ஆதியாகமம் 29 : 1 (RCTA)
ஆகையால் யாக்கோபு (அங்கிருந்து) புறப்பட்டு, கீழ்த்திசை நாடு போய்ச் சேர்ந்தான்.
ஆதியாகமம் 29 : 2 (RCTA)
அங்கே வயல் வெளியில் ஒரு கிணற்றையும், அதன் அருகே கிடை போட்டிருந்த ஆட்டுமந்தைகள் மூன்றையும் கண்டான். அந்தக் கிணற்றிலிருந்து தான் மந்தைகளுக்குத் தண்ணீர் காட்டப்படும். அதன் வாய் ஒரு பெரிய கல்லால் மூடப்பட்டிருந்தது.
ஆதியாகமம் 29 : 3 (RCTA)
ஆடுகள் எல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்தபின் மேய்ப்பர்கள் கல்லைப் புரட்டுவார்கள். அவை வேண்டிய மட்டும் குடித்து முடிந்ததும், மறுபடியும் கல்லைக் கிணற்று வாயின் மேல் தூக்கி வைப்பது வழக்கம்.
ஆதியாகமம் 29 : 4 (RCTA)
யாக்கோபு மேய்ப்பர்களை நோக்கி: சகோதரரே, நீங்கள் எந்த ஊர் என, அவர்கள்:
ஆதியாகமம் 29 : 5 (RCTA)
நாங்கள் ஆரானூர் என்றார்கள். மீண்டும் அவன்: நாக்கோரின் மகனான லாபானை அறிவீர்களா என்று வினவ, அவர்கள்: அறிவோம், என்றனர்.
ஆதியாகமம் 29 : 6 (RCTA)
அவர் நலமுடன் இருக்கிறாரா என்று (யாக்கோபு) கேட்க, (அவர்கள்:) அவன் நலமாய்த் தான் இருக்கிறான். அதோ! அவன் மகள் இராக்கேல் தன் மந்தையோடு வருகிறாள் என்றனர்.
ஆதியாகமம் 29 : 7 (RCTA)
அப்பொழுது யாக்கோபு: இன்னும் பொழுது சாய அதிக நேரம் செல்லும். இது மந்தைகளைக் கொண்டு போய்ப் பட்டியில் சேர்க்கிற நேரம் அல்லவே. ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுங்கள். பின் அவைகளை இன்னும் மேய விடலாம் என்றான்.
ஆதியாகமம் 29 : 8 (RCTA)
அதற்கு அவர்கள்: எல்லா மந்தைகளும் ஒன்று சேருமுன் அப்படிச் செய்யலாகாது. அவை சேர்ந்த பின், கிணற்று வாயினின்று கல்லைப் புரட்டி ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுவோம் என்று சொன்னார்கள்.
ஆதியாகமம் 29 : 9 (RCTA)
இப்படி அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இராக்கேல் தன் தந்தையின் ஆடுகளை ஓட்டிக் கொண்டு வந்தாள். ஏனென்றால், அவளே மந்தையை மேய்த்து வந்தாள்.
ஆதியாகமம் 29 : 10 (RCTA)
யாக்கோபு அவளைக் கண்டவுடனே, அவள் தன் மைத்துனி என்றும், ஆடுகள் தன் மாமன் லாபானுடையவை என்றும் தெரிந்து கொண்டு, கிணற்றை மூடியிருந்த கல்லைப் புரட்டி, மந்தைக்குத் தண்ணீர் காட்டினான்.
ஆதியாகமம் 29 : 11 (RCTA)
பின் இராக்கேலை முத்தம் செய்து உரத்த சத்தமிட்டு அழுதான்.
ஆதியாகமம் 29 : 12 (RCTA)
பின், தான் அவள் தந்தைக்குச் சகோதரனும் இரெபேக்காளுடைய மகனுமென்று அவளுக்குத் தெரிவித்தான். அதைக் கேட்டு அவள் ஓடிப்போய்த் தன் தந்தையிடம் சொன்னாள்.
ஆதியாகமம் 29 : 13 (RCTA)
தன் சகோதரியின் மகன் யாக்கோபு வந்த செய்தி கேட்டவுடன், லாபான் அவனுக்கு எதிர்கொண்டோடி, அவனை அரவணைத்துப் பன்முறை முத்தம் செய்து தன் வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு போனான். மேலும் அவன் பிரயாணத்தின் காரணங்களைக் கேள்விப் பட்டதும் யாக்கோபை நோக்கி:
ஆதியாகமம் 29 : 14 (RCTA)
நீ என் எலும்பும் மாமிசமுமானவன் அன்றோ என்றான். அங்கே ஒருமாத காலம் முடிந்த பின், லாபான் யாக்கோபை நோக்கி:
ஆதியாகமம் 29 : 15 (RCTA)
நீ என் சகோதரன் என்பதற்காகச் சும்மா எனக்கு வேலை செய்யலாமா? நீ சம்பளம் எவ்வளவு கேட்கிறாய்? சொல் என்றான்.
ஆதியாகமம் 29 : 16 (RCTA)
லாபானுக்கு இரண்டு புதல்விகள் இருந்தனர். மூத்தவளுடைய பெயர் லீயாள்; இளையவள் பெயர் இராக்கேல். ஆனால் லீயாள் பீளைக்கண் உடையவள்.
ஆதியாகமம் 29 : 17 (RCTA)
இராக்கேலோ வடிவழகும் முக எழிலும் உள்ளவள்.
ஆதியாகமம் 29 : 18 (RCTA)
யாக்கோபு இவள்மேல் விருப்பம் கொண்டு: உம்முடைய இளைய புதல்விக்காக நான் உம்மிடம் ஏழாண்டுகள் வேலை செய்கிறேன் என்றான்.
ஆதியாகமம் 29 : 19 (RCTA)
அதற்கு லாபான்: நான் அவளை அந்நிய ஆடவனுக்குக் கொடுப்பதைவிட உனக்குக் கொடுப்பது மேல். என்னோடு தங்கியிரு என்றான்.
ஆதியாகமம் 29 : 20 (RCTA)
அப்படியே யாக்கோபு ஏழாண்டுகள் இராக்கேலை முன்னிட்டு வேலை செய்து வந்தான். ஆனால், அவள் மீது அவன் வைத்திருந்த அன்பின் மிகுதியால் அவ்வேழாண்டுகள் அவனுக்குக் கொஞ்ச நாளாகவே தோன்றின.
ஆதியாகமம் 29 : 21 (RCTA)
பின் யாக்கோபு லாபானை நோக்கி: நான் என் மனைவியோடு சேரும் பொருட்டு அவளை எனக்குத் தாரும். ஏனென்றால், குறித்த காலம் ஏற்கனவே முடிந்துவிட்டது என்றான்.
ஆதியாகமம் 29 : 22 (RCTA)
அவன் நண்பர்களைப் பெருங்கூட்டமாக விருந்துக்கழைத்துத் திருமண விழாவைக் கொண்டாடி முடித்தான்.
ஆதியாகமம் 29 : 23 (RCTA)
ஆனால், அந்தி வேளையிலே அவன் தன் புதல்வி லீயோளை அழைத்துக் கொண்டுபோய் அவனிடம் விட்டான்.
ஆதியாகமம் 29 : 24 (RCTA)
அவளுக்கு ஊழியம் செய்ய ஜெல்பாளைக் கொடுத்தான்.
ஆதியாகமம் 29 : 25 (RCTA)
யாக்கோபு வழக்கப்படி லீயாளோடு படுத்திருந்தது, காலையிலே அவள் லீயாளென்று கண்டு, தன் மாமனாரை நோக்கி: நீர் எனக்கு இப்படி ஏன் செய்தீர்? இராக்கேலுக்காக அல்லவா நான் உமக்கு வேலை செய்தேன்? என்னை இப்படி வஞ்சிப்பானேன் என்றான்.
ஆதியாகமம் 29 : 26 (RCTA)
அதற்கு லாபான்: மூத்தவள் இருக்க இளைய பெண்ணைக் கொடுப்பது இவ்விடத்தில் வழக்கமல்லவே.
ஆதியாகமம் 29 : 27 (RCTA)
(ஆகையால்) நீ இவளோடு கூடி வாழ்ந்து ஏழு நாட்களை நிறைவேற்று. பின் இன்னும் ஏழாண்டுகள் என்னிடம் வேலை செய்தால் இராக்கேலையும் உனக்குக் கொடுப்பேன் என்றான்.
ஆதியாகமம் 29 : 28 (RCTA)
யாக்கோபு அவ்வாறே செய்ய இசைந்தான். அந்த ஏழு நாட்களுக்குப் பின் இராக்கேலை மணமுடித்தான்.
ஆதியாகமம் 29 : 29 (RCTA)
லாபான் இவளுக்குப் பாளாளைப் பணிப்பெண்ணாகத் தந்திருந்தான்.
ஆதியாகமம் 29 : 30 (RCTA)
யாக்கோபு தான் அத்தனை நாள் ஆசித்திருந்த பெண்ணைக் கொண்ட பின், முந்தினவளைக் காட்டிலும் பிந்தினவளை அதிகமாய் நேசித்து, இன்னும் ஏழாண்டுகள் லாபானிடம் பணிபுரிந்து வந்தான்.
ஆதியாகமம் 29 : 31 (RCTA)
ஆனால், யாக்கோபு லீயாளை அற்பமாய் எண்ணுகிறானென்று ஆண்டவர் கண்டு, அவள் கருத்தாங்கும்படி செய்தார். இவள் தங்கையோ மலடியாய் இருந்தாள்.
ஆதியாகமம் 29 : 32 (RCTA)
லீயாள் கருத்தாங்கி ஒரு புதல்வனைப் பெற்றாள். ஆண்டவர் எனது தாழ்மையைக் கண்டருளினார்; இனி மேல் என் கணவர் எனக்கு அன்பு செய்வார் என்று கூறி, அவனுக்கு ரூபன் என்று பெயரிட்டாள்.
ஆதியாகமம் 29 : 33 (RCTA)
மீண்டும் (அவள்) கருத்தாங்கி ஒரு புதல்வனை ஈன்றபோது: நான் அற்பமாய் எண்ணப்பட்டிருப்பதை ஆண்டவர் அறிந்தமையால், இவனையும் எனக்குத் தந்தருளினார் என்று சொல்லி, அவனுக்குச் சிமையோன் என்று பெயரிட்டாள்.
ஆதியாகமம் 29 : 34 (RCTA)
அவள் மூன்றாம் முறை கருவுற்று இன்னொரு புதல்வனைப் பெற்றாள். இனிமேல் என் கணவர் என் மீது அன்பாய் இருப்பார். அவருக்கு மூன்று மக்களைப் பெற்றேனன்றோ? என்று, இதை முன்னிட்டு அவனுக்கு லேவி என்று பெயரிட்டாள்.
ஆதியாகமம் 29 : 35 (RCTA)
அன்றியும், நான்காம் முறையாக கருவுற்று ஒரு புதல்வனைப் பெற்றாள். இப்பொழுது ஆண்டவரைத் துதிப்பேன் என்று சொல்லி, அதன் பொருட்டு அவனை யூதா என்று அழைத்தாள். பின் அவளுக்குப் பிள்ளை பேறு நின்று போயிற்று.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35

BG:

Opacity:

Color:


Size:


Font: