ஆதியாகமம் 45 : 1 (RCTA)
(அப்பொழுது) சூசை தம் அருகே நின்ற அத்தனை பேருக்கு முன்பாகத் தம்மை அடக்கிக் கொள்ளக் கூடாமல், தாமும் தம் சகோதரரும் ஒருவரையொருவர் அடையாளம் கண்டு கொள்கையில் பிறர் ஒருவரும் இல்லாதிருக்கும் வண்ணம், மற்றவர்கள் எல்லாரும் வெளியே போகும்படி கட்டளையிட்டார்.
ஆதியாகமம் 45 : 2 (RCTA)
பின், எகிப்தியரும் பாரவோன் வீட்டாரும் கேட்கும் அளவுக்குத் தேம்பி அழுது,
ஆதியாகமம் 45 : 3 (RCTA)
தம் சகோதரர்களை நோக்கி: நானே சூசை! என் தந்தை இன்னும் உயிரோடிருக்கிறாரா என்று அலறிக் கேட்டார். ஆனால், தம் சகோதரர்கள் திகிலடைந்து பதில் சொல்ல இயலாமலிருப்பது கண்டு,
ஆதியாகமம் 45 : 4 (RCTA)
அவர் அவர்களை அன்போடு நோக்கி: என் அண்டை வாருங்கள் என்றார். அவர்கள் பக்கத்தில் வந்த போது, அவர்: நீங்கள் எகிப்துக்குச் செல்வோரிடத்தில் விற்ற உங்கள் சகோதரனாகிய சூசை நான் தான்! அஞ்சாதீர்கள்.
ஆதியாகமம் 45 : 5 (RCTA)
நான் இந்நாட்டிற்கு வந்து சேருமாறு நீங்கள் என்னை விற்று விட்டது குறித்து மனம் கலங்க வேண்டாம். ஏனென்றால், உங்கள் உயிரைக் காப்பாற்றும் பொருட்டு, கடவுளே உங்களுக்கு முன்னே என்னை எகிப்துக்கு அனுப்பியருளினார்.
ஆதியாகமம் 45 : 6 (RCTA)
பூமியிலே பஞ்சம் தொடங்கி இரண்டாண்டு ஆயிற்று. இன்னும் ஐந்தாண்டுகள் வரையிலும் உழவும் அறுவடையும் நடந்தேறா.
ஆதியாகமம் 45 : 7 (RCTA)
ஆதலால், பூமியிலே உங்கள் இனம் ஒழியாமல் இருக்கும் படியாகவும் நீங்கள் வேண்டிய உணவுகளைப் பெற்றுப் பிழைக்கும்படியாகவும் அல்லவா கடவுள் உங்களுக்கு முன் என்னை இவ்விடத்திற்கு வரச் செய்தார்?
ஆதியாகமம் 45 : 8 (RCTA)
உங்கள் திட்டத்தால் அல்ல, கடவுள் திருவுளத்தாலே இவ்விடத்திற்கு நான் அனுப்பப்பட்டேன். அவரே என்னைப் பாரவோனுக்குத் தந்தையைப் போலவும், அவர் வீடு முழுவதற்கும் தலைவனாகவும், எகிப்து நாடு முழுவதற்கும் ஆட்சியாளராகவும், இருக்கச் செய்துள்ளார்.
ஆதியாகமம் 45 : 9 (RCTA)
நீங்கள் விரைவில் என் தந்தையிடம் சென்று சொல்ல வேண்டியதாவது: உம் புதல்வனாகிய சூசை உமக்குத் தெரிவிப்பது ஏதென்றால்: கடவுள் என்னை எகிப்து நாடு முழுவதற்கும் ஆட்சியாளராகச் செய்தார். நீர் சாகா வண்ணம் என்னிடம் வாரும்.
ஆதியாகமம் 45 : 10 (RCTA)
யெசேன் நாட்டில் குடியிருப்பீர். நீரும், உமது புதல்வர்களும், உம் புதல்வர்களின் புதல்வர்களும், உமது ஆடுமாடுகளோடும், உமக்குச் சொந்தமான (மற்ற) யாவற்றோடும் என் அண்மையிலே இருக்கலாம்.
ஆதியாகமம் 45 : 11 (RCTA)
(இன்னும் ஐந்தாண்டுகள் பஞ்சம் இருக்கும்.) உமக்கும், உம் குடும்பத்தாருக்கும், உமக்குள்ள யாவற்றிற்கும் சாவும் அழிவும் வராமல் உங்களை நான் பாதுகாத்து உணவளித்து வருவேன் என்று சொல்லச் சொன்னார் என்று சொல்லுங்கள்.
ஆதியாகமம் 45 : 12 (RCTA)
இதோ, உங்களோடு பேசுகிற வாய் என் வாய் தான் என்பதை உங்கள் கண்களும் என் தம்பியாகிய பெஞ்சமின் கண்களும் காண்கின்றன.
ஆதியாகமம் 45 : 13 (RCTA)
நான் எகிப்திலே அடைந்துள்ள மாட்சி அனைத்தையும் என் தந்தைக்குச் சொல்லுங்கள். விரைந்து போய், அவர் என்னிடம் வருமாறு செய்யுங்கள் என்று கூறினார்.
ஆதியாகமம் 45 : 14 (RCTA)
பிறகு, தம் தம்பியாகிய பெஞ்சமினை அரவணைத்துக் கழுத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதார். இவனும் அப்படியே அவர் கழுத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதான்.
