ஆதியாகமம் 31 : 1 (RCTA)
ஒரு நாள் லாபானின் மக்கள் தங்களுக்குள்ளே பேசி: நம் தந்தைக்கு உண்டான சொத்துக்களையெல்லாம் யாக்கோபு அபகரித்து, அவருடைய சொத்தைக் கொண்டே, தான் செல்வந்தனாகிப் புகழ் உடையவனானான் என்று சொன்னதை யாக்கோபு கேட்டிருந்ததுமல்லாமல்,
ஆதியாகமம் 31 : 2 (RCTA)
லாபானின் முகத்தைப் பார்த்தால், அது முன்புபோல் இல்லாமல் வேறுபட்டிருந்ததையும் கண்டான்.
ஆதியாகமம் 31 : 3 (RCTA)
மேலும், ஆண்டவர் முன்பே தன்னை நோக்கி: உன் மூதாதையரின் நாட்டிற்கும் உன் இனத்தாரிடத்திற்கும் திரும்பிச் செல்வாய்; நாம் உன்னோடு இருப்போம் என்று கூறிய வார்த்தைகள் மீது சிந்தையைச் செலுத்தினான்.
ஆதியாகமம் 31 : 4 (RCTA)
இராக்கேலும் லீயாளும் தான் மந்தைகளை மேய்த்துக் கொண்டிருந்த காட்டிற்கு வரும்படி ஆளனுப்பினான்.
ஆதியாகமம் 31 : 5 (RCTA)
பிறகு அவர்களை நோக்கி: உங்கள் தந்தையின் முகம் என் பால் முன்பு போலன்றி வேறுபட்டுப் போயிற்றென்று கண்டேன். என் தந்தையின் கடவுளோ என்னோடு இருக்கிறார்.
ஆதியாகமம் 31 : 6 (RCTA)
உங்கள் தந்தைக்கு என்னால் இயன்ற மட்டும் உழைத்தேனென்று உங்களுக்குத் தெரியுமே.
ஆதியாகமம் 31 : 7 (RCTA)
உங்கள் தந்தையோ என்னை வஞ்சித்து, என் சம்பளத்தைப் பத்து முறையும் மாற்றினார். ஆனால், என்னை நட்டப் படுத்தும்படி கடவுள் அவருக்கு இடம் கொடுத்திலர்.
ஆதியாகமம் 31 : 8 (RCTA)
உள்ளபடி: புள்ளியுள்ள குட்டிகள் உனக்குச் சம்பளமாய் இருக்கும் என்று அவர் சொன்ன போது, ஆடுகளெல்லாம் புள்ளியுள்ள குட்டிகளையே ஈன்று வந்தன. அவர் அதை மாற்றி: சுத்த வெள்ளை நிறமுள்ள குட்டியெல்லாம் உன் சம்பளத்திற்கு வைத்துக் கொள்வாய் என்ற போதோ, ஆடுகளெல்லாம் வெள்ளைக் குட்டிகளையே ஈன்றன.
ஆதியாகமம் 31 : 9 (RCTA)
இவ்விதமாய்க் கடவுளே உங்கள் தந்தையின் பொருளை எடுத்து எனக்குத் தந்தருளினார்.
ஆதியாகமம் 31 : 10 (RCTA)
அதாவது, ஆடுகளுக்குக் கருத்தாங்கும் பருவம் வந்த போது, நான் ஒரு கனவு கண்டேன். அதிலே ஆடுகளோடு பொலியும் கிடாய்கள் புள்ளியும், வரியும் கலப்பு நிறமும் உள்ளவனவாய் இருக்கக் கண்டேன்.
