எசேக்கியேல் 17 : 1 (RCTA)
ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
எசேக்கியேல் 17 : 2 (RCTA)
மனிதா, இஸராயேல் வீட்டாருக்கு நீ இந்த விடுகதையையும் உவமையையும் எடுத்துச் சொல்:
எசேக்கியேல் 17 : 3 (RCTA)
ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: பெரிய இறக்கைகளையும் நீண்ட இறகுகளையும், பல வண்ணத் தூவிகளையும் பெரும் உடலையும் கொண்ட பெரிய கழுகு ஒன்று பறந்து வந்தது; அது லீபானுக்கு வந்து ஒரு கேதுரு மரத்தின் நுனிக் கிளையைப் பிடித்தது;
எசேக்கியேல் 17 : 4 (RCTA)
அம்மரத்துக் கொழுந்துக் கிளைகளுள் மிக உயரமானதைக் கொய்து, வாணிகன் செய்யும் நாட்டுக்குக் கொண்டு போய் வணிகர்கள் வாழ்ந்த நகரொன்றில் வைத்தது.
எசேக்கியேல் 17 : 5 (RCTA)
பின்பு அந்த நாட்டின் விதைகளுள் ஒன்றை எடுத்து வளமான நிலத்தில் இட்டது; நீர் நிறைந்த ஆற்றங்கரை நிலப்பரப்பில் நட்டு வைத்தது;
எசேக்கியேல் 17 : 6 (RCTA)
அது துளிர்த்து வளர்ந்து குட்டையான ஒரு படர்ந்த திராட்சைச் செடியாயிற்று; அதன் கிளைகளோ அக்கழுகுக்கு நேராக இருந்தன; ஆனால் வேர்கள் அதன் கீழாக இருந்தன; இவ்வாறு அது திராட்சைச் செடியாகிக் கிளைகளை விட்டுப் பலுகத் தொடங்கிற்று.
எசேக்கியேல் 17 : 7 (RCTA)
பெரிய இறக்கைகளையும் நீண்ட இறகுகளையும் நிறைந்த தூவிகளையும் உடைய வேறொரு பெரிய கழுகும் இருந்தது; இதோ, இந்தத் திராட்சைச் செடி தனக்குத் தண்ணீர் பாய்ச்சும்படி தன் வேர்களை அதன் பக்கமாய் ஒடச் செய்து, தன் கிளைகளையும் அதன் பக்கமாய்த் திருப்பிற்று.
எசேக்கியேல் 17 : 8 (RCTA)
கிளைகளை விட்டு, கனிகளைக் கொடுக்கும் சிறந்த ஒரு திராட்சைச் செடியாய் இருக்கும் பொருட்டு, அது முன்னிருந்த இடத்திலிருந்து பிடுங்கித் தண்ணீர் நிரம்ப உள்ள இடத்தில் நடப்பட்டது.
எசேக்கியேல் 17 : 9 (RCTA)
(இப்போது) பேசு: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: அந்தத் திராட்சைச் செடி செழிக்குமா? யாராவது வந்து அதன் வேர்களைப் பிடுங்கி, கிளைகளை வெட்டினால், ஏற்கனவே துளிர்த்திருந்த கிளைகளும் இலைகளும் எல்லாமே பட்டுப் போகாதோ? அந்தச் செடியை வேரோடு பிடுங்க, மிகுந்த புயபலமும், மக்கள் பலரின் முயற்சியும் தேவையில்லை.
எசேக்கியேல் 17 : 10 (RCTA)
இதோ இடம் மாற்றி நடப்பட்டிருக்கிறது; ஆனால் அது செழித்து வளருமா? கீழைக்காற்று அதன் மேல் வீசும் போது செடி முற்றிலும் வாடிவிடாதா? முளைத்திருக்கும் பாத்தியிலேயே உலர்ந்து போகாதோ?"
எசேக்கியேல் 17 : 11 (RCTA)
அப்போது ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
எசேக்கியேல் 17 : 12 (RCTA)
இவை யாவும் எதைக் குறிக்கின்றன என்று உங்களுக்குத் தெரியுமா என்று அந்தக் கலகக்காரர்களைக் கேள். மேலும் அவர்களுக்குச் சொல்: இதோ பபிலோன் அரசன் யெருசலேமுக்கு வந்து, அதன் அரசனையும் பெருங்குடி மக்களையும் சிறை பிடித்துத் தன் நாடாகிய பபிலோனுக்குக் கொண்டு போனான்.
எசேக்கியேல் 17 : 13 (RCTA)
இவன் அரச குலத்தான் ஒருவனைத் தெரிந்தெடுத்து, அவனுடன் உடன்படிக்கை செய்து, அவனிடம் சத்தியம் வாங்கிக் கொண்டான். (பின் நாட்டின் பெருமக்களை நாடுகடத்தினான்.
