யாத்திராகமம் 13 : 1 (RCTA)
மீண்டும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
யாத்திராகமம் 13 : 2 (RCTA)
இஸ்ராயேல் மக்களுக்குள் மனிதரிடையேயும் மிருகங்களிடையேயும் கருப்பையைத் திறந்து பிறக்கும் தலைப்பேறு அனைத்தையும் நமக்கு நேர்ச்சை செய்வாயாக. ஏனென்றால், எல்லாமே நம்முடையது என்றார்.
யாத்திராகமம் 13 : 3 (RCTA)
ஆகையால், மோயீசன் மக்களை நோக்கி: நீங்கள் எகிப்தினின்றும் அதன் அடிமைத்தனத்தினின்றும் விடுதலை அடைந்த இந்நாளை நினைவில் கொள்ளுங்கள். ஆண்டவர் தமது வலிய கையைக் கொண்டு உங்களை அவ்விடத்தினின்று வெளியேற்றினார் அல்லவா? ஆதலால், நீங்கள் புளித்த அப்பத்தை உண்ணாதிருக்கக் கடவீர்கள்.
யாத்திராகமம் 13 : 4 (RCTA)
அறுவடை மாதத்தில் இன்றுதானே நீங்கள் புறப்பட்டிருக்கிறீர்கள்.
யாத்திராகமம் 13 : 5 (RCTA)
(ஆண்டவர்:) உனக்குக் கொடுப்போம் என்று உன் முன்னோர்க்கு ஆணையிட்டருளியதும், கானானையர், ஏத்தையர், ஆமோறையர், ஏவையர், யெபுசேயர் ஆகியோரின் நாடுமாகிய பாலும் தேனும் பொழியும் நாட்டில் நீ புகுந்தபின் இந்தத்திருச் சடங்கை அனுசரித்துக் கொண்டாடி வருவாய்.
யாத்திராகமம் 13 : 6 (RCTA)
அதாவது, ஏழு நாள் புளியாத அப்பத்தை உண்பாய். ஏழாம் நாளோ ஆண்டவரின் திருவிழாவாம்.
யாத்திராகமம் 13 : 7 (RCTA)
ஏழு நாளும் புளியாத அப்பத்தை உண்பீர்கள். உன் வீட்டிலோ உன் எல்லைகளிலோ புளித்தது யாதொன்றும் காணப்படலாகாது.
யாத்திராகமம் 13 : 8 (RCTA)
அந்நாளிலே உன் மகனை நோக்கி: நான் எகிப்திலிருந்து புறப்பட்ட போது ஆண்டவர் எனக்குச் செய்தது இன்னது என்று அவனுக்கு விவரித்துச் சொல்வாய்.
யாத்திராகமம் 13 : 9 (RCTA)
ஆண்டவர் வலிய கையினால் உன்னை எகிப்தினின்று புறப்படச் செய்ததினால், அவருடைய திருக் கட்டளைகள் எக்காலமும் உன் வாயில் இருக்கும் என்பதற்கு அந்தத் திருவிழா உன் கையிலுள்ள ஓர் அடையாளம் போலவும், உன் கண்களுக்கு முன் நிற்கும் ஒரு நினைவுச் சின்னம் போலவும் இருக்கும்.
யாத்திராகமம் 13 : 10 (RCTA)
நீ ஆண்டு தோறும் குறித்த காலத்தில் இவ்விதச் சடங்கை அனுசரிக்கக் கடவாய்.
யாத்திராகமம் 13 : 11 (RCTA)
மேலும், ஆண்டவர் உனக்கும் உன் முன்னோர்களுக்கும் ஆணையிட்டு வாக்குக்கொடுத்த கானானையர் நாட்டினுள்ளே புகச்செய்து அந்த நாட்டை உனக்குக் கொடுத்த பின் கருப்பையைத் திறந்து பிறக்கும் அனைத்தையும்,
யாத்திராகமம் 13 : 12 (RCTA)
மிருகங்களின் முதலீற்று அனைத்தையும் ஆண்டவருடையவை என்று அவருக்காகப் பிரித்து வைப்பாய். அவற்றிலுள்ள ஆண்கள் அனைவற்றையும் ஆண்டவருக்கு ஒப்புக்கொடுப்பாயாக.
