ஆதியாகமம் 28 : 1 (RCTA)
ஆகையால், ஈசாக் யாக்கோபை அழைத்து அவனை ஆசீர்வதித்து: நீ கானானியப் பெண்ணைக் கொள்ள வேண்டாம்.
ஆதியாகமம் 28 : 2 (RCTA)
புறப்பட்டு, சீரியாவிலுள்ள மெசொப்பொத்தாமியாவுக்குப் போய், உன் தாயாரின் தந்தையாகிய பத்துவேலின் வீட்டிலே உன் மாமனாகிய லாபானின் புதல்வியரில் ஒருத்தியை மணந்து கொள்வாய்.
ஆதியாகமம் 28 : 3 (RCTA)
எல்லாம் வல்ல கடவுளே உன்னை ஆசீர்வதித்து, நீ பல இனங்களுக்குத் தந்தையாகும்படி உன்னைப் பலுகிப் பெருகச் செய்து, ஆபிரகாம் பெற்ற ஆசிரை அவர் உனக்கும் உனக்குப் பின் உன் வழிவருவோர்க்கும் அருள்வாராக.
ஆதியாகமம் 28 : 4 (RCTA)
அதனால், நீ அகதியாய் நடமாடும் பூமியையும், அவர் ஆபிரகாமுக்குத் திருவாக்கருளிக் கொடுத்த நாட்டையும் உரிமையாக்கிக் கொள்வாயாக என்றான்.
ஆதியாகமம் 28 : 5 (RCTA)
ஈசாக் யாக்கோபை அவ்விதமாய் அனுப்பிவிட்ட பின், அவன் புறப்பட்டு, சீரியாவிலுள்ள மெசொப்பொத்தாமியாவுக்குப் போய், தன் தாயார் இரெபேக்காளின் தமையனும், சீரியா நாட்டினனான பத்துவேலின் புதல்வனுமான லாபானிடம் சேர்ந்தான்.
ஆதியாகமம் 28 : 6 (RCTA)
ஈசாக் யாக்கோபை ஆசீர்வதித்து, திருமணத்தின் பொருட்டு சீரியாவிலுள்ள மெசொப்பெத்தாமியாவுக்கு அனுப்பிவிட்டதையும், அவனை ஆசீர்வதித்த பின்: நீ கானான் (நாட்டுப்) புதல்வியரிடையே பெண்கொள்ள வேண்டாம் என்று அவனுக்குக் கட்டளையிட்டதையும்,
ஆதியாகமம் 28 : 7 (RCTA)
யாக்கோபு தன் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து சீரியாவுக்குப் போனதையும் எசாயூ கண்டதனாலும்,
ஆதியாகமம் 28 : 8 (RCTA)
கானான் நாட்டுப் பெண்களின் மேல் தன் தந்தை வெறுப்பாயிருக்கிறாரென்று தன் சொந்த அனுபவத்தால் அறிந்ததனாலும்,
ஆதியாகமம் 28 : 9 (RCTA)
எசாயூ இஸ்மாயேலரிடம் சென்று, தான் முன் கொண்டிருந்த மனைவியரையன்றி, இன்னும் ஆபிரகாமின் புதல்வனான இஸ்மாயேலின் புதல்வியும் நபயோத்தின் சகோதரியுமான மகெலேத்தை மணந்து கொண்டான்.
ஆதியாகமம் 28 : 10 (RCTA)
யாக்கோபோ, பெற்சபேயிலிருந்து புறப்பட்டு, ஆரானை நோக்கி நடந்து கொண்டிருந்தான்.
ஆதியாகமம் 28 : 11 (RCTA)
அவன் ஓரிடத்தில் வந்து, சூரியன் மறைந்தபடியால், அங்கே இளைப்பாற விரும்பி, அவ்விடத்தில் கிடந்த கற்களில் ஒன்றை எடுத்துத் தலையணையாகத் தன் தலையின் கீழ் வைத்துக் கொண்டு, அங்கேயே துயில் கொள்ளுமாறு படுத்துக் கொண்டான்.
ஆதியாகமம் 28 : 12 (RCTA)
அப்போது அவன் கண்ட கனவாவது: ஓர் ஏணி பூமியிலே ஊன்றியது; அதன் மேல் நுனியோ வானத்தை எட்டுவதாய் இருந்தது. அதன் மேல் கடவுளுடைய தூதர் ஏறுவதும் இறங்குவதுமாய் இருந்தனர்.
ஆதியாகமம் 28 : 13 (RCTA)
அதற்கு மேல் ஆண்டவர் வீற்றிருந்து அவனை நோக்கி: நாம் உன் தந்தை ஆபிரகாமின் கடவுளும் ஈசாக்கின் கடவுளுமாகிய ஆண்டவர். நீ படுத்துக் கொண்டிருக்கிற இப்பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தந்தருள்வோம். உன் சந்ததியோ நிலப் புழுதிக்கு ஒக்கும்.
ஆதியாகமம் 28 : 14 (RCTA)
நீ மேற்கு, கிழக்கு, வடக்கு, தெற்குத் திசைகளில் பலுகுவாய். உன்னிலும், உன் சந்ததியிலும் பூமியின் எல்லா இனத்தாரும் ஆசீர்வதிக்கப்படுவர்.
ஆதியாகமம் 28 : 15 (RCTA)
நீ எவ்விடம் போனாலும் உனக்கு நாம் காவாலாயிருந்து இந்நாட்டிற்கு உன்னைத் திரும்பி வரச் செய்வோம். மேலும் நாம் உனக்குச் சொல்லியதையெல்லாம் நிறைவேற்று மட்டும் உன்னைக் கைவிட மாட்டோம் என்றார்.
ஆதியாகமம் 28 : 16 (RCTA)
யாக்கோபு தூக்கம் தெளிந்து: மெய்யாகவே ஆண்டவர் இவ்விடத்தில் இருக்கிறார்; நானோ இதை அறியாதிருந்தேன்! என்று கூறித் திகிலடைந்து:
ஆதியாகமம் 28 : 17 (RCTA)
இந்த இடம் எவ்வளவு அச்சத்திற்குரியதாய் இருக்கிறது! இதுவே இறைவனின் இல்லம், வானக வாயில் என்றான்.
ஆதியாகமம் 28 : 18 (RCTA)
பிறகு யாக்கோபு காலையில் எழுந்து, தலையணையாகத் தான் வைத்திருந்த கல்லை எடுத்து நினைவு தூணாக அதை நாட்டி, அதன் மேல் எண்ணெயை வார்த்து,
ஆதியாகமம் 28 : 19 (RCTA)
லூசா என்று வழங்கப்பட்ட அந்த இடத்திற்குப் பெத்தெல் என்று பெயரிட்டான்.
ஆதியாகமம் 28 : 20 (RCTA)
மேலும்: கடவுளாகிய ஆண்டவர் என்னோடிருந்து, நான் போகிற இந்த வழியில் என்னைக் காப்பாற்றி, உண்ண உணவும் உடுக்க உடையும் எனக்குத் தந்தருள்வாராயின்,
ஆதியாகமம் 28 : 21 (RCTA)
நானும் என் தந்தையின் வீட்டிற்கு நலமுடன் திரும்பிச் செல்வேனாயின், ஆண்டவரே எனக்குக் கடவுளாக இருப்பார்.
ஆதியாகமம் 28 : 22 (RCTA)
அன்றியும், நான் நினைவுத் தூணாக நாட்டிய இந்தக் கல்லே கோயில் எனப்படும். மேலும், நீர் எனக்குத் தரும் யாவற்றிலும் நான் பத்தில் ஒரு பங்கு உமக்குச் செலுத்துவேன் என்று நேர்ந்து கொண்டான்.
❮
❯