எசேக்கியேல் 17 : 14 (RCTA)
இந்த நாடு வலிமையற்றுப் போனதால் இனித் தலைஎடுக்காது; ஆகவே செய்துகொண்ட உடன்படிக்கையின் படியே நடக்கும் என்று அவன் கருதினான்.)
எசேக்கியேல் 17 : 15 (RCTA)
ஆனால் புதிய அரசன், பபிலோன் அரசனுக்கு விரோதமாய்த் தனக்குக் குதிரைகளையும் வீரர்களையும் கொடுத்தனுப்பும்படி எகிப்துக்கு தூதர்களை அனுப்பினான். இவனுக்கு வெற்றி கிடைக்குமா? இப்படிச் செய்தவன் தப்ப முடியுமா? உடன் படிக்கையை மீறிய பின்னும் தப்பிக்க முடியுமா?
எசேக்கியேல் 17 : 16 (RCTA)
ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நம் உயிர்மேல் ஆணை! தன்னை அரசனாக்கிய மாமன்னனுக்குச் செய்த சத்தியத்தை அசட்டை செய்து, அவனுடன் செய்த உடன்படிக்கையை முறித்த இந்தப் புதிய அரசன் அந்த மாமன்னனின் நகராகிய பபிலோன் நடுவிலே சாவான்.
எசேக்கியேல் 17 : 17 (RCTA)
அவன், மக்கள் பலரை அழிக்கும்படி படையெடுத்து வந்து மண்மேடுகள் போட்டுக் கொத்தளங்களைக் கட்டும் போது, பார்வோன் பெரிய சேனையோடும் திரளான மக்கட்கூட்டத்தோடும் போரில் உதவி செய்ய வரவே மாட்டான்.
எசேக்கியேல் 17 : 18 (RCTA)
யூதா அரசன் தான் செய்த ஆணையை மீறி, உடன்படிக்கையை முறித்தான்; கைமேலடித்து ஆணையிட்டிருந்தும் இப்படிச் செய்தான். ஆதலால் அவன் தப்பிக்கவே மாட்டான்.
எசேக்கியேல் 17 : 19 (RCTA)
ஆகையால் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நம் உயிர்மேல் ஆணை! அவன் நமக்குச் செய்த சத்தியத்தை மீறி, நம் உடன்படிக்கையை முறித்தமையால் அவன் பாதகத்தை அவன் தலைமீது வரச் செய்வோம்;
எசேக்கியேல் 17 : 20 (RCTA)
அன்றியும் நமது கண்ணியில் சிக்குமாறு அவன் மேல் நாம் வலை வீசிப் பிடித்துப் பபிலோனுக்குக் கொண்டு போய், நமக்கெதிராய்ச் செய்த துரோகத்துக்காக அங்கே நாம் அவனைத் தீர்ப்பிடுவோம்.
எசேக்கியேல் 17 : 21 (RCTA)
அவனுடைய வீரர்களுள் தலைமையானவர்கள் வாளுக்கு இரையாகி வீழ்வார்கள்; எஞ்சியிருப்பவர்கள் நாலாபக்கமும் சிதறடிக்கப்படுவார்கள்; அப்போது ஆண்டவராகிய நாமே பேசினோம் என்பதை அறிவீர்கள்.
எசேக்கியேல் 17 : 22 (RCTA)
ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: "உயர்ந்த கேதுரு மரத்தின் நுனிக்கிளையொன்றை நாமே எடுப்போம்; அதன் நுனிக் கொப்புகளிலிருந்து இளங்கொழுந்து ஒன்றைக் கொய்து ஒங்கி உயர்ந்த மலை மேல் நாமே நாட்டுவோம்;
எசேக்கியேல் 17 : 23 (RCTA)
இஸ்ராயேல் என்னும் உயர்ந்த மலை மீது நாம் அதை நாட்டுவோம்; அது கிளைத்து வளர்ந்து கனிதரும் பெரிய கேதுரு மரமாகும்; பறப்பன யாவும் அதன்கீழ் வந்தடையும்; எல்லா வகையான பறவைகளும் அதன் இலைகளின் நிழலில் வந்து கூடு கட்டும்.
எசேக்கியேல் 17 : 24 (RCTA)
ஆண்டவராகிய நாமே ஒங்கி வளர்ந்த மரத்தை எல்லாம் தாழ்த்துவோம்; தாழ்ந்திருக்கும் மரத்தையெல்லாம் ஒங்கச் செய்வோம்; பசுமையான மரத்தை உலரச் செய்வோம்; உலர்ந்த மரத்தைத் தழைக்கச் செய்வோம்; இதை உலகிலுள்ள மரங்களெல்லாம் அறியும்; ஆண்டவராகிய நாமே இதைச் சொன்னோம்; சொன்னதை நாம் தவறாமல் செய்வோம்."

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24