யாத்திராகமம் 7 : 1 (RCTA)
அப்போது ஆண்டவர் மோயீசனை நோக்கி: இதோ, உன்னை நாம் பாரவோனுக்குத் தெய்வமாக நியமித்திருக்கிறோம். உன் சகோதரனாகிய ஆரோனோ, உனக்காகப் பேசுபவனாய் இருப்பான்.
யாத்திராகமம் 7 : 2 (RCTA)
நாம் உனக்குத் தெரிவிக்கும் யாவற்றையும் நீ அவனுக்குச் சொல்ல வேண்டும். அவனோ, பாரவோனை நோக்கி, அவன் தன் நாட்டினின்று இஸ்ராயேல் மக்களை அனுப்பிவிடுமாறு சொல்வான்.
யாத்திராகமம் 7 : 3 (RCTA)
ஆனால், நாம் பாரவோனுடைய இதயத்தைக் கடினப்படுத்தி, எகிப்து நாட்டிலே நம் அருங்குறிகளையும் அற்புதங்களையும் மிகுதியாகக் காட்டுவோம்.
யாத்திராகமம் 7 : 4 (RCTA)
ஆயினும், அவன் உங்களுக்குச் செவி கொடுக்க மாட்டானாதலால், நாம் எகிப்துக்கு விரோதமாய் நமது கையை ஓங்கி, மகத்தான தண்டனைகள் மூலம் நம் படைகளும் குடிகளுமாகிய இஸ்ராயேல் மக்களை எகிப்து நாட்டிலிருந்து புறப்பட்டுப் போகச் செய்வோம்.
யாத்திராகமம் 7 : 5 (RCTA)
நாம் எகிப்தின் மீது நமது கையை நீட்டி, இஸ்ராயேல் மக்களை அவர்கள் நடுவிலிருந்து புறப்படச் செய்யும் போது, நாமே ஆண்டவர் என்று எகிப்தியர் அறிந்து கொள்வார்கள் என்றார்.
யாத்திராகமம் 7 : 6 (RCTA)
ஆகையால் மோயீசனும் ஆரோனும் ஆண்டவர் கட்டளையிட்டபடி செய்து, அவ்விதமே நடந்தனர்.
யாத்திராகமம் 7 : 7 (RCTA)
அவர்கள் பாரவோனிடம் போய்ப் பேசின போது, மோயீசனுக்கு வயது எண்பதும் ஆரோனுக்கு வயது எண்பத்து மூன்றுமாம்.
யாத்திராகமம் 7 : 8 (RCTA)
மீண்டும், ஆண்டவர் மோயீசனுக்கும் ஆரோனுக்கும் திருவாக்கருளி:
யாத்திராகமம் 7 : 9 (RCTA)
அற்புதங்களைக் காட்டுங்கள் என்று பாரவோன் உங்களுக்குச் சொல்லும் பொழுது, நீ ஆரோனை நோக்கி: உன் கோலை எடுத்து, பாரவோனுக்கு முன்பாகப் போடு என்பாய்; அது பாம்பாய் மாறிவிடும் என்றார்.
யாத்திராகமம் 7 : 10 (RCTA)
அவ்வாறே, மோயீசனும் ஆரோனும் பாரவோனிடம் போய், ஆண்டவர் கட்டளையிட்டபடி செய்தனர். அதாவது, ஆரோன் பாரவோனுக்கும் அவன் ஊழியக்காரர்களுக்கும் முன்பாகக் கோலை எடுத்து எறிய, அது பாம்பாக மாறியது.
யாத்திராகமம் 7 : 11 (RCTA)
பாரவோனோ, ஞானிகளையும் மந்திரவாதிகளையும் வரவழைத்தான். இவர்களோ, எகிப்தில் வழங்கிய மந்திரங்களைக் கொண்டும், பல இரகசிய தந்திரங்களைக் கொண்டும் அவ்வண்ணமே செய்து காட்டினர்.
யாத்திராகமம் 7 : 12 (RCTA)
அதாவது, அவர்களில் ஒவ்வொருவனும் தன் தன் கோலைப் போட்டதும், அவையெல்லாம் பாம்புகளாக மாறின. ஆயினும், ஆரோன் கோல் அவர்களுடைய கோல்களையெல்லாம் விழுங்கிவிட்டது.
யாத்திராகமம் 7 : 13 (RCTA)
ஆதலால், பாரவோனின் இதயம் கடினமாகிவிட்டது. ஆண்டவர் சொல்லியிருந்தபடியே, அவன் மோயீசனுக்கும் ஆரோனுக்கும் செவி கொடுக்கவில்லை.
