எசேக்கியேல் 43 : 1 (RCTA)
பின்னர் அந்த மனிதர் கீழ்த்திசையை நோக்கியிருக்கும் வாயிலுக்கு என்னை அழைத்துச் சென்றார்.
எசேக்கியேல் 43 : 2 (RCTA)
இதோ, இஸ்ராயேலின் கடவுளுடைய மகிமை கிழக்கிலிருந்து வந்தது; அவருடைய வருகையின் பேரொலி வெள்ளப் பெருக்கின் இரைச்சல் போலக் கேட்டது; அவருடைய மகிமையால் மண்ணுலகம் ஒளிவீசிற்று.
எசேக்கியேல் 43 : 3 (RCTA)
நான் பார்த்த காட்சி, அவர் நகரத்தை அழிப்பதற்காக வந்த போது நான் கண்ட காட்சியைப் போலவும், கேபார் நதியருகில் முன்பு நான் கண்ட காட்சியைப் போலவும் இருந்தது; நானோ தரையில் முகங்குப்புற விழுந்தேன்.
எசேக்கியேல் 43 : 4 (RCTA)
ஆண்டவருடைய மகிமை கீழ்த்திசையை நோக்கியிருக்கும் வாயில் வழியாய்த் திருக்கோயிலுக்குள் நுழைந்தது;
எசேக்கியேல் 43 : 5 (RCTA)
அப்பொழுது, ஆவி என்னைப் பிடித்துக் தூக்கி, உள் முற்றத்துக்குக் கொண்டு வந்து விட்டது; இதோ, ஆண்டவருடைய மகிமை திருக்கோயிலை நிரப்பிற்று.
எசேக்கியேல் 43 : 6 (RCTA)
அந்த மனிதர் என்னருகில் இன்னும் நின்று கொண்டிருந்தார்; அப்போது திருக்கோயிலுக்குள்ளிருந்து யாரோ என்னிடம் பேசும் குரல் கேட்டது:
எசேக்கியேல் 43 : 7 (RCTA)
அவர் எனக்குச் சொன்னார்: "மனிதா, இது நமது அரியணைக்குரிய இடம்; இது நமது கால்மணைக்கான இடம்; இங்கே இஸ்ராயேல் மக்கள் நடுவில் நாம் என்றென்றைக்கும் குடியிருப்போம். இஸ்ராயேல் வீட்டாரோ, அவர்களுடைய அரசர்களோ நமது பரிசுத்தப் பெயரைத் தங்கள் வேசித்தனத்தாலும், தங்கள் அரசர்களின் கல்லறைகளாலும் இனி ஒருகாலும் தீட்டுப்படுத்தமாட்டார்கள்.
எசேக்கியேல் 43 : 8 (RCTA)
ஒரு சுவர் மட்டும் அவர்களுக்கும் நமக்கும் இடையிலிருக்க, தங்கள் வாயிற்படியை நமது வாயிற்படிக்கு எதிரிலோ, தங்கள் கதவுநிலைகளை நமது கதவுநிலைகளுக்கு எதிரிலோ வைப்பதால் தீட்டுப்படுத்த மாட்டார்கள்; அவர்கள் கட்டிக்கொண்ட அருவருப்பான செயல்களால் முன்பு நமது திருப்பெயரைப் பங்கப்படுத்தினார்கள்; அதற்காக நாம் நமது கோபத்தில் அவர்களை அழித்தோம்.
எசேக்கியேல் 43 : 9 (RCTA)
இப்பொழுதோ அவர்கள் தங்கள் சிலை வழிபாட்டையும், தங்கள் அரசர்களின் கல்லறைகளையும் நம் திருமுன்னிருந்து தள்ளி விடட்டும்; நாம் அவர்கள் நடுவில் என்றென்றைக்கும் குடியிருப்போம்.
எசேக்கியேல் 43 : 10 (RCTA)
மனிதா, இஸ்ராயேல் வீட்டாருக்கு நீ இக்கோயிலைக் காண்பி; அவர்கள் இதைக் கண்டு தங்கள் அக்கிரமங்களுக்காக வெட்கப்படட்டும்; இதன் அளவை அவர்கள் அளந்து பார்க்கட்டும்.
எசேக்கியேல் 43 : 11 (RCTA)
அவர்கள் தாங்கள் செய்தவற்றுக்கெல்லாம் வெட்கப்பட்டால், அப்போது நீ அவர்களுக்குத் திருக்கோயிலின் வரைபடத்தையும் கட்டடப் பாணியையும், முன் வாயில்களையும் பின்வாயில்களையும், அதன் ஒழுங்குகளையும் எல்லாக் கட்டளைகளையும், முறைமைகளையும் சட்டங்களையும் விளக்கிக் காட்டி, அவர்கள் முன்பாக எழுதி, அவர்கள் அந்த முறைமைகள், கற்பனைகள் எல்லாவற்றையும் கடைப்பிடிக்கும்படி சொல்.
எசேக்கியேல் 43 : 12 (RCTA)
திருக்கோயிலின் சட்டம் இதுவே: மலையுச்சியில் சுற்றியிருக்கும் திடல் முழுவதும் மிகவும் பரிசுத்தமான இடம்: இதோ, திருக்கோயிலின் சட்டம் இதுவே.
