யாத்திராகமம் 18 : 1 (RCTA)
அப்படியிருக்க, கடவுள் மோயீசனுக்கும் தம் மக்களாம் இஸ்ராயேலருக்கும் செய்தயாவையும், ஆண்டவர் இஸ்ராயேலரை எகிப்திலிருந்து புறப்படச் செய்ததையும், மதியானில் குருவாயிருந்தவனும் மோயீசனின் உறவினனும் ஆகிய யெத்திரோ கேள்விப்பட்டு,
யாத்திராகமம் 18 : 2 (RCTA)
மோயீசனாலே வீட்டுக்கு அனுப்பிவிடப்பட்டிருந்த அவன் மனைவி செப்பொறாளையும் அவனுடைய இரண்டு புதல்வர்களையும் கூட்டிக் கொண்டு வந்தார்.
யாத்திராகமம் 18 : 3 (RCTA)
நான் அயல் நாட்டிலே அகதியாயினேன் என்று தகப்பன் சொல்லி, ஒரு மகனுக்கு யேற்சம் என்று பெயரிட்டிருந்தான்.
யாத்திராகமம் 18 : 4 (RCTA)
என் தந்தையின் கடவுள் எனக்குத் துணையாகி, என்னைப் பாரவோனுடைய வாளினின்று காப்பாற்றியருளினார் என்று சொல்லி, மற்றவனுக்கு எலியேசர் என்று பெயரிட்டிருந்தான்.
யாத்திராகமம் 18 : 5 (RCTA)
ஆகையால் மோயீசனின் உறவினராகிய யெத்திரோ அவன் புதல்வர்களோடும் மனைவியோடும் பாலைவனத்திற்கு வந்து, மருமகன் பாளையம் இறங்கியிருந்த தெய்வமலையின் அடிவாரத்தை அடைந்து மோயீசனுக்குக் செய்தி அனுப்பி:
யாத்திராகமம் 18 : 6 (RCTA)
யெத்திரோ என்னும் உம்முடைய உறவினனாகிய நானும், உம்முடைய மனைவியும், அவளோடுகூட அவளுடைய இரண்டு புதல்வர்களும் உம்மிடத்திற்கு வந்திருக்கிறோம் என்று சொல்லச் சொன்னான்.
யாத்திராகமம் 18 : 7 (RCTA)
அப்பொழுது, மோயீசன் தன் உறவினருக்கு எதிர்கொண்டுபோய், அவனுக்கு வணக்கம் செலுத்தி, அவனை முத்தமிட்ட பின், இருவரும் உபசார மொழிகளால் ஒருவரை ஒருவர் வாழ்த்தினர். பின், யெத்திரோ கூடாரத்தினுள் புகுந்த போது,
யாத்திராகமம் 18 : 8 (RCTA)
மோயீசன், இஸ்ராயேலின்பொருட்டு பாரவோனுக்கும் எகிப்தியருக்கும் ஆண்டவர் செய்த எல்லாவற்றையும், வழியிலே தங்களுக்கு நேரிட்ட வருத்தங்கள் எல்லாவற்றையும், ஆண்டவர் தங்களை விடுவித்துக் காப்பாற்றியதையும் மாமனுக்கு விவரித்துச் சொன்னார்.
யாத்திராகமம் 18 : 9 (RCTA)
ஆண்டவர் இஸ்ராயேலரை எகிப்தியரின் கைக்குத் தப்புவித்து அவர்களுக்குச் செய்த எல்லா உபகாரங்களையும் குறித்து யெத்திரோ மகிழ்ச்சியுற்றுச் சொன்னதாவது:
யாத்திராகமம் 18 : 10 (RCTA)
உங்களை எகிப்தியருடைய கைக்கும் பாரவோனுடைய கொடுங்கோலுக்கும் தப்புவித்து, எகிப்தின் சிறையினின்று தம் (மக்களை) விடுவித்த ஆண்டவர் வாழ்த்தப்படக் கடவாராக.
யாத்திராகமம் 18 : 11 (RCTA)
எல்லாத் தேவர்களைக் காட்டிலும் ஆண்டவர் மகத்தானவர் என்று இப்பொழுது நான் அறிந்திருக்கிறேன். அவர்கள் (மக்களுக்கு) அநியாயமன்றோ செய்தார்கள் (என்றார்).
யாத்திராகமம் 18 : 12 (RCTA)
மேலும், மோயீசனின் மாமனாகிய யெத்திரோ கடவுளுக்குத் தகனப்பலி முதலிய பலிகளையும் படைத்தார். பின், ஆரோனும் இஸ்ராயேலரின் மூத்தோரான அனைவரும் வந்து, கடவுள் முன்னிலையில் அவரோடுகூட உணவருந்தினர்.
யாத்திராகமம் 18 : 13 (RCTA)
மறுநாள், மோயீசன் மக்களுக்கு நியாய விசாரணை செய்ய உட்கார்ந்தார். மக்கள் காலை முதல் மாலை வரை மோயீசன் முன் நின்று கொண்டிருந்தனர்.