யாத்திராகமம் 7 : 14 (RCTA)
அப்போது ஆண்டவர் மோயீசனை நோக்கி: பாரவோனின் இதயம் கடினமாகி விட்டது. மக்களை அனுப்பிவிட அவனுக்கு மனமில்லை.
யாத்திராகமம் 7 : 15 (RCTA)
நீ காலையில் அவனிடம் போ. அப்பொழுது அவன் ஆற்றை நாடி வந்து கொண்டிருப்பான். நீ ஆற்றங் கரையிலே அவனுக்கு எதிராகச் சென்று, பாம்பாய் மாறிய கோலை உன் கையிலே பிடித்துக்கொண்டு, பாரவோனை நோக்கி:
யாத்திராகமம் 7 : 16 (RCTA)
பாலைநிலத்தில் நமக்கு வழிபாடு செய்யும்படி நமது மக்களை அனுப்பி வை என்று சொல்லச் சொல்லி, எபிரேயருடைய கடவுளாகிய ஆண்டவர் என்னை உம்மிடம் அனுப்பினாராயினும், இதுவரையிலும் நீர் கேளாமல் போனீர்.
யாத்திராகமம் 7 : 17 (RCTA)
ஆதலால், ஆண்டவர் சொல்லுவதாவது: நாம் ஆண்டவரென்று எதனால் அறிவாய் என்றால், இதோ என் கையிலிருக்கிற கோலினால் ஆற்றிலுள்ள தண்ணீரின்மேல் அடிப்பேன்; அடிக்கவே, தண்ணீர் இரத்தமாய் மாறிப்போகும்;
யாத்திராகமம் 7 : 18 (RCTA)
ஆற்றிலுள்ள மீன்கள் மாண்டு போக, தண்ணீர் நாறிப் போகுமாதலால், எகிப்தியர் ஆற்று நீரைக் குடித்துத் துன்பத்திற்கு ஆளாவார்கள் என்று சொல்லுவாய் என்றார்.
யாத்திராகமம் 7 : 19 (RCTA)
பிறகு ஆண்டவர் மோயீசனை நோக்கி: ஆரோனுக்கு நீ சொல்ல வேண்டியதாவது: எகிப்தின் எவ்விடத்தும் உள்ள நீர்நிலைகள், ஆறுகள், அருவிகள், குளம் குட்டைகள், ஏரி முதலியவை எல்லாம் இரத்தமாய் மாறத்தக்கதாகவும், எகிப்தில் எங்கும் மரப்பாத்திரங்களும் கற்பாத்திரங்களும் இரத்தத்தால் நிறைந்திருக்கத் தக்கதாகவும், நீ கோலை எடுத்து உன் கையை நீட்டுவாயாக என்பதாம் என்றார்.
யாத்திராகமம் 7 : 20 (RCTA)
ஆண்டவர் கட்டளையிட்டபடியே மோயீசனும் ஆரோனும் செய்தனர். மோயீசன் கோலை எடுத்து, பாரவோனுக்கும் அவன் ஊழியர்க்கும் முன்பாக ஆற்று நீரின்மேல் அடித்தார். அடிக்கவே, தண்ணீர் இரத்தமாய் மாறிப் போயிற்று.
யாத்திராகமம் 7 : 21 (RCTA)
அன்றியும், ஆற்றிலுள்ள மீன்களும் மடிய, ஆறும் நாற்றம் எடுத்தது. எனவே, எகிப்தியர் ஆற்று நீரைக் குடிக்க இயலாது போயிற்று. எகிப்து நாடெங்குமே இரத்த மயமாய் இருந்தது.
யாத்திராகமம் 7 : 22 (RCTA)
பின்பு எகிப்தியருடைய மந்திரவாதிகளும் தங்கள் மந்திர வித்தையினாலே அவ்வண்ணமே செய்து காட்டினர். அது கண்டு பாரவோனின் இதயம் கடினமாகியது. ஆண்டவர் கட்டளைப்படி அவர்கட்குச் செவி கொடாது இருந்தான்.
யாத்திராகமம் 7 : 23 (RCTA)
அவன், முதுகைத் திருப்பிக் கொண்டு தன் வீட்டினுள் புகுந்து கொண்டானேயன்றி, இம் முறையும் அவன் மனம் இணங்கவேயில்லை.
யாத்திராகமம் 7 : 24 (RCTA)
ஆனால், ஆற்று நீர் குடிக்க உதவாமையால், குடிநீருக்காக எகிப்தியர் ஆற்றோரம் நெடுக ஊற்றுத் தோண்டினர்.
யாத்திராகமம் 7 : 25 (RCTA)
ஆண்டவர் ஆற்றை அடித்தது தொடங்கி எழு நாட்கள் கடந்துபோயின.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25