ஆதியாகமம் 43 : 1 (RCTA)
இதற்குள்ளாகப் பஞ்சம் நாடு முழுவதிலும் மிகக் கடுமையாய் இருந்தது. எகிப்திலிருந்து கொண்டுவரப்பட்ட தானியம் செலவழிந்த போது, யாக்கோபு தன் புதல்வர்களை நோக்கி:
ஆதியாகமம் 43 : 2 (RCTA)
நீங்கள் திரும்பப் போய் நமக்குக் கொஞ்சம் தானியம் வாங்கி வாருங்கள் என்றான்.
ஆதியாகமம் 43 : 3 (RCTA)
அதற்கு யூதா: அந்த மனிதர் ஆணையிட்டு, உங்கள் இளைய சகோதரனை உங்களுடன் அழைத்துக் கொண்டு வராவிட்டால் நீங்கள் என் முகத்திலே விழிக்கவே கூடாது என்று எங்களுக்குக் கூறி விட்டார்.
ஆதியாகமம் 43 : 4 (RCTA)
ஆதலால், நீர் அவனை எங்களோடு அனுப்ப இசைந்தால் தான் நாங்கள் அனைவரும் சேர்ந்து சென்று உமக்கு வேண்டியவற்றை வாங்கிக் கொண்டு வருவோம்.
ஆதியாகமம் 43 : 5 (RCTA)
நீர் அவனை அனுப்ப இசையாவிட்டால், நாங்கள் போகமாட்டோம். ஏனென்றால், நாங்கள் உமக்குப் பல முறை சொல்லியுள்ளது போல், அந்த மனிதர்: உங்கள் இளைய சகோதரன் வராவிட்டால் நீங்கள் என் முகத்தில் விழிக்க முடியாது என்று திட்டவட்டமாய்ப் பேசினார் என்று மறுமொழி சொன்னான்.
ஆதியாகமம் 43 : 6 (RCTA)
அது கேட்டு, இஸ்ராயேல் அவர்களை நோக்கி: உங்களுக்கு இன்னுமொரு சகோதரன் உண்டென்று நீங்கள் அவருக்கு ஏன் அறிவித்தீர்கள்? அஃது எனக்குத் துன்பமாய் முடிந்ததே என்று முறையிட்டான்.
ஆதியாகமம் 43 : 7 (RCTA)
அவர்கள்: அந்த மனிதர் நம் பரம்பரையைக் குறித்து விவரமாய்க் கேட்டார். உங்கள் தந்தை உயிரோடு இருக்கிறாரா? உங்களுக்கு வேறு சகோதரன் உண்டா? என்று வினவினதற்கு, நாங்கள் தக்கபடி பதில் சொன்னோம். உங்கள் சகோதரனை உங்களோடு கூட இங்கே கொண்டு வாருங்களென்று அவர் சொல்லப் போகிறாரென்பதை நாங்கள் அறிந்திருக்கக் கூடுமோ என்று மறுமொழி கூறினர்.
ஆதியாகமம் 43 : 8 (RCTA)
மேலும் யூதா தன் தந்தையை நோக்கி; நீரும் நாங்களும் எங்கள் குழந்தைகளும் சாகாமல் உயிரோடிருக்கும்படி நாங்கள் புறப்பட்டுப் போகவே வேண்டும். தம்பியை என்னோடு அனுப்பும்.
ஆதியாகமம் 43 : 9 (RCTA)
நானே அவனுக்குப் பொறுப்பு நான் அவனை உம்மிடம் கொண்டு வந்து ஒப்புவிக்காமல் இருப்பேனாயின், எந்நாளும் நான் உமக்கு விரோதமான பாதகம் செய்தவனாய் இருக்கக் கடவேன்.
ஆதியாகமம் 43 : 10 (RCTA)
நாங்கள் தாமதியாதிருந்திருப்போமாயின், இதற்குள்ளே இரண்டாம் முறை போய்த் திரும்பி வந்திருக்கலாமே என்றான்.
ஆதியாகமம் 43 : 11 (RCTA)
அதைக் கேட்டு, அவர்கள் தந்தை இஸ்ராயேல் அவர்களை நோக்கி: அவ்வளவு அவசியமானால் நீங்கள் உங்கள் விருப்பப்படி செய்யுங்கள். ஆனால், இந்த நாட்டில் கிடைக்கும் உயர்ந்த பொருட்களிலே சிலவற்றை உங்கள் பெட்டிகளிலே கொண்டு போங்கள். கொஞ்சம் குங்கிலியம், தேன், பிசின், தைலம், வெள்ளைப் போளம், தெரெபிண்ட் கொட்டைகள், வாதுமைப் பருப்பு ஆகியவற்றை அம்மனிதருக்குக் காணிக்கையாகக் கொண்டு போங்கள்.
