எசேக்கியேல் 36 : 1 (RCTA)
"மனிதா, இஸ்ராயேல் நாட்டு மலைகளுக்கு இறைவாக்குரைத்துச் சொல்: இஸ்ராயேல் நாட்டு மலைகளே, ஆண்டவரின் வார்த்தையைக் கேளுங்கள்.
எசேக்கியேல் 36 : 2 (RCTA)
ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: உங்களைக் குறித்து உங்கள் பகைவர்கள், 'ஆகா, நன்று! பண்டைக்காலத்திய மலைகள் எங்களுக்குச் சொந்தமாகக் கொடுக்கப்பட்டன' என்று சொன்னார்கள்.
எசேக்கியேல் 36 : 3 (RCTA)
ஆதலால் நீ இறைவாக்குக் கூறு: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இஸ்ராயேல் மலைகளே, நீங்கள் பாழாக்கப்பட்டு, நான்கு பக்கத்திலுமுள்ள அந்நியர்களால் மிதிக்கப்பட்டு, மற்றுமுள்ள மக்களால் கைப்பற்றப்பட்டு வேற்றினத்தாரின் அவதூறுக்கும், கேவலமான பேச்சுக்கும் உள்ளானீர்கள்;
எசேக்கியேல் 36 : 4 (RCTA)
ஆதலால் இஸ்ராயேல் மலைகளே, ஆண்டவராகிய இறைவன் வார்த்தையைக் கேளுங்கள்: மலைகள், குன்றுகள், அருவிகள், பள்ளத்தாக்குகள், பாலை நிலங்கள், சுற்றிலுமுள்ள மற்ற நாடுகளுக்கு இரையாகவும் பரிகாசமாகவும் ஆகிவிட்ட குடிகளில்லாப் பட்டணங்கள் ஆகியவற்றுக்கு ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்;
எசேக்கியேல் 36 : 5 (RCTA)
ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நாம் கோபத்தோடும் பொறாமையோடும் இதுமேயா முழுவதற்கும், மற்றெல்லா இனத்தார்க்கும் எதிராகப் பேசுகிறோம்: அவர்கள் நமது நாட்டைக் கைப்பற்றி உரிமையாக்கிக் கொள்ளவும், அதைக் கொள்ளையிடவும் எண்ணி நிறைந்த மகிழ்ச்சியோடு அதைத் தங்களுக்கு உரிமைச் சொத்தாகத் தாங்களே கொடுத்துக் கொண்டு நம்மை அலட்சியம் செய்தார்கள்.
எசேக்கியேல் 36 : 6 (RCTA)
ஆதலால் இஸ்ராயேல் நாட்டைக் குறித்து, மலைகள், குன்றுகள், அருவிகள், பள்ளத்தாக்குகள் ஆகியவற்றுக்கு இறைவாக்குரை: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நீங்கள் புறவினத்தாரின் வசைமொழிக்கு இலக்கானதால் இதோ, நாம் ஆத்திரத்தோடு பேசுகிறோம்
எசேக்கியேல் 36 : 7 (RCTA)
ஆகையால் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: உங்களைச் சுற்றியுள்ள புறவினத்தார் தத்தம் அவமானத்தைத் தாங்களே சுமந்து கொள்ளும்படி, நாம் அவர்களுக்கு எதிராக நமது கையுயர்த்தி ஆணையிடுகிறோம்.
எசேக்கியேல் 36 : 8 (RCTA)
ஆனால் இஸ்ராயேல் மலைகளே, நீங்கள் இளங்கிளைகளைப் படரவிட்டு உங்கள் கனிகளை நம் மக்களாகிய இஸ்ராயேலுக்குக் கொடுப்பீர்கள்; ஏனெனில் அவர்கள் சீக்கிரம் தாய் நாட்டுக்குத் திரும்புவார்கள்.
எசேக்கியேல் 36 : 9 (RCTA)
இதோ நாம் வருகின்றோம்; உங்களைப் பார்ப்போம்; நீங்கள் பண்படுத்தப்படுவீர்கள்; உங்களில் விதைகள் விதைக்கப்படும்.