ஆதியாகமம் 45 : 15 (RCTA)
பின், சூசை தம் சகோதரர் யாவரையும் முத்தமிட்டு, ஒவ்வொருவனையும் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதார். இதன் பின்னரே அவர்கள் அவரோடு உரையாடத் துணிந்தனர்.
ஆதியாகமம் 45 : 16 (RCTA)
சூசையின் சகோதரர்கள் வந்துள்ளனர் என்ற செய்தி அரசனின் அரண்மனையில் வெளிப்படையாய்க் கூறப்பட்டவுடனே, பாரவோனும் அவன் வீட்டிலுள்ளோரும் அகமகிழ்ந்தனர்.
ஆதியாகமம் 45 : 17 (RCTA)
பாரவோன் சூசையை நோக்கி: நீர் உம் சகோதரர்களுக்குச் சொல்ல வேண்டியதாவது: நீங்கள் மிருகங்களின் மேல் பொதியேற்றிக் கானான் நாட்டிற்குப் போய்,
ஆதியாகமம் 45 : 18 (RCTA)
அவ்விடமிருந்து உங்கள் தந்தையையும் இனத்தாரையும் கூட்டிக் கொண்டு என்னிடத்திற்கு வாருங்கள்; நான் உங்களுக்கு எகிப்தின் நன்மையெல்லாம் தருவேன்; நீங்கள் பூமியின் வளத்தைச் சாப்பிடுவீர்கள் என்பதாம் என்றான்.
ஆதியாகமம் 45 : 19 (RCTA)
மீண்டும் பாரவோன் சூசையை நோக்கி: உம் சகோதரர் தங்கள் பிள்ளைகளையும் மனைவிகளையும் அழைத்து வருவதற்காக எகிப்து நாட்டினின்று வண்டிகளைக் கொண்டுபோகும்படி அவர்களுக்குச் சொல்வதுமன்றி: நீங்கள் போய்த் தந்தையை அழைத்துக் கொண்டு கூடிய விரைவில் வந்து சேருங்கள்;
ஆதியாகமம் 45 : 20 (RCTA)
உங்கள் தட்டு முட்டுக்களில் ஒன்றையும் விட்டுவிடாதீர்கள்; ஏனென்றால், எகிப்தின் செல்வமெல்லாம் உங்களுடையதாகும் என்றும் சொல்ல வேண்டும் என்றான்.
ஆதியாகமம் 45 : 21 (RCTA)
இஸ்ராயேலின் புதல்வர்கள் தங்களுக்குக் கட்டளையிட்டிருந்தபடியே செய்தனர். சூசை பாரவோன் கட்டளைப்படி அவர்களுக்கு வண்டிகளையும் வழிக்கு உணவுகளையும் கொடுத்தார்.
ஆதியாகமம் 45 : 22 (RCTA)
அன்றியும், அவர்களில் ஒவ்வொருவனுக்கும் இரண்டு ஆடைகளும் கொடுத்தார். பெஞ்சமினுக்கோ, முந்நூறு வெள்ளிக் காசுகளையும், விலையேறப் பெற்ற ஐந்து ஆடைகளையும் கொடுத்தார்.
ஆதியாகமம் 45 : 23 (RCTA)
அப்படியே தம் தந்தைக்கு ஐந்து ஆடைகளையும் முந்நூறு வெள்ளிக் காசுகளையும் அனுப்பினதுமல்லாமல், எகிப்திலுள்ள சிறந்த சரக்குகளைக் கொண்டு, போவதற்குப் பத்துக் கழுதைகளையும், பயணத்திற்குக் கோதுமையையும், உணவு வகைகளையும் சுமப்பதற்குப் பத்துப் பெண் கழுதைகளையும் அவர்களோடு அனுப்பி வைத்தார்.
ஆதியாகமம் 45 : 24 (RCTA)
பின் அவர் தம் சகோதரர்களுக்குப் போக விடையளித்து, அவர்களை விட்டுப் பிரியும் போது: நீங்கள் போகும் வழியிலே சச்சரவு பண்ணாதீர்கள் என்று சொல்லி அனுப்பினார்.
ஆதியாகமம் 45 : 25 (RCTA)
அவர்கள் எகிப்திலிருந்து போய்க் கானான் நாட்டில் தங்கள் தந்தை யாக்கோபிடம் சேர்ந்து:
ஆதியாகமம் 45 : 26 (RCTA)
உம் மகன் சூசை உயிரோடிருக்கிறார்; அவரே எகிப்து நாட்டிற்கெல்லாம் தலைவர் என்று சொல்லி, சூசை சொல்லச் சொன்னவற்றையெல்லாம் அறிவித்தனர். அதைக் கேட்டு யாக்கோபு ஆழ்ந்த தூக்கத்தினின்று கண் விழித்தவன் போல் ஆனான். ஆயினும், அவற்றை அவன் நம்பாதிருந்தான்.
ஆதியாகமம் 45 : 27 (RCTA)
இறுதியிலே, அவர்கள் செய்திகளையெல்லாம் ஒழுங்காக விவரித்துச் சொன்னதும் சூசை அனுப்பின வண்டிகளையும் சரக்குகள் யாவற்றையும் கண்டதும் அவன் புத்துயிர் பெற்றவன் ஆனான்:
ஆதியாகமம் 45 : 28 (RCTA)
ஆ! என் மகன் சூசை இன்னும் உயிரோடிருந்தால் எனக்குப் போதும், நான் இறக்குமுன் போய் அவனைக் காண்பேன் என்றான்.
❮
❯