ஆதியாகமம் 4 : 1 (RCTA)
ஆதாம் தன் மனைவி ஏவாளோடு கூடி வாழ்ந்தான். அவள் கருத்தரித்துக் காயினைப் பெற்று: கடவுள் அருளால் ஓர் ஆண்மகனைப் பெற்றேன் என்றாள்.
ஆதியாகமம் 4 : 2 (RCTA)
பின் அவனுடைய தம்பியாகிய ஆபேலைப் பெற்றாள். ஆபேல் ஆடு மேய்ப்பவன் ஆனான். காயினோ நிலத்தைப் பயிரிடுபவன் ஆனான்.
ஆதியாகமம் 4 : 3 (RCTA)
நீண்ட நாட்களுக்குப் பின் நிகழ்ந்ததாவது: காயின் தன் விளைச்சலின் பலனை ஆண்டவருக்குக் காணிக்கையாய்ச் செலுத்தினான்.
ஆதியாகமம் 4 : 4 (RCTA)
ஆபேலோ தன் மந்தையின் தலையீற்றுக்களில் மிகக் கொழுத்த ஆடுகளைக் காணிக்கையாய்க் கொடுத்தான். ஆண்டவர் ஆபேலையும் அவன் காணிக்கைகளையும் ஏற்றுக் கொண்டார்.
ஆதியாகமம் 4 : 5 (RCTA)
காயினையோ அவன் காணிக்கைகளையோ அவர் கண்ணோக்கவில்லை. அதனால் காயின் மிக்க சினம் கொண்டான். அவன் முகம் வாடியது.
ஆதியாகமம் 4 : 6 (RCTA)
அப்போது ஆண்டவர் அவனை நோக்கி: நீ ஏன் கோபமாய் இருக்கிறாய்? உன் முகம் வாடியிருப்பது ஏன்?
ஆதியாகமம் 4 : 7 (RCTA)
நீ நன்மை செய்தால் உனக்கு வெகுமதி கிடைக்கும்; தீமை செய்தால் உடனே பாவம் உன் வாயிலில் வந்து பதுங்கி நிற்குமன்றோ? அதன் ஆசை உன் மேல் இருக்கும்; நீயோ அதை அடக்கிக் கொள்ள வேண்டும் என்றார்.
ஆதியாகமம் 4 : 8 (RCTA)
ஒரு நாள் காயின் தன் தம்பி ஆபேலைப் பார்த்து: வெளியே போகலாம் வா என்றான். வயல்வெளியில் இருந்த போது காயின் தன் தம்பி ஆபேலின் மேல் பாய்ந்து அவனைக் கொன்று விட்டான்.
ஆதியாகமம் 4 : 9 (RCTA)
அப்பொழுது ஆண்டவர் காயினை நோக்கி உன் தம்பி ஆபேல் எங்கே என்று வினவ, அவன்: நான் அறியேன்; என் தம்பிக்கு நான் என்ன காவலாளியா? என்றான்.
ஆதியாகமம் 4 : 10 (RCTA)
அதற்கு அவர்: உன் தம்பியின் இரத்தக் குரல் பூமியினின்று நம்மை நோக்கிக் கூக்குரலிடுகிறதே;
ஆதியாகமம் 4 : 11 (RCTA)
நீ என்ன செய்தாய்? இதோ கேள்; பூமி தன் வாயைத் திறந்து, உன் கையால் சிந்திய உன் தம்பியின் இரத்தத்தை உட்கொண்டது. ஆகவே, இன்று முதல் நீ அந்தப் பூமியில் சபிக்கப்பட்டவனாய் இருப்பாய்.
ஆதியாகமம் 4 : 12 (RCTA)
அதனை நீ பயிரிட்டால் அது உனக்குப் பலன் தராது. பூமியில் நீ நிலையற்றவனும் நாடோடியுமாய் இருப்பாய் என்றார்.
ஆதியாகமம் 4 : 13 (RCTA)
அப்போது காயின் ஆண்டவரை நோக்கி, என் பாவம் மன்னிக்கப்படக் கூடுமானதன்று; அது அத்தனை பெரிது.
ஆதியாகமம் 4 : 14 (RCTA)
இதோ, இந்நாட்டிலிருந்து என்னை இன்று துரத்தி விடுகிறீர். இனி நான் உம் கண்ணிற்கு மறைந்தவனாய்ப் பூமியில் நிலையற்றவனும் நாடோடியுமாய் இருப்பேன். அப்படியானால் என்னைக் காணும் எவனும் என்னைக் கொல்வானே என்றான்.
ஆதியாகமம் 4 : 15 (RCTA)
ஆண்டவர்: அப்படி நடக்கவே நடக்காது; காயினைக் கொல்பவன் ஏழு மடங்கு பழியைச் சுமப்பான் என்று காயினுக்குச் சொல்லி, அவனைக் கண்டு பிடிப்பவன் எவனும் அவனைக் கொல்லாதபடிக்கு அவனுக்கு ஓர் அடையாளம் இட்டார்.
ஆதியாகமம் 4 : 16 (RCTA)
அப்போது காயின் ஆண்டவருடைய திருமுன்னின்று விலகி, ஏதேனுக்குக் கிழக்கேயுள்ள நாட்டில் அகதியாய் அலைந்து திரிந்தான்.
ஆதியாகமம் 4 : 17 (RCTA)
பின் காயின் தன் மனைவியோடு சுடி வாழ்ந்தான். அவள் கருத்தரித்து ஏனோக்கைப் பெற்றாள். அப்போது காயின் ஒரு நகரை எழுப்பி, அதற்குத் தன் மகன் ஏனோக்கின் பெயரை இட்டான்.
ஆதியாகமம் 4 : 18 (RCTA)
ஏனோக் இராத்தைப் பெற்றான். இராத் மவியயேலைப் பெற்றான். மவியயேல் மத்துசயேலைப் பெற்றான். மத்துசயேல் இலாமேக்கைப் பெற்றான்.
ஆதியாகமம் 4 : 19 (RCTA)
இலாமேக் இரண்டு மனைவியரைக் கொண்டான்: ஒருத்தியின் பெயர் ஆதாள், மற்றவள் பெயர் செல்லாள்.
ஆதியாகமம் 4 : 20 (RCTA)
ஆதாள் யாபேலைப் பெற்றாள்: கூடாரவாசிகளுக்கும் ஆயர்களுக்கும் தந்தை இவனே. இவன் தம்பி பெயர் யூபால்:
ஆதியாகமம் 4 : 21 (RCTA)
வீணையும் கின்னரமும் வாசிப்பவர்களுக்கு அவனே தந்தை.
ஆதியாகமம் 4 : 22 (RCTA)
செல்லாளும் துபால் காயினைப் பெற்றாள். இவன் இரும்பு, பித்தளைகளைக் கொண்டு வேலை செய்யும் கருமானும் கன்னானும் ஆனான். துபால் காயினின் சகோதரி நொஎமாள்.
ஆதியாகமம் 4 : 23 (RCTA)
இலாமேக் தன் மனைவியராகிய ஆதாளையும் செல்லாளையும் நோக்கி: இலொமேக்கின் மனைவியரே, என் வார்த்தையைக் கேளுங்கள்; என் சொல்லுக்குச் செவிகொடுங்கள்: என்னைக் காயப்படுத்திய ஒரு மனிதனை நான் கொன்றேன்; என்னைத் துன்புறுத்திய ஒரு இளைஞனையும் சாகடித்தேன்;
ஆதியாகமம் 4 : 24 (RCTA)
எனவே, காயின் பொருட்டு ஏழு மடங்கு பழியென்றால், இலாமேக்கின் பொருட்டு ஏழெழுபது மடங்கு பழி வந்து சேரும் என்றான்.
ஆதியாகமம் 4 : 25 (RCTA)
மீண்டும் ஆதாம் தன் மனைவியோடு கூடிவாழவே, அவள் ஒரு மகனைப் பெற்றாள்: காயின் கொலை புரிந்த ஆபேலுக்குப் பதிலாகக் கடவுள் எனக்கு வேறொரு மகனைத் தந்தருளினார், என்று சொல்லி, அவள் அவனுக்குச் சேத் என்று பெயரிட்டாள்.
ஆதியாகமம் 4 : 26 (RCTA)
சேத்துக்கும் ஒரு மகன் பிறந்தான். சேத் இவனுக்கு ஏனோஸ் என்று பெயரிட்டான். இவனே ஆண்டவருடைய (திருப்) பெயரைச் சொல்லி வழிபடத் தொடங்கினான்.
❮
❯