எசேக்கியேல் 36 : 10 (RCTA)
உங்களில் வாழும் மனிதர்கள் பெருகிப் பலுகச் செய்வோம்; இஸ்ராயேல் வீட்டார் அனைவரையும் பலுகச் செய்வோம்; பட்டணங்கள் குடியிருக்கும் இடங்களாகும்; பாழடைந்த இடங்கள் புதிதாய்க் கட்டப்படும்,
எசேக்கியேல் 36 : 11 (RCTA)
உங்களில் மனிதர்களையும் மிருகங்களையும் அதிகமாக்குவோம்; அவர்களைப் பெருகிப் பலுகச் செய்வோம்; உங்களுடைய பண்டைய நிலைமையில் உங்களைத் திரும்பவும் நாம் நிலைநாட்டுவோம்; அதுமட்டுமன்று; முந்திய சிறப்பை விட மிகுந்த சிறப்பு உங்களுக்குக் கிடைக்கச் செய்வோம். அப்பொழுது, நாமே ஆண்டவர் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
எசேக்கியேல் 36 : 12 (RCTA)
உங்களிடத்தில் நம் மக்களாகிய இஸ்ராயேலரைக் குடியேறச் செய்வோம்; அவர்கள் உங்களை உரிமையாக்கிக் கொள்வார்கள்; நீங்கள் அவர்களுடைய உரிமைச் சொத்தாய் இருப்பீர்கள்; இனி அவர்கள் உங்களை விட்டு அகலவேமாட்டார்கள்.
எசேக்கியேல் 36 : 13 (RCTA)
ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: புறவினத்தார் உங்களைக் குறித்து, 'நீங்கள் மனிதர்களை விழுங்குகிறீர்கள், உங்கள் இனத்தாரின் பிள்ளைகளையே அழிக்கிறீர்கள்' என்று சொல்லுகிறார்கள்.
எசேக்கியேல் 36 : 14 (RCTA)
ஆகையால், இனிமேல் நீங்கள் மனிதர்களை விழுங்கலாகாது; உங்கள் இனத்தாரின் பிள்ளைகளைச் சாகக் கொடுத்தலாகாது, என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
எசேக்கியேல் 36 : 15 (RCTA)
புறவினத்தாரின் பழிச் சொல்லை இனி நீங்கள் கேட்கும்படி விடமாட்டோம்; அவர்களுடைய ஏளனத்துக்கு நீங்கள் உள்ளாகாமல் பார்த்துக் கொள்வோம். நீங்கள் உங்கள் குடிகளை இனிமேல் இழக்கவே மாட்டீர்கள், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்."
எசேக்கியேல் 36 : 16 (RCTA)
ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
எசேக்கியேல் 36 : 17 (RCTA)
மனிதா, இஸ்ராயேல் வீட்டார் தங்கள் சொந்த நாட்டில் குடியிருந்த காலத்தில், அதைத் தங்கள் தீய நடத்தையாலும் தீய செயல்களாலும் தீட்டுப்படுத்தினார்கள்: அவர்களுடைய செயல்கள் விலக்கமான பெண்ணின் அசுத்தம் போல நம் கண்களுக்கு அசுத்தமாய் இருந்தன.
எசேக்கியேல் 36 : 18 (RCTA)
அவர்கள் இரத்தம் சிந்திக் குற்றம் செய்ததாலும், தங்கள் சிலைகளால் நாட்டைப் பங்கப்படுத்தியதாலும் நாம் அவர்கள் மேல் நம் கோபத்தையும் ஆத்திரத்தையும் காட்டி,
எசேக்கியேல் 36 : 19 (RCTA)
அவர்களைப் புறவினத்தார்க்குள்ளே சிதறடித்தோம்; அவர்களைப் பல நாடுகளுக்குத் துரத்திவிட்டோம்; அவர்களுடைய நடத்தைக்கும் அக்கிரமங்களுக்கும் தக்கபடி அவர்களைத் தண்டித்தோம்.
