யாத்திராகமம் 15 : 1 (RCTA)
அப்பொழுது மோயீசன் இஸ்ராயேல் மக்களோடுகூட ஆண்டவரைப் புகழ்ந்து பாடிய சங்கீதமாவது: ஆண்டவருக்குப் பாட்டுப் பாடுவோம். ஏனென்றால் அவர் பெரும்புகழோடு வெற்றியில் சிறந்தார்; குதிரையையும் அதன்மேல் ஏறியிருந்த வீரனையும் கடலிலே வீழ்த்தினார்.
யாத்திராகமம் 15 : 2 (RCTA)
ஆண்டவர் என் வலிமையும் என் போற்றுரைகளுக்குத் தகுதி வாய்ந்தவருமாய் இருக்கிறார். அவர் எனக்கு மீட்பைத் தந்தார். அவர் என் கடவுளாகையால் அவரை நான் மேன்மைப் படுத்துவேன். அவர் என் தந்தையின் கடவுளென்று போற்றிப் புகழ்வேன்,
யாத்திராகமம் 15 : 3 (RCTA)
ஆண்டவர் போர்வீரனைப் போன்றவர். அவர் எல்லாம் வல்லவர் என்று அழைக்கப்படுகின்றார்.
யாத்திராகமம் 15 : 4 (RCTA)
அவர் பாரவோனின் தேர்களையும் படைகளையும் கடலிலே வீழ்த்தினார். கடல் அவர்களை மூடினது.
யாத்திராகமம் 15 : 5 (RCTA)
அவர்கள் கல்லைப்போல் ஆழத்திலே வீழ்ந்தனர்.
யாத்திராகமம் 15 : 6 (RCTA)
ஆண்டவரே, உம்முடைய வலக்கை வலிமையால் பெரும் சிறப்பு எய்துகிறது. உமது வலக்கை பகைவரை நொறுக்கியது. உம்முடைய எதிரிகளை உமது மிகுந்த மாட்சிமையினால் அழித்தொழித்தீர்.
யாத்திராகமம் 15 : 7 (RCTA)
நீர் உம்முடைய கோப நெருப்பை அனுப்ப, அது அவர்களைத் துரும்பென எரித்தது. உமது கடும் கோபப் புயலால் நீர்த்திரள்கள் குவிந்தன.
யாத்திராகமம் 15 : 8 (RCTA)
வெள்ளம் தடுக்கப்பட்டு, நடுக்கடலில் ஆழப் பாதாளங்கள் அடுக்கப்பட்டன.
யாத்திராகமம் 15 : 9 (RCTA)
பகைவன்: அவர்களை நான் தொடர்வேன்; பிடிப்பேன்; கொள்ளையிடப் பட்டவைகளைப் பங்கிடுவேன்; என் ஆசை நிறைவுறச் செய்வேன்; என் கத்தியை உருவி என் கையாலே அவர்களைக் குத்துவேன் என்று சொன்னவுடனேயே, உமது காற்றை வீசச் செய்தீர்.
யாத்திராகமம் 15 : 10 (RCTA)
அந்நேரமே கடல் அவர்களை மூடிக்கொண்டதனால், அவர்கள் ஓலமிடும் வெள்ளத்தில் ஈயக் குண்டுபோல் அமிழ்ந்தனர்.
யாத்திராகமம் 15 : 11 (RCTA)
ஆண்டவரே, வல்லவர்களில் உமக்கு நிகரானவர் யார்? பரிசுத்ததனத்தில் உம்மைப் போல இருக்கிறவர் யார்? மகத்துவமுள்ளவரும், பயங்கரத்துக்குரியவரும், புகழ்ச்சிக்கு உரியவரும் அற்புதங்களைச் செய்கிறவருமான உமக்கு ஒப்பானவர் எவரேனும் உண்டோ?
யாத்திராகமம் 15 : 12 (RCTA)
உம்முடைய கையை நீட்டினீர். நீட்டவே, பூமி அவர்களை விழுங்கிற்று.
யாத்திராகமம் 15 : 13 (RCTA)
நீர் மீட்டு இரட்சித்த மக்களுக்குத் தயவோடு வழிகாட்டியானீர். உம்முடைய வல்லமையுள்ள கையால் அவர்களைத் தூக்கித் திருவுறைவிடத்தில் அவர்களை நிலைநிறுத்தினீர்.
யாத்திராகமம் 15 : 14 (RCTA)
மக்கள் எழும்பிச் சினந்தனர். பிலிஸ்தியாவில் வாழ்பவர்களும் நொந்துபோயினர்.
யாத்திராகமம் 15 : 15 (RCTA)
அப்பொழுது ஏதோமின் தலைவர்கள் மனம் கலங்கினர். மோவாபின் வீரர்கள் நடுக்கமுற்றனர். கானான் நாட்டுக் குடிகளெல்லாரும் திகிலடைந்து வாடி வதங்கினர்.
