ஆதியாகமம் 21 : 1 (RCTA)
பின்னர் ஆண்டவர் தமது அருள்வாக்கின் படி சாறாளை நினைவு கூர்ந்து, தமது திருவாக்கு அவளிடம் நிறைவேறச் செய்தார்.
ஆதியாகமம் 21 : 2 (RCTA)
அவள் தன் முதிர்ந்த வயதில் கருத் தாங்கி, கடவுள் முன் குறித்திருந்த காலத்தில் ஒரு புதல்வனைப் பெற்றாள்.
ஆதியாகமம் 21 : 3 (RCTA)
ஆபிரகாம் சாறாளிடம் பெற்ற புதல்வனுக்கு ஈசாக் எனப் பெயரிட்டார்.
ஆதியாகமம் 21 : 4 (RCTA)
பின் கடவுள் கட்டளைப்படி ஆபிரகாம் எட்டாம் நாளிலே குழந்தைக்கு விருத்த சேதனம் செய்தார்.
ஆதியாகமம் 21 : 5 (RCTA)
அப்பொழுது அவருக்கு நூறு வயது. அத்தனை வயதுள்ள தந்தைக்கே ஈசாக்கு பிறந்தான்.
ஆதியாகமம் 21 : 6 (RCTA)
அப்பொழுது சாறாள்: கடவுள் எனக்கு மகிழ்ச்சி அளித்தார் என்றும், இதைக் கேட்கிற யாவரும் என்னோடு சேர்ந்து மகிழ்வார்கள் என்றும் சொன்னாள்.
ஆதியாகமம் 21 : 7 (RCTA)
மீண்டும்: முதிர் வயதுள்ள ஆபிரகாமுக்குச் சாறாள் ஒரு புதல்வனைப் பெற்றாளாம்! அதற்குப் பாலூட்டி வருகிறாளாம்! இத்தகைய செய்தியை ஆபிரகாம் என்றாவது ஒரு நாள் கேள்விப்படுவாரென்று யார் தான் நினைத்திருக்கக் கூடும் என்றும் சாறாள் சொன்னாள்.
ஆதியாகமம் 21 : 8 (RCTA)
அந்தக் குழந்தை வளர்ந்து பால்குடியும் மறந்தது. அப்படிப் பால்குடி மறந்த நாளன்று ஆபிரகாம் பெரியதொரு விருந்து செய்தார்.
ஆதியாகமம் 21 : 9 (RCTA)
(பின் ஒரு நாள்) எகிப்து நாட்டினளான ஆகாரின் புதல்வன், சாறாள் புதல்வனான ஈசாக்கோடு கேலி பண்ணி விளையாடுவதைச் சாறாள் கண்டு, ஆபிரகாமை நோக்கி:
ஆதியாகமம் 21 : 10 (RCTA)
இந்த வேலைக்காரியையும் அவள் புதல்வனையும் துரத்தி விட வேண்டும். ஏனென்றால், வேலைக்காரியின் மகன் என் மகன் ஈசாக்கோடு பங்காளியாய் இருக்கக் கூடாது என்றாள்.
ஆதியாகமம் 21 : 11 (RCTA)
தன் மகன் இஸ்மாயிலைப் பற்றிச் சாறாள் சொன்ன வார்த்தையைக் கேட்டு ஆபிரகாம் வருத்தமுற்றார்.
ஆதியாகமம் 21 : 12 (RCTA)
அப்போது கடவுள் அவரை நோக்கி: பையனையும் வேலைக்காரியையும் பொறுத்த வரையில் அது கொடுமையென்று எண்ணாதே. சாறாள் உனக்குச் சொல்வதையெல்லாம் கேட்டு நட. ஏனென்றால் ஈசாக்கிடமிருந்து உனக்குச் சந்ததி தோன்றும்.
ஆதியாகமம் 21 : 13 (RCTA)
உன் வேலைக்காரியின் மகனும் உன் வித்தானதனால், அவனையும் ஒரு பெரிய இனத்துக்குத் தலைவனாக்குவோம் என்றார்.
