ஆதியாகமம் 19 : 1 (RCTA)
மாலை வேளையில் ஆண்டவரின் தூதர் இருவர் சொதோமுக்கு வந்தனர். அப்பொழுது லோத் நகரின் தலை வாயிலில் உட்கார்ந்திருந்தான். அவன் அவர்களைக் கண்டவுடன் எழுந்து அவர்களுக்கு எதிர் கொண்டு சென்று முகம் குப்புறவிழுந்து வணக்கம் புரிந்தான்.
ஆதியாகமம் 19 : 2 (RCTA)
பிறகு: ஐயன்மீர், அருள் கூர்ந்து அடியேன் வீட்டுப் பக்கமாய் நீங்கள் வந்து இரவு தங்கி கால்களைக் கழுவி, காலையிலே புறப்பட்டு உங்கள் வழிப் பயணத்தைத் தொடரலாம், என்று உபசரிக்க, அவர்கள்: பரவாயில்லை; தெருவிலே இரவைக் கழிப்போம் என்று மறுமொழி சொன்னார்கள்.
ஆதியாகமம் 19 : 3 (RCTA)
அவன் அவர்களை மிகவும் வருந்திக் கேட்டுத் தன் வீட்டிற்கு வரும்படி செய்தான். ஆகவே, அவர்கள் திரும்பி அவனிடத்திற்கு வந்து உள்ளே சென்ற போது லோத் அவர்களுக்கு ஒரு விருந்து செய்து புளியாத அப்பம் சுட்டான். அவர்களும் சாப்பிட்டார்கள்.
ஆதியாகமம் 19 : 4 (RCTA)
பின் அவர்கள் துயில் கொள்ளுமுன் நகர வாயில்களில் சிறுவர் முதல் கிழவர் வரை நகரின் எல்லா ஆடவர்களும் ஒருங்கே வந்து வீட்டைச் சூழ்ந்து கொண்டு, லோத்தைக் கூப்பிட்டு:
ஆதியாகமம் 19 : 5 (RCTA)
இன்று மாலை உன்னிடத்தே வந்த ஆடவர் எங்கே? நாங்கள் அவர்களோடு சற்றுச் சரசமாடும்படி அவர்களை இங்கே கொண்டு வா என்றனர்.
ஆதியாகமம் 19 : 6 (RCTA)
லோத் வீட்டிற்கு வெளியே வந்து, தன் பின்னால் கதவைச் சாத்திக்கொண்டு: என் சகோதரரே, வேண்டாம்.
ஆதியாகமம் 19 : 7 (RCTA)
உங்களைக் கெஞ்சி மன்றாடுகிறேன்: அத்தகைய தீச்செயல் செய்ய வேண்டாம்,
ஆதியாகமம் 19 : 8 (RCTA)
இது வரை ஆண் தொடர்பு அறியாத புதல்வியர் இருவர் எனக்கு உண்டு. உங்கள் விருப்பப்படி அவர்களை அழிம்பு செய்வதாயினும் செய்யுங்கள்; இந்த ஆடவருக்கு மட்டும் ஒன்றும் செய்யாதீர்கள். ஏனென்றால், அவர்கள் என் வீட்டில் தங்க வந்திருக்கின்றார்கள் என்றான்.
ஆதியாகமம் 19 : 9 (RCTA)
அதற்கு அவர்கள்: நீ அப்பாலே போ என்றனர். மீண்டும் அவனை நோக்கி: இவ்விடத்திற்கு அந்நியனாய் வந்த நீ எங்களுக்கு நியாயம் கூறத் துணிந்ததென்ன? பொறு; அவர்களுக்குச் செய்வதை விட உனக்கு அதிகத் தீங்கு இழைப்போம் என்று சொல்லி, லோத்தைக் கொடுமையாய் நெருக்கிக் கதவை உடைக்க முயலுகையில்,
ஆதியாகமம் 19 : 10 (RCTA)
இதோ, (வீட்டினுள் இருந்த) அவ்வாடவர் கையை வெளியே நீட்டி லோத்தைப் பிடித்து உள்ளே இழுத்துக் கதவைப் பூட்டினர்.
ஆதியாகமம் 19 : 11 (RCTA)
பின் சிறுவர் முதல் பெரியோர் வரை வெளியே இருந்தவர்கள் அனைவரும் கண் பார்வை இழந்து போகும்படி செய்ததனால், அவர்கள் கதவைக் காணக் கூடாமல் போயிற்று.
ஆதியாகமம் 19 : 12 (RCTA)
மேலும் அவர்கள் லோத்தை நோக்கி: இவ்விடத்தில் உனக்கு உறவினர் யாரேனும் இருக்கிறார்களோ? மருமகனோ, புதல்வர்களோ, புதல்விகளோ- உன் உறவினர் யாவரையும் இவ்வூரிலிருந்து உன்னுடன் அழைத்துக் கொண்டு போ.
