எஸ்றா 6 : 1 (RCTA)
தாரியுஸ் அரசன் கட்டளையிடவே, பபிலோனிலுள்ள நூல் நிலையத்தைத் துருவிப் பார்க்கத் தொடங்கினர்.
எஸ்றா 6 : 2 (RCTA)
மேதிய மாநிலத்தில் இருந்த எக்பத்தான் என்ற அரண்மனையில் ஒரு நூல் அகப்பட்டது. அதில் எழுதியிருந்ததாவது"
எஸ்றா 6 : 3 (RCTA)
சீருஸ் அரசர் அரியணை ஏறிய முதலாம் ஆண்டில், அரசர் சீருஸ் பிறப்பித்த ஆணையாவது: யெருசலேமிலுள்ள கடவுளின் ஆலயம், பலிகள் செலுத்தப் பெறுவதற்குத் தகுந்த ஓர் இடத்திலே கட்டப்பட வேண்டும். அது அறுபது முழ உயரமும், அறுபது முழ அகலமுமாய் இருக்க வேண்டும். எனவே, அதற்கேற்றபடி அடிப்படை உறுதியாயிருக்க வேண்டும்.
எஸ்றா 6 : 4 (RCTA)
அது மூன்று வரிசை பொளியப்படாத கற்களாலும், மூன்று வரிசை புது உத்திரங்களாலும் கட்டப்பட வேண்டும். அதற்கு வேண்டிய செலவு அரசரின் கருவூலத்திலிருந்து கொடுக்கப்பட வேண்டும்.
எஸ்றா 6 : 5 (RCTA)
மேலும், யெருசலேம் ஆலயத்தினின்று நபுக்கோதனசார் பபிலோனுக்குக் கொண்டு வந்திருந்த பொன், வெள்ளிப்பாத்திரங்கள் திரும்பக் கொடுக்கப்பட வேண்டும்."
எஸ்றா 6 : 6 (RCTA)
எனவே, தாரியுஸ் கட்டளைக் கடிதம் ஒன்று எழுதினான்: "நதிக்கு அக்கரையில் ஆளுநனாய்த் திகழும் தத்தானாயியும் ஸ்தார்புஜனாயிமாகிய நீங்களும், நதிக்கு அக்கரையில் வாழ்ந்து வரும் உங்கள் கூட்டத்தைச் சேர்ந்த அபற்சக்கேயராகிய யாவரும் யூதர்களை விட்டு அகன்று போக வேண்டும்.
எஸ்றா 6 : 7 (RCTA)
யூதர்களின் ஆளுநரும் அவர்களின் மூப்பர்களும் இக் கடவுளின் ஆலயத்தை அது முன்பு இருந்த இடத்திலேயே கட்டும்படியாக விட்டு விடுங்கள்.
எஸ்றா 6 : 8 (RCTA)
மேலும், கடவுளின் ஆலயத்தைக் கட்டுவதற்கு யூதர்களின் மூப்பர்கள் செய்ய வேண்டியதைக்குறித்து, நாம் இடும் கட்டளையாவது: வேலை தடை படாமலிருக்கும் பொருட்டு, நதிக்கு அக்கரையில் உள்ள நாட்டினின்று அரசனுக்கு வரும் கப்பத்திலிருந்து அம்மனிதர்களுக்கு வேண்டியதையெல்லாம் தவறாது கொடுக்க வேண்டும்.
எஸ்றா 6 : 9 (RCTA)
மேலும், தேவைக்குத் தகுந்தபடி விண்ணகக் கடவுளுக்குத் தகனப் பலிகளைச் செலுத்துவதற்குத் தேவையான இளங்காளைகள், ஆட்டுக்குட்டிகள், வெள்ளாட்டுக்குட்டிகள், கோதுமை, உப்பு, திராட்சை இரசம், எண்ணெய் முதலியவற்றை யெருசலேமிலுள்ள குருக்களின் சொற்படியே நாள்தோறும் தவறாது கொடுக்க வேண்டும்.
எஸ்றா 6 : 10 (RCTA)
குருக்கள் விண்ணகக் கடவுளுக்குப் பலிகளைச் செலுத்தி, அரசரும் அவருடைய புதல்வரும் நீடூழி வாழுமாறு அவர்களுக்காக மன்றாட வேண்டும்.
எஸ்றா 6 : 11 (RCTA)
இக்கடளையை நாமே பிறப்பித்தோம். எவனும் இக்கட்டளையை மீறினால், அவன் வீட்டிலிருந்து ஓர் உத்திரத்தை எடுத்து நாட்டி, அதில் அவன் அறையப்பட வேண்டும்; அவனது வீடு பறிமுதல் செய்யப்பட வேண்டும்.
எஸ்றா 6 : 12 (RCTA)
மேலும், இக்கட்டளையை மாற்றவோ, யெருசலேமிலுள்ள ஆலயத்தை அழிக்கவோ, அரசர்களிலேனும் மக்களிலேனும் யாராவது முயன்றால், கடவுள் தம் திருப்பெயர் விளங்கும்படி அவ்விடத்திலேயே அவர்கள் எல்லாரையும் அழிப்பாராக! தாரியுஸ் ஆகிய நாமே இக்கட்டளையைக் கொடுத்தோம். இது கவனமாய் அனுசரிக்கப்பட வேண்டும்."
எஸ்றா 6 : 13 (RCTA)
நதிக்கு அக்கரையில், ஆளுநனாய்த் திகழ்ந்து வந்த தத்தானாயியும் ஸ்தார்புஜனாயியும் அவர்களின் கூட்டத்தாரும் அரசன் தாரியுசின் கட்டளையைக் கவனத்துடன் நிறைவேற்றி வந்தனர்.
எஸ்றா 6 : 14 (RCTA)
யூதர்களின் மூப்பர்கள், ஆலயத்தைக் கட்ட ஆரம்பித்தனர்; இறைவாக்கினர் ஆக்கேயும், அத்தோ மகன் சக்கரியாசும் உரைத்திருந்தபடி கட்டட வேலை முன்னேறியது. அவர்கள் இஸ்ராயேலின் கடவுளின் கட்டளைப்படியும், பாரசீக அரசர்களான சீருஸ், தாரியுஸ், அர்தக்சேர்செஸ் ஆகியோரின் கட்டளைப்படியும் ஆலயத்தைக் கட்டி எழுப்பினார்.
எஸ்றா 6 : 15 (RCTA)
அரசன் தாரியுசுடைய ஆட்சியின் ஆறாம் ஆண்டு, ஆதார் மாதம் மூன்றாம் நாள் ஆலய வேலை முடிவுற்றது.
எஸ்றா 6 : 16 (RCTA)
அப்பொழுது இஸ்ராயேல் மக்களும் குருக்களும் லேவியர்களும் அடிமைத்தனத்தினின்று திரும்பி வந்திருந்த ஏனையோரும் கடவுளின் கோவில் அபிஷுகத் திருவிழாவை அக்களிப்புடன் கொண்டாடினர்.
எஸ்றா 6 : 17 (RCTA)
கோயில் அபிஷுகத்திற்காக நூறு இளங்காளைகளும் இருநூறு செம்மறிக்கடாக்களும் நானூறு செம்மறிக் குட்டிகளும், இஸ்ராயேல் கோத்திரங்களின் கணக்குப்படி, இஸ்ராயேல் மக்கள் அனைவரின் பாவத்துக்காகப் பன்னிரு வெள்ளாட்டுக் கிடாக்களும் ஒப்புக்கொடுத்தனர்.
எஸ்றா 6 : 18 (RCTA)
மோயீசனின் நூலில் எழுதியுள்ளவாறு, அவர்கள் யெருசலேமிலுள்ள கடவுளின் ஆலயத்தில் திருப்பணி புரியக் குருக்களையும் லேவியர்களையும், தத்தம் பிரிவின் முறைப்படி நியமித்தனர்.
எஸ்றா 6 : 19 (RCTA)
மேலும், அடிமைத்தனத்திதிலிருந்து திரும்பி வந்திருந்த இஸ்ராயேல் மக்கள் முதன் மாதம் பதினான்காம் நாள், பாஸ்காத் திருவிழாவைக் கொண்டாடினர்.
எஸ்றா 6 : 20 (RCTA)
குருக்களும் லேவியர்களும் ஒருமனப்பட்டவர்களாய்த் தங்களைத் தூய்மைப் படுத்தியிருந்தனர். குருக்கள் அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வந்திருந்த எல்லாருக்காகவும் தங்கள் உடன் குருக்களுக்காகவும் தங்களுக்காகவும் பாஸ்காவைப் பலியிட்டனர்.
எஸ்றா 6 : 21 (RCTA)
அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வந்திருந்த இஸ்ராயேல் மக்களும், இஸ்ராயேலின் கடவுளான ஆண்டவரைப் பின்பற்றுவதற்காகப் புறவினத்தாரின் தீட்டினின்று விடுபட்டு இஸ்ராயேல் மக்களோடு சேர்ந்துகொண்ட அனைவரும் பாஸ்காகை உண்டனர்.
எஸ்றா 6 : 22 (RCTA)
புளியாத அப்பத் திருவிழாவை ஏழு நாளளவும் மகிழ்வோடு கொண்டாடினர். இஸ்ராயேலின் கடவுளான ஆண்டவர் ஆலய வேலைக்கு உதவி செய்வதற்காக அசீரிய மன்னனின் இதயத்தை மாற்றியிருந்ததை நினைந்து நினைந்து, ஆண்டவரில் அவர்கள் அக்களித்தனர்.
❮
❯