, ஆழ்கடலை மிதிக்கிறீர்.
அபகூக் 3 : 16 (RCTA)
நான் கேட்டதும், என் உடலெல்லாம் நடுங்கிற்று, பேரொலி கேட்டு என் உதடுகள் படபடத்தன. என் எலும்புகள் உளுத்துப் போயின, என் கால்கள் தடுமாறின. எங்கள் மேல் படையெடுக்கும் மக்கள் மீது துன்பத்தின் நாள் வரும் வரை அமைதியாய்க் காத்திருக்கிறேன்.
அபகூக் 3 : 17 (RCTA)
அத்திமரங்கள் பூக்காவிட்டாலும், திராட்சைக் கொடிகளில் பழமில்லாவிட்டாலும், ஒலிவமரங்களின் பலன் அற்றுப் போயினும், வயல்களில் விளைச்சல் கிடைக்காவிடினும், கிடையில் ஆடுகள் இல்லாமற் போனாலும், தொழுவங்களில் மாடுகள் இல்லாதிருந்தாலும்,
அபகூக் 3 : 18 (RCTA)
நான் ஆண்டவரில் அக்களிப்பேன், என் மீட்பரான கடவுளில் அகமகிழ்வேன்.
அபகூக் 3 : 19 (RCTA)
ஆண்டவராகிய இறைவனே என் வலிமை, என் கால்களை மான் கால்களைப் போல் அவர் ஆக்குவார், உயரமான இடங்களில் என்னை நடத்திச் செல்வார். பாடகர் தலைவனின் பண்; இசைக்கருவி: நரம்புக் கருவி.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19