எஸ்றா 5 : 1 (RCTA)
ஆயினும், இறைவாக்கினர் ஆக்கேயும், அத்தோவின் மகன் சக்கரியாசும் யூதாவிலும் யெருசலேமிலுமிருந்த யூதர்களிடம் இஸ்ராயேலின் கடவுள் பெயரால் இறைவாக்கு உரைத்தனர்.
எஸ்றா 5 : 2 (RCTA)
அப்போது ஜெரோபாபேலின் மகன் சலாத்தியேலும், யோசதேக்கின் மகன் யோசுவாவும் யெருசலேமில் கடவுளின் ஆலயத்தைத் திரும்பவும் கட்டத் தொடங்கினர். இறைவாக்கினரும் அவர்களுக்கு உதவியாக இருந்தனர்.
எஸ்றா 5 : 3 (RCTA)
அக்காலத்தில் நதிக்கு அக்கரையில் ஆளுநராய் இருந்த தாத்தனாயியும் ஸ்தார்பூஜனாயியும், இவர்களைச் சேர்ந்தவர்களும் அவர்களிடம் வந்து, "இவ்வாலயத்தைக் கட்டவும், இதன் சுவர்களை எழுப்பவும், உங்களுக்கு ஆலோசனை கொடுத்தவன் யார்?" என்று கேட்டனர்.
எஸ்றா 5 : 4 (RCTA)
அதற்கு நாங்கள் இவ்வாலயத்தை எழுப்பக் காரணமாயிருந்தோரின் பெயர்களை அவர்களுக்குக் கூறினோம்.
எஸ்றா 5 : 5 (RCTA)
கடவுளின் அருள் யூதமக்களின் மூப்பரோடு இருந்ததால், அவர்களை வேலை செய்யாதவாறு தடுக்க ஒருவராலும் முடியவில்லை. ஆயினும் இக்காரியம் தாரியுசுக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்றும் யூதர்கள் தங்கள் நியாயங்களை அவரிடத்திலேயே சொல்லிக்கொள்ள வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
எஸ்றா 5 : 6 (RCTA)
நதிக்கு அக்கரையில் ஆளுநனாய்த் திகழ்ந்து வந்த தாத்தனாயியும் ஸ்தார்பூஜனாயியும், இவர்கள் கூட்டத்தைச் சேர்ந்த அற்பசாக்கேயரும் அரசன் தாரியுசுக்கு எழுதி அனுப்பிய கடிதம் வருமாறு:
எஸ்றா 5 : 7 (RCTA)
தாரியுஸ் அரசருக்கு வணக்கம்! அரசர் அறிய வேண்டியதாவது:
எஸ்றா 5 : 8 (RCTA)
நாங்கள் யூதேயா நாட்டிலுள்ள பெரும் கடவுளின் ஆலயத்திற்குப் போனோம். அது பொளியப்படாத கற்களால் கட்டப்பட்டு வருகிறது. அவற்றின் மேல் உத்திரங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த வேலை நுணுநுணுக்கமாகவும் விரைவாகவும் நடந்து கொண்டிருக்கிறது.
எஸ்றா 5 : 9 (RCTA)
நாங்கள் அவர்களுடைய மூப்பர்களை நோக்கி, 'இவ்வாலயத்தைக் கட்டவும், இச்சுவர்களை எழுப்பவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தவன் யார்?' என்று கேட்டோம்.
எஸ்றா 5 : 10 (RCTA)
மேலும், தங்களுக்கு அறிவிக்கும் எண்ணத்துடன், அவர்களுடைய பெயர்களையும் கேட்டோம். அவர்களுள் பெரியோராய்த் திகழ்வோரின் பெயர்களையும் எழுதிக் கொண்டோம்.
எஸ்றா 5 : 11 (RCTA)
அவர்கள் எங்களுக்குச் சொன்ன மறுமொழியாவது: 'நாங்கள் விண்ணுக்கும் மண்ணுக்கும் கடவுளானவரின் ஊழியர்கள். பல ஆண்டுகளுக்கு முன், இஸ்ராயேலின் மாமன்னர் ஒருவரால் கட்டப்பட்ட ஆலயத்தைத் திரும்பவும் கட்டிக் கொண்டிருக்கிறோம்.
எஸ்றா 5 : 12 (RCTA)
எம் முன்னோர் விண்ணகக் கடவுளுக்குக் கோபம் மூட்டினதால், அவர் அவர்களைப் பபிலோனிய அரசனும் கல்தேயனுமான நபுக்கோதனசாருடைய கைகளில் ஒப்புவித்தார். அவர் இவ்வாலயத்தை அழித்து மக்களைப் பபிலோனுக்குச் சிறைப்படுத்திச் சென்றார்.
எஸ்றா 5 : 13 (RCTA)
ஆனால் பபிலோனிய அரசர் சீருஸ் தம் ஆட்சியின் முதல் ஆண்டில் இவ்வாலயத்தைக் கட்டி எழுப்பும்படி ஓர் ஆணை பிறப்பித்தார்.
எஸ்றா 5 : 14 (RCTA)
மேலும் யெருசலேம் ஆலயத்தினின்று நபுக்கோதனசார் பபிலோன் கோவிலுக்கு எடுத்துச் சென்றிருந்த பொன், வெள்ளிப் பாத்திரங்களை அரசர் சீருசே பபிலோன் கோவிலிலிருந்து எடுத்துக் கொடுத்தார். சாஸ்பசாரை இந்நாட்டின் ஆளுநராக அவரே நியமித்து, அவரின் கைகளில் அவற்றை ஒப்படைத்தார்.
எஸ்றா 5 : 15 (RCTA)
அரசர் அவரைப் பார்த்து: நீ இப்பாத்திரங்களை எடுத்துக் கொண்டு போய் யெருசலேமிலுள்ள ஆலயத்தில் வை. கடவுளின் ஆலயம் அது முன்பு இருந்த இடத்திலேயே எழுப்பப்படட்டும்" என்று கூறி அவரை அனுப்பி வைத்தார்.
எஸ்றா 5 : 16 (RCTA)
எனவே அந்தச் சாஸ்பசார் யெருசலேமிற்கு வந்து கடவுளுடைய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார். அன்று முதல் இன்று வரை அது கட்டப்பட்டு வந்தாலும், அது இன்னும் முடிவடையவில்லை' என்றார்கள்.
எஸ்றா 5 : 17 (RCTA)
ஆகவே, இப்போது அரசர் விரும்பினால், பபிலோனிலுள்ள அரசரது நூல்நிலையத்தில் தேடிப்பார்த்து, யெருசலேமில் கடவுளின் ஆலயம் எழுப்பப் படும்படியாகச் சீரூஸ் அரசர் ஆணை விடுத்தது உண்மைதானா என்று பார்க்கவும், இதுபற்றி அரசரின் விருப்பம் என்ன என்று எங்களுக்குத் தெரிவிக்கவும் வேண்டுகிறோம்."
❮
❯