ஆதியாகமம் 15 : 1 (RCTA)
இவை இவ்வாறு நிகழ்ந்தபின் ஆண்டவருடைய திரு வாக்கு ஆபிராமுக்குக் காட்சியில் உண்டாகி, அஞ்சாதே, ஆபிராம், நாம் உன் அடைக்கலமும், மிகவும் சிறந்த உன் பரிசுமாய் இருக்கிறோம் என்றது.
ஆதியாகமம் 15 : 2 (RCTA)
அதைக் கேட்டு, ஆபிராம்: ஆண்டவராகிய கடவுளே, அடியேனுக்கு நீர் என்ன தருவீர்? நான் பிள்ளையின்றிப் போவேனே! என் வீட்டு மேற்பார்வையாளனின் மகனான இந்தத் தமாஸ் ஊரானாகிய எலியேசேர் தான் இருக்கிறான் என்றான்.
ஆதியாகமம் 15 : 3 (RCTA)
மீண்டும் ஆபிராம்: நீர் எனக்கு மகப்பேறு அருளினீரில்லை. ஆதலால், இதோ, என் வீட்டில் பிறந்த ஊழியனே எனக்கு வாரிசாய் இருப்பான் என்றான்.
ஆதியாகமம் 15 : 4 (RCTA)
(என்றதும்) ஆண்டவருடைய திருவாக்கு அவனுக்கு உடனே உண்டாகி: இவன் உன் வாரிசு ஆகான். உனக்கு பிறக்கும் புதல்வன் தான் உனக்கு வாரிசு ஆவான் என்று சொன்னது.
ஆதியாகமம் 15 : 5 (RCTA)
பின் ஆண்டவர் அவனை வெளியே அழைத்துக் கொண்டு போய்: நீ வானத்தை அண்ணாந்து பார். கூடுமாயின் விண்மீன்கள் எத்தனையென்று எண்ணிப் பார். உன் சந்ததி அவ்வளவு இருக்கும் என்றார். ஆபிராம் கடவுளை விசுவாசித்தான்.
ஆதியாகமம் 15 : 6 (RCTA)
அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. மீண்டும் அவர் அவனை நோக்கி:
ஆதியாகமம் 15 : 7 (RCTA)
இந்நாட்டை உனக்குக் கொடுக்கும்படியாகவும், அதனை நீ உரிமையாக்கிக் கொள்ளும்படியாகவும் அல்லவா ஆண்டவராகிய நாம் ஊர் என்னும் கல்தேயர் நகரிலிருந்து உன்னை வெளிக் கொணர்ந்தோம் என்றார்.
ஆதியாகமம் 15 : 8 (RCTA)
அதற்கு அவன்: ஆண்டவராகிய கடவுளே, நான் இதனை உரிமையாக்கிக் கொள்வேனென்று எப்படி அறிவேன் என்று கேட்டான்.
ஆதியாகமம் 15 : 9 (RCTA)
ஆண்டவர் அவனுக்கு மறுமொழியாக: மூன்று வயதுக் கிடாரி ஒன்றும், மூன்று வயதுள்ள வெள்ளாடு ஒன்றும், மூன்று வயது ஆட்டக் கிடாய் ஒன்றும் காட்டுப் புறா ஒன்றும், மாடப் புறா ஒன்றும் நம்மிடம் கொண்டு வா என்றார்.
ஆதியாகமம் 15 : 10 (RCTA)
அவற்றையெல்லாம் அவன் கொண்டுவந்து, அவற்றை நடுவே வெட்டித் துண்டங்களை ஒன்றிற்கொன்று எதிராக வைத்தான். பறவைகளையோ அவன் துண்டிக்கவில்லை.
ஆதியாகமம் 15 : 11 (RCTA)
வானத்துப் பறவைகள் அந்த உடல்களின் மேல் வந்திறங்கின. அவற்றை ஆபிராம் துரத்திக் கொண்டிருந்தான்.
ஆதியாகமம் 15 : 12 (RCTA)
பின் சூரியன் மறையும் வேளையில் ஆபிராமுக்கு அயர்ந்த தூக்கம் உண்டானது. பெரும் திகிலும் காரிருளும் அவனைச் சூழ்ந்து கொண்டன.
ஆதியாகமம் 15 : 13 (RCTA)
அந்நேரத்தில் ஆண்டவர்: உன் சந்ததியார் தங்களுக்குச் சொந்தமில்லாத நாட்டில் அந்நியராய்த் திரிந்து, அடிமைகளாக்கப்பட்டு, நானூறு ஆண்டளவும் துன்பமடைவார்கள் என்று முன்பே அறியக்கடவாய்.
ஆதியாகமம் 15 : 14 (RCTA)
ஆயினும், அவர்களை அடிமைப்படுத்திய மக்களுக்கு நாம் தீர்ப்பு வழங்குவோம். அதன் பின் உன் சந்ததியார் உரிமை பெற்றவராய் மிகுந்த பொருளுடனே புறப்படுவர்.
ஆதியாகமம் 15 : 15 (RCTA)
நீயோ, மிகவும் முதிர்ந்த வயதிலே அடக்கம் பண்ணப்பட்டுச் சமாதானத்தோடு உன் முன்னோருடன் சேர்வாய்.
ஆதியாகமம் 15 : 16 (RCTA)
ஆனால், நாலாம் தலைமுறையில் (உன் சந்ததியார்) இவ்விடத்திற்குத் திரும்பவும் வருவார்கள். ஏனென்றால், அமோறையருடைய பாவ அக்கிரமங்களின் அளவு இன்னும் நிறைவாகவில்லை என்றார்.
ஆதியாகமம் 15 : 17 (RCTA)
சூரியன் மறைந்து காரிருள் உண்டான பின், புகைகின்ற ஒரு சூளையும், மேற் சொல்லப்பட்ட துண்டங்களின் நடுவே உலாவி நின்ற நெருப்பு மயமான ஒரு விளக்கும் காணப்பட்டன.
ஆதியாகமம் 15 : 18 (RCTA)
அந்நாளிலே ஆண்டவர் ஆபிராமோடு உடன்படிக்கை செய்து: எகிப்தின் நதிமுதல் யூஃப்ரத்தீஸ் மாநதி வரையிலுமுள்ள இந்த நாட்டை உன் சந்ததியாருக்குத் தருவோம்.
ஆதியாகமம் 15 : 19 (RCTA)
சீனையர், செனெசேயர், செத்மோனையர்,
ஆதியாகமம் 15 : 20 (RCTA)
ஏத்தையர், பெரேசையர், இராப்பாயீமர்,
ஆதியாகமம் 15 : 21 (RCTA)
அமோறையர், கானானையர், ஜெந்சையர், ஜெபுசையர் முதலியோரையும் (அவர்களுக்குக் கீழ்ப்படுத்துவோம்) என்றருளினார்.
❮
❯