யாத்திராகமம் 3 : 1 (RCTA)
மோயீசன் மதியான் நாட்டுக் குருவாகிய யெத்திரோ என்னும் தன் மாமனின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கையில், மந்தையைப் பாலைநிலத்தின் உட்புறமாய் ஒட்டிக் கொண்டு, தெய்வ (காட்சி) மலை எனப்படும் ஒரேபு மலைவரை வந்தான்.
யாத்திராகமம் 3 : 2 (RCTA)
ஆண்டவரோ, ஒரு முட்செடியின் நடுவினின்று, நெருப்புக் கொழுந்து உருவத்தில் அவனுக்குக் காட்சியளித்தார். அவன், முட்செடி வெந்து போகாமலே எரிவதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
யாத்திராகமம் 3 : 3 (RCTA)
ஆகவே, மோயீசன்: நான் போய், முட்செடி வெந்துபோகாமல் எரிகிற இந்த அதிசயக் காட்சியைப் பார்ப்பேன் என்றான்.
யாத்திராகமம் 3 : 4 (RCTA)
ஆனால், அவன் உற்றுப் பார்க்க வருவதை ஆண்டவர் கண்டு, முட்செடியின் நடுவினின்று: மோயீசா, மோயீசா என்று அவனை அழைக்க, அவன்: இதோ இருக்கிறேன் என்று மறுமொழி கூறினான்.
யாத்திராகமம் 3 : 5 (RCTA)
அவர்: அணுகி வராதே! உன் காலணிகளைக் கழற்றி விடு. ஏனென்றால், நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி என்றார்.
யாத்திராகமம் 3 : 6 (RCTA)
மீண்டும் அவர்: உன் தந்தையின் கடவுள், ஆபிராகமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் நாமே என்றருளினார். மோயீசன், கடவுளை உற்றுப் பார்க்கத் துணியாது தன் முகத்தை மூடிக் கொண்டான்.
யாத்திராகமம் 3 : 7 (RCTA)
ஆண்டவர் அவனை நோக்கி: எகிப்தில் நம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள தொல்லைகளைக் கண்ணுற்றோம். வேலை வாங்கும் மேற்பார்வையாளரின் கொடுமையின் பொருட்டு அவர்கள் இடுகிற கூக்குரலையும் கேள்வியுற்றோம்.
யாத்திராகமம் 3 : 8 (RCTA)
நாம் அவர்கள் துயரத்தை அறிந்தமையால், அவர்களை எகிப்தியர் கைகளினின்று விடுவித்துக் காப்பாற்றவும், இந்த நாட்டிலிருந்து நல்ல பரந்த நாட்டிலே, பாலும் தேனும் பொழியும் பூமியிலே, கானானையர், ஏத்தையர், ஆமோறையர், பாரேசையர், ஏவையர், யெபுசேயர் வாழும் இடங்களிலே, அவர்களைக் கொண்டு போய்ச் சேர்க்கவும் இறங்கி வந்தோம்.
யாத்திராகமம் 3 : 9 (RCTA)
இஸ்ராயேல் மக்களின் அழுகுரல் நம்மை எட்டியது. அவர்கள் எகிப்தியரால் வதைக்கப்படும் தொல்லையையும் கண்டுள்ளோம்.
யாத்திராகமம் 3 : 10 (RCTA)
ஆனால், நீ வா; இஸ்ராயேல் மக்களாகிய நம் மக்கள் எகிப்தினின்று புறப்படும் பொருட்டு உன்னைப் பாரவோனிடம் அனுப்புவோம் என்றார்.
யாத்திராகமம் 3 : 11 (RCTA)
மோயீசனோ, கடவுளை நோக்கி: பாரவோனிடம் போகவும், இஸ்ராயேல் மக்களை எகிப்தினின்று அழைத்து வரவும் நான் எம்மாத்திரம் என்றான்.
யாத்திராகமம் 3 : 12 (RCTA)
அவர்: நாமே உன்னோடு இருப்போம். அதுவுமன்றி, நீ நம் மக்களை எகிப்தினின்று வெளியேறச் செய்த பின்னர், இம்மலையின் மீதே கடவுளுக்குப் பலி இடுவாய். நாம் உன்னை அனுப்பினோம் என்பதற்கு இதுவே அடையாளமாகும் என்று அருளினார்.
யாத்திராகமம் 3 : 13 (RCTA)
மோயீசன் கடவுளை நோக்கி: இதோ நான் இஸ்ராயேல் மக்களிடம் போய்: உங்கள் முன்னோரின் கடவுள் என்னை உங்களிடம் அனுப்பியிருக்கிறார் என்று நான் சொல்லும்போது, அவர்கள்: அவருடைய பெயர் என்ன என்று என்னைக் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன பதில் சொல்வேன் என்றான்.
யாத்திராகமம் 3 : 14 (RCTA)
கடவுள் மோயீசனைநோக்கி: இருக்கிறவர் நாமே. (ஆதலால்,) நீ இஸ்ராயேல் மக்களிடம் போய்: இருக்கிறவரே என்னை உங்களிடம் அனுப்பினார் என்று சொல்லுவாய் என்றார்.
யாத்திராகமம் 3 : 15 (RCTA)
மீண்டும் கடவுள் மோயீசனை நோக்கி: உங்கள் முன்னோரின் கடவுளாகிய ஆண்டவர், ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுளாய் இருக்கிறவரே என்னை உங்களிடம் அனுப்பினார் என்று சொல்லுவாய். என்றும் நமது பெயரும் இதுவே; தலைமுறை தலைமுறையாக நமது நினைவுச் சின்னமும் இதுவே.
யாத்திராகமம் 3 : 16 (RCTA)
நீ போய், இஸ்ராயேலரில் பெரியோர்களைக் கூட்டி அவர்கட்குச் சொல்லுவாய்: உங்கள் முன்னோரின் கடவுளாகிய ஆண்டவர், ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் எனக்குக் காட்சி கொடுத்துத் திருவாக்கருளினதாவது: நாம் உங்களைச் சந்திக்க வந்தோம்; உங்களுக்கு எகிப்திலே நேரிட்ட யாவையும் கண்டு கொண்டோம்;
யாத்திராகமம் 3 : 17 (RCTA)
ஆதலால், நாம் உங்களை எகிப்தின் துன்ப துயரத்தினின்று விடுவித்து, கானானையர், ஏத்தையர், ஆமோறையர் பாரேசையர், ஏவையர், யெபுசேயர் வாழும் நாட்டிற்கு, பாலும் தேனும் பொழியும் பூமிக்கு, கூட்டிக் கொண்டு போகத் திருவுளம் கொண்டோம்.
யாத்திராகமம் 3 : 18 (RCTA)
அவர்கள் உன் சொல்லுக்குச் செவி கொடுப்பார்கள். பின், நீ இஸ்ராயேலின் பெரியோர்களோடு எகிப்து மன்னனிடம் போய்: எபிரேயரின் கடவுளாகிய ஆண்டவர் எங்களை அழைத்திருக்கிறார். நாங்கள் மூன்று நாள் பிரயாணம் போய், எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப் பலி செலுத்த வேண்டும் என்று அவனுக்குச் சொல்லுவாய்.
யாத்திராகமம் 3 : 19 (RCTA)
ஆனால், எகிப்து மன்னன் (நம்) கை வல்லமை கண்டாலொழிய உங்களைப் போகவிடமாட்டான் என்று அறிவோம்.
யாத்திராகமம் 3 : 20 (RCTA)
ஆதலால், நாம் கையை நீட்டி எகிப்தியரிடையே பல வகை அற்புதங்களையும் செய்து அவர்களைத் தண்டிப்போம். அதன்பின், அவன் உங்களைப் போகவிடுவான்.
யாத்திராகமம் 3 : 21 (RCTA)
மேலும், நாம் இம்மக்களுக்கு எகிப்தியர் கண்களில் தயவு கிடைக்கச் செய்வதால், நீங்கள் புறப்டும் பொழுது வெறுமையாய்ப் போவதில்லை.
யாத்திராகமம் 3 : 22 (RCTA)
எவ்வாறு என்றால், ஒவ்வொரு பெண்ணும் தன்தன் அயல் வீட்டுக்காரியிடமும், பொன், வெள்ளிப் பாத்திரங்களையும் ஆடைகளையும் கேட்டு வாங்குவாள். நீங்களோ, அவற்றை உங்கள் புதல்வர், புதல்வியர்களுக்கு அணிவித்து, எகிப்தைக் கொள்ளையிட்டுப் போவீர்கள் என்று அருளினார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22