ஆதியாகமம் 31 : 11 (RCTA)
அக்கனவில், கடவுளுடைய தூதர்: யாக்கோபே, என்று என்னை அழைத்ததற்கு, நான்: இதோ இருக்கிறேன் என, அவர்:
ஆதியாகமம் 31 : 12 (RCTA)
உன் கண்களை ஏறெடுத்துப் பெட்டைகளோடு பொலியும் எல்லாக் கிடாய்களும் பல புள்ளியும் வரியும் பற்பல நிறமும் உடையனவாய் இருப்பதைப் பார் ஏனென்றால், லாபான் உனக்குச் செய்யும் யாவையும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
ஆதியாகமம் 31 : 13 (RCTA)
நீ பெத்தலிலே ஒரு கல்லுக்கு அபிஷுகம் பண்ணி நமக்கு நேர்த்திக் கடனைச் செய்திருக்கிறாய்; இதோ! பெத்தலிலே உனக்குத் தோன்றின கடவுள் நாமே. ஆகையால், நீ உடனே எழுந்திருந்து இந்த நாட்டை விட்டுப் புறப்பட்டு, உன் தாய் நாடு திரும்பிச் செல் என்று திருவுளம் பற்றினார் (என்றான்.)
ஆதியாகமம் 31 : 14 (RCTA)
அதற்கு இராக்கேலும் லீயாளும்: எங்கள் தந்தை வீட்டுப் பொருட்களிலும் மரபுரிமைச் சொத்துக்களிலும் யாதேனும் எங்கள் கையில் உண்டோ?
ஆதியாகமம் 31 : 15 (RCTA)
அவர் எங்களை அன்னியப் பெண்கள் போல் பாவித்து, விலைக்கு விற்று, விற்ற விலையையும் செலவழிக்க வில்லையா?
ஆதியாகமம் 31 : 16 (RCTA)
ஆனால், கடவுள் எங்கள் தந்தையின் சொத்துக்களை எடுத்து, அவற்றை நமக்கும் நம் புதல்வர்களுக்கும் ஒப்புவித்தார். ஆகையால், கடவுள் உமக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் செய்யும் என்றனர்.
ஆதியாகமம் 31 : 17 (RCTA)
அப்போது யாக்கோபு எழுந்திருந்து, தன் மக்களையும் மனைவியரையும் ஒட்டகங்களின் மேல் ஏற்றிக் கொண்டு புறப்பட்டான்.
ஆதியாகமம் 31 : 18 (RCTA)
மெசொப்பொத்தாமியாவில் ஈட்டிய பொருள் அனைத்தையும், மந்தைகள் முதலிய எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு, கானான் நாட்டிலிருந்த தன் தந்தை ஈசாக்கினிடத்திற்குப் பயணமானான்.
ஆதியாகமம் 31 : 19 (RCTA)
லாபான் ஆடுகளுக்கு மயிர் கத்தரிக்க வெளியே போயிருந்தான். அவ்வேளை இராக்கேல் தன் தந்தையின் விக்கிரகங்களைத் திருடிக் கொண்டு போனாள்.
ஆதியாகமம் 31 : 20 (RCTA)
யாக்கோபோ, தான் ஓடிப் போகிற செய்தியைத் தன் மாமனாருக்குத் தெரிவிக்க மனம் துணியவில்லை.
ஆதியாகமம் 31 : 21 (RCTA)
அவன் தனக்குச் சொந்தமான எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டு, நதியைத் தாண்டிக் கலயாத் மலையை நோக்கிச் சென்று கொண்டிருந்தான்.
ஆதியாகமம் 31 : 22 (RCTA)
மூன்றாம் நாளிலே, யாக்கோபு ஓடிப்போனான் என்னும் செய்தி லாபானுக்குத் தெரிவிக்கப்பட்டது.
ஆதியாகமம் 31 : 23 (RCTA)
அப்பொழுது அவன் தன் சகோதரர்களைக் கூட்டிக் கொண்டு, ஏழு நாட்களாக அவனைப் பின்தொடர்ந்து கலயாத் மலையிலே அவனைக் கண்டு பிடித்தான். அன்றிரவு கனவில் (அவன்) கடவுளைக் கண்டான்.
ஆதியாகமம் 31 : 24 (RCTA)
அவர் அவனை நோக்கி: நீ யாக்கோபிடம் கடுமையாய் யாதொன்றும் பேச வேண்டாம் என எச்சரித்தார்.
ஆதியாகமம் 31 : 25 (RCTA)
யாக்கோபு ஏற்கனவே மலையிலே கூடாரம் அடித்திருந்தான். லாபானும், தன் சகோதரர்களுடன் அவனைக் கண்ட பொழுது அதே கலயாத் மலையிலே தன் கூடாரத்தை அடித்தான்.
ஆதியாகமம் 31 : 26 (RCTA)
அவன் யாக்கோபை நோக்கி: நீ இப்படிச் செய்யலாமா? எனக்குச் சொல்லாமல், சண்டையில் பிடிபட்ட பெண்களைப் போல் என் புதல்வியரைக் கொண்டு போகலாமா?
ஆதியாகமம் 31 : 27 (RCTA)
எனக்கு அறிவிக்காமல், நீ திருட்டுத் தனமாய் ஓடிப் போகத் தீர்மானித்ததேன்? எனக்கு அதைத் தெரிவித்திருந்தால், நான் சங்கீதம் மேள தாளம் தம்புரு முழக்கத்துடன் ஆனந்தமாய் அனுப்பி விட்டிருக்க மாட்டேனா?
ஆதியாகமம் 31 : 28 (RCTA)
என் புதல்வியரையும், (அவர்கள்) புதல்வர்களையும் நான் முத்தம் செய்ய முடியாதபடி செய்துவிட்டது ஏன்? நீ அறிவீனனாகவே நடந்து கொண்டாய்.
ஆதியாகமம் 31 : 29 (RCTA)
இப்போதோ, உனக்குத் தீமை செய்ய எனக்கு வல்லமை உண்டு. ஆனால், நேற்று உன் தந்தையின் கடவுள் என்னை நோக்கி: நீ யாக்கோபோடு யாதொன்றும் கடுமையாய்ப் பேசாதே என எச்சரித்தார்.
ஆதியாகமம் 31 : 30 (RCTA)
உன் உறவினரிடத்திற்குப் போகவும், உன் தந்தையின் வீட்டைத் திரும்பப் பார்க்கவும் விரும்பினாய், போகலாம்; ஆனால், என் தேவர்களை ஏன் திருடிக் கொண்டு போகிறாய் என்றான்.
ஆதியாகமம் 31 : 31 (RCTA)
யாக்கோபு அவனுக்கு மறுமொழியாக: உமக்குத் தெரியாமல் நான் புறப்பட்டதற்குக் காரணம், ஒருவேளை நீர் உமது புதல்விகளைக் கட்டாயப்படுத்தி இருக்க வைத்து விடுவீரென்று அஞ்சியே இப்படி வந்து விட்டேன்.
ஆதியாகமம் 31 : 32 (RCTA)
ஆனால், நான் திருடினதாக நீர் என் மீது குற்றம் சாட்டுகிறீரே, (இதைக் குறித்து நான் சொல்வதைக் கேளும்:) உமது தெய்வங்களை எவனிடம் கண்டுபிடிப்பீரோ அவன் நமது சகோதரர் முன் சாகடிக்கப்படக் கடவான். சோதித்துப் பாரும்; உம்முடைய பொருட்களில் ஏதாவது என் வசம் அகப்பட்டால் அதை எடுத்துக் கொள்ளும் என்றான். அவன் இவ்வாறு பேசும் போது, இராக்கேல் விக்கிரகங்களைத் திருடிக் கொண்டு வந்தாளென்று அவன் அறியாதிருந்தான்.
ஆதியாகமம் 31 : 33 (RCTA)
அப்பொழுது லாபான் யாக்கோபின் கூடாரத்திலும், லீயாளின் கூடாரத்திலும், இரண்டு வேலைக்காரிகளின் கூடாரத்திலும் நுழைந்து பார்த்து ஒன்றும் கண்டு பிடிக்கவில்லை. பின் அவன் இராக்கேலின் கூடாரத்திற்குப் போன போது,
ஆதியாகமம் 31 : 34 (RCTA)
அவள் மிக விரைவாக அந்த விக்கிரகங்களை எடுத்துத் தன் ஒட்டகச் சேணத்தின் கீழே ஒளித்து வைத்து, அதன் மேல் உட்கார்ந்து கொண்டாள். லாபான் கூடாரமெங்கும் சோதித்தும் அவற்றைக் கண்டு பிடிக்கவில்லை.
ஆதியாகமம் 31 : 35 (RCTA)
அவள் தந்தையை நோக்கி: நான் தங்கள் முன்னிலையில் எழுந்திருக்கவில்லையென்று நீர் கோபம் கொள்ள வேண்டாம். ஏனென்றால், பெண்களுக்குள்ள வீட்டு விலக்கக் காலத்தை இப்பொழுது அடைந்திருக்கிறேன் என்றாள். இவ்வாறு, அவன் கவனமாய்ச் சோதித்த போதிலும், ஏமாந்து போனான்.
ஆதியாகமம் 31 : 36 (RCTA)
அப்பொழுது யாக்கோபு மிகவும் சினந்து லாபானோடு வாக்குவாதம் செய்து: நீர் என்னை இவ்வளவு பகைத்து வருவதற்கு நான் என்ன குற்றம் அல்லது துரோகம் செய்தேன்?
ஆதியாகமம் 31 : 37 (RCTA)
என் தட்டு முட்டுக்களையெல்லாம் சோதித்துப் பார்த்தீரே; உம் வீட்டுப் பொருளில் எதையேனும் கண்டு பிடித்தீரோ? கண்டுபிடித்திருந்தால், அதை உமது சகோதரர்களுக்கும் எனது சகோதரர்களுக்கும் முன் இங்கே வையும்; இவர்களே உமக்கும் எனக்கும் நீதி வழங்கட்டும்.
ஆதியாகமம் 31 : 38 (RCTA)
இதற்காகத் தானா நான் உம்மோடு இருபது ஆண்டுகளாக இருந்தேன்? உம்முடைய செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் சினைப்படாமல் இருக்கவில்லையே. உம்முடைய மந்தைக் கிடாய்களில் ஒன்றையும் நான் உண்ணவில்லையே.
ஆதியாகமம் 31 : 39 (RCTA)
கொடிய விலங்குகளால் பீறுண்டவைகளை நான் உமக்குத் தெரிவிக்காமல், அவற்றிற்கும் ஈடு செய்து வந்தேனே. ஆனால், களவு போன எல்லாவற்றையும் நீர் என் கையில் கேட்டு வாங்கிக் கொண்டீரே.
ஆதியாகமம் 31 : 40 (RCTA)
நான் பகலில் வெயிலாலும் இரவில் பனியாலும் வருந்தி உழன்றேன். அதன் பொருட்டு, தூக்கம் என் கண்களுக்குத் தூரமாய் இருந்ததே.
ஆதியாகமம் 31 : 41 (RCTA)
இவ்விதமாய் நான் உமது வீட்டில் உமது புதல்விகளுக்காகப் பதினாலாண்டும், உமது மந்தைகளுக்காக ஆறாண்டும், ஆக இருபதாண்டுகள் உம்மிடம் பணிபுரிந்து வந்தேன். நீரோ, என் சம்பளத்தைப் பத்து முறையும் மாற்றி வந்தீரன்றோ?.
ஆதியாகமம் 31 : 42 (RCTA)
என் தந்தையாகிய அபிரகாமின் கடவுளும் ஈசாக்கின் பயபக்தியும் என்னை மீட்டுக் காப்பாற்றின. இல்லா விட்டால், நீர் இப்போது என்னை வெறுமையாக அனுப்பி விட்டிருந்தாலும் இருக்கலாம். ஆனால், கடவுள் எனது துன்பத்தையும் என் கடின உழைப்பையும் நினைவு கூர்ந்து நேற்று உம்மைக் கண்டித்திருக்கிறார் என்றான்.
ஆதியாகமம் 31 : 43 (RCTA)
அதற்கு லாபான்: இவர்கள் என் புதல்வியர்; (இவர்கள்) பிள்ளைகள் என் பிள்ளைகள். இந்த மந்தை என் மந்தை. அப்படியிருக்க, என் புதல்வியர்க்கும் பேரப்பிள்ளைகளுக்கும் நான் என்னசெய்யக் கூடும்?
ஆதியாகமம் 31 : 44 (RCTA)
நல்லது, வா; நாம் உடன்படிக்கை செய்து கொள்வோம். அது உனக்கும் எனக்குமிடையே சாட்சியமாக இருக்கட்டும் என்று மறுமொழி சொன்னான்.
ஆதியாகமம் 31 : 45 (RCTA)
யாக்கோபு ஒரு கல்லை எடுத்து, அதனை நினைவுத்தூணாக நிலை நிறுத்தி, தன் சகோதரர்களை நோக்கி:
ஆதியாகமம் 31 : 46 (RCTA)
கற்களைக் கொண்டு வாருங்கள் என்றான். அவர்கள் கற்களை வாரி எடுத்துக் கொண்டு வந்து ஒரு குவியலாக்கி, அந்தக் குவியலின் மேல் (அவர்கள்) உணவருந்தினார்கள்.
ஆதியாகமம் 31 : 47 (RCTA)
அதற்கு லாபான் 'சாட்சிய மேடை' என்றும், யாக்கோபு 'நடு நிலைக் குவியல்' என்றும் தத்தம் மொழிச் சிறப்பிற்கு ஏற்ப வெவ்வேறு விதமாய்ப் பெயரிட்டனர்.
ஆதியாகமம் 31 : 48 (RCTA)
பின்னர் லாபான்: இம்மேடை இன்று உனக்கும் எனக்கும் சாட்சியமாகுக என்றான். ஆதலால் அதன் பெயர் கலயாத் - அதாவது, சாட்சிய மேடை - எனப் பட்டது.
ஆதியாகமம் 31 : 49 (RCTA)
மீண்டும் அவன்: நாம் ஒருவரையொருவர் பிரிந்த பின், ஆண்டவரே நம்மைக் கண்காணித்து, உனக்கும் எனக்கும் நடுவராய் நின்று நீதி வழங்கக் கடவார்.
ஆதியாகமம் 31 : 50 (RCTA)
நீ என் புதல்விகளைத் துன்பப்படுத்தி அவர்களைத் தவிர வேறு பெண்களைக் கொள்வாயானால், எங்கும் நிறைந்து (நம்மை) நோக்குகின்ற கடவுளையன்றி நமது வார்த்தைகளுக்கு வேறு சாட்சியில்லை என்றான்.
ஆதியாகமம் 31 : 51 (RCTA)
மீண்டும் அவன் யாக்கோபை நோக்கி: இதோ, இந்தக் கல்மேடையும், உனக்கும் எனக்கும் நடுவாக நான் நிறுத்தி வைத்த இந்தக் கற்றூணும் சாட்சியாய் நிற்கின்றன.
ஆதியாகமம் 31 : 52 (RCTA)
ஆம், (உனக்குத் தீமை செய்ய) நான் அவற்றைக் கடந்து போவேனாகிலும், நீ எனக்குப் பொல்லாப்புச் செய்ய அவற்றைத் தாண்டி வருவாயாகிலும், இம்மேடையும் இந்தத் தூணும் சாட்சியாய் இருக்கும்.
ஆதியாகமம் 31 : 53 (RCTA)
அபிரகாமின் கடவுளும் நாக்கோரின் கடவுளும் அவர்கள் மூதாதையரின் கடவுளுமாயிருக்கிறவரே நமக்கு நடுவராய் இருந்து நீதி வழங்கக் கடவார் எனறான். அப்பொழுது யாக்கோபு தன் தந்தை ஈசாக்கின் பயபக்தியின் மீது ஆணையிட்டான்.
ஆதியாகமம் 31 : 54 (RCTA)
பின்பு மலையின் மேல் பலிசெலுத்தி உணவு அருந்தும்படி தன் சகோதரர்களை அழைத்தான். அவர்கள் சாப்பிட்ட பின் அங்கேயே தங்கினார்கள்.
ஆதியாகமம் 31 : 55 (RCTA)
லாபானோ, இருட்டோடே எழுந்திருந்து, தன் புதல்வர்களையும் புதல்விகளையும் முத்தம் செய்து அவர்களை ஆசீர்வதித்தான். பின் அவன் தன் இடத்திற்குத் திரும்பிப் போனான்.
❮
❯