யாத்திராகமம் 13 : 13 (RCTA)
கழுதையின் தலையீற்றுக்குப் பதிலாக ஒர் ஆட்டைக் கொடுப்பாய். மீட்கக் கூடாதாயின் சாகடிப்பாய். ஆனால், மனிதனுக்குப் பிறக்கும் பிள்ளைகளில் தலைச்சன் மகனைப் பணம் கொடுத்து மீட்டுக் கொள்ளக்கடவாய்.
யாத்திராகமம் 13 : 14 (RCTA)
பிற்காலத்தில் உன் புதல்வன்: இது என்ன என்று வினவுங்கால், நீ அவனை நோக்கி: ஆண்டவர் வலிய கையால் எங்களை எகிப்து நாட்டினின்றும் அதன் அடிமைத்தனத்தினின்றும் விடுதலையாக்கினார்.
யாத்திராகமம் 13 : 15 (RCTA)
உண்மையில் பாரவோன் எங்களைப்போக விடாமல் முரண் செய்து கல் நெஞ்சன் ஆனதைக் கண்டு, ஆண்டவர் மனிதனுடைய தலைச்சன் மகன் முதற்கொண்டு மிருகங்களின் தலையீற்று வரை எகிப்திலுள்ள முதற்பேறானவை யெல்லாம் சாகடித்தார். அதைக்குறித்து, நானும் கருப்பையைத் திறந்து பிறக்கும் ஆணை யெல்லாம் ஆண்டவருக்குப் பலியிட்டு, என் புதல்வர்களில் முதற்பேறானவனை மீட்டுக் கொண்டும் வருகின்றேன் என்பாய்.
யாத்திராகமம் 13 : 16 (RCTA)
ஆகையால், இஃது உன் கையிலே ஓர் அடையாளமாகவும், உன் கண்களுக்குமுன் நிற்கும் ஒரு நினைவுச் சின்னமாகவும் இருக்கக் கடவது. ஏனென்றால், ஆண்டவர் வலிய கையினால் எங்களை எகிப்து நாட்டினின்று வெளிக்கொணர்ந்தார் என்று மோயீசன் சொன்னார்.
யாத்திராகமம் 13 : 17 (RCTA)
பாரவோன் மக்களைப் போகவிட்ட பின், போரைக் கண்டால் அவர்கள் மனமுடைந்து எகிப்துக்குத் திரும்புவார்கள் என்று கடவுள் எண்ணி, அவர்களைப் பிலிஸ்தியரின் நாட்டுக்குறுக்கு வழியாய்க் கொண்டு போகாமல்,
யாத்திராகமம் 13 : 18 (RCTA)
செங்கடல் ஓரத்தில் இருக்கும் பாலைநிலம் வழியே சுற்றிச் சுற்றிப் போகச் செய்தார். இஸ்ராயேல் மக்கள் ஆயுதம் அணிந்தவர்களாய் எகிப்து நாட்டிலிருந்து புறப்பட்டுப் போனார்கள்.
யாத்திராகமம் 13 : 19 (RCTA)
அன்றியும், மோயீசன் சூசையின் எலும்புகளைத் தம்மோடு எடுத்துக் கொண்டு போனார். ஏனென்றால்: கடவுள் உங்களைச் சந்திப்பார். (அப்பொழுது) நீங்கள் இவ்விடத்தினின்று என் எலும்புகளை உங்களோடு எடுத்துக்கொண்டு போங்கள் என்று சொல்லி, சூசை இஸ்ராயேல் மக்களை ஆணையிட்டு வாக்குறுதி கொடுக்கச் செய்திருந்தார்.
யாத்திராகமம் 13 : 20 (RCTA)
அவர்கள் சொக்கோட்டிலிருந்து புறப்பட்டு, பாலைநிலத்தின் ஓரமாய் உள்ள ஏத்தாமிலே தங்கினர்.
யாத்திராகமம் 13 : 21 (RCTA)
அவர்களுக்கு வழி காண்பிக்கத் தக்கதாக ஆண்டவர் பகலில் மேகத்தூணாகவும், இரவில் நெருப்புத் தூணாகவும் அவர்களுக்கு வழித்துணையாய் இருந்தார்.
யாத்திராகமம் 13 : 22 (RCTA)
பகலில் மேகத் தூணும் இரவில் நெருப்புத்தூணும் மக்களைவிட்டு ஒரு நாளும் விலகிப்போனதில்லை.
❮
❯