யாத்திராகமம் 15 : 16 (RCTA)
உம்முடைய விசாலமான புயத்தின் மகத்துவத்தால் அவர்கள் மீது ஏக்கமும் திகிலும் வரக்கடவன. உம்முடைய மக்கள் அக்கரை போய்ச் சேருமட்டும் அவர்கள் பாறை போல் அசைவற்று நிற்கக்கடவர். ஆம், உம்முடைய மக்கள் கடந்து போகுமட்டும் அவர்கள் அசையாதிருக்கக்கடவர்.
யாத்திராகமம் 15 : 17 (RCTA)
நீர் அவர்களைக் கொண்டுபோய் மலைமீதும், ஆண்டவராகிய நீர் அமைத்துள்ள அசையாத உறைவிடத்திலும் அவர்களை நாட்டுவீர். அது உமது கையாலே நிலைநிறுத்தப்பட்ட உம்முடைய திருவுறைவிடமாம்.
யாத்திராகமம் 15 : 18 (RCTA)
ஆண்டவர் என்றென்றும் செங்கோல் ஓச்சுவாராக.
யாத்திராகமம் 15 : 19 (RCTA)
ஏனென்றால், பாரவோன் குதிரை வீரனாய்த்தன் தேர்களோடும் குதிரை வீரரோடும் கடலில் புகுந்தான். ஆண்டவர், கடல் அலைகளை அவர்கள்மேல் திரும்பச் செய்தார். இஸ்ராயேல் மக்களோ கடலின் நடுவில் கால் நனையாமல் நடந்து போயினர்.
யாத்திராகமம் 15 : 20 (RCTA)
அதற்குள்ளே, ஆரோனின் சகோதரியான மரியாம் என்னும் இறைவாக்குரைப்பவள் தன் கையிலே மத்தளம் பிடித்துக் கொண்டாள். அதைக் கண்டு மற்றுமுள்ள பெண்களெல்லாம் தங்கள் மத்தளங்களையும் எடுத்துக் கொண்டு, பாடியும் ஆடியும் வெளியே போனார்கள்.
யாத்திராகமம் 15 : 21 (RCTA)
மரியாம் இராகமெடுத்து: ஆண்டவருக்குப் பண்ணிசைப்போம். ஏனென்றால், அவர் பெரும் புகழோடு வெற்றியில் சிறந்தார்; குதிரையையும் அதன்மேல் ஏறியிருந்த வீரனையும் கடலிலே வீழ்த்தினார் என்று பாட்டுப்பாடினாள்.
யாத்திராகமம் 15 : 22 (RCTA)
மோயீசன் இஸ்ராயேல் மக்களைச் செங்கடலிலிருந்து வழிநடத்தின போது அவர்கள் சூர் என்னும் பாலைவனத்தில் புகுந்து, மூன்று நாட்களாய் ஆள்நடமாட்டமில்லாத வழியில் நடந்தனர். அவர்களுக்குத் தண்ணீர் அகப்படாமற் போயிற்று.
யாத்திராகமம் 15 : 23 (RCTA)
இறுதியில், அவர்கள் மாராவை அடைந்தனர். அவ்விடத்தில் தண்ணீர் கிடைத்தும், அது கசப்பாயிருந்ததால் அவர்கள் அதனைக் குடிக்க முடியவில்லை. ஆதலால், மோயீசன் அவ்விடத்திற்கு மாரா--அதாவது, கசப்பு--என்று அதற்குத் தக்க பெயரிட்டார்.
யாத்திராகமம் 15 : 24 (RCTA)
மக்கள் மோயீசனுக்கு விரோதமாய் முறுமுறுத்து: எதைக் குடிப்போம் என்று முறையிட,
யாத்திராகமம் 15 : 25 (RCTA)
மோயீசன் ஆண்டவரை நோக்கிக் கூப்பிட்டார். அவர் ஒரு மரத்தை அவருக்குக் காண்பித்தார். மோயீசன் அதைத் தண்ணீரில் போட்டவுடனே அது இனிமையான நன்னீராயிற்று. ஆண்டவர் அவ்விடத்திலே சிற்சில கட்டளைகளையும் நீதி நெறிகளையும் அவருக்குக் கொடுத்து, அங்கே மக்களைச் சோதித்து:
யாத்திராகமம் 15 : 26 (RCTA)
நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் வார்த்தைக்குச் செவி கொடுத்து, அவருடைய பார்வைக்குச் சரியானவைகளைச் செய்து, அவருடைய கட்டளைகளுக்கெல்லாம் கீழ்ப்படிந்து, அவருடைய சட்டங்கள் யாவையும் கைக்கொண்டு நடப்பீர்களாயின், எகிப்தியருக்கு நாம் வருவித்த வாதைகளில் ஒன்றையும் உங்கள்மேல் வரவிட மாட்டோம். ஏனென்றால், நாம் உங்களைக் குணப்படுத்தும் ஆண்டவர் என்றார்.
யாத்திராகமம் 15 : 27 (RCTA)
இஸ்ராயேல் மக்கள் ஏலிம் வந்துசேர்ந்தனர். அங்கே பன்னிரண்டு நீரூற்றுக்களும் எழுபது பனை மரங்களும் இருந்தன. அவர்கள் நீர்ச்சுனைகளின் அண்மையிலே பாளையம் இறங்கினர்.
❮
❯