ஆதியாகமம் 43 : 12 (RCTA)
மேலும், இருமடங்கு பணத்தைக் கையிலே வைத்துக் கொள்வதுமன்றி, சாக்குகளில் கிடைத்த பணம் ஒரு வேளை தவறுதலாய் வந்திருக்குமோ என்னவோ என்றெண்ணி, அதையும் திரும்பக் கொண்டு போங்கள்.
ஆதியாகமம் 43 : 13 (RCTA)
உங்கள் தம்பியையும் அழைத்துக் கொண்டு அந்த மனிதரிடம் மறுபடியும் போங்கள்.
ஆதியாகமம் 43 : 14 (RCTA)
எல்லாம் வல்ல என் கடவுள் அந்த மனிதர் முன்னிலையில் உங்களுக்குத் தயவு கிடைக்கும்படியும், சிறைக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ள உங்கள் சகோதரனும் இந்தப் பெஞ்சமினும் உங்களோடு கூடத் திரும்பி வரும்படியும் அருள் செய்வாராக. நானோ, பிள்ளைகளை இழந்த ஏழை போல் இருப்பேனே (என்றான்).
ஆதியாகமம் 43 : 15 (RCTA)
அவர்கள் அவ்வாறே செய்து, காணிக்கைகளையும் இருமடங்கு பணத்தையும் எடுத்துக் கொண்டு, பெஞ்சமினையும் உடன் அழைத்துக் கொண்டு, எகிப்துக்குப் போய் சூசையின் முன் வந்து நின்றனர்.
ஆதியாகமம் 43 : 16 (RCTA)
சூசை அவர்களையும் அவர்களுடன் பெஞ்சமினையும் கண்டவுடன், தன் வீட்டுக் கண்காணிப்பாளனை நோக்கி: நீ இம்மனிதர்களை வீட்டிற்குள் அழைத்துக் கொண்டு போய், மிருகங்களை அடித்துப் பெரியதொரு விருந்து தயார் செய். எனென்றால், இவர்கள் நண்பகல் உணவை இன்று என்னோடு உண்பார்கள் என்றார்.
ஆதியாகமம் 43 : 17 (RCTA)
அவன் தனக்குக் கட்டளையிடப்பட்டவற்றைச் செய்து, அம்மனிதர்களை வீட்டினுள் அழைத்துப் போனான்.
ஆதியாகமம் 43 : 18 (RCTA)
அவர்கள் அங்கே போய்த் திடுக்கிட்டுப் பயந்து, ஒருவரொருவரோடு பேசி: முன் நம்முடைய சாக்குகளில் நாம் கொண்டு போன பணத்தின் பொருட்டு அவர் நம் மேல் இல்லாத குற்றம் சாட்டி, நம்மையும் கழுதைகளையும் கட்டாயமாய்ப் பிடித்துச் சிறைப்படுத்தும்படி அல்லவோ அழைப்பித்திருக்கிறார் என்றனர்.
ஆதியாகமம் 43 : 19 (RCTA)
ஆகையால், அவர்கள், வீட்டு வாயிற்படியிலேயே கண்காணிப்பாளனை அணுகி:
ஆதியாகமம் 43 : 20 (RCTA)
ஐயா, எங்களுக்குச் செவிமடுக்க வேண்டுகிறோம். முன் ஒருமுறை நாங்கள் தானியம் வாங்கும் படி வந்திருந்தோம்.
ஆதியாகமம் 43 : 21 (RCTA)
அவற்றை வாங்கிக் கொண்டு சாவடி போய்ச் சேர்ந்து எங்கள் சாக்குகளைத் திறந்த போது, சாக்குகளின் வாயிலே பணம் இருக்கக் கண்டோம். அதே நிறையின்படி அதைத் திரும்பவும் கையோடு கொண்டு வந்திருக்கிறோம்.
ஆதியாகமம் 43 : 22 (RCTA)
அன்றியும் எங்களுக்கு வேண்டியவற்றை வாங்குவதற்கு வேறு பணமும் கொண்டு வந்திருக்கிறோம். நாங்கள் முன் கொடுத்த பணத்தை எங்கள் சாக்குகளில் இட்டவர் இன்னாரென்று எங்களுக்கே தெரியாது என்றனர்.
ஆதியாகமம் 43 : 23 (RCTA)
அதற்கு அவன்: அமைதியாய் இருங்கள். அஞ்சாதீர்கள். உங்கள் கடவுளும் உங்கள் தந்தையின் கடவுளுமானவர் உங்கள் சாக்குகளில் அந்தப் பணத்தை வைத்திருப்பார். ஏனென்றால், நீங்கள் எனக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை நான் சரியாய்ப் பெற்றுக் கொண்டேன் என்று சொல்லி, சிமையோனை அழைத்து வந்து அவர்களிடம் விட்டான்.
ஆதியாகமம் 43 : 24 (RCTA)
மேலும், அவன் அவர்களை வீட்டினுள் அழைத்துச் சென்று, அவர்களுக்குத் தண்ணீர் கொடுத்தான். அவர்கள் தங்கள் கை கால்களைக் கழுவிய பின், அவன் அவர்களுடைய கழுதைகளுக்குத் தீனிப் போட்டான்.
ஆதியாகமம் 43 : 25 (RCTA)
அவர்களோ, நண்பகல் வேளையில் சூசை வரப்போகிறாரென்று காணிக்கைகளைத் தயார் செய்து கொண்டு காத்திருந்தனர். ஏனென்றால், தாங்கள் அங்கேயே உணவு அருந்தப் போவதாகக் கேள்விப் பட்டிருந்தனர்.
ஆதியாகமம் 43 : 26 (RCTA)
ஆகையால், சூசை வீட்டுக்கு வந்த போது, அவர்கள் தங்கள் காணிக்கைகளைக் கையிலேந்தி அவருக்கு ஒப்புக்கொடுத்து, குப்புற விழுந்து வணங்கினர்.
ஆதியாகமம் 43 : 27 (RCTA)
அவரோ, சாந்தத்தோடு அவர்களுக்குப் பதிலுபசாரம் செய்து: நீங்கள் என்னிடம் சொல்லியிருந்த முதிர் வயதான உங்கள் தந்தை இப்பொழுது நலமாய் இருக்கிறாரா? இன்னும் உயிரோடிருக்கிறாரா என்று விசாரித்தார்.
ஆதியாகமம் 43 : 28 (RCTA)
அவர்கள்: தங்கள் அடியானாகிய எங்கள் தந்தை நலமுடன் இருக்கிறார்; இன்னும் உயிரோடிருக்கிறார் என்று பதில் கூறித் தெண்டனிட்டு வணங்கினர்.
ஆதியாகமம் 43 : 29 (RCTA)
சூசை கண்களை ஏறெடுத்துத் தம் உடன்பிறந்த சகோதரனாகிய பெஞ்சமினைப் பார்த்து நீங்கள் என்னிடம் சொல்லியிருந்த உங்கள் இளைய தம்பி இவன்தானோ என்று கேட்டபின்: தம்பி, கடவுள் உனக்கு அருள் புரிவாராக என்றார்.
ஆதியாகமம் 43 : 30 (RCTA)
சூசை தம் தம்பியைக் கடதும் மனம் நெகிழ்ந்தார், தம் கண்களில் கண்ணீர் பெருகக் கண்டு விரைந்து பக்கத்திலுள்ள தம் அறைக்குள் சென்று அழுதார்.
ஆதியாகமம் 43 : 31 (RCTA)
பின் முகத்தைக் கழுவிக் கொண்டு திரும்பவும் வெளியே வந்து: உணவு பரிமாறுங்கள் என்றார்.
ஆதியாகமம் 43 : 32 (RCTA)
அது பரிமாறப்பட்டதும், சூசை தனிப்படவும், அவர் சகோதரர்கள் தனியாகவும், கூடச் சாப்பிட இருந்த எகிப்தியர் தனியாகவும் (உட்கார்ந்தனர்). ஏனென்றால் எகிப்தியர் எபிரேயரோடு சாப்பிட மாட்டார்கள்; அப்படிச் சாப்பிடுவது தீட்டென்று எண்ணுவார்கள்.
ஆதியாகமம் 43 : 33 (RCTA)
அப்படியே சூசை முன் அவர்களில் மூத்தவன் தன் உரிமைப்படி முதலாகவும், மற்றவர் அவரவர் வயதின்படி வரிசையாகவும் அமர்ந்தனர்.
ஆதியாகமம் 43 : 34 (RCTA)
அவர்கள் மிகவும் வியப்புற்று, அவரால் தங்களுக்குப் பரிமாறப்பட்ட பங்குகளை வாங்கிக் கொண்டனர், உண்மையிலேயே, அவர்களுடைய பங்குகளைக் காட்டிலும் பெஞ்சமினுக்குக் கிடைத்த பங்கு ஐந்து மடங்கு அதிகமாய் இருந்தது. அவர்கள் அவரோடு திருப்தியாகப் பானமும் பருகினார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34

BG:

Opacity:

Color:


Size:


Font: