எசேக்கியேல் 3 : 1 (RCTA)
அவர் மறுபடியும் என்னிடம், "மனிதா, உனக்குத் தரப்படுவதைப் புசி; இந்த ஒலைச்சுருளைப் புசி; புசித்த பின் இஸ்ராயேல் மக்களிடம் போய்ப் பேசு" என்றார்.
எசேக்கியேல் 3 : 2 (RCTA)
அவ்வாறே நான் என் வாயைத் திறந்தேன்; அவர் அந்த ஒலைச்சுருளை எனக்குப் புசிக்கத் தந்தார்.
எசேக்கியேல் 3 : 3 (RCTA)
பின்னர் என்னிடம்: "மனிதா, நாம் உனக்குக் கொடுக்கும் இந்த ஒலைச்சுருளை உண்டு உன் வயிற்றை நிரப்பு" என்றார். நானும் அவ்வாறே அதை உண்டேன்; அது என் வாய்க்குத் தேனைப் போலத் தித்தித்தது.
எசேக்கியேல் 3 : 4 (RCTA)
மீண்டும் அவர் என்னைப் பார்த்து, "மனிதா, நீ இஸ்ராயேல் வீட்டாரிடம் போய் எம் வார்த்தைகளை அவர்களுக்குச் சொல்.
எசேக்கியேல் 3 : 5 (RCTA)
ஏனெனில் நீ அறியாத சொற்களையோ கண்டுபிடியாத மொழியையோ பேசுகிற மக்களிடம் நாம் உன்னை அனுப்பவில்லை; இஸ்ராயேல் மக்களிடமே உன்னை அனுப்புகிறோம்.
எசேக்கியேல் 3 : 6 (RCTA)
விளங்காத பேச்சும், தெரியாத மொழியும் பேசுகின்ற மக்களிடத்தில் உன்னை அனுப்பவில்லை; அத்தகைய மக்களிடமே உன்னை அனுப்பினாலும், அவர்களாவது நீ சொல்வதைக் கேட்பார்களே!
எசேக்கியேல் 3 : 7 (RCTA)
ஆனால் இஸ்ராயேலர் நாம் சொல்வதைக் கேட்பதில்லை; ஆகவே நீ சொல்வதையும் கேட்க மாட்டார்கள்; ஏனெனில் இஸ்ராயேல் வீட்டார் அனைவரும் முரட்டுக் குணமும் கல் நெஞ்சமும் உள்ளவர்கள்.
எசேக்கியேல் 3 : 8 (RCTA)
இதோ, உன் முகத்தை அவர்கள் முகத்தை விடவும், உன் நெற்றியை அவர்கள் நெற்றியை விடவும் கடினமானதாய் இருக்கச் செய்தோம்.
எசேக்கியேல் 3 : 9 (RCTA)
உன் முகத்தை வச்சிரம் போலவும், கல்லை விடக் கெட்டியானதாகவும் ஆக்கினோம்; அவர்கள் கலகக்காரராய் இருக்கிறார்களென்று நீ அவர்களுக்கு அஞ்சி விடாதே; அவர்கள் முகத்தைப் பார்த்துப் பயப்படாதே" என்று கூறினார்.
எசேக்கியேல் 3 : 10 (RCTA)
இன்னும் தொடர்ந்து, "மனிதா, நாம் உன்னிடம் சொல்லும் வார்த்தைகளையெல்லாம் நீ செவி கொடுத்துக் கேட்டு, உன் உள்ளத்தில் பதிய வைத்துக்கொள்.
எசேக்கியேல் 3 : 11 (RCTA)
சிறைப்பட்டிருக்கும் உன் இனத்தாரிடம் சென்று பேசு: 'இது ஆண்டவராகிய இறைவன் வாக்கு' என்று சொல்; அதை அவர்கள் கேட்கிறார்களா, கேட்க மறுக்கிறார்களா என்பது பற்றிக் கவலைப்பட வேண்டாம்" என்றார்.
எசேக்கியேல் 3 : 12 (RCTA)
அப்போது, ஆவி என்மீதிறங்கிற்று; அதிக அதிர்ச்சியுடன் என்பின்னால் கேட்ட ஒரு குரலொலி, "தமது இருப்பிடத்தில் இலங்கிய ஆண்டவரின் மாட்சி வாழ்த்தப்படுவதாக!" என்று சொல்லிற்று.
எசேக்கியேல் 3 : 13 (RCTA)
தங்கள் இறக்கைகளை ஒன்றோடொன்று அடித்துக் கொண்ட மிருகங்களின் சத்தமும், அவற்றின் பின் ஒடிவந்த சக்கரங்களின் சத்தமும், பேரதிர்ச்சியின் சத்தமும் கேட்டன.
எசேக்கியேல் 3 : 14 (RCTA)
பின்னும் ஆவி என்னைத் தூக்கி உயர எழுப்பிற்று; நானோ மனக்கசப்பும் உள்ளக் கொதிப்பும் நிறைந்தவனாய்ச் சென்றேன்; ஆயினும் ஆண்டவரின் கரம் என் மேலிருந்து என்னைப் பலப்படுத்திற்று.
எசேக்கியேல் 3 : 15 (RCTA)
பின்பு கேபார் நதியருகில் தெல் அபிப் (புதிய தானியக் குவியல்) என்னுமிடத்தில் வசித்துக் கொண்டிருந்த சிறைப்பட்டவர்களிடம் வந்தேன்; அவர்கள் குடியிருந்த இடத்தில் நானும் அவர்கள் நடுவில் ஏழு நாட்கள் மதிமயங்கியவன் போல் உட்கார்ந்திருந்தேன்.