ஆதியாகமம் 19 : 13 (RCTA)
எனென்றால், நாங்கள் இந்த ஊரை அழிக்கப் போகிறோம். அவர்களுடைய (பாவங்களின்) ஆரவாரம் ஆண்டவர் திரு முன் பெருகிப் போயிற்று. இவர்களை அழிக்கும்படி அவர் எங்களை அனுப்பியிருக்கிறார் என்றனர்.
ஆதியாகமம் 19 : 14 (RCTA)
உடனே லோத் வெளியே போய்த் தன் புதல்விகளை மணந்து கொள்ளவிருந்த தன் மருமக்களோடு பேசி: ஆண்டவர் இந்த இடத்தை அழிக்கப் போகிறார். ஆதலால், நீங்கள் எழுந்திருங்கள்; இவ்விடத்தை விட்டுப் புறப்படுங்கள் என்றான். ஆனால் லோத் தங்களைக் கேலி செய்வது போல் (அது) அவர்களுக்குத் தோன்றியது.
ஆதியாகமம் 19 : 15 (RCTA)
பொழுது விடியும் வேளையில் ஆண்டவரின் தூதர்கள் அவனை அவசரப்படுத்தி: நீ எழுந்திரு. உன் மனைவியையும் உன் இரு புதல்விகளையும் கூட்டிக் கொண்டு போ. இல்லையேல், இந் நகரின் அக்கிரமத் (தண்டனையிலே) நீயும் அகப்பட்டு அழிவாய் என்றார்கள்.
ஆதியாகமம் 19 : 16 (RCTA)
அவன் தயங்கிக் கொண்டிருந்ததைக் கண்டு, அவர்கள் அவனையும் அவன் மனைவியையும் இரு புதல்விகளையும் கையால் பிடித்தார்கள். ஏனென்றால், ஆண்டவர் லோத்தின் மீது இரக்கம் வைத்திருந்தார்.
ஆதியாகமம் 19 : 17 (RCTA)
அவர்கள் அவனைக் கூட்டிக்கொண்டுபோய் நகருக்கு வெளியே விட்டார்கள். அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: உன் உயிர் காக்க ஓடிப்போ. திரும்பிப் பார்க்காதே. சுற்றுப் புறத்தில் தங்காதே. நகரோடு கூட நீயும் அழியாதபடிக்கு மலையில் சரணடையக்கடவாய் என்றார்கள்.
ஆதியாகமம் 19 : 18 (RCTA)
லோத் அவர்களை நோக்கி: ஆண்டவரே, ஒரு வார்த்தை சொல்கிறேன், கேளும்.
ஆதியாகமம் 19 : 19 (RCTA)
அடியேன் உம் முன்னிலையில் அருள் அடைந்தேனே; என் உயிரைக் காப்பாற்றும் பொருட்டு நீர் அளவில்லாத தயவு புரிந்தீரே; ஆனால், மலைக்கு ஓடிப்போக என்னால் இயலாது. போனாலும், தீங்கு என்னை அங்கே தொடருமாயின் செத்துப் போவேனே!
ஆதியாகமம் 19 : 20 (RCTA)
அதோ, அந்தச் சிற்றூர் தெரிகிறதே, அது அருகிலிருப்பதனால் எளிதாய் அங்கே போய்ச் சேரலாம். சேர்ந்ததால் என் உயிர் பிழைக்கும். அது சிறிய ஊரல்லவா? அவ்விடத்தில் சாவுக்குத் தப்பிப் பிழைப்பேனன்றோ என்றான்.
ஆதியாகமம் 19 : 21 (RCTA)
அதற்கு அவர்: நல்லது, அப்படியே ஆகட்டும். இக்காரியத்திலும் உனக்குக் கருணை புரிந்தோம். நீ சொன்ன ஊரை நாம் அழிக்க மாட்டோம்.
ஆதியாகமம் 19 : 22 (RCTA)
நீ அங்கே விரைந்தோடித் தப்பித்துக்கொள். எனென்றால், நீ அவ்விடம் சேருமட்டும் நாம் ஒன்றும் செய்யக் கூடாதிருக்கிறது என்றார். இதனால் அந்த நகரத்துக்கச் செகோர் என்னும் பெயர் வழங்கிற்று.
ஆதியாகமம் 19 : 23 (RCTA)
லோத் செகோருக்குள் புகுந்தபோது பூமியின் மேல் சூரியன் உதித்தது.
ஆதியாகமம் 19 : 24 (RCTA)
அப்பொழுது ஆண்டவர் வானத்திலிருந்து சொதோம் கோமோரா நகரங்களின் மேல் தெய்வீக கந்தகமும் நெருப்பும் பொழியச் செய்தார்;
ஆதியாகமம் 19 : 25 (RCTA)
அந் நகரங்களையும், அவற்றைச் சுற்றிலுமுள்ள ஊர் முழுவதையும், அவற்றின் எல்லாக் குடிகளையும், நிலத்தின் எல்லாப் பயிர்களையும் அழித்தார்.
