யாத்திராகமம் 2 : 1 (RCTA)
அதன் பிறகு லேவி கோத்திரத்து மனிதன் ஒருவன் தனது கோத்திரத்துப் பெண்ணைக் கொண்டான்.
யாத்திராகமம் 2 : 2 (RCTA)
இவள் கருவுற்று ஒரு மகனைப் பெற்றாள். அவன் வடிவழகு உள்ளவனென்று கண்டு, அவனை மூன்று மாதமாய் ஒளித்து வைத்திருந்தாள்.
யாத்திராகமம் 2 : 3 (RCTA)
பிறகு குழந்தையை ஒளிக்க இயலாமையால், அவள் ஒரு நாணல் கூடையை எடுத்து, அதைக் களிமண்ணாலும் தாராலும் பூசி, அதனுள்ளே குழந்தையை வைத்து, ஆற்றங்கரைக் கோரைக்குள்ளே அதைப் போட்டுவிட்டாள்.
யாத்திராகமம் 2 : 4 (RCTA)
பிள்ளையின் சகோதரியோ என்ன நிகழுமோ என்று, தூரத்தில் நின்று பார்த்துக்கொண்டிருந்தாள்.
யாத்திராகமம் 2 : 5 (RCTA)
அப்பொழுது பாரவோனின் புதல்வி நீராட வந்து ஆற்றிலே இறங்கினாள். அவளுடைய பணிப் பெண்கள் கரையோரத்தில் உலாவிக் கொண்டிருந்தனர். அவள் கோரைகளுக்குள் கூடையைக் கண்டு, தன் பணிப்பெண்களுள் ஒருத்தியை அனுப்பி, அதைக் கொண்டு வரச்செய்தாள்.
யாத்திராகமம் 2 : 6 (RCTA)
அதைத் திறந்தபோது, அதனுள் அழுது கொண்டிருந்த ஒரு குழந்தையைக் கண்டாள். உடனே அதன் மீது இரக்கம் கொண்டாள். எபிரேயருடைய குழந்தைகளில் இது ஒன்றாகும் என்றாள்.
யாத்திராகமம் 2 : 7 (RCTA)
அந்நேரத்திலே குழந்தையின் சகோதரி அவளை நோக்கி: குழந்தைக்குப் பாலுட்டும்படி எபிரேயப் பெண்களில் ஒருத்தியை உம்மிடம் அழைத்துக் கொண்டு வரட்டுமா என்றாள்.
யாத்திராகமம் 2 : 8 (RCTA)
அவள்: ஆம், அழைத்து வா என்று பதில் கூறவே, சிறுமி போய்த் தன் தாயை அழைத்து வந்தாள்.
யாத்திராகமம் 2 : 9 (RCTA)
பாரவோன் புதல்வி அவளை நோக்கி: நீ இச்சிறுவனை எடுத்து எனக்காக வளர்த்திடுவாய். நான் உனக்குச் சம்பளம் கொடுப்பேன் என்று வாக்களித்தாள். அந்தப் பெண், சிறுவனை ஏற்றுக் கொண்டு வளர்த்தாள். பிறகு, பிள்ளை பெரிதான போது,
யாத்திராகமம் 2 : 10 (RCTA)
அதைப் பாரவோன் புதல்வியிடம் கொண்டுபோய் விட்டாள். இவளோ, அவனைச் சொந்தப் பிள்ளையாகச் சுவீகரித்துக் கொண்டு: அவனை நான் தண்ணீரினின்று எடுத்தேன் என்று கூறி, அவனுக்கு மோயீசன் என்று பெயரிட்டாள்.
யாத்திராகமம் 2 : 11 (RCTA)
மோயீசன் பெரியவனான காலத்தில் தன் சகோதரரிடம் போய், அவர்கள் கடும் துன்பம் அனுபவிப்பதையும், எபிரேயராகிய தன் சகோதரரில் ஒருவனை ஒர் எகிப்தியன் அடிப்பதையும் கண்டான்.
யாத்திராகமம் 2 : 12 (RCTA)
அவன் இங்கும் அங்கும் சுற்றிப் பார்த்து ஒருவரும் இல்லையென்று அறிந்து, எகிப்தியனை வெட்டி வீழ்த்தி மண்ணில் புதைத்துவிட்டான்.
யாத்திராகமம் 2 : 13 (RCTA)
அவன் மறுநாளும் வெளியே போகையில் எபிரேய மனிதர் இருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அவன் அநியாயம் செய்தவனை நோக்கி: நீ உன் அயலானை அடிப்பதென்ன என்று கேட்டான்.
யாத்திராகமம் 2 : 14 (RCTA)
அதற்கு அவன்: எங்களுக்கு உன்னைத் தலைவனாகவும் நடுவராகவும் நியமித்தவன் யார்? நேற்று நீ எகிப்தியனைக் கொன்றது போல் என்னையும் கொன்று விட நினைக்கிறாயோ என்று பதில் சொன்னான். அதைக் கேட்ட மோயீசன்: அச்செய்தி எவ்வாறு வெளிப்பட்டது என்று அச்சம் கொண்டான்.
யாத்திராகமம் 2 : 15 (RCTA)
பாரவோனும் இச்செய்தியைக் கேட்டு அறியவே, மோயீசனைக் கொலை செய்ய வழி தேடினான். இவனோ, அவன் முன்னிலையினின்று ஓடிப் போய், மதியான் நாட்டிலே தங்கி, ஒரு கிணற்றருகே உட்கார்ந்தான்.
யாத்திராகமம் 2 : 16 (RCTA)
மதியான் நாட்டுக் குருவுக்கு ஏழு புதல்வியர் இருந்தனர். அவர்கள் தண்ணீர் முகந்து வந்து, தொட்டிகளை நிரப்பி, தங்கள் தந்தையின் மந்தைகட்குத் தண்ணீர் காட்டவிருக்கையில்,
யாத்திராகமம் 2 : 17 (RCTA)
ஆயர்கள் திடீரென வந்து அவர்களைத் துரத்தினர். மோயீசனோ, எழுந்து சென்று பெண்களுக்குத் துணைநின்று, அவர்களுடைய ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டினான்.
யாத்திராகமம் 2 : 18 (RCTA)
அவர்கள் தங்கள் தந்தையாகிய இராகுவேலிடம் திரும்பி வந்த போது, அவன்: நீங்கள் இவ்வளவு விரைவில் வந்ததென்ன என்று கேட்டான்.
யாத்திராகமம் 2 : 19 (RCTA)
அவர்கள்: எகிப்தியன் ஒருவன் எங்களை ஆயர்கள் கையினின்று காப்பாற்றினான். மேலும், அவன் எங்களுடன் தண்ணீர் முகந்து நம் ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டினான் என்றனர்.
யாத்திராகமம் 2 : 20 (RCTA)
அதற்கு அவர்: அம்மனிதன் எங்கே இருக்கிறான்? அவனை நீங்கள் விட்டு வந்ததென்ன? உணவு உண்ண அவனை அழைத்து வாருங்கள் என்றார்.
யாத்திராகமம் 2 : 21 (RCTA)
மோயீசன் வந்து, தான் அவரோடு தங்கியிருப்பதாக உறுதி கூறினான்; பின்னர் அவர் மகள் செப்பொறாளை மணந்து கொண்டான்.
யாத்திராகமம் 2 : 22 (RCTA)
இவள் அவனுக்கு ஒரு மகனைப் பெற்றாள். மோயீசன்: நான் வெளிநாட்டில் அந்நியனாய் இருக்கிறேன் என்று சொல்லி, அவனை யேற்சம் என்று அழைத்தான். பிறகு அவள் மற்றொரு மகனைப் பெற்றாள். அவன்: உண்மையாகவே என் தந்தையின் கடவுள் எனக்கு உதவி புரிந்து என்னைப் பாரவோன் கையினின்று காப்பாற்றினர் என்று சொல்லி, அவனுக்கு எலியேசேர் என்று பெயரிட்டான்.
யாத்திராகமம் 2 : 23 (RCTA)
நெடுநாள் சென்றபின், எகிப்து மன்னன் இறந்தான். இஸ்ராயேல் மக்கள், வேலைகளின் பொருட்டுத் துயரப்பட்டுப் பெரும் கூக்குரலிட்டனர். அவர்கள் முறைப்பாடு, அவர்கள் வேலை செய்த இடத்தினின்று இறைவனுக்கு எட்டியது.
யாத்திராகமம் 2 : 24 (RCTA)
கடவுள் அவர்களுடைய புலம்பலைக் கேட்டு, தாம் ஆபிராகம், ஈசாக், யாக்கோபு என்பவர்களுடன் செய்திருந்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார்.
யாத்திராகமம் 2 : 25 (RCTA)
பின் ஆண்டவர் இஸ்ராயேல் மக்களைக் கண்ணோக்கினார். அவர்கள் நிலையும் அவர் அறிந்திருந்தார்.
❮
❯