எசேக்கியேல் 36 : 20 (RCTA)
அவர்கள் புறவினத்தாரிடம் போன போது இந்தப் புறவினத்தார் அவர்களைக் குறித்து, 'இவர்கள் கடவுள் மக்களாம்; அப்படியிருந்தும் அவரது நாட்டிலிருந்து வெளியேற வேண்டி வந்ததாம்' என்று சொன்னார்கள்; அவ்வாறு அவர்கள் நமது திருப்பெயரின் பரிசுத்தம் கெடுவதற்குக் காரணமாய் இருந்தனர்;
எசேக்கியேல் 36 : 21 (RCTA)
ஆயினும் இஸ்ராயேல் வீட்டார் தாங்கள் வந்து சேர்ந்த புறவினத்தார்களின் நடுவில் பங்கப்படுத்திய நமது திருப்பெயரை முன்னிட்டே அவர்கள் மேல் இரக்கம் கொண்டோம்.
எசேக்கியேல் 36 : 22 (RCTA)
ஆதலால் இஸ்ராயேல் வீட்டாரிடம் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இஸ்ராயேல் வீட்டாரே, உங்களை முன்னிட்டு நாம் செயலாற்ற முற்படவில்லை; ஆனால் புறவினத்தாரின் நடுவில் நீங்கள் பங்கப்படுத்திய நமது திருப்பெயரை முன்னிட்டே செயலாற்றப் போகிறோம்.
எசேக்கியேல் 36 : 23 (RCTA)
புறவினத்தாரின் நடுவில் நமது திருப்பெயரின் பரிசுத்தத்தை நீங்கள் பங்கப்படுத்தினீர்கள்; பங்கப்படுத்தப்பட்ட மகத்தான நமது திருப்பெயரை நாம் பரிசுத்தமாக்குவோம்; இவ்வாறு நாம் உங்கள் வழியாய் அவர்கள் கண் முன் நமது பரிசுத்தத்தை நிலைநாட்டும் போது, நாமே ஆண்டவர் என்பதைப் புறவினத்தார் அறிந்து கொள்வார்கள், என்கிறார் ஆண்டவர்.
எசேக்கியேல் 36 : 24 (RCTA)
ஏனெனில் புறவினத்தாரிடமிருந்து நாம் உங்களை மீட்போம்; எல்லா நாடுகளிலிருந்தும் உங்களைக் கூட்டிச் சேர்த்து, உங்கள் சொந்த நாட்டுக்கே திரும்பக் கொண்டு வருவோம்.
எசேக்கியேல் 36 : 25 (RCTA)
நாம் உங்கள்மேல் தூய நீரைத் தெளிப்போம்; உங்கள் அழுக்குகள் எல்லாம் போய்விட, நீங்கள் தூய்மையாய் இருப்பீர்கள்; சிலைவழிபாட்டுத் தீட்டுகளிலிருந்து உங்களைத் தூய்மையாக்குவோம்.
எசேக்கியேல் 36 : 26 (RCTA)
உங்களுக்குப் புதிய இதயத்தை அருளுவோம்; உங்கள் உள்ளத்தில் புதிய ஆவியை ஊட்டுவோம்; உங்கள் உடலிலிருந்து கல்லான இதயத்தை எடுத்துவிட்டு, உணர்ச்சியுள்ள இதயத்தை உங்களுக்குக் கொடுப்போம்.
எசேக்கியேல் 36 : 27 (RCTA)
உங்கள் உள்ளத்தில் நமது ஆவியை ஊட்டுவோம். நம் கற்பனைகளின்படி நடக்கவும், நம் நீதி முறைமைகளைக் கடைப்பிடிப்பதில் கவனமாயிருக்கவும் செய்வோம்.
எசேக்கியேல் 36 : 28 (RCTA)
உங்கள் தந்தையர்களுக்கு நாம் தந்த நாட்டில் நீங்கள் குடியிருப்பீர்கள்; அப்போது நீங்கள் நம் மக்களாய் இருப்பீர்கள், நாம் உங்கள் கடவுளாய் இருப்போம்.