ஆதியாகமம் 19 : 26 (RCTA)
அப்பொழுது லோத்தின் மனைவி திரும்பிப் பார்த்தாள். உடனே உப்புச் சிலையாக மாறினாள்.
ஆதியாகமம் 19 : 27 (RCTA)
ஆபிரகாம் காலையில் எழுந்திருந்து, தாம் ஏற்கனவே ஆண்டவர் முன்னிலையில் நின்று கொண்டிருந்த இடத்திற்குப் போய்,
ஆதியாகமம் 19 : 28 (RCTA)
சொதோம் கொமோரா நகரங்கள் இருந்த திசையையும் அவைகளுக்குச் சுற்றிலுமுள்ள நாட்டையும் நோக்கிப் பார்த்த போது, சூளையில் எழும்பும் புகை போலப் பூமியிலிருந்து தீப்பொறி கிளம்பக் கண்டார்.
ஆதியாகமம் 19 : 29 (RCTA)
ஆனால், அந்நாட்டின் நகரங்களை அழித்தபோது, கடவுள் ஆபிரகாமின் பொருட்டு, லோத் குடியிருந்த நகரின் அழிவிலிருந்து அவனைக் காப்பாற்றினார்.
ஆதியாகமம் 19 : 30 (RCTA)
லோத் சொகோரினின்று மலைமேல் ஏறி அங்குத் தங்கினான். அவனோடு அவன் இரு புதல்விகளும் சென்றிருந்தனர். (ஏனென்றால், அவன் செகோரில் குடியிருக்க அஞ்சினான்.) அவ்விடத்தில் அவனோடுகூட அவன் இரு புதல்விகளும் ஒரு குகையில் வாழ்ந்து வந்தனர்.
ஆதியாகமம் 19 : 31 (RCTA)
அப்படியிருக்க, மூத்த புதல்வி தன் சகோதரியை நோக்கி: நம் தந்தை வயது சென்றவர். உலகமெங்கும் நடக்கிற முறைமையின்படி நம்மை மணந்து கொள்ளப் பூமியில் ஆடவன் ஒருவனும் இல்லை.
ஆதியாகமம் 19 : 32 (RCTA)
தந்தை வழியாவது நமக்குச் சந்ததி உண்டாகும்படி அவருக்கு மதுபானம் கொடுத்து அவரோடு படுப்போம், வா என்றாள்.
ஆதியாகமம் 19 : 33 (RCTA)
அவ்வாறே அவ்விரவில் அவர்கள் தங்கள் தந்தைக்கு மயக்க மூட்டும் பானம் கொடுத்தனர். பிறகு மூத்ததவள் உள்ளே புகுந்து தன் தந்தையோடு படுத்தாள். ஆனால், அவள் வந்து தன்னுடன் படுத்தும் பின் எழுந்து போனதும் அவனக்குத் தெரியாது.
ஆதியாகமம் 19 : 34 (RCTA)
மறுநாள் மூத்தவள் இளையவளை நோக்கி: இதோ, நேற்றிரவு நான் தந்தையோடு படுத்தேன். இன்றிரவும் அவருக்கு மதுவைக் கொடுப்போமாக. நம் தந்தை வழியாவது நமக்குச் சந்ததி உண்டாகும் வண்ணம், நீ போய் அவரோடு படுப்பாய் என்றாள்.
ஆதியாகமம் 19 : 35 (RCTA)
அப்படியே அன்றிரவும் தங்கள் தந்தைக்கு மதுபானம் குடிக்கக் கொடுத்தார்கள். இளைய புதல்வி அவரோடு படுத்தாள். இம்முறையும் அவள் படுத்ததையும் எழுந்து போனதையும் அவன் உணரவேயில்லை.
ஆதியாகமம் 19 : 36 (RCTA)
இவ்வாறு லோத்தின் புதல்விகள் இருவரும் தங்கள் தந்தையாலேயே கருத்தரித்தனர்.
ஆதியாகமம் 19 : 37 (RCTA)
பின் மூத்தவள் ஒரு புதல்வனைப் பெற்று, அவனுக்கு மோவாப் என்னும் பெயரிட்டாள். அவன் இன்று வரை இருக்கிற மோவாப்பித்தாரக்குத் தந்தையானான்.
ஆதியாகமம் 19 : 38 (RCTA)
இளையவளும் ஒரு புதல்வனைப் பெற்று: இவன் என் இனத்தின் புதல்வன் என்று சொல்லி, அவனுக்கு ஆமோன் என்னும் பெயரைச் சூட்டினாள். அவன் இன்று வரை இருக்கிற ஆமோனித்தாருக்கு மூதாதை ஆனான்.
❮
❯