ஆதியாகமம் 21 : 14 (RCTA)
ஆபிரகாம் இதைக் கேட்டு, காலையில் எழுந்து, ஓர் அப்பத்தையும், தண்ணீர் நிறைந்த ஒரு தோல் பையையும் அவள் தோளில் சுமத்தி, பையனையும் அவளிடம் ஒப்புவித்து அவளை அனுப்பிவிட்டார். அவள் புறப்பட்டுப் போய்ப் பெற்சபே என்னும் பாலைவனத்தில் அலைந்து திரிந்து கொண்டிருந்தாள்.
ஆதியாகமம் 21 : 15 (RCTA)
தோல் பையிலிருந்த தண்ணீர் தீர்ந்த பின் அவள் அவ்விடத்துள்ள மரங்களில் ஒன்றின் அடியில் பையனைக் கிடத்திய பின்,
ஆதியாகமம் 21 : 16 (RCTA)
அம்பு எறி தூரத்திற்கும் அதிகமாகச் சென்று அங்கே எதிர் நோக்கி உட்கார்ந்தாள்: குழந்தை சாவதைப் பார்க்கச் சகியேன் என்று, தான் அமர்ந்திருந்த இடத்திலேயே கூக்குரலிட்டு அழுதாள். அப்போது கடவுள் குழந்தையின் குரலை நன்றாகக் கேட்டருளினதால், ஆண்டவருடைய தூதர் ஒருவர் வானத்தினின்று ஆகாரைக் சுப்பிட்டு:
ஆதியாகமம் 21 : 17 (RCTA)
ஆகாரே, உன்னை வருத்துவது யாது? பயப்படாதே. ஏனென்றால், கிடத்தியிருக்கிற இடத்தினின்று பையன் இட்ட சத்தத்தைக் கடவுள் நன்றானக் கேட்டருளினார்.
ஆதியாகமம் 21 : 18 (RCTA)
நீ எழுந்து பையனைத் தூக்கியெடுத்து அதன் கையைப் பிடி. ஏனென்னால், அவளை ஒரு பெரிய இனத்திற்குத் தந்தையாக்குவோம் என்றார்.
ஆதியாகமம் 21 : 19 (RCTA)
அந்நேரத்திலே கடவுள் அவள் கண்களைத் திறந்து விட, அவள் ஒரு தண்ணீர்க் கிணற்றைக் கண்டாள்; அவ்விடம் சென்று தோல் பையை நீரால் நிரப்பிப் பையனுக்குக் குடிக்கக் கொடுத்தாள்.
ஆதியாகமம் 21 : 20 (RCTA)
கடவுள் அவனோடு இருந்தார். ஆதலால் அவன் வளர்ந்து, பாலைவனத்தில் அலைந்து திரிந்து, வில்வித்தையில் கைதேர்ந்தவனானான்.
ஆதியாகமம் 21 : 21 (RCTA)
அவன் பரான் என்னும் பாலைவனத்தில் வாழ்ந்து வருகையில், அவன் தாய் எகிப்து நாட்டினின்று ஒரு பெண்ணைக் கொண்டு வந்து அவனுக்கு மணமுடித்து வைத்தாள்.
ஆதியாகமம் 21 : 22 (RCTA)
அக்காலத்தில் அபிமெலெக் தன் படைத் தலைவனாகிய பிக்கோலோடு வந்து ஆபிரகாமை நோக்கி: நீர் செய்கிற யாவற்றிலும் கடவுள் உம்முடனே இருக்கிறார்.
ஆதியாகமம் 21 : 23 (RCTA)
