ஆதியாகமம் 47 : 1 (RCTA)
பின் சூசை பாரவோனிடம் போய்: என் தந்தையும் என் சகோதரர்களும், தங்கள் ஆடுமாடு முதலியவற்றோடும், தங்களுக்குச் சொந்தமான எல்லாவற்றோடும் கானான் நாட்டிலிருந்து வந்திருக்கிறார்கள். இதோ, அவர்கள் யேசேன் நாட்டில் தங்கியிருக்கிறார்கள் என்று அறிவித்தார்.
ஆதியாகமம் 47 : 2 (RCTA)
பின், கடைசியில் பிறந்த தம் சகோதரரில் ஐந்து பேரை அரசன் முன்பாகக் கொண்டு போய் நிறுத்தினார்.
ஆதியாகமம் 47 : 3 (RCTA)
அவன் அவர்களை நோக்கி: உங்கள் தொழில் என்ன என, அவர்கள்: உமது அடிமைகளாகிய நாங்கள் எங்கள் முன்னோரைப் போல் ஆடு மேய்ப்பவர்கள்.
ஆதியாகமம் 47 : 4 (RCTA)
உம் நாட்டிலே குடியிருக்க வந்தோம். ஏனென்றால், கானான் நாட்டிலே மிகக் கொடிய பஞ்சம் ஏற்பட்டதால், அடியோர்களின் மந்தைகளுக்கு மேய்ச்சல் இல்லாமல் போயிற்று. அடியோர்கள் யேசேன் நாட்டில் தங்கியிருக்கும்படி உத்தரவளிக்க வேண்டுமென்று மன்றாடுகிறோம் என்றனர்.
ஆதியாகமம் 47 : 5 (RCTA)
அப்பொழுது அரசன் சூசையை நோக்கி: உம் தந்தையும் உம்முடைய சகோதரர்களும் உம்மிடம் வந்திருக்கிறார்களே, எகிப்து நாடு உமது பார்வையில் இருக்கிறது.
ஆதியாகமம் 47 : 6 (RCTA)
சிறந்த இடத்தில் அவர்கள் குடியேறும்படி செய்யும். யேசேன் நாட்டையே அவர்களுக்குச் சொந்தமாய்க் கொடும். அவர்களில் திறமையுள்ளவர்கள் உண்டென்று நீர் அறிவீராயின், என் மந்தைகளைப் பேணுவதற்கு அவர்களைத் தலைவராக நியமிக்கலாம் என்றான்.
ஆதியாகமம் 47 : 7 (RCTA)
அதன் பின், சூசை தம் தந்தையை அழைத்து வந்து அரசன் முன் நிறுத்தினார். யாக்கோபு அரசனுக்கு ஆசிமொழி கூறின பின்,
ஆதியாகமம் 47 : 8 (RCTA)
பாரவோன் அவனை நோக்கி: உமது வயதென்ன என்று வினவினான்.
ஆதியாகமம் 47 : 9 (RCTA)
அதற்கு அவன்: என் அலைந்து திரிந்த வாழ்வின் காலம் நூற்று முப்பதாண்டுகள்; அது கொஞ்சமுமாய், கேடுகள் நிறைந்ததுமாய் இருந்துள்ளதுமன்றி, என் முன்னோருடைய அலைந்த வாழ்வின் ஆயுட்காலத்தை வந்து எட்டவுமில்லை என்று பதில் கூறிய பின்,
ஆதியாகமம் 47 : 10 (RCTA)
அரசனை ஆசீர்வதித்து வெளியே போனான்.
ஆதியாகமம் 47 : 11 (RCTA)
பின் சூசை, பாரவோன் கட்டளையிட்டிருந்த படி, தம் தந்தைக்கும் சகோதரர்களுக்கும் எகிப்து நாட்டிலே வளமான நாடாகிய இறாம்சேசை உரிமையாய்க் கொடுத்தார்.
ஆதியாகமம் 47 : 12 (RCTA)
மேலும், அவர்களையும், தம் தந்தை வீட்டார் அனைவரையும் பராமரித்து, அவரவர்களுக்கு உணவும் அளித்து வந்தார்.
ஆதியாகமம் 47 : 13 (RCTA)
ஏனென்றால், பூமியெங்கும் உணவு கிடைக்கவில்லை. பஞ்சம் மிகக் கொடியதாய் இருந்தது. குறிப்பாக, அஃது எகிப்திலும் கானான் நாட்டிலும் கொடியதாய் இருந்தது.
ஆதியாகமம் 47 : 14 (RCTA)
சூசை அந்நாட்டாருக்குத் தானியம் விற்று, அதனால் வந்த பணமெல்லாம் சேர்த்து அரசனின் கருவூலத்தில் சேர்த்து வைத்து வந்தார்.
ஆதியாகமம் 47 : 15 (RCTA)
தானியம் வாங்க வகையில்லாமல் போன போது, எகிப்தியர் எல்லாரும் சூசையிடம் வந்து: எங்களுக்கு உணவு தாரும். பணம் இல்லையென்பதனால், உம்முன் நாங்கள் சாக வேண்டுமோ என்றனர்.
ஆதியாகமம் 47 : 16 (RCTA)
அதற்கு அவன்: உங்களிடம் பணம் இல்லாவிட்டாலும், உங்கள் ஆடு மாடு முதலியவற்றைக் கொண்டு வாருங்கள்; அவற்றுக்குப் பதிலாக உங்களுக்குத் தானியங்களைத் தருவேன் என்று பதில் சொல்லக் கேட்டு,
ஆதியாகமம் 47 : 17 (RCTA)
அவர்கள் போய் மந்தைகளைக் கொண்டு வந்த போது, சூசை குதிரைகளையும் ஆடுமாடுகளையும் கழுதைகளையும் வாங்கிக் கொண்டு, அவற்றுக்குப் பதிலாக அவர்களுக்குத் தானியங்களைக் கொடுத்தார். இப்படி மிருகங்களைக் கைம்மாறாகப் பெற்று, அவர்களை அந்த ஆண்டு காப்பாற்றி வந்தார்.
ஆதியாகமம் 47 : 18 (RCTA)
அடுத்த ஆண்டிலே அவர்கள் மறுபடியும் வந்து, அவரை நோக்கி: பணமும் செலவழிந்து போயிற்று; ஆடுமாடு முதலியவையும் இனி மேல் இல்லை. இதைத் துரை அவர்களுக்குத் தெரிவிக்காது இருப்பது முறையல்ல. இனி என்ன? உடலும் எங்கள் நிலங்களும் போக எங்களிடம் மீதியானது வேறொன்றும் இல்லையென்று தங்களுக்குத் தெரியும்.
ஆதியாகமம் 47 : 19 (RCTA)
உமது கண்முன் நாங்கள் ஏன் சாக வேண்டும்? எங்கள் நிலங்களும் நாங்களுமே உமது உடைமைகளாய் இருப்போம். அரசருக்கு அடிமைகளாக எங்களை வாங்கி, எங்களுக்குத் தானியம் கொடும். கொடாவிட்டால், நாங்களும் சாக, நிலமும் பாழாய்ப் போகும் என்றனர்.
ஆதியாகமம் 47 : 20 (RCTA)
அப்படியே சூசை எகிப்தியருடைய நிலங்களையெல்லாம் வாங்கிக் கொண்டார். ஏனென்றால், பசி பொறுக்க மாட்டாமல், அவர்கள் தங்கள் நிலம் சொத்து எல்லாவற்றையும் விற்று விட்டனர். அவை பாரவோனுக்குச் சொந்தமாயின.
ஆதியாகமம் 47 : 21 (RCTA)
(பூமி மட்டுமல்ல) ஓர் எல்லையிலிருந்து மறு எல்லை வரையிலும் உள்ள குடிகளெல்லாம் (அரசனுக்கு அடிமைகளானார்கள்).
ஆதியாகமம் 47 : 22 (RCTA)
குருக்களுடைய நிலத்தை மட்டும் அவர் வாங்கவில்லை. ஏனென்றால், அது அரசனாலே (மானியமாக) அவர்களுக்குக் கொடுக்கப்பட்டு இருந்ததனாலும், அவர்களுக்கு அரசாங்கமே தானியங்களைக் கொடுத்து வந்ததனாலும், அவர்கள் தங்கள் நிலங்களை விற்க வேண்டிய தேவை ஏற்படவில்லை.
