எசேக்கியேல் 34 : 1 (RCTA)
ஆண்டவருடைய வாக்கு மீண்டும் எனக்கு அருளப்பட்டது:
எசேக்கியேல் 34 : 2 (RCTA)
மனிதா, இஸ்ராயேலின் மேய்ப்பர்களுக்கு எதிராக நீ இறைவாக்குரைத்து அவர்களைப் பார்த்துச் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இஸ்ராயேலின் மேய்ப்பர்களுக்கு ஐயோ கேடு! அவர்கள் தங்களையே மேய்த்துக் கொள்கிறார்கள். மேய்ப்பர்கள் மந்தையை அல்லவா மேய்க்க வேண்டும்?
எசேக்கியேல் 34 : 3 (RCTA)
கொழுப்பானதை நீங்கள் உண்டு, ஆட்டு மயிரை ஆடையாக்கி உடுத்தினீர்கள்; கொழுத்து வளர்ந்த ஆட்டை அடித்துச் சாப்பிட்டீர்கள்; ஆனால் ஆடுகளையோ நீங்கள் மேய்க்கவில்லை.
எசேக்கியேல் 34 : 4 (RCTA)
வலிமையற்ற ஆடுகளை நீங்கள் தேறும்படி செய்யவில்லை; பிணியுற்றவற்றை நீஙக்ள் பராமரிக்கவில்லை; எலும்பு முறிந்தவற்றுக்குக் கட்டுப்போடவில்லை; வழிதவறியவற்றைத் திரும்பக் கொண்டுவரவில்லை; காணாமற்போனவற்றைத் தேடவில்லை; ஆனால் அவற்றைக் கண்டிப்புடணும் கடுமையாகவும் நடத்தினீர்கள்.
எசேக்கியேல் 34 : 5 (RCTA)
மேய்ப்பன் இல்லாததால் நம்முடைய ஆடுகள் சிதறுண்டு போயின; சிதறியவை கொடிய மிருகங்களுக்கு இரையாகி மடிந்தன.
எசேக்கியேல் 34 : 6 (RCTA)
நம்முடைய ஆடுகள் சிதறிப் போய் மலைகளிலும் உயர்ந்த குன்றுகளிலும் அலைந்து திரிந்தன; பூமியின் எல்லாப் பக்கத்திலும் நம்முடைய ஆடுகள் சிதறுண்டு திரிந்தன; அவற்றைத் தேடவோ, தேடிக் கண்டுபிடிக்கவோ அக்கறையுள்ளவர் யாருமில்லை.
எசேக்கியேல் 34 : 7 (RCTA)
ஆதலால் மேய்ப்பர்களே, ஆண்டவருடைய வார்த்தையைக் கேளுங்கள்.
எசேக்கியேல் 34 : 8 (RCTA)
ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நம் உயிர்மேல் ஆணை! மேய்ப்பன் இல்லாததால் நம்முடைய ஆடுகள் கொள்ளையிடப்பட்டன, காட்டு மிருகங்களுக்கெல்லாம் இரையாயின; நம் ஆயர்களோ நமது மந்தையைக் கண்காணிக்கவில்லை; மேய்ப்பர்கள் மந்தையை மேய்க்காமல் தங்களையே மேய்த்துக் கொண்டார்கள்.
எசேக்கியேல் 34 : 9 (RCTA)
ஆகையால் மேய்ப்பர்களே, ஆண்டவரின் வார்த்தையைக் கேளுங்கள்:
எசேக்கியேல் 34 : 10 (RCTA)
ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இதோ, நாம் நம்முடைய மேய்ப்பர்களுக்கு எதிராக வந்து, நமது மந்தையை அவர்கள் கையிலிருந்து மீட்டுக் கொண்டு, ஆடுகளை மேய்க்கும் வேலையிலிருந்து அவர்களை நீக்கிவிடுவோம்; அவர்கள் இனி மேல் தங்களையே மேய்த்துக் கொள்ள முடியாது. அவர்கள் வாயினின்று நம்முடைய ஆடுகளை மீட்போம்; அவை இனி அவர்களுக்கு இரையாகா.
