ஆதியாகமம் 25 : 1 (RCTA)
ஆபிரகாம் செத்துராள் என்னும் வேறொரு மனைவியை மணந்து கொண்டார்.
ஆதியாகமம் 25 : 2 (RCTA)
இவள் அவனுக்கு ஜாமிரான், ஜெக்சான், மதான், மதீயான், ஜெஸ்போக், சூயே என்பவர்களைப் பெற்றாள்.
ஆதியாகமம் 25 : 3 (RCTA)
ஜெக்சான் சாபாவையும் தாதானையும் பெற்றாள். அசுரீம், லாத்துசீம், லோமீம் என்பவர்கள் தாதானுக்குப் பிறந்த புதல்வர்கள்.
ஆதியாகமம் 25 : 4 (RCTA)
மதீயானுக்கும் எப்பா, ஒப்பேர், ஏனோக், அபிதா, எல்தா என்பவர்கள் பிறந்தார்கள். இவர்கள் அனைவரும் செத்துராளின் புதல்வர்.
ஆதியாகமம் 25 : 5 (RCTA)
ஆபிரகாம் தம் மகன் ஈசாக்குக்குத் தம் செல்வங்கள் எல்லாவற்றையும் கொடுத்தார்.
ஆதியாகமம் 25 : 6 (RCTA)
ஆனால், அவருக்கிருந்த வேறு மனைவியரின் பிள்ளைகளுக்கு (வேண்டிய) சொத்துக்களைக் கொடுத்து, இவர்களைத் தம் புதல்வனான ஈசாக்கிடத்தினின்று பிரித்து, தாம் உயிரோடிருக்கும் போதே கீழ்த்திசை நாட்டிற்கு அனுப்பி விட்டார்.
ஆதியாகமம் 25 : 7 (RCTA)
ஆபிரகாம் நூற்றெழுபத்தைந்து ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்த பின்,
ஆதியாகமம் 25 : 8 (RCTA)
முதியவனாகி நிறைந்த வாழ்நாட்களைக் கடந்து உடல் வலிமை இழந்து, நல்ல கிழப் பருவத்தில் இறந்து, தம் முன்னோரோடு சேர்க்கப்பட்டார்.
ஆதியாகமம் 25 : 9 (RCTA)
அவர் புதல்வர்களாகிய ஈசாக், இஸ்மாயேல் என்பவர்கள் மம்பிறே என்ற நகரத்துக்கெதிரே ஏத்தையனாகிய சேயாரின் மகன் எபிரோனுடைய நிலத்தில் இருந்த இரட்டைக் குகையிலேயே அவரை அடக்கம் செய்தார்கள்.
ஆதியாகமம் 25 : 10 (RCTA)
அவர் அந்த நிலத்தைத்தான் எத்தின் புதல்வரிடமிருந்து வாங்கியிருந்தார். அதிலே அவரும் அவர் மனைவி சாறாளும் அடக்கம் செய்யப்பட்டார்கள்.
ஆதியாகமம் 25 : 11 (RCTA)
அவர் இறந்த பின், வாழ்கிறவரும் காண்கிறவரும் என்று சொல்லப்படும் கிணற்றுக்குப் பக்கமாய்க் குடியிருந்த அவர் புதல்வனான ஈசாக்கைக் கடவுள் ஆசீர்வதித்து வந்தார்.
ஆதியாகமம் 25 : 12 (RCTA)
சாறாளின் ஊழியக்காரியும் எகிப்து நாட்டினளுமான ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற மகனான இஸ்மாயேலின் தலைமுறை அட்டவணையும்,
ஆதியாகமம் 25 : 13 (RCTA)
அவன் புதல்வர்களுடைய பெயரும், சந்ததியுமாவன: இஸ்மாயேலின் மூத்த புதல்வன் நபயோத்; அவனது ஏனைய புதல்வர்கள் கேதார், அப்தேல், மாப்சாம்,
ஆதியாகமம் 25 : 14 (RCTA)
மஸ்மா, துமா, மாசா, ஆதார், தேமா,
ஆதியாகமம் 25 : 15 (RCTA)
ஜெத்தூர், நாப்பீஸ், கெத்மா ஆகியோர்.
ஆதியாகமம் 25 : 16 (RCTA)
அவர்கள் பன்னிருவரும் தத்தம் கோத்திரத் தலைவர்களாய் விளங்கினர். தத்தம் கோட்டைகளுக்கும் நகரங்களுக்கும் தத்தம் பெயரையே இட்டனர்.
ஆதியாகமம் 25 : 17 (RCTA)
இஸ்மாயேல் உயிர் வாழ்ந்த காலம் மொத்தம் நூற்று முப்பத்தேழு ஆண்டுகள். அவன் அப்பொழுது உடல் வலுவிழந்து இறந்து தன் முன்னோருடன் சேர்க்கப்பட்டான்.
ஆதியாகமம் 25 : 18 (RCTA)
அவன் ஏவிலா முதல் ஆசிரியாவுக்குப் போகிற வழியில் எகிப்து நாட்டிற்கு எதிராகக் காணப்படும் சூர் வரையிலும் வாழ்ந்து வந்தவன். அவன் இறந்த போது அவன் சகோதரர் எல்லாரும் அவனைச் சூழ்ந்திருந்தனர்.
ஆதியாகமம் 25 : 19 (RCTA)
ஆபிரகாமின் புதல்வனான ஈசாக்கின் வம்சங்கள் ஆவன: ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றார்.
ஆதியாகமம் 25 : 20 (RCTA)
