எசேக்கியேல் 28 : 1 (RCTA)
ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
எசேக்கியேல் 28 : 2 (RCTA)
மனிதா, தீர் நகரத்துத் தலைவனுக்குச் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: "உன் இதயம் செருக்குற்று, ' நானே கடவுள்; நடுக்கடலில் தெய்வங்களின் இருக்கையில் வீற்றிருக்கிறேன்' என்று நீ சொன்னாய்; நீ கடவுளைப் போல் அறிவாளியாக இருப்பதாக எண்ணினாலும், நீ மனிதன் தான்.
எசேக்கியேல் 28 : 3 (RCTA)
நீ தானியேலை விட அறிவாளி தான், நீ அறியாத மறைபொருள் ஒன்றுமில்லை;
எசேக்கியேல் 28 : 4 (RCTA)
உன் ஞானத்தாலும் அறிவாலும், செல்வமும் வல்லமையும் பெற்றாய்; பொன்னும் வெள்ளியும் சேர்த்து உன்னுடைய கருவூலத்தை நிரப்பினாய்.
எசேக்கியேல் 28 : 5 (RCTA)
வாணிகத்தில் உள்ள உன் சிறந்த ஞானம், இருந்த செல்வத்தை மிகுதிப்படுத்திற்று; வல்லமை வளர்ந்தது; திறமை மிகுதியால் உன்னுடைய இதயம் செருக்குக் கொண்டது.
எசேக்கியேல் 28 : 6 (RCTA)
ஆகையால் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நீ கடவுளைப்போல் அறிவாளியாய் இருப்பதாக நினைப்பதால்,
எசேக்கியேல் 28 : 7 (RCTA)
வேற்று நாட்டவருள் மிகக் கொடியவர்களான அந்நியர்களை உனக்கெதிராய் எழுப்புவோம்; அவர்கள் கையிலேந்திய வாளோடு வருவர்; வந்து உன் ஞானத்தின் பெருமையைப் போக்குவர்; அதனுடைய பேரழகைக் கெடுப்பார்கள்.
எசேக்கியேல் 28 : 8 (RCTA)
உன்னைக் கொன்று அரியணையிலிருந்து தள்ளுவர்; கடலில் கொலையுண்டவர்கள் நடுவில் அழிவாய்.
எசேக்கியேல் 28 : 9 (RCTA)
நீ மனிதன் தான்; கடவுள் அல்லவே; உன்னைக் கொல்ல வருகின்றவர்களிடம், 'நான் கடவுள்' என்று சொல்வாயோ?
எசேக்கியேல் 28 : 10 (RCTA)
விருத்தசேதனம் செய்யப்படாதவனைப் போல், அந்நிய நாட்டினர் கையால் சாவாய்; ஏனெனில் நாமே சொன்னோம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
எசேக்கியேல் 28 : 11 (RCTA)
ஆண்டவரின் வாக்கு மீண்டும் எனக்கு அருளப்பட்டது: "மனிதா, நீ தீர் நாட்டு அரசனைக் குறித்துப் புலம்பு:
எசேக்கியேல் 28 : 12 (RCTA)
நீ அவனுக்குச் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: "நீ கடவுள் சாயலின் முத்திரையாய் இருந்தாய்; ஞானத்தில் நிறைந்திருந்தாய்; அழகில் சிறந்திருந்தாய்;
எசேக்கியேல் 28 : 13 (RCTA)
கடவுளின் சோலையில், இன்பத் தோட்டத்தில் இருந்தாய்; விலையுயர்ந்த கற்களால் அழகு பெற்றிருந்தாய்; பதுமராகம், புட்பராகம், வைரம், பளிங்குக் கல், கோமேதகம், படிகப்பச்சை, நீலம், மாணிக்கம், மரகதம் முதலியவற்றை அணிந்திருந்தாய்; பொன்னான உன் உடுபாவனை உன் அழகை வெளிக்காட்டிற்று; நீ பிறந்த அன்றே இவை தயாரிக்கப்பட்டன.
எசேக்கியேல் 28 : 14 (RCTA)
தன் இறக்கையை விரித்துக் காக்கும் கெரூபை உனக்குக் காவலாக வைத்தோம். கடவுளின் பரிசுத்த மலை மேல் உன்னை நாட்டினோம்; விலையுயர்ந்த கற்களின் நடுவில் உலவினாய்.
எசேக்கியேல் 28 : 15 (RCTA)
நீ உண்டாக்கப்பட்ட நாளிலிருந்து உன் வழிகளில் குற்றமற்றிருந்தாய்; ஆனால் இறுதியில் உன்னில் குற்றம் காணப்பட்டது;
எசேக்கியேல் 28 : 16 (RCTA)
வியாபார மிகுதியால் உன்னில் அக்கிரமம் நிறைந்தது; நீ பாவத்தைச் செய்தாய்; ஆகையால் கடவுளின் மலையிலிருந்து அசுத்தமாயிருந்த உன்னைத் தள்ளினோம், காப்பாற்றும் கெரூபு உன்னை அக்கினி மயமான இரத்தினங்களின் நடுவினின்று வெளியேற்றியது.
எசேக்கியேல் 28 : 17 (RCTA)
நீ உன் அழகின் காரணமாய்ச் செருக்குற்றாய், உன் மாட்சியை முன்னிட்டு உன் ஞானத்தைக் கெடுத்தாய். உன்னைத் தரையில் குப்புறத் தள்ளினோம்; மன்னர்கள் முன் வைத்து அவர்கள் உன்னைப் பார்த்துப் பரிகசிக்கச் செய்தோம்.
எசேக்கியேல் 28 : 18 (RCTA)
உன் அக்கிரமங்களின் மிகுதியினாலும், வியாபாரத்தில் செய்த அநீதியாலும் உன் பரிசுத்த இடத்தைத் தீட்டுப்படுத்தினாய்; ஆகையால் உன் நடுவிலிருந்தே அக்கினியை வரப் பண்ணினோம்; அது உன்னைச் சுட்டெரித்தது. உன்னைப் பார்த்தவர்களின் கண்கள் காண, முற்றிலும் உன்னைச் சாம்பலாக்கினோம்.
எசேக்கியேல் 28 : 19 (RCTA)
உன்னைக் கண்டிருந்த மக்களெல்லாம், இப்பொழுது பார்த்துப் பயந்து வியக்கிறார்கள்; கொடியதொரு முடிவை நீ அடைந்தாய்; இனி என்றென்றும் இருக்க மாட்டாய்."
எசேக்கியேல் 28 : 20 (RCTA)
ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
எசேக்கியேல் 28 : 21 (RCTA)
மனிதா, சீதோன் நகரின் பக்கமாய் உன் முகத்தைத் திருப்பி, அதற்கு எதிராக இறைவாக்குக் கூறு:
எசேக்கியேல் 28 : 22 (RCTA)
நீ அதற்குச் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: "சீதோனே, இதோ, நாம் உனக்கு எதிராய் இருக்கிறோம்; உன் நடுவில் நமது மகிமையை வெளிப்படுத்துவோம்; அதன் நடுவில் வந்து நீதித் தீர்ப்பு வழங்கும் போது, நம்முடைய பரிசுத்தத்தை அங்கே காண்பிக்கும் போது நாமே ஆண்டவர் என்பதை அறிவார்கள்.
எசேக்கியேல் 28 : 23 (RCTA)
நாம் அதில் கொள்ளைநோயை அனுப்புவோம், தெருக்களில் இரத்த வெள்ளம் ஓடச் செய்வோம்; நாற்புறமும் வாளால் வெட்டப்படுவார்கள்; வெட்டுண்டவர்கள் அதன் நடுவில் செத்து வீழ்வார்கள்; அப்போது நாமே ஆண்டவர் என்பதை அறிவார்கள்.
எசேக்கியேல் 28 : 24 (RCTA)
"இஸ்ராயேல் நாட்டார்க்கு, அவர்கள் நிந்தித்து நடத்திய எதிரி நாட்டார்கள் காலில் குத்துகிற முள்ளாகவும், தைத்து நோவு கொடுக்கும் நெரிஞ்சிலாகவும் இனி மேல் இருக்க மாட்டார்கள் அப்போது நாமே இறைவன் என்பதை அறிவார்கள்.
எசேக்கியேல் 28 : 25 (RCTA)
ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இஸ்ராயேல் வீட்டாரை நாம் அவர்கள் சிதறிவாழும் நாடுகளிலிருந்து சேர்த்துக் கொண்டு வந்து, அவர்கள் வழியாய்ப் புறவினத்தார் முன் நம் பரிசுத்தத்தை விளங்கச் செய்யும் போது, நாம் நம் அடியான் யாக்கோபுக்குக் கொடுத்திருந்த அவர்களுடைய சொந்த நாட்டில் வாழ்வார்கள்.
எசேக்கியேல் 28 : 26 (RCTA)
அவர்கள் அதில் அச்சமின்றிக் குடியிருப்பார்கள்; வீடுகள் கட்டுவார்கள்; திராட்சைத் தோட்டங்கள் அமைப்பார்கள். அவர்களைச் சூழ்ந்திருந்து அவர்களை இழிவாக நடத்தியவர்கள் மீது நாம் நீதித்தீர்ப்புச் செலுத்திய பிறகு, அச்சமின்றி வாழ்வார்கள்; அப்பொழுது, நாமே அவர்கள் கடவுளாகிய ஆண்டவர் என்பதை அறிவார்கள்."

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26