ஆதியாகமம் 47 : 23 (RCTA)
அப்பொழுது சூசை மக்களை நோக்கி: இன்று முதல் பாரவோன் உங்களையும் உங்கள் நிலங்களையும் உடைமையாகக் கொண்டிருக்கிறார். அது உங்களுக்குத் தெரியும். இப்போது, உங்களுக்கு விதைத் தானியம் கொடுக்கிறேன்; வாங்கி, நிலத்தில் விதையுங்கள்.
ஆதியாகமம் 47 : 24 (RCTA)
அது விளைந்தால் விளைச்சலில் ஐந்திலொரு பாகம் அரசருக்குச் செலுத்துவீர்கள். மற்ற நான்கு பங்கு விதையாகவும், உங்களுக்கும் உங்கள் வீட்டாருக்கும் பிள்ளைகளுக்கும் உணவாகவும், உங்களுக்குச் சொந்தமானதாகவும் இருக்கட்டும் என்று சொன்னார்.
ஆதியாகமம் 47 : 25 (RCTA)
அதற்கு அவர்கள்: எங்கள் உயிரே தங்கள் கைகளில் இருக்கிறது. துரை அவர்கள் கண்களில் எங்களுக்குத் தயவு கிடைத்தால் போதும். நாங்கள் மகிழ்ச்சியோடு அரசருக்குப் பணிவிடை செய்வோம் எனப் பதில் கூறினார்.
ஆதியாகமம் 47 : 26 (RCTA)
அது முதல் இந்நாள் வரை எகிப்து நாடெங்கும் ஐந்திலொரு பாகம் அரசர்களுக்குச் செலுத்துவது வழக்கம். இது தேசச் சட்டம் போல் ஆயிற்று. குருக்களுடைய நிலங்களுக்கு மட்டும் அத்தகைய வரி இல்லை.
ஆதியாகமம் 47 : 27 (RCTA)
இஸ்ராயேல், எகிப்திலே- அதாவது, யேசேன் நாட்டிலே- குடியிருந்து, அதனை உரிமை கொண்டு, அங்கே மிகவும் பலுகிப் பெருகி வந்தான்.
ஆதியாகமம் 47 : 28 (RCTA)
யாக்கோபு பதினேழாண்டு எகிப்தில் இருந்தான். அவன் வாழ்நாள் மொத்தம் நூற்று நாற்பத்தேழு ஆண்டுகள்.
ஆதியாகமம் 47 : 29 (RCTA)
அவன், தன் மரண நாள் நெருங்கி வருவதைக் கண்டு, தன் மகன் சூசையை வரவழைத்து, அவரை நோக்கி: என் மேல் உனக்கு அன்பிருக்குமாயின், உன் கையை என் தொடையின் கீழ் வைத்து, என்னை எகிப்தில் அடக்கம் செய்வதில்லையென்று சத்தியமாய்ச் சொல்லக் கருணை கொள்வாயாக.
ஆதியாகமம் 47 : 30 (RCTA)
நான் என் மூதாதையரோடு (மரணத்) துயில் கொள்ள விரும்புகின்றேன். எனவே, நீ என்னை இந்நாட்டிலிருந்து கொண்டு போய், என் முன்னோர்களின் கல்லறையிலே என்னையும் அடக்கம் பண்ணுவாயாக என்றான். அதற்கு சூசை: நீர் கட்டளையிட்டபடியே செய்வேன் என்றார்.
ஆதியாகமம் 47 : 31 (RCTA)
அப்பொழுது அவன்: எனக்கு ஆணையிட்டுக் கொடு என்றான். அவர் ஆணையிட்டுக் கொடுக்கவே, இஸ்ராயேல், படுக்கையின் தலைமாட்டுப் பக்கம் திரும்பிக் கடவுளைத் தொழுதான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31

BG:

Opacity:

Color:


Size:


Font: