ஆதியாகமம் 35 : 1 (RCTA)
அப்பொழுது கடவுள் யாக்கோபை நோக்கி: நீ எழுந்து பெத்தெலுக்குப் போய் அங்கே குடியிரு. உன் அண்ணன் எசாயூவுக்கு அஞ்சி ஓடிய போது உனக்குத் தோன்றின கடவுளுக்கு (அவ்விடத்தில்) ஒரு பீடத்தைக் கட்டு என்றார்.
ஆதியாகமம் 35 : 2 (RCTA)
அதைக் கேட்டு யாக்கோபு தன் வீட்டார் அனைவரையும் அழைத்து: உங்களுக்குள் இருக்கிற அன்னிய தேவர்களை அகற்றி விட்டு உங்களைத் தூய்மைப்படுத்தி உங்கள் உடைகளை மாற்றக்கடவீர்கள்.
ஆதியாகமம் 35 : 3 (RCTA)
எழுந்து வாருங்கள்; பெத்தெலுக்குப்போய், என் துயர நாளிலே என் மன்றாட்டைக் கேட்டருளி எனக்கு வழித்துணையாய் இருந்த கடவுளுக்கு அவ்விடத்திலே ஒரு பலிப் பீடத்தை அமைப்போம் என்றான்.
ஆதியாகமம் 35 : 4 (RCTA)
அப்படியே அவர்கள் தங்களிடமிருந்த எல்லா அன்னிய விக்கிரகங்களையும் அவற்றின் காதணிகளையும் அவன் கையில் கொடுத்தனர். அவன் அவற்றைச் சிக்கேம் நகருக்கு வெளியே இருந்த ஒரு தரபிரண்ட் மரத்தின் கீழே புதைத்தான்.
ஆதியாகமம் 35 : 5 (RCTA)
பின் அவர்கள் புறப்பட்டுச் சென்றனர். அவர்களைச் சுற்றிலுமிருந்த எல்லா நகர மக்களுக்கும் தெய்வீகமான ஒரு பயங்கரம் உண்டானதனாலே, அவர்களைப் பின் தொடர எவரும் துணியவில்லை.
ஆதியாகமம் 35 : 6 (RCTA)
இவ்வாறு யாக்கோபும், அவனோடிருந்த எல்லா மக்களும் கானான் நாட்டிலுள்ள பெத்தெல் எனப்படும் லூசானுக்கு வந்து சேர்ந்தனர்.
ஆதியாகமம் 35 : 7 (RCTA)
யாக்கோபு அவ்விடத்தில் ஒரு பலிப் பீடத்தைக் கட்டி, தன் சகோதரனிடமிருந்து தப்பியோடின நாளில் அங்கே கடவுள் தனக்குக் காட்சி கொடுத்த காரணத்தால், அந்த இடத்திற்குக் கடவுளின் வீடு என்று பெயரிட்டான்.
ஆதியாகமம் 35 : 8 (RCTA)
அப்பொழுது இரெபேக்காளின் பணிப்பெண்ணாகிய தெபொறாள் இறந்தாள்; பெத்தெலுக்கு அண்மையிலிருந்த ஒரு கருவாலி மரத்தடியில் அடக்கம் பண்ணப் பட்டாள். எனவே, அவ்விடத்திற்கு அழுகைக் கருவாலி என்னும் பெயர் வழங்கிற்று.
ஆதியாகமம் 35 : 9 (RCTA)
யாக்கோபு சீரிய மெசொப்பொத்தாமியவிலிருந்து திரும்பி வந்த பின் கடவுள் மீண்டும் அவன் முன் தோன்றி, அவனை ஆசீர்வதித்து:
ஆதியாகமம் 35 : 10 (RCTA)
இன்று முதல் நீ யாக்கோபு என்று அழைக்கப்படாமல், இஸ்ராயேல் எனப்படுவாய் என்று, அவனுக்கு இஸ்ராயேல் என்று பெயரிட்டருளினார்.
ஆதியாகமம் 35 : 11 (RCTA)
மேலும், அவர் அவனை நோக்கி: நாம் எல்லாம் வல்ல கடவுள். நீ பலுகிப் பெருகக் கடவாய். இனங்களும் மக்களும் கூட்டங்களும் உன்னிடமிருந்து உற்பத்தியாகும். அரசர்களும் உன் சந்ததியில் உதிப்பார்கள்.
ஆதியாகமம் 35 : 12 (RCTA)
ஆபிரகாம் ஈசாக்குக்கு நாம் அளித்த நாட்டை உனக்கும் உனக்குப் பின் உன் சந்ததிக்கும் கொடுப்போம் என்று சொல்லி,
ஆதியாகமம் 35 : 13 (RCTA)
அவனை விட்டு மறைந்துபோனார். அப்போது யாக்கோபு
ஆதியாகமம் 35 : 14 (RCTA)
தனக்கு ஆண்டவர் திருவாக்கருளிய அந்த இடத்தில் ஒரு கற்றூணை நினைவுச் சின்னமாக நாட்டி அதன் மேல் பானப்பலியை ஊற்றி, எண்ணையையும் வார்த்தான்.
ஆதியாகமம் 35 : 15 (RCTA)
அந்த இடத்திற்குப் பெத்தெல் என்று பெயரிட்டான்.
ஆதியாகமம் 35 : 16 (RCTA)
பின் அவன் அவ்விடத்தினின்று புறப்பட்டு, வசந்த காலத்திலே எபிறாத்தாவுக்குப் போகும் வழியை வந்தடைந்தான். அங்கே இராக்கேலுக்குப் பேறுகால வேதனை உண்டானது.
ஆதியாகமம் 35 : 17 (RCTA)
அப்பேறுகால வருத்தத்தால் அவள் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கையில், மருத்துவச்சி அவளை நோக்கி: நீர் பயப்பட வேண்டாம். ஏனென்றால், இப்புதல்வனையும் பெற்றடைவீர் என்றாள்.
ஆதியாகமம் 35 : 18 (RCTA)
ஆனால், வேதனை மிகுதியினாலே உயிர் பிரியப் போகும் வேளையில் அவள் தன் பிள்ளைக்குப் பெனோனி- அதாவது, என் வேதனைப் புதல்வன்- என்று பெயரிட்டாள். தந்தையோ, அவனைப் பெஞ்சமின்- அதாவது, வலக்கை மகன்- என்று அழைத்தான்.
ஆதியாகமம் 35 : 19 (RCTA)
இராக்கேல் அப்போது உயிர் நீத்தாள்; எப்பிறாத்தா ஊருக்குச் செல்லும் வழியில் அடக்கம் செய்யப்பட்டாள்.
ஆதியாகமம் 35 : 20 (RCTA)
யாக்கோபு அவளுடைய கல்லறையின் மேல் ஒரு தூணை நாட்டி வைத்தான். இந்நாள் வரையிலும் அது இராக்கேலுடைய கல்லறையின் நினைவுத் தூண் (என்று அழைக்கப்படுகிறது).
ஆதியாகமம் 35 : 21 (RCTA)
அவன் அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, மந்தைக் கோபுரத்திற்கு அப்பால் தன் கூடாரத்தை அடித்தான்.
ஆதியாகமம் 35 : 22 (RCTA)
அவன் அந் நாட்டில் குடியிருந்த காலத்தில், ஒரு நாள் ரூபன் தன் தந்தையின் மறு மனைவியாகிய பாலாளோடு படுத்தான். அது யாக்கோபுக்குத் தெரியாமற் போகவில்லை. அவனுடைய புதல்வர் பன்னிரண்டு பேர்.
ஆதியாகமம் 35 : 23 (RCTA)
(அதாவது,) லீயாளின் மக்கள்: மூத்த மகன் ரூபன்; பிறகு சிமையோன், லேவி, யூதா, இசக்கார், ஜபுலோன் என்பவர்கள்.
ஆதியாகமம் 35 : 24 (RCTA)
இராக்கேலின் மக்கள்: சூசையும் பெஞ்சமினும்.
ஆதியாகமம் 35 : 25 (RCTA)
இராக்கேலின் வேலைக்காரியாகிய பாலாளின் மக்கள்: தானும் நெப்தலியும்.
ஆதியாகமம் 35 : 26 (RCTA)
லீயாளுடைய வேலைக்காரி ஜெல்பாளின் புதல்வர்கள்: காத்தும் ஆசேரும். இவர்கள் சீரிய மெசோப்பொத்தாமியா நாட்டில் யாக்கோபுக்குப் பிறந்தனர்.
ஆதியாகமம் 35 : 27 (RCTA)
யாக்கோபு ஆர்பேயின் நகராகிய மம்பிறேய்க்கு, தந்தையாகிய ஈசாக்கிடம் வந்தான். அது அபிரகாமும் ஈசாக்கும் தங்கியிருந்த எபிறோன் என்னும் ஊர்.
ஆதியாகமம் 35 : 28 (RCTA)
ஈசாக்கின் வாழ்நாள் மொத்தம் நூற்றெண்பது ஆண்டுகள்.
ஆதியாகமம் 35 : 29 (RCTA)
அவன் முதிர் வயதினால் வலுவிழந்து மரணம் அடைந்தான். தன் முன்னோரோடு சேர்க்கப்பட்டபோது அவன் முதுமையும் ஆயுள் நிறைவும் உள்ளவனாய் இருந்தான். அவன் புதல்வராகிய எசாயூவும் யாக்கோபும் அவனை அடக்கம் செய்தனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29