ஆகையால், எனக்கும் என் சந்ததியாருக்கும் என் இனத்தாருக்கும் நீர் எவ்விதத் தீமையும் செய்யாமல், உமக்கு நான் கருணை காட்டி வந்துள்ளதுபோல நீரும் என் மீதும், நீர் அந்நியனாய் வாழ்ந்து வந்த இந்த நாட்டின் மீதும் தயவுள்ளவராய் இருப்பதாகக் கடவுள் பெயராலே ஆணையிடுவீர் என்றான்.
ஆதியாகமம் 21 : 24 (RCTA)
அதற்கு, ஆபிரகாம்: அவ்விதமே ஆணையிடுகிறேன் என்று கூறினார்.
ஆதியாகமம் 21 : 25 (RCTA)
பிறகு அபிமெலெக்கின் ஊழியர்கள் வலுக்கட்டாயமாய்க் கைப்பற்றியிருந்த ஒரு கிணற்றைப் பற்றி அவனிடம் முறையிட்டார்கள்.
ஆதியாகமம் 21 : 26 (RCTA)
அபிமெலெக் அதற்கு மறுமொழியாக: அந்த அநியாயத்தைச் செய்தவர் யாரென்று எனக்கும் தெரியாமல் இருந்தது; நீரும் அதை எனக்குத் தெரிவிக்கவில்லை. இன்று தான் முதல் தடவையாக நான் அதைக் கேள்விப்படுகிறேன் என்றான்.
ஆதியாகமம் 21 : 27 (RCTA)
பின் ஆபிரகாம் ஆடுமாடுகளை அபிமெலக்கிடம் கொண்டு வந்து கொடுக்க, அவர்கள் ஒருவரோடு ஒருவர் உடன்படிக்கை செய்து கொண்டனர்.
ஆதியாகமம் 21 : 28 (RCTA)
அப்பொழுது, ஆபிரகாம் மந்தையினின்று ஏழு பெண் ஆட்டுக் குட்டிகளைத் தனியாகப் பிரித்து நிறுத்தினார்.
ஆதியாகமம் 21 : 29 (RCTA)
அபிமெலெக் அவரை நோக்கி: நீர் இவ்வேழு பெண் ஆட்டுக்குட்டிகளைத் தனியே நிறுத்தி வைப்பானேன்? இதன் காரணம் என்ன? என்று கேட்க, அவர்:
ஆதியாகமம் 21 : 30 (RCTA)
நீர் இப் பெண் ஆட்டுக்குட்டிகள் ஏழையும் என்னிடமிருந்து வாங்கிக் கொள்ளக் கடவீர்; நானே இந்தக் கிணற்றை வெட்டினேன் என்பதற்கு இவை எனக்குச் சாட்சியாய் இருக்கும் என்றார்.
ஆதியாகமம் 21 : 31 (RCTA)
அதன் காரணமாக அந்த இடம் பெற்சபே என்று அழைக்கப்பட்டது: ஏனென்றால், அவ்விடத்தில் இருவரும் சத்தியம் பண்ணினார்கள்.
ஆதியாகமம் 21 : 32 (RCTA)
அவர்கள் சத்தியம் பண்ணின அக்கிணற்றைக் குறித்தே உடன்படிக்கை செய்து கொண்டார்கள். இதன் பின் அபிமெலெக்கும் அவன் படைத் தலைவனாகிய பிக்கோலும் எழுந்து பிலிஸ்தியர் நாட்டிற்குத் திரும்பிச் சென்றனர்.
ஆதியாகமம் 21 : 33 (RCTA)
ஆபிரகாமோ, பெற்சபேயில் ஒரு சோலையை உண்டாக்கி, அங்கு நித்திய கடவுளாகிய ஆண்டவரின் திருப் பெயரை வணங்கிப் போற்றினார்.
ஆதியாகமம் 21 : 34 (RCTA)
அவர் பிலிஸ்தியர் நாட்டில் நெடுங்காலம் குடியிருந்தார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34

BG:

Opacity:

Color:


Size:


Font: