யாத்திராகமம் 9 : 1 (RCTA)
பின் ஆண்டவர் மோயீசனை நோக்கி: நீ பாரவோனிடம் போய் அவனுக்குச் செல்லுவாய்: எபிரேயருடைய கடவுளாகிய ஆண்டவர் சொல்லுவதாவது: நமக்குப் பலி செலுத்தும்படி நமது மக்களைப் போக விடு;
யாத்திராகமம் 9 : 2 (RCTA)
நீ: அவர்களைப் போக விடேன் என்று இன்னும் நிறுத்தி வைப்பாய் ஆயின்,
யாத்திராகமம் 9 : 3 (RCTA)
உன் வயல்களின் மேலும், உன் குதிரைகளின் மேலும், ஒட்டகங்களின் மேலும், ஆடுமாடுகளின் மேலும் மிகக் கொடியதொரு கொள்ளை நோய் உண்டாகும்.
யாத்திராகமம் 9 : 4 (RCTA)
அப்பொழுது ஆண்டவர் இஸ்ராயேலின் சொத்துக்களுக்கும் எகிப்தியரின் சொத்துக்களுக்கும் வேற்றுமை விளங்கும்படி ஓர் அதிசயத்தைச் செய்வார். இஸ்ராயேல் மக்களுக்கு உரியவற்றில் ஒன்றாகிலும் அழிந்து போகாது.
யாத்திராகமம் 9 : 5 (RCTA)
மேலும், ஆண்டவர் அதற்கென்று ஒரு நேரத்தைக் குறித்து வைத்திருக்கிறார். நாளையே அச்செயலைச் செய்து முடிப்பார் என்பாய் என்றார்.
யாத்திராகமம் 9 : 6 (RCTA)
ஆண்டவர் மறுநாள் அந்த வார்த்தையின்படி அவ்விதமே செய்து முடித்தார். அப்பொழுது எகிப்தியருக்குச் சொந்தமாயிருந்த மிருகங்கள் எல்லாம் மடிந்தன. இஸ்ராயேல் மக்களுக்கு உரியவற்றில் யாதொன்றும் சாகவில்லை.
யாத்திராகமம் 9 : 7 (RCTA)
பாரவோன் அதைப்பற்றி விசாரித்தான். இஸ்ராயேலுக்கு உரியவற்றில் ஒன்றேனும் சாகவில்லை. பாரவோனின் மனம் கடினமாகிவிட்டது. அவன் மக்களைப் போக விடவில்லை.
யாத்திராகமம் 9 : 8 (RCTA)
அப்பொழுது ஆண்டவர் மோயீசனையும் ஆரோனையும் நோக்கி: நீங்கள் அடுப்பிலிருந்து இரு கை நிறையச் சாம்பலை அள்ளிக் கொள்ளுங்கள். மோயீசன் அதைப் பாரவோன் முன்னிலையிலே வானத்தில் தூற்றக் கடவான்.
யாத்திராகமம் 9 : 9 (RCTA)
அது எகிப்து நாட்டின்மேல் எவ்விடத்தும் விழக் கடவது. அதனால் எகிப்து நாடெங்கும் மனிதர்களிடமும் மிருகங்களிடமும் புண்ணும் சீழ்க்கட்டிக் கொப்புளங்களும் உண்டாகும் என்றார்.
யாத்திராகமம் 9 : 10 (RCTA)
அப்படியே அவர்கள் அடுப்பிலிருந்து சாம்பலை எடுத்துக் கொண்டு போய்ப் பாரவோனுக்குமுன் நின்ற போது, மோயீசன் அதனை வானத்தில் தூற்றினார். தூற்றவே, மனிதர்களிடமும் மிருகங்களிடமும் புண்ணும் சீழ்க்கட்டிக் கொப்புளங்களும் உண்டாயின.
யாத்திராகமம் 9 : 11 (RCTA)
எகிப்து நாடெங்கும் காணப்பட்ட புண்கள் மந்திரவாதிகளிடத்துமே உண்டாயினமையால், அவர்கள் மோயீசன் முன் வந்து நிற்கக் கூடாமல் போயிற்று.
யாத்திராகமம் 9 : 12 (RCTA)
ஆயினும், ஆண்டவர் பாரவோனின் இதயத்தைக் கடினப்படுத்தினமையால், அவர் மோயீசனிடம் சொல்லியிருந்தபடியே, பாரவோன் அவர்களுக்குச் செவி கொடுக்கவில்லை.
யாத்திராகமம் 9 : 13 (RCTA)
மேலும், ஆண்டவர் மோயீசனை நோக்கி: நீ நாளைக் காலையில் எழுந்துசென்று பாரவோன்முன் நின்று கொண்டு: எபிரேயருடைய கடவுளாகிய ஆண்டவர் சொல்லுவது ஏதென்றால்: நம்முடைய மக்களை நமக்குப் பலி செலுத்தும்படி போகவிடு.
யாத்திராகமம் 9 : 14 (RCTA)
இல்லையேல், பூமி எங்கும் நமக்கு நிகரானவர் இல்லை என்பதை நீ அறியும் பொருட்டு, இம்முறை நாம் எல்லாவித வாதைகளையும் உன் இதயத்தின் மீதும் உன் ஊழியர் மேலும் உன் மக்கள் மேலும் வரச் செய்வோம்.
யாத்திராகமம் 9 : 15 (RCTA)
அதாவது, நீ பூமியில் இராமல் அழிந்து போகும்படி, நாம் கையை நீட்டிக் கொள்ளை நோயினால் அடித்து வதைப்போம்.
யாத்திராகமம் 9 : 16 (RCTA)
நமது வல்லமை உன்னிடம் விளங்கும் படியாகவும், நமது திருப்பெயர் எவ்விடங்களிலும் வெளிப்படும் படியாகவும் அல்லவோ நாம் உன்னை நிலைநிறுத்தி வைத்தோம்?
யாத்திராகமம் 9 : 17 (RCTA)
நீ நம்முடைய மக்களைப் போகவிடாமல் இன்னும் நிறுத்தி வைத்திருக்கிறாய் அன்றோ?
யாத்திராகமம் 9 : 18 (RCTA)
இதோ! எகிப்து தோன்றிய நாள் முதல் இன்று வரை ஒருக்காலும் அதில் பெய்திராத மிகவும் கொடிய கல் மழையை நாளை இந்நேரமே பெய்விப்போம்.
யாத்திராகமம் 9 : 19 (RCTA)
ஆகையால், நீ இந்நேரமே ஆளனுப்பி, உன் மிருகங்களையும் வெளியில் உனக்கிருக்கிற யாவற்றையும் சேர்த்துப் பாதுகாக்கும்படி சொல். ஏனென்றால், வீட்டிலே சேர்க்கப்படாமல் வெளியில் இருக்கும் மனிதர்களோடு மிருகம் முதலிய யாவும் கல்மழை பட்டால் செத்துப் போகும் என்று சொல் என்றார்.
யாத்திராகமம் 9 : 20 (RCTA)
பாரவோனின் ஊழியர்களிலே இறை வார்த்தைக்கு அஞ்சியிருந்தவன் தன் வேலைக்காரரையும் தன் கால்நடைகளையும் வீடுகளுக்கு ஓட்டிவரக் கட்டளையிட்டான்.
யாத்திராகமம் 9 : 21 (RCTA)
ஆனால், ஆண்டவருடைய வார்த்தையை மதியாதவன் தன் வேலைக்காரரையும் கால்நடைகளையும் வெளியிலே விட்டு வைத்திருந்தான்.
யாத்திராகமம் 9 : 22 (RCTA)
பிறகு ஆண்டவர் மோயீசனை நோக்கி: எகிப்து நாடெங்கும் மனிதர் மேலும் மிருகங்கள் மேலும் எகிப்திலுள்ள எல்லாப் பயிர்வகைகள் மேலும் ஆலங்கட்டி மழை பெய்யும்படி உன் கையை வானத்தை நோக்கி நீட்டு என்றார்.
யாத்திராகமம் 9 : 23 (RCTA)
மோயீசன் அவ்விதமே செய்ய, ஆண்டவர் நாட்டின் மீது இடிமுழக்கங்களையும், ஆலங்கட்டிகளையும், தரையின் மேல் இங்குமங்கும் ஓடி மின்னும் மின்னல்களையும் கட்டளையிட்டார். இவ்வாறு ஆண்டவர் எகிப்து நாட்டின் மேல் ஆலங்கட்டி பொழியச் செய்தார்.
யாத்திராகமம் 9 : 24 (RCTA)
நெருப்பும் ஆலங்கட்டியும் கலந்தே விழுந்தன. அவை எவ்வளவு பருமனுள்ளன என்றால், எகிப்தியர் தோன்றிய நாள் முதல் அது போன்ற கல்மழை ஒரு போதும் பெய்ததில்லை.
யாத்திராகமம் 9 : 25 (RCTA)
எகிப்து நாடெங்கும் பெய்த ஆலங்கட்டிகளாலே மனிதன் முதல் மிருகங்கள் ஈறாக வெளியிலே இருந்தவை யாவும் அழிக்கப்பட்டன. வயல் வெளிகளிலே வளர்ந்திருந்த எல்லா விதப் பயிர் வகைகளும் கல்மழையினாலே அழிந்ததுமன்றி, நாட்டிலுள்ள மரங்களும் முறிந்தன.
யாத்திராகமம் 9 : 26 (RCTA)
இஸ்ராயேல் மக்கள் இருந்த யேசேன் பகுதியிலே மட்டும் ஆலங்கட்டி மழை பெய்யவில்லை.
யாத்திராகமம் 9 : 27 (RCTA)
அப்போது பாரவோன் மோயீசனையும் ஆரோனையும் வரவழைத்து, அவர்களை நோக்கி: இம்முறையும் நான் பாவம் செய்தேன். ஆண்டவர் நீதியுள்ளவர். நானும் என் மக்களும் தீயவர்கள்.
யாத்திராகமம் 9 : 28 (RCTA)
நீங்கள் இனிமேல் இந்நாட்டில் இராவண்ணம் நான் உங்களைப் போக விடும்படி, இடி முழக்கங்களும் ஆலங்கட்டிகளும் ஒழிய வேண்டுமென்று ஆண்டவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றான்.
யாத்திராகமம் 9 : 29 (RCTA)
அதற்கு மோயீசன்: பூமி ஆண்டவருடையது என்று நீர் அறியும்படி, நான் நகரை விட்டுப் புறப்பட்டவுடனே ஆண்டவரை நோக்கி என் கைகளை உயர்த்துவேன். அதனால் இடிமுழக்கங்களும் ஒழியும்; ஆலங்கட்டி மழையும் நின்று போகும்.
யாத்திராகமம் 9 : 30 (RCTA)
ஆனால், நீரும் உம் ஊழியர்களும் கடவுளாகிய ஆண்டவருக்கு இன்னும் அஞ்சுகிறதில்லேயென்று நான் அறிந்திருக்கிறேன் என்றார்.
யாத்திராகமம் 9 : 31 (RCTA)
ஆகையால், ஆளிவிதைப் பயிரும் வாற்கோதுமைப் பயிரும் அழிந்து போயின. ஏனென்றால், வாற்கோதுமை கதிர்வாங்கியிருந்தது; ஆளிவிதைப் பூண்டோ முதல் தளிர் விட்டிருந்தது.
யாத்திராகமம் 9 : 32 (RCTA)
ஆனால், கோதுமை முதலிய தானியங்களுக்கு அழிவு ஒன்றும் ஏற்படவில்லை. ஏனென்றால், அவை பின்பருவத்துப் பயிர்கள்.
யாத்திராகமம் 9 : 33 (RCTA)
மோயீசன் பாரவோனை விட்டு நகரிலிருந்து புறப்பட்டு ஆண்டவரை நோக்கிக் கைகளை உயர்த்தினார். அந்நேரமே இடிமுழக்கமும் ஆலங்கட்டியும் ஒழிந்தன; மழையும் நின்று போயிற்று.
யாத்திராகமம் 9 : 34 (RCTA)
மழையும் ஆலங்கட்டியும் இடிமுழக்கமும் ஒழிந்ததைக் கண்ட பாரவோன், முன்னிலும் அதிகப் பாவியானான்.
யாத்திராகமம் 9 : 35 (RCTA)
அவன் மனமும் அவன் ஊழியருடைய இதயமும் இறுகி அதிகக் கடினமாய்ப் போனதேயன்றி, ஆண்டவர் மோயீசனைக் கொண்டு திருவுளம் பற்றியிருந்தபடி அவன் இஸ்ராயேல் மக்களைப் போக விட்டானில்லை.
❮
❯