ஆதியாகமம் 16 : 1 (RCTA)
நிற்க, அந்நாள் வரை ஆபிராமின் மனைவி சாறாயிக்குப் பிள்ளைகள் இல்லை. ஆனால், அவளுக்கு எகிப்து நாட்டினளான ஆகார் என்னும் பெயர் கொண்ட வேலைக்காரி ஒருத்தி இருந்தாள்.
ஆதியாகமம் 16 : 2 (RCTA)
சாறாயி தன் கணவனை நோக்கி: இதோ, நான் பிள்ளை பெறாவண்ணம் ஆண்டவர் என் கருப்பத்தை அடைத்திருக்கிறார். நீர் என் வேலைக்காரியோடு சேரும். அவள் மூலமாவது நான் பிள்ளைகளை அடைவேனாக என்றாள். அவன் அவள் வேண்டுகோளுக்கு இணங்கினான்.
ஆதியாகமம் 16 : 3 (RCTA)
கானான் நாட்டில் அவர்கள் பத்தாண்டுகள் குடியிருந்த பின் (சாறாயி) எகிப்து நாட்டினளான ஆகார் என்னும் தன் வேலைக்காரியை அழைத்து, அவளைத் தன் கணவனுக்கு மனைவியாகக் கொடுத்தாள்.
ஆதியாகமம் 16 : 4 (RCTA)
அவன் அவளோடு கூடி வாழ்ந்தான். பின்னர் அவள் தான் கருவுற்றிருக்கக் கண்டு, தன் தலைவியை அலட்சியம் பண்ணினாள்.
ஆதியாகமம் 16 : 5 (RCTA)
அது கண்டு சாறாயி ஆபிராமை நோக்கி: எனக்கு நீர் அநீதி செய்து வருகிறீரே! நான் என் அடிமைப் பெண்ணை உமது மடியிலே கொடுத்திருக்க. அவள் தான் கருவுற்றிருப்பதை அறிந்தவுடன் என்னைப் பழிக்கத் தொடங்கி விட்டாளே! ஆண்டவர் உமக்கும் எனக்கும் நடுவராயிருந்து நீதி வழங்கக் கடவார் என்றாள்.
ஆதியாகமம் 16 : 6 (RCTA)
அதற்கு ஆபிராம்: இதோ, உன் அடிமைப் பெண் உன் கைக்குள் இருக்கிறாள். உன் மனப்படி அவளை நடத்துவாய் என்றான். பின்பு, சாறாயி தன்னைக் கண்டிப்பாய் நடத்தியது கண்டு அவள் ஓடிப் போனாள்.
ஆதியாகமம் 16 : 7 (RCTA)
அப்பொழுது ஆண்டவருடைய தூதர் அவளைப் பாலைவனத்திலே சூருக்குப் போகும் வழியருகே உள்ள நீரூற்றண்டையில் கண்டு: சாறாயியின் அடிமைப் பெண்ணாகிய ஆகாரே, நீ எங்கிருந்து வந்தாய்?
ஆதியாகமம் 16 : 8 (RCTA)
எங்கே போகிறாய் என்று கேட்க, அவள்: நான் என் தலைவி சாறாயியை விட்டு ஓடிப் போகிறேன் என்று பதில் கூறினாள்.
ஆதியாகமம் 16 : 9 (RCTA)
ஆண்டவருடைய தூதர் அவளைப் பார்த்து: உன் தலைவியிடம் நீ திரும்பிப் போய் அவளுக்கு அடங்கியிரு என்றார்.
ஆதியாகமம் 16 : 10 (RCTA)
மேலும் அவளை நோக்கி: உன் சந்ததியை மிகவும் விருத்தியடையச் செய்வோம். அது எண்ண முடியாததாய் இருக்கும் என்று சொன்னார்.
ஆதியாகமம் 16 : 11 (RCTA)
மீண்டும்: இதோ, கருவுற்றிருக்கிற நீ ஒரு புதல்வனைப் பெறுவாய். உன் இன்னலைக் கண்டு ஆண்டவர் இரங்கினதனாலே, அவனுக்கு இஸ்மாயில் என்று பெயரிடுவாயாக.நி414
ஆதியாகமம் 16 : 12 (RCTA)
அவன் கொடும் குணமுள்ள மனிதனாய் வளர்வான். அவனுடைய கை எல்லாருக்கும் விரோதமாகவும், எல்லாருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் ஓங்கியிருக்கும். தன் சகோதரர் அனைவரும் வாழ்ந்து வரும் இடத்தில் அவர்களுக்கெதிராக அவன் குடியிருப்பான் என்றார்.
ஆதியாகமம் 16 : 13 (RCTA)
அப்போது அவள்: என்னைக் கண்ட அந்த ஆண்டவருடைய பின் புறத்தை நான் கண்டேனல்லவா என்று சொல்லித் தன்னோடு பேசிய ஆண்டவருக்கு: நீர் என்னைக் கண்ட கடவுள் என்று பெயரிட்டாள்.
ஆதியாகமம் 16 : 14 (RCTA)
அதனால் அந்தக் கிணற்றை, வாழ்கிறவரும் என்னைக் காண்கிறவருமாய் இருக்கிறவருடைய கிணறு என்று அழைத்தாள். அது காசேதுக்கும் பாரதுக்கும் நடுவே இருக்கிறது.
ஆதியாகமம் 16 : 15 (RCTA)
பின் ஆகார் ஆபிராமுக்கு ஒரு புதல்வனைப் பெற்றாள். இவனுக்கு அவன் இஸ்மாயில் என்று பெயரிட்டான்:
ஆதியாகமம் 16 : 16 (RCTA)
ஆகார் இஸ்மாயிலைப் பெற்ற போது ஆபிராமுக்கு வயது எண்பத்தாறு.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16