எசேக்கியேல் 19 : 1 (RCTA)
நீயோ இஸ்ராயேலின் தலைவர்களைப் பற்றிப் புலம்பு.
எசேக்கியேல் 19 : 2 (RCTA)
அவர்களுக்குச் சொல்: சிங்கங்கள் நடுவில் உன் தாய் ஒரு பெண் சிங்கமாய் விளங்கினாள். இளஞ் சிங்கங்கள் நடுவில் படுத்துறங்கித் தன் குட்டிகளுக்குப் பாலூட்டினாள்.
எசேக்கியேல் 19 : 3 (RCTA)
அவன் தன் குட்டிகளுள் ஒன்றை வளர்க்கவே, அது இளஞ்சிங்கமாய் வளர்ந்து இரை தேடப் பழகி, மனிதரைச் சாப்பிடத் தொடங்கிற்று.
எசேக்கியேல் 19 : 4 (RCTA)
புறவினத்தார் இதைக் கேள்வியுற்று அதனைத் தங்கள் படுகுழியில் வீழ்த்தி, சங்கிலியால் கட்டி எகிப்துக்குக் கொண்டு போயினர்.
எசேக்கியேல் 19 : 5 (RCTA)
தன் எண்ணம் சிதைந்தது என்றும், நம்பிக்கை வீணாயிற்று என்றும் தாய்ச் சிங்கம் கண்டு, தன் குட்டிகளுள் வேறொன்றை எடுத்து வளர்த்து இளஞ் சிங்கமாக்கிற்று.
எசேக்கியேல் 19 : 6 (RCTA)
இதுவும் சிங்கங்கள் நடுவிலே நடமாடி, இளஞ் சிங்கமாகி இரை தேடப் பழகி, மனிதரைச் சாப்பிடத் தொடங்கிற்று.
எசேக்கியேல் 19 : 7 (RCTA)
அவர்கள் கோட்டைகளைத் தாக்கி, பட்டணங்களைப் பாழாக்கிற்று; அது சீற்றத்தோடு கர்ச்சிக்கும் போது நாடும், நாட்டிலுள்ள யாவும் நடுங்கின.
எசேக்கியேல் 19 : 8 (RCTA)
அண்டை நாடுகள் ஒன்று கூடி , எல்லாப் பக்கமும் சூழ்ந்து வந்து தங்கள் வலையை அதன் மேல் வீசி, தங்கள் படுகுழியில் அதனை வீழ்த்தினார்கள்.
எசேக்கியேல் 19 : 9 (RCTA)
சங்கிலியால் அதைக் கட்டிக் கூட்டிலடைத்து, பபிலோன் அரசனிடம் கொண்டு போனார்கள். அதன் குரல் (கர்ச்சனை) இஸ்ராயேல் மலைகளில் கேட்காதிருக்கும்படி அச்சிங்கத்தைச் சிறைக்கூடத்தில் அடைத்தார்கள்.
எசேக்கியேல் 19 : 10 (RCTA)
உன் தாய் திராட்சைத் தோட்டத்தில் நீரருகில் நடப்பட்ட ஒரு செழிப்பான திராட்சைக் கொடி போல் இருந்தாள். நீர் வளத்தின் காரணத்தால் கிளைகளும் கனிகளுமாய்த் தழைத்திருந்தாள்.
எசேக்கியேல் 19 : 11 (RCTA)
அதன் மிக உறுதியான கிளை அரச செங்கோலாயிற்று; அடர்ந்த கிளைகள் நடுவே அது உயர்ந்தோங்கிற்று; திரளான கிளைகளால் உயர்ந்து தென்பட்டது.
எசேக்கியேல் 19 : 12 (RCTA)
ஆனால் அத் திராட்சைக் கொடி ஆத்திரத்தோடு பிடுங்கப்பட்டு மண்ணிலே எறியப்பட்டது; கீழைக் காற்றினால் காய்ந்து போனது, அதன் கனிகள் பறிக்கப்பட்டன; அதன் உறுதியான கிளை உலர்ந்து போனது, நெருப்பால் சுட்டெரிக்கப்பட்டது.
எசேக்கியேல் 19 : 13 (RCTA)
இப்போது, நீரற்ற பாலைநிலத்தில் வளமற்ற வனாந்தரத்தில் பிடுங்கி நடப்பட்டுள்ளது.
எசேக்கியேல் 19 : 14 (RCTA)
அதன் உயர்ந்த கிளையினின்று நெருப்பு கிளம்பி, கிளைகளையும் கனிகளையும் சுட்டெரித்தது; இனி அதில் உறுதியான கிளையில்லை, அரசனுக்குச் செங்கோலில்லை. இதுவே புலம்பல், புலம்பலாக பயன்படும் பாடல்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14