ஆதியாகமம் 6 : 1 (RCTA)
மனிதர்கள் பூமியில் பலுகிப் பெருகத் தொடங்கிப் பெண் மக்களைப் பெற்றெடுத்த பின்,
ஆதியாகமம் 6 : 2 (RCTA)
மனிதப் புதல்வியர் அழகு மிகுந்தவர்களாய் இருக்கக் கண்ட தெய்வப் புதல்வர் அவர்களுள் தங்களுக்கு விருப்பமானவர்களை மணந்து கொண்டார்கள்.
ஆதியாகமம் 6 : 3 (RCTA)
அப்போது கடவுள்: நம் ஆவி மனிதனிடம் என்றென்றும் தங்காது. ஏனென்றால் அவன் மாமிசமே! இனி அவனுக்கு வாழ்நாள் நூற்றிருபது ஆண்டுகளாய் அமையும் என்றார்.
ஆதியாகமம் 6 : 4 (RCTA)
அக்காலத்தில் பூமியின் அரக்கர் இருந்தனர். ஏனென்றால், தெய்வப் புதல்வர் மனிதப் புதல்வியரை மணந்து கொண்ட பின் இவர்களும் பிள்ளைகள் பெற்றனர். இவர்கள் வயிற்றில் பிறந்த பிள்ளைகள் தொடக்கத்தில் பேர் பெற்ற வல்லவர்களாய் இருந்தனர்.
ஆதியாகமம் 6 : 5 (RCTA)
மண்ணுலகில் மனிதருடைய அக்கிரமம் பெருகினதையும், அவர்கள் எண்ணமெல்லாம் எப்போதும் தீமையையே நாடியிருந்ததையும் கண்டு, கடவுள், இவ்வுலகில் மனிதனைப் படைத்து குறித்து வருந்தினார்.
ஆதியாகமம் 6 : 6 (RCTA)
அப்போது அவர் மனம் நொந்து: நாம் படைத்த மனித இனத்தைப் பூமியில் இல்லாதபடி அழித்து விடுவோம்;
ஆதியாகமம் 6 : 7 (RCTA)
மனிதன் முதல் மிருகங்கள் வரையிலும், ஊர்வன முதல் வானத்துப் பறவைகள் வரையிலும், எல்லாவற்றையும் அழித்தொழிப்போம்; ஏனென்றால், அவற்றைப் படைத்ததை நினைத்து வருந்துகிறோம் என்றார்.
ஆதியாகமம் 6 : 8 (RCTA)
ஆனால் நோவா ஒருவர் மட்டும் ஆண்டவர் திருமுன் அருள் பெற்றவர் ஆனார்.
ஆதியாகமம் 6 : 9 (RCTA)
நோவாவின் தலைமுறை அட்டவணையாவது: நோவா தம் காலத்தில் இருந்தவர்களுள் நீதிமானும் உத்தமனுமாய்க் கடவுளுக்கு ஏற்க நடந்து வந்தார்.
ஆதியாகமம் 6 : 10 (RCTA)
அவர் சேம், காம், யாப்பேத் என்னும் மூன்று புதல்வரைப் பெற்றார்.
ஆதியாகமம் 6 : 11 (RCTA)
பூமியோ கடவுள் கண்ணுக்குக் கெட்டிருந்தது; அதிக அக்கிரமத்தால் நிறைந்திருந்தது.
ஆதியாகமம் 6 : 12 (RCTA)
மாமிசம் கொண்ட மனிதர் யாவரும் பூமியிலே கெட்ட வழியில் நடக்கிறார்கள்; அதனால் உலகம் கெட்டுப் போயிற்று எனக் கடவுள் கண்டு, நோவைவை நோக்கி:
ஆதியாகமம் 6 : 13 (RCTA)
மாமிசம் கொண்டுள்ள மனிதர்களை நாம் அழித்து விடத் தீர்மானித்துள்ளோம். அவர்களாலே பூமி அக்கிரமத்தில் நிறைவுற்றபடியால், அவர்களைப் பூமியோடு அழிப்போம்.
ஆதியாகமம் 6 : 14 (RCTA)
நன்கு இசையும் மரங்களால் நீ ஒரு பெட்டகத்தைச் செய்து, அப்பெட்டகத்திலே சிற்றறைகளை உண்டாக்கி, அதன் உள்ளும் புறமும் தார் பூசு.
ஆதியாகமம் 6 : 15 (RCTA)
அப்பெட்டகத்தின் நீளம் முந்நூறு முழமும், அகலம் ஐம்பது முழமும், உயரம் முப்பது முழமுமாக இருக்கட்டும்.
ஆதியாகமம் 6 : 16 (RCTA)
பெட்டகத்தின் மேல் தட்டுக்கு ஒரு முழம் தாழ்த்தி ஒரு சன்னல் இருக்கட்டும். பெட்டகத்தின் கதவை ஒரு பக்கத்தில் அமைத்து, ஒன்றன் மேல் ஒன்றாக மூன்று தட்டுகளையும் அமை.
ஆதியாகமம் 6 : 17 (RCTA)
ஏனென்றால் வானத்தின் கீழிருக்கிற உயிரினங்கள் எல்லாவற்றையும் அழிக்க, இதோ நாம் பூமியின் மேல் வெள்ளப் பெருக்கு வரப் பண்ணுவோம். பூமியிலுள்ள யாவும் அடியோடு அழியும்.
ஆதியாகமம் 6 : 18 (RCTA)
ஆனால் உன்னோடு நம்முடைய உடன்படிக்கையை நிலை நிறுத்துவோம். பெட்டகத்துள் நீயும் புகுவாய்; உன்னோடு உன் புதல்வர்களும், உன் மனைவியும், உன் புதல்வர்களின் மனைவியரும் நுழைவார்கள்.
ஆதியாகமம் 6 : 19 (RCTA)
அன்றியும், உன்னுடன் உயிரோடு காக்க வேண்டிய எல்லாவித உயிரினங்களிலும் ஆணும் பெண்ணுமாக இனத்திற்கு ஒரு சோடியைப் பெட்டகத்திலே சேர்ப்பாய்.
ஆதியாகமம் 6 : 20 (RCTA)
இவ்வாறு பல்வேறுப்பட்ட பறவைகளிலும் மிருகங்களிலும், பூமியில் ஊர்வனவற்றிலும் இனத்திற்கு ஒரு சோடி உயிரோடு காக்கப்பட உன்னுடன் நுழையும்.
ஆதியாகமம் 6 : 21 (RCTA)
ஆதலால், நீ உண்ணத் தக்க உணவுப் பொருட்களையும் சேகரித்துப் பெட்டகத்தில் வைத்துக் கொள். அது உனக்கும் அவைகளுக்கும் உணவாய் அமையும் என்று கூறினார்.
ஆதியாகமம் 6 : 22 (RCTA)
நோவா கடவுள் கட்டளைப்படி எல்லாம் செய்து முடித்தார்.
❮
❯