எசேக்கியேல் 43 : 13 (RCTA)
பீடம்: "முழத்தின் அளவுக்கேற்பப் பீடத்தின் அளவுகள் பின்வருமாறு: (ஒரு முழம் என்பது கைமுழம் ஒன்றும் நான்கு விரற்கடையும் கொண்டது.) பீடத்தின் அடிப்பாகம் ஒரு முழ உயரமும், ஒரு முழ அகலமுமானது; சுற்றுப்புறத்தில் அதன் ஓரத்தில் ஒரு சாண் விளிம்பு இருக்கும்; பீடத்தின் அளவு இருக்க வேண்டியது இவ்வாறு:
எசேக்கியேல் 43 : 14 (RCTA)
தரையிலிருக்கும் அடிப்பாகம் துவக்கி, ஆதாரத்தின் கீழ்நிலை வரை இரண்டு முழமும், அகலம் ஒரு முழமும், சிறிய விளிம்பு முதல் பெரிய விளிம்பு வரை நான்கு முழமும், அகலம் ஒரு முழமும் இருத்தல் வேண்டும்.
எசேக்கியேல் 43 : 15 (RCTA)
பலிபீடத்தின் சிகரம் நான்கு முழ உயரமானது; அதிலிருந்து முளைத்தாற் போல் ஒரு முழ உயரமுள்ள கொம்புகள் நான்கு இருந்தன.
எசேக்கியேல் 43 : 16 (RCTA)
பலிபீடத்தின் சிகரம் பன்னிரண்டு முழ நீளமும், பன்னிரண்டு முழ அகலமும் உள்ள ஒரு சதுரம்;
எசேக்கியேல் 43 : 17 (RCTA)
அதன் நாற்புறமும் உள்ள நீள் விளிம்பு பதினான்கு முழ நீளமும், பதினான்கு முழ அகலமும் உடையது; அதன் கனம் சுற்றிலும் அரை முழமும், அதன் அடிப்பாகம் சுற்றிலும் ஒரு முழமுமாய் இருந்தது; அதன் படிகளோ கிழக்கு நோக்கியிருந்தன."
எசேக்கியேல் 43 : 18 (RCTA)
அவர் இன்னும் தொடர்ந்து பேசினார்: "மனிதா, ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: பீடத்தைப்பற்றிய ஒழுங்கு முறைமைகளாவன: தகனப்பலிகளையும் இரத்ததாரைப் பலிகளையும் தருவதற்காக இப்பீடத்தைக் கட்டுகிற அந்த நாளில்,
எசேக்கியேல் 43 : 19 (RCTA)
இந்தப் பீடத்தில் நமக்குப் பணி செய்ய வரும் சாதோக்கின் வழி வந்த அர்ச்சகர்களுக்கும் லேவியர்களுக்கும் பாவப் பரிகாரப் பலிக்கென ஒரு காளையை நீங்கள் கொடுக்க வேண்டும், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
எசேக்கியேல் 43 : 20 (RCTA)
பிறகு அதன் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்துப் பீடத்தின் நான்கு கொம்புகளிலும், நீள்விளிம்பின் நான்கு கோடிகளிலும், சுற்றிலுமிருக்கும் விளிம்பிலும் பூசிப் பீடத்தைத் தூய்மைப்படுத்திப் பாவப்பரிகாரம் செய்ய வேண்டும்.
எசேக்கியேல் 43 : 21 (RCTA)
பாவப் பரிகாரத்துக்காகப் படைக்கப்பட்ட காளையைக் கொண்டு போய், கோயிலின் தனிப்பட்ட கட்டடத்தில் தூயகத்திற்கு வெளியில் சுட்டெரிக்க வேண்டும்.
எசேக்கியேல் 43 : 22 (RCTA)
இரண்டாம் நாள் பாவப் பரிகாரத்துக்கெனப் பழுதற்ற வெள்ளாட்டுக் கடா ஒன்றை ஒப்புக்கொடுக்க வேண்டும்; இளங்காளையினாலே தூய்மைப்படுத்தியது போல, பீடத்தைத் தூய்மைப்படுத்த வேண்டும்.
எசேக்கியேல் 43 : 23 (RCTA)
தூய்மைப்படுத்தி முடிந்ததும், மாசற்ற காளையொன்றும், பழுதற்ற ஆட்டுக் கடா ஒன்றும் மந்தையிலிருந்து கொண்டுவந்து பலியிட வேண்டும்.
எசேக்கியேல் 43 : 24 (RCTA)
அவற்றை ஆண்டவரின் திருமுன் ஒப்புக்கொடுப்பீர்களாக; அர்ச்சகர்கள் அவற்றின் மேல் உப்புத் தூவி அவற்றை ஆண்டவருக்குத் தகனப் பலியிடுவார்கள்.
எசேக்கியேல் 43 : 25 (RCTA)
ஏழு நாள் வரைக்கும் நாடோறும் பாவப்பரிகாரமாக ஒரு வெள்ளாட்டுக் கடாவைப் பலியிட்டு, மற்றும் மாசற்ற காளையொன்றும், பழுதற்ற ஆட்டுக்கடா ஒன்றும் மற்தையிலிருந்து கொணர்ந்து பலியிடுவார்களாக.
எசேக்கியேல் 43 : 26 (RCTA)
ஏழு நாளளவும் பலிபீடத்தைத் தூய்மைப்படுத்தி, அதற்காகப் பாவப்பரிகாரம் செய்து அபிஷுகம் செய்வார்கள்;
எசேக்கியேல் 43 : 27 (RCTA)
அந்நாட்களுக்குப் பின் எட்டாம் நாள் முதற் கொண்டு அர்ச்சகர்கள் பலி பீடத்தின் மேல் உங்கள் தகனப் பலிகளையும், சமாதானப் பலிகளையும் ஒப்புக்கொடுப்பார்கள்; அப்பொழுது நாம் உங்களை ஏற்றுக் கொள்வோம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்."

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27