யாத்திராகமம் 6 : 1 (RCTA)
அப்போது, ஆண்டவர் மோயீசனை நோக்கி: நாம் பாரவோனுக்குச் செய்வதை நீ இப்பொழுதே காணப்பெறுவாய். உண்மையிலே அவன் (நமது) வலுத்த கையைக் கண்டே அவர்களைப் போகவிட்டு, வற்புறுத்தித் தன் நாட்டிலிருந்து புறப்படும்படி, தானே அவர்களை மன்றாடுவான் என்று அருளினார்.
யாத்திராகமம் 6 : 2 (RCTA)
மீண்டும் ஆண்டவர் மோயீசனை நோக்கி: நாம் ஆண்டவர்.
யாத்திராகமம் 6 : 3 (RCTA)
நாம் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் எல்லாம் வல்ல கடவுளாய்க் காட்சியளித்தவர். ஆயினும், அதோனாயி என்னும் நமது பெயரை அவர்களுக்குத் தெரிவித்தோமில்லை.
யாத்திராகமம் 6 : 4 (RCTA)
அவர்கள் அந்நியர்களாய் அலைந்து திரிந்த கானான் நாட்டை அவர்களுக்கு அளிப்பதாக அவர்களோடு உடன்படிக்கை செய்தோம்.
யாத்திராகமம் 6 : 5 (RCTA)
எகிப்தியர் அவர்களை வதைத்ததின் பொருட்டு, இஸ்ராயேல் மக்கள் விட்ட பெருமுச்சைக் கேட்டு, நமது உடன்படிக்கையை நினைவு கூர்ந்தோம்.
யாத்திராகமம் 6 : 6 (RCTA)
ஆகையால், நீ நம் பெயராலே இஸ்ராயேல் மக்களை நோக்கி: ஆண்டவராகிய நாமே எகிப்தியருடைய சிறையினின்றும் உங்களை விடுதலையாக்கி, அடிமைத்தனத்தினின்றும் மீட்டு, ஓங்கிய கையாலும் பெரும் தண்டனைகளினாலும் உங்கனை நாம் ஈடேற்றுவோம்.
யாத்திராகமம் 6 : 7 (RCTA)
மேலும், உங்களை நம் சொந்த மக்களாகத் தெரிந்து கொள்வோம். அஃதோடு, உங்கள் கடவுளாகவும் இருப்போம். பிறகு, நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் நாமென்று அறிவீர்கள். எந்த அடையாளத்தினால் என்று கேட்டால், உங்களை நாம் எகிப்தியருடைய சிறையினின்று விடுவித்து,
யாத்திராகமம் 6 : 8 (RCTA)
ஆபிரகாம், ஈசாக், யாக்கோபு என்பவர்களுக்கு நாம் கொடுப்பதாக ஆணையிட்டு வாக்களித்த நாட்டிலே உங்களைக் குடியேறச் செய்வதனாலே தான். உண்மையில், ஆண்டவராகிய நாம் அதை உங்களுக்கு உடைமையாய்க் கொடுப்போம் என்று சொல்லுவாய் என்றார்.
யாத்திராகமம் 6 : 9 (RCTA)
அவ்வண்ணமே மோயீசன் இஸ்ராயேல் மக்களுக்கு எல்லாவற்றையும் விவரித்துச் சொன்னார். அவர்களோ, மன வருத்தத்தையும் தாளாத வேலையையும் முன்னிட்டு, அவருக்குச் செவிகொடுக்கவில்லை.
யாத்திராகமம் 6 : 10 (RCTA)
அதன் பின்னர் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
யாத்திராகமம் 6 : 11 (RCTA)
நீ எகிப்திய மன்னன் பாரவோனிடம் சென்று, அவன் இஸ்ராயேல் மக்களைத் தன் நாட்டினின்று அனுப்பி விடுமாறு சொல் என்றார்.
யாத்திராகமம் 6 : 12 (RCTA)
மோயீசன் ஆண்டவர் திருமுன் நின்றுகொண்டு: இஸ்ராயேல் மக்களே என் வார்த்தைக்குச் செவி கொடுக்கவில்லை; பாரவோன் எப்படிச் செவி கொடுப்பான்? அதிலும் நான் விருத்தசேதனமில்லாத உதடுகளை உடையவன் அல்லவா என்றார்.
யாத்திராகமம் 6 : 13 (RCTA)
ஆண்டவர் மோயீசனோடும் ஆரோனோடும் அவ்வண்ணமே பேசினார். இஸ்ராயேல் மக்கள் எகிப்து நாட்டினின்று போக வேண்டிய காரியத்தைப் பற்றி, அந்த மக்களிடத்திலும் எகிப்திய மன்னன் பாரவோனிடத்திலும் அவர் சொன்ன கட்டளைகள் அவையேயாம்.
யாத்திராகமம் 6 : 14 (RCTA)
குடும்ப வரிசைப்படி கோத்திரத் தலைவர்களாவன: இஸ்ராயேலின் மூத்த புதல்வனான ரூபனின் புதல்வர்கள்: ஏனோக், பால்லு, எஸ்ரோன், கர்மீ ஆகியோர். இவர்களே ரூபனின் கோத்திரத்தார்.
யாத்திராகமம் 6 : 15 (RCTA)
சிமையோனின் மக்கள்: ஜமுவேல், ஜமீன், அகோத், ஜக்கீன், சோவார், கானானையப் பெண்ணின் மகன் சவூல் முதலியோர். இவர்களே சிமையோனின் கோத்திரத்தார்.
யாத்திராகமம் 6 : 16 (RCTA)
வம்ச வரிசைப்படி லேவியின் மக்கள்: யெற்சோன், காவாத், மெராரி இவர்களேயாம். லேவியின் வாழ்நாளோ, நூற்றுமுப்பத்தேழு ஆண்டுகளாம்.
யாத்திராகமம் 6 : 17 (RCTA)
யேற்சோனின் மக்கள், தங்கள் வம்ச வரிசைப்படி: லோப்னி, சேமையி ஆகியோர்.
யாத்திராகமம் 6 : 18 (RCTA)
காவாத்தின் மக்கள்: அம்ராம், இசார், எபிரோன், ஒசியேல் ஆவர். காவாத் நூற்று முப்பத்து மூன்று ஆண்டுகாலம் வாழ்ந்தான்.
யாத்திராகமம் 6 : 19 (RCTA)
மெராரியின் மக்கள் மொகோலியும் மூசியுமாம். இவர்களே வம்ச வரிசைப்படி லேவியின் வழித்தோன்றல்கள்.
யாத்திராகமம் 6 : 20 (RCTA)
அம்ராம் தன் தந்தையின் சகோதரன் மகளாகிய யொக்காபேத்தை மணந்து கொண்டான். அவனுக்கு அவள் வயிற்றில் மோயீசனும் ஆரோனும் பிறந்தனர். அம்ராம் வாழ்ந்த ஆண்டுகள் நூற்றுமுப்பத்தேழு.
யாத்திராகமம் 6 : 21 (RCTA)
இசாரின் மக்களோ, கோரையும் நெபேகும் செக்கிரியுமாம்.
யாத்திராகமம் 6 : 22 (RCTA)
ஒசியேலின் மக்களோ மிசயேலும் எலிசபானும் செத்திரியுமாம்.
யாத்திராகமம் 6 : 23 (RCTA)
ஆரோன் அமினதாபின் மகளும் நாகசோனின் சகோதரியுமான எலிசபெத்தை மணந்து கொண்டான். இவள் அவனுக்கு நதாப், அபியு, எலியெசார், இத்தமார் என்பவர்களைப் பெற்றாள்.
யாத்திராகமம் 6 : 24 (RCTA)
கோரையின் மக்களோ, ஆசேரும் எல்கானாவும் அபியசாபுமாம். இவர்கள் கோரையின் வழித்தோன்றல்களாம்.
யாத்திராகமம் 6 : 25 (RCTA)
ஆரோனின் மகனான எலியெசார், புத்தியேலின் புதல்வியருள் ஒருத்தியை மணந்து கொண்டான். இவள் அவனுக்குப் பினேஸ் என்பவனைப் பெற்றாள். வம்ச வரிசைப்படி லேவி கோத்திரத்தாரின் தலைவர் இவர்களே.
யாத்திராகமம் 6 : 26 (RCTA)
இஸ்ராயேல் மக்களை அணியணியாக எகிப்து நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டுமென்று ஆண்டவரால் கட்டளை பெற்ற மோயீசனும் ஆரோனும் இவர்களே.
யாத்திராகமம் 6 : 27 (RCTA)
எகிப்தினின்று இஸ்ராயேல் மக்களைக் கூட்டிக்கொண்டு போகும் பொருட்டு, எகிப்து மன்னன் பாரவோனோடு பேசின மோயீசனும் ஆரோனும் இவர்களே.
யாத்திராகமம் 6 : 28 (RCTA)
எகிப்து நாட்டில் ஆண்டவர் மோயீசனுக்குத் திருவாக்கருளிய நாளிலே,
யாத்திராகமம் 6 : 29 (RCTA)
ஆண்டவர் மோயீசனை நோக்கி: நாமே ஆண்டவர். நாம் உன்னோடு பேசுகிற எல்லாவற்றையும் எகிப்து மன்னன் பாரவோனுக்குச் சொல்லுவாய் என்ற போது,
யாத்திராகமம் 6 : 30 (RCTA)
மோயீசன் ஆண்டவர் திருமுன் நின்று கொண்டு: அடியேன் விருத்தசேதனமில்லாத உதடுகளை உடையனாய் இருக்க பாரவோன் எனக்கு எப்படிச் செவி கொடுப்பான் என்றார்.
❮
❯