எசேக்கியேல் 36 : 29 (RCTA)
உங்கள் எல்லா அசுத்தங்களிலிருந்தும் உங்களை நாம் தூய்மையாக்குவோம்; தானியம் முளைக்கச் செய்து மிகுதியாக விளையச் செய்து, உங்கள் மேல் பஞ்சம் வராதபடி பார்த்துக் கொள்வோம்.
எசேக்கியேல் 36 : 30 (RCTA)
இனி, ஒருபோதும் புறவினத்தார் நடுவில் நீங்கள் பஞ்சத்தால் அவமானம் அடையாதபடி, நாம் மரத்தின் கனியையும் வயலின் விளைவையும் பெருகச் செய்வோம்.
எசேக்கியேல் 36 : 31 (RCTA)
அப்போது உங்கள் தவறான நெறிகளையும் தீயசெயல்களையும் நினைத்துப் பார்த்து உங்கள் அக்கிரமங்களுக்காகவும், அருவருப்பான செயல்களுக்காகவும் உங்களையே நீங்கள் வெறுப்பீர்கள்.
எசேக்கியேல் 36 : 32 (RCTA)
உங்களை முன்னிட்டு நாம் செயலாற்ற முற்படவில்லை, என்கிறார் ஆண்டவராகிய இறைவன். இது உங்களுக்குத் தெரிந்திருக்கட்டும். இஸ்ராயேல் வீட்டாரே, உங்கள் தீய நெறிகளை எண்ணி வெட்கி நாணுங்கள்.
எசேக்கியேல் 36 : 33 (RCTA)
ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: உங்கள் எல்லா அக்கிரமங்களினின்றும் உங்களை நாம் தூய்மையாக்கும் நாளில், நகரங்களில் மனிதர் குடியேறச் செய்வோம்; பாழான இடங்கள் திரும்பக் கட்டப்படும்.
எசேக்கியேல் 36 : 34 (RCTA)
பாலையாய்க் கிடந்த நிலம், அவ்வழியாய்ச் சென்றவர்கள் பார்த்தவாறே பாழ்நிலமாய்க் கிடவாமல், உழுது பயிரிடப்படும்.
எசேக்கியேல் 36 : 35 (RCTA)
அப்பொழுது மக்கள், 'பாலையாய்க்கிடந்த இந்த நிலம் சிங்காரச் சோலையாகி விட்டதே; இடிந்து பாழாகிக் குடிகளற்றுப் போயிருந்த இந்நகரங்கள் இப்பொழுது மக்கள் குடியிருக்கும் நகரங்களாகவும், அரண் சூழ்ந்த பட்டணங்களாகவும் ஆகிவிட்டனவே' என்று வியப்பார்கள்.
எசேக்கியேல் 36 : 36 (RCTA)
அப்பொழுது உங்களைச் சுற்றியுள்ள புறவினத்தார், இடிந்து, பாழாகிய இடங்களைத் திரும்பக் கட்டியவரும், பாலை நிலத்தைச் சோலையாகச் செய்தவரும் ஆண்டவராகிய நாமே என்பதை அறிவார்கள்; ஆண்டவராகிய நாமே இதைச் சொன்னோம்; இதைச் செய்தே தீருவோம்.
எசேக்கியேல் 36 : 37 (RCTA)
ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இஸ்ராயேல் வீட்டாருக்கு இன்னுமொரு நன்மையும் நாம் செய்வதை அவர்கள் காண்பார்கள்: அதாவது மந்தை போல் அவர்களைப் பெருகச் செய்வோம்.
எசேக்கியேல் 36 : 38 (RCTA)
அவர்கள் பலிகளுக்காக வரும் மந்தைகள் போல- குறிப்பிட்ட திருவிழாக்களில் யெருசலேமில் கூடி வரும் மந்தைகள் போல- மனிதர்கள் பலுகி, பாழான பட்டணங்களை நிரப்புவார்கள்."
❮
❯