யாத்திராகமம் 18 : 14 (RCTA)
மோயீசன் இவ்வாறு மக்களுக்கு ஆதரவாய்ச் செய்துவந்த யாவையும் கண்ட யெத்திரோ: மக்களை முன்னிட்டு நீர் ஏன் இவ்வாறு செய்கிறீர்? நீர் மட்டும் உட்கார்ந்திருக்கிறதும், காலை முதல் மாலை வரை மக்கள் காத்திருக்கிறதும், சரி தானோ என்றார்.
யாத்திராகமம் 18 : 15 (RCTA)
மோயீசன் மறுமொழியாக: மக்கள் கடவுளின் தீர்ப்பை நாடியே என்னிடம் வருகின்றனர்.
யாத்திராகமம் 18 : 16 (RCTA)
அதாவது, அவர்களுக்குள் யாதொரு வழக்கு உண்டானால், நான் அவர்களுக்குள் நடுவனாய் இருந்து, கடவுளின் கட்டளைகளையும் அவருடைய நீதி நெறிச் சட்டங்களையும் தெரிவிக்கும்படி என்னிடம் வருகின்றனர் என்றார்.
யாத்திராகமம் 18 : 17 (RCTA)
அவரோ: நீர் இவ்வாறு செய்வது நல்லது அன்று.
யாத்திராகமம் 18 : 18 (RCTA)
இத்தகைய விவேகமற்ற வேலையால் நீரும் (களைப்புற்றுப்) போகிறீர்; உம்மோடு இருக்கிற மக்களும் வீணாய்த் தொல்லைப்பட்டு வருகின்றனர். இது உமக்குத் தாளாத வேலை. அதன் பாரத்தை ஒருவராய் நின்று தாங்க உம்மால் முடியாது.
யாத்திராகமம் 18 : 19 (RCTA)
இப்போது நான் சொல்லும் வார்த்தைகளையும் ஆலோசனைகளையும் கேட்பீராயின், கடவுள் உம்மோடு இருப்பார். கடவுளைச் சார்ந்த காரியங்களில் நீர் கடவுள் முன்னிலையிலிருந்து அவர்களுக்காகப் பேசும்.
யாத்திராகமம் 18 : 20 (RCTA)
(மக்களுக்குச்) சடங்குகளையும், ஆராதனை முறைமையையும், அவர்கள் செல்ல வேண்டிய வழியையும் அவர்கள் செய்யவேண்டிய செயல்களையும் நீரே கற்பித்துக் காட்டக்கடவீர்.
யாத்திராகமம் 18 : 21 (RCTA)
மேலும், மக்கள் அனைவருள்ளும் செல்வாக்கு, தெய்வபயம், உண்மைமொழி, தாராள குணம் உடையோரைத் தெரிந்தெடுத்து, அவர்களை ஆயிரம் பேருக்கோ நூறு பேருக்கோ ஐம்பது அல்லது பத்துப் பேருக்கோ தலைவர்களாக ஏற்படுத்தும்.
யாத்திராகமம் 18 : 22 (RCTA)
இவர்களே எப்பொழுதும் நீதி வழங்குவார்கள். பெரிய வழக்குகள் யாவையும் உம்மிடம் கொண்டு வரவும், சிறிய வழக்குகளை அவர்களே தீர்க்கவும் கடவர். இப்படி அவர்கள் உம்மோடு கூட இந்தப் பாரத்தைச் சுமந்தால், அது உமக்கு இலகுவாய் இருக்கும்.
யாத்திராகமம் 18 : 23 (RCTA)
இவ்வாறு செய்வீராயின், கடவுள் உமக்குக் கற்பித்த கட்டளைகளைக் கடைப்பிடித்து அவருடைய சட்டதிட்டங்களை உம்மாலே நிறைவேற்றக் கூடும். அதனால் மக்கள் எல்லாரும் நிறைவுடன் வீடு எய்துவர் என்றார்.
யாத்திராகமம் 18 : 24 (RCTA)
இந்த அறிவுரையை மோயீசன் உற்றுக் கேட்டு, அவர் சொன்னபடியெல்லாம் நடந்தார்.
யாத்திராகமம் 18 : 25 (RCTA)
இஸ்ராயேல் மக்கள் அனைவருள்ளும் செல்வாக்குள்ளவர்களைத் தெரிந்து எடுத்து, அவர்களை மக்கள் தலைவராக்கி, சிலரை ஆயிரம் பேருக்கும், வேறு சிலரை நூறு பேருக்கும், இன்னும் சிலரை ஐம்பது அல்லது பத்துப் பேருக்கும் தலைவர்களாக நியமித்தார்.
யாத்திராகமம் 18 : 26 (RCTA)
அவர்கள் எப்பொழுதும் மக்களுக்கு நீதி வழங்கிவந்தனர். பெரிய வழக்குகளை மோயீசனிடம் கொண்டு வருவர்; சாதாரண வழக்குகளை அவர்களே தீர்த்து வைப்பர்.
யாத்திராகமம் 18 : 27 (RCTA)
பின் மோயீசன் தம் மாமனை அனுப்பிவிட, அவர் திரும்பத் தம் நாடு திரும்பினார்.
❮
❯