எசேக்கியேல் 42 : 1 (RCTA)
பின்னும் அவர் என்னை வடதிசை வழியாக வெளிப்பிராகாரத்துக்கு அழைத்து வந்து, தனிப்பட இருந்த மாளிகைக்கு எதிரிலிருந்த கருவூல அறைகளில் நுழையச் சொன்னார்.
எசேக்கியேல் 42 : 2 (RCTA)
இந்தக் கட்டடம் வடக்கு வாயிலிருந்து நீளத்தில் நூறு முழமும், அகலத்தில் ஐம்பது முழமும் இருந்தது.
எசேக்கியேல் 42 : 3 (RCTA)
அதன் ஒரு பக்கத்தில் இருபது முழமுள்ள ஒரு அந்தரமான இடம் உட்பிராகாரத்திற்கும், மற்றொரு பக்கத்தில் கல்லால் செய்யப்பட்ட தளவரிசை வெளிப் பிராகாரத்திற்கும் இருந்தன; அங்கே மூன்று நடைப் பந்தல்களையுடைய தாழ்வாரம் ஒன்றிருந்தது.
எசேக்கியேல் 42 : 4 (RCTA)
கருவூல அறைகளின் முன் பத்து முழ அளவாகிய நடைவழி ஒன்றிலிருந்தது; அது நூறு முழ நீளமாய் இருந்தது. வாயில்கள் வடக்கு நோக்கியிருந்தன.
எசேக்கியேல் 42 : 5 (RCTA)
அதன் அறைகளுள் மேல்மாடியிலுள்ளவை கீழ்மாடியிலுள்ளவற்றினும் குறைந்த அகலமுள்ளவை; ஏனெனில் மேல்அறைகளுக்கு முன் நடைப்பந்தல்கள் அதிக இடம் கொண்டன; கீழ் அறைகளுக்கும் நடு அறைகளுக்கும் முன் அவ்வளவு இடங்கொள்ளவில்லை.
எசேக்கியேல் 42 : 6 (RCTA)
அவை மூன்றடுக்காய் இருந்தன. அங்குள்ள தூண்கள் பிராகாரத்திலுள்ள தூண்கள் போலல்ல; இவை கீழும் நடுவீட்டிலும் உள்ள தூண்களை விட ஒடுங்கி இருந்தன.
எசேக்கியேல் 42 : 7 (RCTA)
வெளிப்பக்கம், அறைகளின் ஓரமாய் வெளிப்பிராகாரத் திசையாக ஒரு மதில் இருந்தது; அறைகளின் முன்பாக அதன் நீளம் ஐம்பது முழம்.
எசேக்கியேல் 42 : 8 (RCTA)
ஏனெனில், வெளிப் பிராகாரத்தை நோக்கிய அறைகளின் நீளம் ஐம்பது முழம்; கோவிலுக்கு எதிரே இருந்தவற்றின் நீளமோ நூறு முழம்.
எசேக்கியேல் 42 : 9 (RCTA)
வெளிப் பிராகாரத்திலிருந்து அவ்வறைகளுக்கு வருகிற மக்களுக்கென ஒரு வழி கிழக்கே அடிஅறையில் இருந்தது.
எசேக்கியேல் 42 : 10 (RCTA)
கீழ்த்திசை வழிக்கு எதிராகவும், தனிப்படையாய் இருந்த மாளிகைக்கு நேர் முன்பாகவும் மதிலின் அகலத்தில் அறைகள் இருந்தன.
எசேக்கியேல் 42 : 11 (RCTA)
இவற்றின் முன்னேயும் ஒரு நடைபாதை இருந்தது; வடபக்கத்திலுள்ள அறைகளுக்கு முன்னிருந்த பாதையைப் போன்றது; நீளமும் அகலமும் ஒன்றே; வாயிற்படிகள், சிற்ப வேலைகள், கதவுகள் யாவும் அப்பக்கத்தில் இருப்பவற்றைப் போன்றவையே.
எசேக்கியேல் 42 : 12 (RCTA)
தென்திசை அறைகளுக்கு வாயில் இருந்தது போலவே, இப்பக்கத்திலும் ஒருவாயில் இருந்தது; இது தனிப்பட்டதாய் இருந்த மண்டபத்துக்கு எதிரே இருந்தது; கீழ்த்திசையிலிருந்து வருபவர்களுக்கு இது உதவியாயிருந்தது.
எசேக்கியேல் 42 : 13 (RCTA)
அந்த மனிதர் என்னைப் பார்த்து: "தனியாய்ப் பிரித்து வைக்கப்பட்டிருக்கும் மாளிகைக்கு முன்னால் இருக்கும் வடபுற அறைகளும், தென்புற அறைகளும் பரிசுத்த அறைகள்; ஆண்டவருடைய திருத்தூயகத்துள் சென்று ஆண்டவர் திருமுன் பணிபுரியும் அர்ச்சகர்கள் பரிசுத்த காணிக்கைகளை உண்ணும் இடங்கள் அவை; அவர்கள் மிகவும் பரிசுத்தமானவற்றையும் பாவப்பரிகாரப் பலியையும், குற்றப் பரிகாரக் காணிக்கைகளையும் அங்கே வைக்கிறார்கள்; ஏனெனில் அந்த இடம் பரிசுத்தமான இடம்.
எசேக்கியேல் 42 : 14 (RCTA)
அர்ச்சகர்கள் இவ்வாறு நுழைந்த பின்னர் பரிசுத்த இடங்களிலிருந்து வெளிப் பிராகாரத்துக்கு வரக்கூடாது; பணிபுரியும் போது அவர்கள் உடுத்தியிருக்கும் ஆடைகள் பரிசுத்தமானவை; ஆகையால் அவற்றை அங்கேயே கழற்றி வைத்து விட்டு வேறு உடைகளை உடுத்திக் கொண்டு தான் பொது மக்களுக்குரிய இடத்திற்குப் போவார்கள்" என்று சொன்னார்.
எசேக்கியேல் 42 : 15 (RCTA)
உட்புறத்து மாளிகையை அளந்து முடித்தபின், அவர் என்னைக் கிழக்கு வழியை நோக்கும் வாயில் வழியாய் வெளியே அழைத்துக் கொண்டு போய், முற்றத்தை முழுதும் அளக்கத் தொடங்கினார்:
எசேக்கியேல் 42 : 16 (RCTA)
கீழ்த்திசைப் புறத்தை அளவு கோலால் அளந்தார்; அந்த அளவு கோலின்படி ஐந்நூறு கோல் இருந்தது;
எசேக்கியேல் 42 : 17 (RCTA)
வடதிசைப் புறத்தை அளந்தார்; அக்கோலால் ஐந்நூறு கோல் இருந்தது;
எசேக்கியேல் 42 : 18 (RCTA)
தென்திசைப் புறத்தை அளந்தார்; அக்கோலால் ஐந்நூறு கோல் இருந்தது;
எசேக்கியேல் 42 : 19 (RCTA)
மேற்றிசைப் புறத்தை அளந்தார்; அக்கோலால் ஐந்நூறு கோல் இருந்தது.
எசேக்கியேல் 42 : 20 (RCTA)
நாற்புறமும் சுற்றிச் சுற்றிப் போய்ச் சுவர்களை அளந்தார்; தூயகத்திற்கும் பொதுமக்கள் முற்றத்திற்கும் உள்ள அந்தச் சுவரின் நீளம் ஐந்நூறு முழம்; அகலம் ஐந்நூறு முழம்.
❮
❯