யாத்திராகமம் 32 : 1 (RCTA)
மோயீசன் மலையிலிருந்து இறங்கி வரத் தாமதிப்பதைக் கண்டு மக்கள் ஆரோனுக்கு விரோதமாய்க் கூட்டம் கூடி, அவரை நோக்கி: நீர் எழுந்து, எங்களை வழிநடத்தும் தேவதைகளை எங்களுக்குச் செய்து கொடும். ஏனென்றால், எகிப்து நாட்டினின்று, எங்களை விடுவித்த மோயீசனுக்கு என்ன நேர்ந்ததோ, அறியோம் என்றார்கள்.
யாத்திராகமம் 32 : 2 (RCTA)
அதற்கு ஆரோன்: உங்கள் மனைவிகள், புதல்வர், புதல்வியருடைய காதுகளினின்று பொன்னணிகளைக் கழற்றி என்னிடம் கொண்டு வாருங்கள் என்றார்.
யாத்திராகமம் 32 : 3 (RCTA)
மக்கள் ஆரோனின் கட்டளைப்படி காதணிகளைக் கொண்டு வந்தார்கள்.
யாத்திராகமம் 32 : 4 (RCTA)
அவர், ( அவற்றை ) வாங்கி உருக்கி வார்ப்பு வேலையாலான கன்றுக்குட்டி ஒன்று செய்தார். அவர்களோ: இஸ்ராயேலே! உன்னை எகிப்து நாட்டினின்று விடுதலையாக்கிய உன் தேவர்கள் இவர்களேயாம் என்றனர்.
யாத்திராகமம் 32 : 5 (RCTA)
ஆரோன் இதைக் கண்டு, அதற்கு முன்பாக ஒரு பலிப்பீடத்தைக் கட்டி, நாளை ஆண்டவருடைய திருவிழா கொண்டாடப்படும் எனக் கட்டியக் காரனைக் கொண்டு கூறச் செய்தார்.
யாத்திராகமம் 32 : 6 (RCTA)
அவர்கள் காலையில் எழுந்து, தகனப் பலிகளையும் சமாதானப் பலிகளையும் ஒப்புக்கொடுத்தார்கள். பிறகு மக்கள் உண்ணவும் குடிக்கவும் உட்கார்ந்து விளையாடவும் எழுந்தார்கள்.
யாத்திராகமம் 32 : 7 (RCTA)
ஆண்டவரோ மோயீசனுக்குத் திருவாக்கருளி: இறங்கிப்போ. நீ எகிப்து நாட்டினின்று விடுதலையாக்கிய உன் மக்கள் பாவம் செய்தார்கள்.
யாத்திராகமம் 32 : 8 (RCTA)
நீ அவர்களுக்குக் காண்பித்த வழியை அவர்கள் எவ்வளவு விரைவாய் விட்டு விலகி, தங்களுக்கு வார்ப்பினால் கன்றுக்குட்டியொன்றைச் செய்து ஆராதித்து, பின் அதற்குப் பலியிட்டு: இஸ்ராயேலே! உன்னை எகிப்து நாட்டினின்று விடுதலையாக்கிய உன் தேவர்கள் இவர்களேயாம் என்று சொன்னார்கள் என்றார்.
யாத்திராகமம் 32 : 9 (RCTA)
மீண்டும் ஆண்டவர் மோயீசனோடு பேசி: இந்த மக்களைப் பார்த்தோம். அவர்கள் வணங்காக் கழுத்துள்ள மக்கள் ஆகையால்,
யாத்திராகமம் 32 : 10 (RCTA)
நீ நம்மை விட்டுவிடு, நமது கோபம் அவர்கள் மேல் மூண்டு அவர்களை அழித் தொழிக்கும். உன்னை ஒரு பெரிய இனத்திற்குத் தலைவனாக்குவோம் என்றார்.
யாத்திராகமம் 32 : 11 (RCTA)
மோயீசனோ தம் கடவுளாகிய ஆண்டவரை மன்றாடி ஆண்டவரே! நீர் மகத்தான பலத்தினாலும் வல்லமையுள்ள கையினாலும் எகிப்து நாட்டினின்று விடுதலையாக்கிய உம் மக்கள் மேல் ஏன் உமது கோபம் மூள வேண்டும்?
யாத்திராகமம் 32 : 12 (RCTA)
மலைகளில் அவர்களைக் கொன்று போட்டுப் பூமியினின்று அவர்களை அழித்தொழிக்க அல்லவோ கடவுள் அவர்களைக் கபடமாய் எகிப்து நாட்டிலிருந்து அழைத்துப் போனார் என்று எகிப்தியர் சொல்வார்களே. அது வேண்டாம். உமது கோபத்தின் உக்கிரம் அமரக்கடவது. தீய மக்கள் மேல் நீர் இரக்கம் கொள்ள வேண்டுமென மன்றாடுகிறேன்.
யாத்திராகமம் 32 : 13 (RCTA)
நீர் ஆபிரகாம், ஈசாக், இஸ்ராயேல் ஆகிய உம் ஊழியர்களை நினைத்தருளும். அவர்களை நோக்கி: உங்கள் சந்ததியை விண்மீன்களைப் போன்று பெருகச் செய்து, நாம் சொன்ன இந்த நாடு முழுவதையும் நீங்களும் உங்கள் சந்ததியாரும் என்றென்றும் உரிமையாகக் கொள்ளும்படிக்குத் தந்தருள்வோம் என்று உமது பேரில் ஆணையிட்டுத் திருவுளம்பற்றினீரன்றோ என்று மன்றாடினார்.
யாத்திராகமம் 32 : 14 (RCTA)
அப்பொழுது ஆண்டவருக்குக் கோபம் தணிய, தாம் மக்களுக்கு எவ்விதக்கேடும் செய்வதாகச் சொல்லியிருந்தாரோ அதைச் செய்யாமல் விட்டு விட்டார்.
யாத்திராகமம் 32 : 15 (RCTA)
பின் மோயீசன் மலையிலிருந்து இறங்கி வந்தார், சாட்சியப் பலகை இரண்டும் அவர் கையில் இருந்தன. அவை இருபக்கமும் எழுதப் பட்டிருந்தன.
யாத்திராகமம் 32 : 16 (RCTA)
அந்தப் பலகைகள் கடவுளால் செய்யப்பட்டிருந்ததுமன்றி, அவைகளிலே பதித்திருந்த எழுத்துக்களும் கடவுளுடைய கையெழுத்தாய் இருந்தன.
யாத்திராகமம் 32 : 17 (RCTA)
மக்கள் ஆரவாரம் செய்வதை யோசுவா கேட்டு, மோயீசனை நோக்கி: பாளையத்திலே சண்டை போடப் போகிறாப்போலே இரைச்சல் கேட்கிறது என்றார். அதற்கு மோயீசன்: இது போருக்குப் பயன்படுத்தும் ஆர்ப்பரிப்பும் அன்று;
யாத்திராகமம் 32 : 18 (RCTA)
பகைவர்களை விரட்டும் தொனியும் அன்று. பாடலின் ஒசைதான் எனக்குக் கேட்கிறது என்றார்.
யாத்திராகமம் 32 : 19 (RCTA)
அவர் பாளையத்தை அணுகி வரவே, கன்றுக்குட்டியையும் ஆடல் பாடல்களையும் கண்டார். மிகவும் கோபமடைந்து தம் கையிலிருந்த இரு பலகைகளையும் மலையின் அடியில் எறிந்து துண்டு துண்டாய் உடைத்தார்.
யாத்திராகமம் 32 : 20 (RCTA)
அவர்கள் செய்திருந்த கன்றுக்கட்டியை எடுத்து நெருப்பில் சுட்டெரித்துத் தவிடு பொடியாக்கி, அப்பொடியைத் தண்ணீரோடு கலந்து, இஸ்ராயேல் மக்களுக்குக் குடிக்கக் கொடுத்தார்.
யாத்திராகமம் 32 : 21 (RCTA)
பின் அவர் ஆரோனை நோக்கி: நீ இந்த மக்கள்மேல் அந்தப் பெரும் பாவத்தை வருவிப்பதற்கு அவர்கள் உனக்கு என்ன செய்தார்கள் என்றார்.
யாத்திராகமம் 32 : 22 (RCTA)
அதற்கு ஆரோன்: என் தலைவருக்குக் கோபம் வேண்டாம். இவர்கள் பொல்லாத மக்கள், தீமையை நாடும் மக்களென்று நீர் அறிந்திருக்கிறீர்.
யாத்திராகமம் 32 : 23 (RCTA)
அவர்கள் என்னை நோக்கி: எங்களுக்கு முன்னின்று நடத்தும் பொருட்டுத் தெய்வங்களை எங்களுக்குச் செய்து கொடும். எகிப்து நாட்டிலிருந்து நம்மை அழைத்துக் கொண்டு வந்த அந்த மோயீசனுக்கு என்ன நேர்ந்ததோ, அறியோம் என்றார்கள்.
யாத்திராகமம் 32 : 24 (RCTA)
அப்பொழுது நான்: உங்களில் யார் யாரிடம் பொன் இருக்கிறது என்று கேட்டேன். அவர்கள் பொன்னைக் கொணர்ந்து என்னிடம் ஒப்புவித்தார்கள். நான் அதை நெருப்பில் போட்டேன். அதிலிருந்து அந்தக் கன்றுக்குட்டி வெளிப்பட்டது என்று பதில் சொன்னார்.
யாத்திராகமம் 32 : 25 (RCTA)
இந்த வெட்கத்துக்குரிய அக்கிரமத்தின் பொருட்டு ஆரோன் மக்களைக் கொள்ளையிட்டு அவர்களைப் பகைவருக்கு முன் நிருவாணமாக்கினதைக் கண்ட மோயீசன்,
யாத்திராகமம் 32 : 26 (RCTA)
பாளையத்தின் வாயிலிலே நின்று: ஆண்டவருடைய பக்கத்தில் இருப்பவர்கள் என்னிடம் வந்து சேரக் கடவார்கள் என்றார். அப்பொழுது லேவியின் புதல்வர் எல்லாரும் அவரிடம் கூடி வந்தனர்.
யாத்திராகமம் 32 : 27 (RCTA)
மோயீசன் அவர்களை நோக்கி: இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவருடைய வாக்கு ஏதென்றால்: உங்களில் ஒவ்வொருவனும் தன் வாளைத் தன் இடையிலே கட்டிக்கொண்டு பாளையத்தைக் கடந்து, ஒரு வாயிலிலிருந்து மற்றொரு வாயில்வரை போய், நடுவிலே சகோதரனோ, நண்பனோ, அயலானோ - (யாரைக் கண்டாலும்) -கொன்று போடுங்கள் என்றார்.
யாத்திராகமம் 32 : 28 (RCTA)
லேவியின் புதல்வர் மோயீசன் சொன்னபடியே செய்தனர். அன்று ஏறக்குறைய இருபத்து மூவாயிரம் பேர் உயிர் இழந்தனர்.
யாத்திராகமம் 32 : 29 (RCTA)
அப்போது மோயீசன் அவர்களை நோக்கி: கடவுளின் ஆசீர் உங்களுக்குக் கிடைக்கும்படி இன்று உங்களில் ஒவ்வொருவனும் தன் தன் மகனையும் சகோதரனையும் பழிவாங்கினமையால், ஆண்டவருக்கு உங்கள் கைகளை அர்ப்பணம் செய்தீர்கள் என்றார்.
யாத்திராகமம் 32 : 30 (RCTA)
மறுநாள் மோயீசன் மக்களை நோக்கி: நீங்கள் பெரிய பாதகத்தைச் செய்திருக்கிறீர்கள். நானோ உங்களுக்காகப் பாவப் பரிகாரம் செய்யக் கூடுமோவென்று இயன்ற வரையில் மன்றாடும் பொருட்டு, ஆண்டவருடைய சந்நிதிக்கு ஏறிப் போகிறேன் என்றார்.
யாத்திராகமம் 32 : 31 (RCTA)
அப்படியே மோயீசன் ஆண்டவரிடம் திரும்பிப் போய்: இந்த மக்கள் மிகப் பெரிய பாவத்தைச் செய்திருக்கிறார்கள். பொன்னால் தங்களுக்குத் தெய்வங்களைச் செய்து கொண்டார்கள். ஒன்றில், நீர் இந்தப் பாவத்தை மன்னிக்க வேண்டும்.
யாத்திராகமம் 32 : 32 (RCTA)
அல்லது நீர் எழுதிய உமது புத்தகத்திலிருந்து என் பெயரையும் அழித்து விடும் என்று மன்றாடினார்.
யாத்திராகமம் 32 : 33 (RCTA)
ஆண்டவர் அவருக்கு மறுமொழியாக: நமக்கு விரோதமாய்த் துரோகம் செய்பவன் பெயரை நம்முடைய புத்தகத்திலிருந்து அழித்து விடுவோம்.
யாத்திராகமம் 32 : 34 (RCTA)
நீயோ நாம் உனக்குச் சொன்ன இடத்திற்கு இந்த மக்களை அழைத்துக் கொண்டு போ. நம் தூதர் உனக்கு முன் செல்வார். ஆயினும் நாம், பழிவாங்கும் நாளில் அவர்களுடைய பாவத்திற்காக அவர்களைத் தண்டிப்போம் என்றார்.
யாத்திராகமம் 32 : 35 (RCTA)
அப்படியே, ஆரோன் செய்து கொடுத்திருந்த கன்றுக்குட்டியின் காரியத்திலே மக்கள் செய்த அக்கிரமத்தைப் பற்றி ஆண்டவர் அவர்களைத் தண்டித்தார்.
❮
❯