எசேக்கியேல் 13 : 1 (RCTA)
ஆண்டவருடைய வாக்கு எனக்கு அருளப்பட்டது:
எசேக்கியேல் 13 : 2 (RCTA)
மனிதா, தங்கள் மனம் போல் இறைவாக்கு சொல்லத் துணிகிற இஸ்ராயேலின் தீர்க்கதரிசிகளுக்கு நீ சொல்ல வேண்டியது இதுவே: ஆண்டவருடைய வார்த்தையைக் கேளுங்கள்:
எசேக்கியேல் 13 : 3 (RCTA)
ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: ஒரு காட்சியையும் காணாமல் தங்கள் மனத்தின் உற்சாகத்தையே நாடும் மதிகெட்ட தீர்க்கதரிசிகளுக்கு ஐயோ கேடு!
எசேக்கியேல் 13 : 4 (RCTA)
இஸ்ராயேல், உன் தீக்கதரிசிகள் பாலைநிலைத்தில் வாழும் நரிகளுக்கு ஒப்பானவர்கள்.
எசேக்கியேல் 13 : 5 (RCTA)
ஆண்டவருடைய நாளில் போரில் நிலைநிற்கும் படி நீங்கள் பகைவனுக்கு எதிர்த்து நின்றதுமில்லை; இஸ்ராயேல் வீட்டார்க்காகச் சுவர் எழுப்பியதுமில்லை.
எசேக்கியேல் 13 : 6 (RCTA)
அவர்கள் போலிக் காட்சிகளைக் கண்டு பொய் வாக்குகளைச் சொன்னார்கள்; ஆண்டவர் தங்களை அனுப்பாதிருந்தாலும், 'ஆண்டவர் சொன்னார்' என்று சொல்லி, தாங்கள் உரைத்த வாக்கு நிறைவேறும் என்று சாதிக்கவும் முற்பட்டார்கள்.
எசேக்கியேல் 13 : 7 (RCTA)
நீங்கள் கண்டது போலிக் காட்சியே அல்லவா? நீங்கள் கூறியது பொய்வாக்கு அன்றோ? நாம் உங்களிடம் பேசாதிருக்க, நீங்கள் 'ஆண்டவர் சொன்னார்' என்று எவ்வாறு சொல்லலாம்?"
எசேக்கியேல் 13 : 8 (RCTA)
ஆகையால் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: "நீங்கள் போலிக் காட்சிகளைக் கண்டு, பொய் வாக்கைச் சொல்லியபடியால், இதோ நாமே உங்களுக்கு எதிராய் வருகிறோம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
எசேக்கியேல் 13 : 9 (RCTA)
போலிக் காட்சியைக் கண்டு, பொய் வாக்கைப் பிதற்றும் தீர்க்கதரிசிகளுக்கு எதிராக நமது கை ஒங்கும்; அவர்கள் நம் மக்களின் சங்கத்தில் இருக்க மாட்டார்கள்; இஸ்ராயேல் வீட்டாரின் அட்டவணையிலும் அவர்களுக்கு இடமிருக்காது; இஸ்ராயேல் நாட்டுக்குள் அவர்கள் நுழையவே மாட்டார்கள்; அப்போது நாமே ஆண்டவராகிய இறைவன் என்பதை அறிவீர்கள்.
எசேக்கியேல் 13 : 10 (RCTA)
சமாதானம் இல்லாதிருந்தும், 'சமாதானம் உண்டு' என்று சொல்லி நம் மக்களை அவர்கள் ஏமாற்றினார்கள்; நம் மக்கள் சுவரெழுப்பும் போது இவர்கள் உறுதியற்ற சாந்தை அதற்குப் பூசினார்கள்.
எசேக்கியேல் 13 : 11 (RCTA)
சாரமில்லாச் சாந்தைப் பூசுகிறவர்களிடம், 'அந்தச் சாந்து இடிந்து விழுந்துபோம்' என்று சொல்; ஏனெனில் அடாத மழை பெய்யும்; கல்மாரி மழை பெய்யச் செய்வோம்; கடும் புயல் காற்று எழும்பச் செய்வோம்.
எசேக்கியேல் 13 : 12 (RCTA)
அந்தச் சுவர் விழும் போது, 'நீங்கள் பூசிய சாந்து எங்கே?' என்று உங்களைக் கேட்க மாட்டார்களா?
எசேக்கியேல் 13 : 13 (RCTA)
ஆகையால் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நமது சீற்றத்தில் பெரும் புயல்காற்று எழும்பச் செய்வோம்; நமது கோபத்தில் வெள்ளப்பெருக்கை உண்டாக்கும் மழை பெய்யும்; நமது சினத்தில் அனைத்தையும் அழிக்கக்கூடிய பெருங்கற்கள் விழும்.
எசேக்கியேல் 13 : 14 (RCTA)
அப்பொழுது நீங்கள் சாரமில்லாச் சாந்தினால் பூசிய சுவர் இடிந்து தரைமட்டமாகும்; அதன் அடிப்படை பூமியினின்று வெளியாக்கப்படும்; சுவர் விழ, நீங்களும் அதனோடு விழுந்து மடிவீர்கள்; அப்போது நாமே ஆண்டவர் என்பதை அறிவீர்கள்.
எசேக்கியேல் 13 : 15 (RCTA)
சுவர் மேலும், அதில் சாரமற்ற சாந்தைப் பூசியவர்கள் மேலும் இவ்வாறு நமது கோபத்தைத் தீர்த்துக் கொண்டு, 'சுவருமில்லை, அதற்குச் சாந்து பூசியவர்களுமில்லை,
எசேக்கியேல் 13 : 16 (RCTA)
அதாவது யெருசலேமைக் குறித்து இறைவாக்குரைத்து, சமாதானமில்லாதிருந்தும் சமாதானம் உண்டென்று காட்சி கண்டதாகச் சாதித்த தீர்க்கதரிசிகளுமில்லை' என்று உங்களுக்கு உரைப்போம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
எசேக்கியேல் 13 : 17 (RCTA)
"மனிதா, தங்கள் மனம் போலத் தீர்க்கதரிசனம் சொல்லும் உன் இனத்துப் பெண்களுக்கு விரோதமாய் உன் முகத்தைத் திருப்பி, அவர்களுக்கு எதிராய் இறைவாக்குரை:
எசேக்கியேல் 13 : 18 (RCTA)
ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: ஆன்மாக்களை வேட்டையாட வேண்டி எல்லாக் கைளிலும் காப்பு கட்டி, ஒவ்வொருவருடைய உயரத்திற்கும் ஏற்ப தலைகளுக்கு முக்காடு செய்யும் தீர்க்கதரிசிகளுக்கு ஐயோ கேடு! எம் மக்களின் ஆன்மாக்களை வேட்டையாடி, மற்றவர்களின் ஆன்மாக்களை உங்கள் பயன்கருதி நீங்கள் காத்துக்கொள்வீர்களோ?
எசேக்கியேல் 13 : 19 (RCTA)
பொய்களைக் கேட்டு நம்பும் எம் மக்களிடம் பொய்களைச் சொல்லி, சாகாமல் இருக்க வேண்டியவர்களைச் சாகடித்து, உயிரோடிருக்கத் தகாதவர்களை உயிரோடு காத்தீர்கள்; இவ்வாறு, கைப்பிடியளவு வாற்கோதுமைக்காகவும், ஒருசில அப்பத் துண்டுகளுக்காகவும் நம் மக்கள் நடுவில் நம்மைப் பரிசுத்தமற்றவராய் ஆக்கினீர்கள்.
எசேக்கியேல் 13 : 20 (RCTA)
ஆகையால் ஆண்டவராகிய இறைவன் சொல்லுகிறார்: இதோ, பறவைகளைப் போல் ஆன்மாக்களை வேட்டையாடிப் பிடிக்கும்படி நீங்கள் கைகளில் கட்டியிருக்கும் (மந்திரக்) காப்புகளுக்கு எதிராய் எழும்பி, அவற்றை உங்கள் கைகளிலிருந்து பிய்த்தெறிவோம்; நீங்கள் வேட்டை பிடித்திருக்கும் ஆன்மாக்களை (பறவைகளைப் போல்) விடுதலை செய்வோம்.
எசேக்கியேல் 13 : 21 (RCTA)
உங்கள் முக்காடுகளையும் நாம் கிழித்தெறிவோம்; உங்கள் கைகளினின்று நம் மக்களை விடுவிப்போம்; இனி அவர்கள் உங்களுக்கு இரையாக இருக்கமாட்டார்கள்; அப்போது நாமே ஆண்டவர் என்பதை அறிவீர்கள்.
எசேக்கியேல் 13 : 22 (RCTA)
நாம் புண்படுத்தாத நீதிமானின் உள்ளத்தை நீங்கள் வஞ்சகமாய்ப் புண்படுத்தினீர்கள்; தீயவனையோ, அவன் தன் தீய நெறியை விட்டுத் திரும்பி தன்னைக் காத்துக் கொள்ளாதவாறு ஊக்குவித்தீர்கள்;
எசேக்கியேல் 13 : 23 (RCTA)
ஆகையால் இனி நீங்கள் போலிக் காட்சிகளைக் காணவுமாட்டீர்கள்; சகுன சாத்திரம் சொல்லவும் போவதில்லை; உங்கள் கைகளினின்று நம் மக்களை நாம் விடுவிப்போம்; அப்போது நாமே ஆண்டவர் என்பதை அறிவீர்கள்."
❮
❯