கலாத்தியர் 6 : 1 (RCTA)
சகோதரர்களே, ஒருவன் ஏதேனும் குற்றத்தில் அகப்பட்டால், ஆவியானவரைப் பெற்றிருக்கும் நீங்கள் சாந்தமான உள்ளத்தோடு அப்படிப்பட்டவனைத் திருத்துங்கள். நீயும் அவனைப்போலச் சோதனைக்குள்ளாகாதபடி பார்த்துக்கொள்.
கலாத்தியர் 6 : 2 (RCTA)
ஒருவரொருவருடைய சுமைகளைத் தாங்கிக் கொள்ளுங்கள். இவ்வாறு கிறிஸ்துவின் சட்டத்தை நிறைவேற்றுவீர்கள்.
கலாத்தியர் 6 : 3 (RCTA)
எம்மதிப்புக்கும் உரியவனாய் இல்லாதிருந்தும், தன்னைப் பெரியவன் என்று எண்ணிக்கொள்கிற எவனும் தன்னையே ஏமாற்றிக்கொள்கிறான்.
கலாத்தியர் 6 : 4 (RCTA)
ஒவ்வொருவனும் தன்னுடைய நடத்தையை ஆய்ந்து பார்க்கட்டும். அப்பொழுது அவன் தன்னைப் பிறரோடு ஒப்பிட்டுப் பெருமை பாராட்டாமல், தானே செய்த செயல்களை முன்னிட்டுப் பெருமை பாராட்டுவான்.
கலாத்தியர் 6 : 5 (RCTA)
அவனவன் தன் சுமையைத் தாங்கிக் கொள்ளவேண்டும்.
கலாத்தியர் 6 : 6 (RCTA)
தேவ வார்த்தையைக் கற்றுக்கொள்பவன் கற்பித்தவனுக்குத் தனக்குள்ளதில் பங்கு கொடுப்பானாக.
கலாத்தியர் 6 : 7 (RCTA)
ஏமாந்து போக வேண்டாம். கடவுளை ஏமாற்ற முடியும் என நினைக்காதீர்கள். ஒருவன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.
கலாத்தியர் 6 : 8 (RCTA)
தன் ஊனியல்பில் விதைப்பவன், அந்த இயல்பிலிருந்து அழிவையே அறுப்பான். ஆவியானவரைப் பெற்ற இயல்பில் விதைப்பவன், ஆவியானவர் தரும் முடிவில்லா வாழ்வை அறுப்பான்.
கலாத்தியர் 6 : 9 (RCTA)
நன்மை செய்வதில் மனந்தளராதிருப்போமாக! நாம் சோர்வுறாதிருந்தால், தக்க காலத்தில் அறுவடை கிடைக்கும்.
கலாத்தியர் 6 : 10 (RCTA)
ஆகையால், இன்னும் காலம் இருக்கும்போதே, எல்லார்க்கும் சிறப்பாக விசுவாசத்தால் நம் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கும் நன்மை செய்வோமாக!
கலாத்தியர் 6 : 11 (RCTA)
இப்பொழுது என் கைப்பட நானே உங்களுக்கு எழுதுகிறேன். எவ்வளவு பெரிய எழுத்துக்களில் எழுதுகிறேன். பாருங்கள்!
கலாத்தியர் 6 : 12 (RCTA)
நல்லவர்களாய் நடிக்க விரும்புகிறவர்கள் தான் நீங்கள் விருத்தசேதனம் செய்துகொள்ளும் படி உங்களைக் கட்டாயப்படுத்துகிறார்கள். கிறிஸ்துவின் சிலுவையை முன்னிட்டுத் தாங்கள் துன்புறுத்தப்படாமல் இருக்கவே அவர்கள் இப்படிச் செய்கிறார்கள்.
கலாத்தியர் 6 : 13 (RCTA)
விருத்தசேதனம் செய்து கொண்டவர்களே திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில்லை. ஆனால் உங்கள் உடலில் பெற்றுக்கொண்ட விருத்தசேதனத்தை முன்னிட்டு, அவர்கள் பெருமை பாராட்டிக்கொள்வதற்காக நீங்கள் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டுமென்று விரும்புகிறார்கள்.
கலாத்தியர் 6 : 14 (RCTA)
நானோ நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையிலன்றி வேறெதிலும் ஒருகாலும் பெருமை பாராட்ட மாட்டேன்; அந்தச் சிலுவையின் வழியாகவே உலகம் எனக்கு அறையுண்டதாய் இருக்கிறது, நானும் உலகத்திற்கு அறையுண்டவனாய் இருக்கிறேன்.
கலாத்தியர் 6 : 15 (RCTA)
விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமின்மையும் ஒன்றுமில்லை. புதிய படைப்பாவதே முக்கியம்.
கலாத்தியர் 6 : 16 (RCTA)
யார் யார் இந்த ஒழுங்கு முறையைப் பின்பற்றுகிறார்களோ அவர்கள் மேலும், உண்மையான இஸ்ராயேலராகிய இறை மக்கள் மேலும் சமாதானமும் இரக்கமும் இருப்பதாக!
கலாத்தியர் 6 : 17 (RCTA)
இனிமேல் எவனும் எனக்குத் தொல்லை கொடுக்க வேண்டாம்: ஏனெனில், என் உடலில் நான் தங்கும் தழும்புகள் நான் இயேசுவுக்கு அடிமை என்பதற்கு அடையாளம்.
கலாத்தியர் 6 : 18 (RCTA)
சகோதரர்களே, நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருள் உங்களோடு இருப்பதாக! ஆமென்.
❮
❯