எசேக்கியேல் 3 : 16 (RCTA)
ஏழு நாட்களுக்குப் பிறகு ஆண்டவரின் வாக்கு என்னிடம் வந்தது:
எசேக்கியேல் 3 : 17 (RCTA)
மனிதா, இஸ்ராயேல் வீட்டார்க்கு உன்னைச் சாமக் காவலனாக வைத்திருக்கின்றோம். நீ நம் வாயினின்று புறப்படும் வார்த்தையைக் கேட்டு அதனை எம் பெயரால் அவர்களுக்கு எச்சரிக்கை செய்.
எசேக்கியேல் 3 : 18 (RCTA)
தீயவன் ஒருவனிடம், 'நீ கண்டிப்பாய்ச் சாவாய்' என்று நாம் சொல்ல, நீ அவனுக்கு எச்சரிக்கை செய்யாமலும், அவன் தன் தீய வழியினின்று திருந்தி வாழ்வு பெறும்படி நீ அவனிடம் அறிவிக்காமலும் விடுவாயாகில், அந்தத் தீயவன் தன் அக்கிரமத்திலேயே சாவான்; அவனது இரத்தப் பழியை உன் மேலேயே சாற்றுவோம்.
எசேக்கியேல் 3 : 19 (RCTA)
அதற்கு மாறாக, நீ அந்தத் தீயவனுக்கு எச்சரிக்கை செய்தும், அவன் தன் அக்கிரமத்துக்காக மனம் வருந்தாமலும், தீய வழியினின்று திரும்பாமலும் இருந்தானாயின், அவன் தன் அக்கிரமத்திலேயே சாவான்; ஆனால் உன்னையே நீ காத்துக் கொள்வாய்.
எசேக்கியேல் 3 : 20 (RCTA)
அவ்வாறே, நீதிமான் ஒருவன் தன் நீதி நெறியை விட்டு அக்கிரமத்தைச் செய்வானாயின், நாம் அவன் வழியில் இடறலை வைத்து அவனை விழச் செய்யும் போது, அவன் சாவான்; நீ அவனுக்கு எச்சரிக்கை செய்யாவிடில், அவன் தன் பாவத்திலேயே சாவான்; அவன் செய்த புண்ணியங்களை எண்ணிப்பார்க்க மாட்டோம்; ஆனால் அவனது இரத்தப்பழியை உன் மேலேயே சாற்றுவோம்.
எசேக்கியேல் 3 : 21 (RCTA)
ஆனால் நீதிமான் ஒருவனைப் பாவஞ் செய்யாதிருக்கும்படி நீ எச்சரித்து, அவனும் பாவம் செய்யாதிருப்பானாயின், அவன் கண்டிப்பாய் வாழ்வான்; அவன் வாழ்வது உன் எச்சரிக்கையின் காரணத்தால் தான்; நீயும் உன்னையே காத்துக் கொண்டவனாவாய்."
எசேக்கியேல் 3 : 22 (RCTA)
மறுபடியும் ஆண்டவரின் கரம் என்மேல் இருந்தது. அவர் என்னை நோக்கி, "நீ எழுந்து சமவெளியான இடத்துக்குப் போ; அங்கே உன்னோடு பேசுவோம்" என்றார்.
எசேக்கியேல் 3 : 23 (RCTA)
அவ்வாறே நான் எழுந்து சமவெளியான இடத்துக்குப் போய்ச் சேர்ந்தேன்: இதோ, கேபார் நதியருகில் எனக்குத் தோன்றிய மகிமைக்கு இணையாக, ஆண்டவரின் மகிமை அங்கேயும் காணப்பட்டது; நானோ முகங்குப்புற விழுந்தேன்.
எசேக்கியேல் 3 : 24 (RCTA)
மீண்டும் ஆவி என்னுள் புகுந்து என்னைக் காலூன்றி நிற்கச் செய்தது; செய்த பின் என்னைப் பார்த்து சொன்னார்: "நீ போய் உன் வீட்டினுள் உன்னை அடைத்துக்கொள்.
எசேக்கியேல் 3 : 25 (RCTA)
மனிதா, இதோ இந்தச் சங்கிலிகள் உனக்காகவே தயார் செய்யப்பட்டுள்ளன; இவற்றால் நீ கட்டப்படுவாய்; மக்களின் நடுவில் உன்னால் போகமுடியாது.
எசேக்கியேல் 3 : 26 (RCTA)
உன் நாக்கை மேல் வாயோடு நாம் ஒட்டிவிடுவோம்; ஆதலின் நீ ஊமையாவாய்; நீ அவர்களைக் கடிந்து பேச முடியாது; ஏனெனில் அவர்களோ கலகக்காரர்கள்.
எசேக்கியேல் 3 : 27 (RCTA)
ஆயினும் நாம் உன்னோடு பேசும் போது, உன் வாயைத் திறப்போம்; அப்பொழுது நீ அவர்களிடம், 'இது ஆண்டவராகிய இறைவன் வாக்கு' என்று சொல்வாய். கேட்கிறவன் கேட்கட்டும்; கேட்க மறுப்பவன் மறுக்கட்டும்; ஏனெனில் அவர்களோ கலகக்காரர்கள்.
❮
❯