ஈசாக் நாற்பது வயதான போது, மெசொபொத்தாமியாவில் வாழ்ந்து வந்த சீரிய நாட்டானாகிய பத்துவேலின் புதல்வியும் லாபானின் தங்கையுமான இரெபேக்காளை மணம் புரிந்தான்.
ஆதியாகமம் 25 : 21 (RCTA)
ஈசாக், மலடியாய் இருந்த தன் மனைவிக்காக ஆண்டவரை வேண்டிக்கொண்டதினால் அவர் அம்மன்றாட்டைக் கேட்டு, இரெபேககாளுக்கு மகப்பேறு அளித்தருளினார்.
ஆதியாகமம் 25 : 22 (RCTA)
ஆனால், அவளுடைய கருப்பத்தில் உருவாகியிருந்த இரண்டு குழந்தைகள் தாயின் வயிற்றில் தானே ஒன்றோடொன்று போர்புரியக் கண்டு, அவள்: அது நடக்குமென்றிருந்தால், நான் கருத்தாங்கியதனால் பயன் என்ன என்று கூறி, ஆண்டவருடைய திருவுள்ளம் இன்னதென்று அறியும்படி போனாள்.
ஆதியாகமம் 25 : 23 (RCTA)
அவர் அவளை நோக்கி: உன் வயிற்றிலே இரண்டு குடிகள் உண்டு. அவ்விரண்டும் உன் வயிற்றிலிருந்து வெளிப்பட்ட நாள் முதல் வெவ்வேறாய்ப் பிரிந்து போகும். ஒரு குடியை மற்றொரு குடி மேற்கொள்ளும். மூத்தவன் இளையவனுக்குப் பணிந்தேயிருப்பான் என்றருளினார்.
ஆதியாகமம் 25 : 24 (RCTA)
பேறுகாலமான போது, இரட்டைப் பிள்ளைகள் வயிற்றில் இருந்தன என்பது மெய்யாயிற்று.
ஆதியாகமம் 25 : 25 (RCTA)
முதன் முதல் வெளிப்பட்ட பிள்ளை பிங்கல நிறமும் மயிர் செறிந்த தோலும் உடையவன். ஆதலால் அவனுக்கு எசாயூ என்று பெயர் சூட்டப்பட்டது.
ஆதியாகமம் 25 : 26 (RCTA)
இரண்டாவது பிள்ளை தன் சகோதரனின் காலைக் கையாலே பிடித்துக் கொண்டு உடனுக்குடன் வெளிப்பட்டதனால், அவனுக்கு யாக்கோபு என்னும் பெயரை இட்டனர். அவ்விரு பிள்ளைகளும் பிறந்த போது ஈசாக் அறுபது வயதுள்ளவனாய் இருந்தான்.
ஆதியாகமம் 25 : 27 (RCTA)
இருவரும் வளர்ந்து இளைஞரான போது, அவர்களில் எசாயூ வேட்டையாடுவதிலும் பயிர்த் தொழிலிலும் வல்லவனானான். யாக்கோபோ, கபடமற்ற மனிதனாய்க் கூடாரங்களில் வாழ்ந்து வந்தான்.
ஆதியாகமம் 25 : 28 (RCTA)
ஈசாக் எசாயூக்கு மிகவும் அன்பு செய்தான்; ஏனென்றால், அவனுடைய வேட்டை மிருகங்களை விரும்பிச் சாப்பிட்டு வந்தான். இரெபேக்காளோ, யாக்கோபின் மீது அன்பு பாராட்டி வந்தாள்.
ஆதியாகமம் 25 : 29 (RCTA)
ஒருநாள் யாக்கோபு ஒருவிதத் தின்பண்டம் செய்துகொண்டிருக்கும் பொழுது எசாயூ காட்டிலிருந்து மிகவும் களைப்புற்றவனாய் அவனிடம் வந்து:
ஆதியாகமம் 25 : 30 (RCTA)
இந்தச் செந்நிறத் தின்பண்டத்திலே எனக்குக் கொஞ்சம் கொடு. நான் மிகவும் சோர்வுற்று இருக்கிறேன் என்றான். (அவனுக்கு எதோம் என்னும் பெயர் வழங்கியதற்கு இதுவே காரணம்.)
ஆதியாகமம் 25 : 31 (RCTA)
யாக்கோபு அவனை நோக்கி: தலைச்சனுக்குரிய உனது உரிமையை எனக்கு விற்று விடுவாயா என, அவன்:
ஆதியாகமம் 25 : 32 (RCTA)
இதோ, சாகிறேனே! தலைச்சனுக்குரிய உரிமைகளால் எனக்கு என்ன பயன் வரப்போகிறது என்று மறுமொழி சொல்லக் கேட்டு, யாக்கோபு:
ஆதியாகமம் 25 : 33 (RCTA)
அப்படியானால் முதலில் எனக்குச் சத்தியம் பண்ணிக் கொடு என்றான். எசாயூ ஆணையிட்டு, தலைச்சனுக்குரிய தன் உரிமையை விற்று விட்டான்.
ஆதியாகமம் 25 : 34 (RCTA)
இதன் பின் அவன் அப்பத்தையும் மேற்படித் தின்பண்டத்தையும் எடுத்து உண்டு குடித்தான். தலைச்சனுக்குரிய உரிமையை விற்று விட்டதை ஒரு பொருட்டாய் எண்ணாமல் அப்பாலே சென்றான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34

BG:

Opacity:

Color:


Size:


Font: