யாத்திராகமம் 24 : 1 (RCTA)
மேலும் ஆண்டவர் மோயீசனை நோக்கி: நீயும் ஆரோனும் நதாபும் அபியூவும் இஸ்ராயேல் பெரியார்களில் எழுபது பேரும் ஆண்டவரிடம் ஏறிவந்து, தூரத்திலிருந்து ஆராதனை செய்யுங்கள்.
யாத்திராகமம் 24 : 2 (RCTA)
மோயீசன் மட்டும் ஆண்டவருக்கு அண்மையில் வருவார். மற்றவர்கள் கிட்ட வரவும், மக்கள் அவரோடு ஏறி வரவும் வேண்டாம் என்றார்.
யாத்திராகமம் 24 : 3 (RCTA)
மோயீசன் வந்து ஆண்டவருடைய எல்லா வாக்கியங்களையும் நீதிச் சட்டங்களையும் விவரித்துச் சொன்னார். அதைக் கேட்ட மக்கள் எல்லாரும்: ஆண்டவர் திருவுளம் பற்றின எல்லா வாக்கியங்களின் படியும் நடப்போம் என்று ஒரே குரலாய் மறுமொழி சொன்னார்கள்.
யாத்திராகமம் 24 : 4 (RCTA)
மோயீசனோ, ஆண்டவர் சொன்ன வாக்கியங்களையெல்லாம் எழுதி வைத்து, பின், காலையில் எழுந்து மலையடிவாரத்தில் ஒரு பலிப்பீடத்தைக் கட்டி, இஸ்ராயேலின் பன்னிரண்டு கோத்திரங்களின் நினைவாக பன்னிரண்டு தூண்களை நிறுத்தினார்.
யாத்திராகமம் 24 : 5 (RCTA)
இஸ்ராயேல் மக்களில் இளைஞர்களை அனுப்பினார். அவர்கள் ஆண்டவருக்குத் தகனப்பலிகளையும், சமாதானப் பலிகளாகக் கன்றுக்குட்டிகளையும் பலியிட்டார்கள்.
யாத்திராகமம் 24 : 6 (RCTA)
அப்போது மோயீசன் இரத்தத்தில் ஒரு பாதியை எடுத்துப் பாத்திரங்களில் வார்த்து, மற்றப் பாதியைப் பலிப்பீடத்தின் மேல் ஊற்றினார்.
யாத்திராகமம் 24 : 7 (RCTA)
பின் உடன்படிக்கையின் புத்தகத்தை எடுத்து மக்கள் கேட்க வாசித்தார், அவர்கள்: ஆண்டவர் சொன்னபடியெல்லாம் செய்வோம் என்றார்கள்.
யாத்திராகமம் 24 : 8 (RCTA)
அப்பொழுது மோயீசன் பாத்திரத்தில் வார்த்து வைத்திருந்த இரத்தத்தை மக்களின் மேல் தெளித்து: இந்த எல்லா வார்த்தைகளின் படியும் ஆண்டவர் உங்களுடன் செய்தருளிய உடன்படிக்கையின் இரத்தம் இதுவே என்று கூறினார்.
யாத்திராகமம் 24 : 9 (RCTA)
பின் மோயீசனும் ஆரோனும் நதாபும் அபியூவும் இஸ்ராயேல் பெரியோரில் எழுபது பேரும் (மேலே) ஏறினார்கள்;
யாத்திராகமம் 24 : 10 (RCTA)
இஸ்ராயேலின் கடவுளையும் கண்டார்கள். அவருடைய கால்களின் கீழ் நீலக் கல் இழைத்த வேலைப் போலவும், தெளிந்த வானத்தின் சுடரொளி போலவும் இருந்தது.
யாத்திராகமம் 24 : 11 (RCTA)
இஸ்ராயேல் மக்களில் எவரெவர் அகன்று தூரத்திலிருந்தார்களோ அவர்கள் மேல் ஆண்டவர் தம்முடைய கையை நீட்டினாரில்லை. அவர்கள் கடவுளைக் கண்டபின் உண்ணவும் குடிக்கவும் தொடங்கினார்கள்.
யாத்திராகமம் 24 : 12 (RCTA)
அப்போது ஆண்டவர் மோயீசனை நோக்கி: நீ மலையின் மேல் நம்மிடத்திற்கு ஏறி வந்து இங்கே இரு. நாம் உனக்குக் கற்பலகைளையும், நீ அவர்களுக்குக் கற்பிப்பதற்கு நாம் எழுதிய கட்டளை முதலிய சட்ட திட்டங்களையும் தருவோம் என்றருளினார்.
யாத்திராகமம் 24 : 13 (RCTA)
மோயீசனும் அவருக்குத் துணைவனாய் இருந்த யோசுவாவும் எழுந்திருந்து கடவுளுடைய மலையில் ஏறுகையில்,
யாத்திராகமம் 24 : 14 (RCTA)
மோயீசன், பெரியோர்களை நோக்கி: நாங்கள் உங்களிடம் திரும்பி வரும்வரை நீங்கள் இங்கே காத்துக் கொண்டிருங்கள். ஆரோனும் ஊரும் உங்களோடு இருக்கிறார்கள். யாதொரு வழக்கு உண்டானால் அவர்களுக்குத் தெரியப் படுத்துவீர்கள் என்று சொல்லிப் போனார்.
யாத்திராகமம் 24 : 15 (RCTA)
மோயீசன் ஏறிப்போனபின் ஒரு மேகம் வந்து மலையை மூடிற்று.
யாத்திராகமம் 24 : 16 (RCTA)
ஆண்டவருடைய மாட்சி சீனாய் மலையின்மேல் தங்கியிருந்தது. அந்த மேகம், ஆறுநாளும் மலையை மூடியிருந்தது. ஏழாம் நாளிலோ இருளின் நடுவினின்று ஆண்டவர் மோயீசனைக் கூப்பிட்டார்.
யாத்திராகமம் 24 : 17 (RCTA)
மலையின் சிகரத்திலே ஆண்டவருடைய மாட்சியின் காட்சி இஸ்ராயேல் மக்கள் கண்களுக்கு கொடுமையான தீயைப் போலத் தோன்றும்.
யாத்திராகமம் 24 : 18 (RCTA)
மோயீசன் அந்த மேகத்தின் நடுவே புகுந்து மலையின் மேல் ஏறி, அங்கே நாற்பது இரவும் நாற்பது பகலும் தங்கியிருந்தார்.
❮
❯