எசேக்கியேல் 34 : 11 (RCTA)
ஏனெனில் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இதோ, நாமே இனி நம்முடைய ஆடுகளைத் தேடிப்போவோம்; ஆர்வத்தோடு தேடுவோம்.
எசேக்கியேல் 34 : 12 (RCTA)
மேய்ப்பன் தன் ஆடுகளுள் சில சிதறுண்டு போனால் எவ்வாறு அவற்றைத் தேடுவானோ, அவ்வாறே நாமும் நம்முடைய ஆடுகளைத் தேடுவோம். மப்பும் மந்தாரமுமான நாளில் அவை சிதறுண்டிருக்கும் எல்லா இடங்களிலுமிருந்து அவற்றை நாம் மீட்டுக்கொண்டு வருவோம்;
எசேக்கியேல் 34 : 13 (RCTA)
வேற்றினத்தாரிடமிருந்து வெளிநடத்தி, வெளிநாடுகளிலிருந்து கூட்டி வந்து தங்களுடைய சொந்த நாட்டுக்கு அவற்றைத் திரும்பிக் கொண்டு வருவோம்; இஸ்ராயேலின் மலைகளிலும், நீரூற்றுகளின் ஓரத்திலும், நாட்டில் மக்கள் குடியிருக்கும் இடங்களிலெல்லாம் அவற்றை மேய்ப்போம்.
எசேக்கியேல் 34 : 14 (RCTA)
வளமான புல்வெளியில் அவற்றை மேய்ப்போம்; இஸ்ராயேலில் மலையுச்சிகளில் அவை மேய்ச்சலுக்குப் போகும்; அங்கே செழிப்பான புல் தரையில் அவை படுத்திருக்கும்; இஸ்ராயேலின் மலைகளில் உள்ள வளமான புல்லை அவை மேயும்.
எசேக்கியேல் 34 : 15 (RCTA)
நம்முடைய ஆடுகளுக்கு நாமே மேய்ப்பனாய் இருப்போம்; அவற்றை நாமே இளைப்பாறச் செய்வோம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
எசேக்கியேல் 34 : 16 (RCTA)
காணாமற் போனதைத் தேடுவோம்; வழி தவறியதைத் திரும்பக் கொண்டு வருவோம்; எலும்பு முறிந்ததற்குக் கட்டுப் போடுவோம்; வலுவில்லாததைத் தேறும்படி செய்வோம்; கொழுத்ததையும் வலிமையுள்ளதையும் கண்காணிப்போம் நமது நீதி விளங்கும் வகையில் அவற்றை மேய்ப்போம்.
எசேக்கியேல் 34 : 17 (RCTA)
நமது மந்தையே, ஆண்டவராகிய இறைவன் உங்களுக்குக் கூறுகிறார்: இதோ, ஆடுகளிலிருந்து ஆடுகளையும், ஆட்டுக் கடாக்களிலிருந்து வெள்ளாட்டுக் கடாக்களையும் நாமே நடுவராய் இருந்து தீர்ப்பிடுவோம்;
எசேக்கியேல் 34 : 18 (RCTA)
நல்ல மேய்ச்சலை மேய்வதோடு நில்லாமல், மேய்ச்சலில் எஞ்சியவற்றைக் காலால் மிதிக்கலாமோ? தெளிந்த நீரைக் குடிப்பதோடு நில்லாமல், எஞ்சிய நீரைக் காலால் கலக்கிக் குழப்பலாமோ?
எசேக்கியேல் 34 : 19 (RCTA)
உங்கள் கால்களால் மிதித்ததை நம்முடைய ஆடுகள் குடிக்க வேண்டுமோ? உங்கள் கால்களால் கலக்கிக் குழப்பியதை நம்முடைய ஆடுகள் குடிக்கவேண்டுமோ?
எசேக்கியேல் 34 : 20 (RCTA)
ஆகையால் ஆண்டவராகிய இறைவன் அவற்றுக்குக் கூறுகிறார்: இதோ, கொழுத்த ஆடுகளுக்கும், இளைத்த ஆடுகளுக்கும் இடையில் நாமே நடுவராய் இருந்து தீர்ப்பிடுவோம்.
எசேக்கியேல் 34 : 21 (RCTA)
வலுவற்ற ஆடுகளை நீங்கள் விலாப் பக்கத்தாலும் தோள் பட்டையாலும் இடித்து, இவற்றைப் பலவிடங்களிலும் சிதறடிக்கும் வரை கொம்புகளால் முட்டித் தள்ளிக் கொண்டு போனதால், நமது மந்தையை நாமே மீட்போம்;
எசேக்கியேல் 34 : 22 (RCTA)
இனிமேல் அவை பறிபோகமாட்டா; ஆடுகளுக்கிடையில் நாமே நடுநின்று தீர்ப்பிடுவோம்.
எசேக்கியேல் 34 : 23 (RCTA)
அவற்றை மேய்க்கும்படி நம் ஊழியனாகிய தாவீதென்னும் ஒரே மேய்ப்பனை ஏற்படுத்துவோம்; அவனே அவற்றை மேய்ப்பான்; அவனே அவற்றுக்கு மேய்ப்பனாய் இருந்து அவற்றை மேய்த்துக் கண்காணிப்பான்.
எசேக்கியேல் 34 : 24 (RCTA)
அப்போது ஆண்டவராகிய நாமே அவர்களுக்குக் கடவுளாய் இருப்போம்; நம் ஊழியனாகிய தாவீது அவர்களுக்குத் தலைவனாய் இருப்பான்; ஆண்டவராகிய நாமே இதைச் சொன்னோம்.
எசேக்கியேல் 34 : 25 (RCTA)
நாம் அவற்றுடன் சமாதான உடன்படிக்கை செய்வோம்; கொடிய மிருகங்களை நாட்டினின்றே விரட்டி விடுவோம்; இனி இவை பாலை நிலத்தில் அச்சமின்றி வாழும்; காடுகளில் கவலையற்று உறங்கும்.
எசேக்கியேல் 34 : 26 (RCTA)
அவற்றையும், நமது குன்றின் சுற்றுப் புறங்களையும் ஆசீர்வதிப்போம்; தகுந்த காலத்தில் மழை பொழிவோம்; அவை ஆசீர்வாதத்தின் பொழிவாய் இருக்கும்.
எசேக்கியேல் 34 : 27 (RCTA)
வயல் வெளியில் உள்ள மரங்கள் தங்கள் கனிகளைக் கொடுக்கும்; பூமி தன் விளைவைத் தரும்; அவர்கள் தங்கள் நாட்டில் நலமாக இருப்பார்கள். அவர்களின் நுகத்தடிகளை முறித்து, அவர்களை அடிமையாக்கினவர்களின் கைகளினின்று அவர்களை விடுவிக்கும் போது,
எசேக்கியேல் 34 : 28 (RCTA)
நாமே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிவார்கள். இனி மேல் வேற்றினத்தார்க்கு அவர்கள் இரையாகமாட்டார்கள்; நாட்டில் வாழும் கொடிய மிருகங்கள் அவர்களை அடித்துத் தின்னமாட்டா; அவர்கள் அச்சமின்றி வாழ்வார்கள்; அவர்களை மிரட்டுவார் யாரும் இருக்க மாட்டார்கள்.
எசேக்கியேல் 34 : 29 (RCTA)
மேலும் செழிப்பான பண்ணை ஒன்றை அவர்களுக்குக் கொடுப்போம்; இனி அவர்கள் பட்டினியால் நாட்டில் மடியமாட்டார்கள்; புறவினத்தாரின் நிந்தைக்கும் ஆளாகமாட்டார்கள்.
எசேக்கியேல் 34 : 30 (RCTA)
அப்பொழுது அவர்களுடைய கடவுளும் ஆண்டவருமாகிய நாம் அவர்களோடு இருக்கிறோம் என்பதையும், இஸ்ராயேல் வீட்டாராகிய அவர்கள் நம் மக்களாய் இருக்கிறார்கள் என்பதையும் அவர்கள் அறிவார்கள், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
எசேக்கியேல் 34 : 31 (RCTA)
நீங்களே நம்முடைய ஆடுகள்- நமது மேய்ச்சலின் ஆடுகள்; நாமே உங்கள் கடவுள் என்கிறார், ஆண்டவராகிய இறைவன்."
❮
❯