யாத்திராகமம் 1 : 1 (RCTA)
யாக்கோபோடு எகிப்தில் குடியேறிய இஸ்ராயேல் புதல்வரின் பெயர்களாவன: தத்தம் குடும்பத்தாரோடு அந்நாட்டில் குடியேறினவர்கள்,
யாத்திராகமம் 1 : 2 (RCTA)
ரூபன், சிமையோன்,
யாத்திராகமம் 1 : 3 (RCTA)
லேவி, யூதா, இசக்கார், சாபுலோன், பெஞ்சமின், தான், நெப்தலி,
யாத்திராகமம் 1 : 4 (RCTA)
காத், ஆசேர் முதலியோராம்.
யாத்திராகமம் 1 : 5 (RCTA)
ஆதலால், யாக்கோபிற்குப் பிறந்த யாவரும் எழுபது பேர். சூசையோ ஏற்கெனவே எகிப்தில் இருந்தான்.
யாத்திராகமம் 1 : 6 (RCTA)
இவனும், இவனுடைய சகோதரர், அவர்கள் தலைமுறையார் எல்லாரும் இறந்த பின்னர்,
யாத்திராகமம் 1 : 7 (RCTA)
இஸ்ராயேல் மக்கள் பலுகி, பெரும் திரளாய்ப் பெருகி, மிகவும் வலிமை படைத்தவர்களாய் அந்நாட்டை நிரப்பினர்.
யாத்திராகமம் 1 : 8 (RCTA)
இதற்கிடையில் புதிய அரசன் ஒருவன் எகிப்தை ஆள எழுந்தான். இவனோ சூசையை அறியாதவன்.
யாத்திராகமம் 1 : 9 (RCTA)
எனவே தன் மக்களை நோக்கி: இதோ, இஸ்ராயேல் புதல்வராகிய மக்கள் பெரும் திரளாய், நம்மிலும் வல்லவராய் இருக்கிறார்கள்.
யாத்திராகமம் 1 : 10 (RCTA)
வாருங்கள், அவர்கள் பெருகாதபடி நாம் அவர்களைத் தந்திரமாய் வதைக்க வேண்டும். இல்லாவிடில், ஏதேனும் போர் நேரிடும் காலத்தில் அவர்கள் நம் பகைவரோடு கூடி நம்மை வென்று நாட்டை விட்டுப் புறப்பட்டுப் போகக் கூடும் என்றான்.
யாத்திராகமம் 1 : 11 (RCTA)
அப்படியே அவன், சுமை சுமக்கும் கடின வேலையினால் அவர்களைத் துன்புறுத்தச் சொல்லி, வேலை வாங்கும் மேற்பார்வையாளரை நியமித்தான். அப்பொழுது அவர்கள் பாரவோனுக்குக் களஞ்சிய நகரங்களாகிய பிட்டோமையும் இராம்சேசையும் கட்டி எழுப்பினார்கள்.
யாத்திராகமம் 1 : 12 (RCTA)
ஆயினும், அவர்களை எவ்வளவுக்கு வருத்தினார்களோ அவ்வளவுக்கு அவர்கள் பெருகிப் பலுகினார்கள்.
யாத்திராகமம் 1 : 13 (RCTA)
எகிப்தியர் இஸ்ராயேல் மக்களைப் பகைத்துப் பழித்துத் துன்புறுத்தினர்.
யாத்திராகமம் 1 : 14 (RCTA)
சாந்து, செங்கல் சம்பந்தமான கொடிய வேலைகளாலும், மண் தொழில்களுக்குரிய பல வகைப் பணிவிடைகளாலும் அவர்களைக் கொடுமைப் படுத்தியதன் மூலம் அவர்களுக்கு வாழ்க்கையே கசப்பாகும்படி செய்தனர்.
யாத்திராகமம் 1 : 15 (RCTA)
அன்றியும், எகிப்து மன்னன், எபிரேயருக்குள் மருத்துவம் பார்த்து வந்த செவொறாள், பூவாள் என்பவர்களை நோக்கி:
யாத்திராகமம் 1 : 16 (RCTA)
நீங்கள் எபிரேயப் பெண்களுக்கு மருத்துவம் பார்க்கையில் பேறுகாலமாகும்போது ஆண்பிள்ளையானால் கொல்லுங்கள்; பெண்ணானால் காப்பாற்றுங்கள் என்று அவர்களுக்குக் கட்டளையிட்டான்.
யாத்திராகமம் 1 : 17 (RCTA)
மருத்துவச்சிகளோ, கடவுளுக்குப் பயந்திருந்தமையால், எகிப்து மன்னனின் கட்டளைப்படி செய்யாமல், ஆண்பிள்ளைகளையும் காப்பாற்றினார்கள்.
யாத்திராகமம் 1 : 18 (RCTA)
மன்னன் அவர்களைத் தன்னிடம் அழைப்பித்து: நீங்கள் என்ன காரணத்தின் பொருட்டு ஆண் குழந்தைகளைக் காப்பாற்றினீர்கள் என்று கேட்டான்.
யாத்திராகமம் 1 : 19 (RCTA)
அவர்கள்: எபிரேய மாதர்கள் எகிப்திய மாதர்களைப் போல் அல்லவே; அவர்கள் மருத்துவத் தொழிலை அறிவார்களாதலால், நாங்கள் அவர்களிடம் போய்ச்சேரு முன்பே பிள்ளை பிறந்து விடுகிறது என்று பதில் கூறினர்.
யாத்திராகமம் 1 : 20 (RCTA)
இதன் பொருட்டு கடவுள் மருத்துவச்சிகட்கு நன்மை புரிந்தார். மக்களோ, விருத்தி அடைந்து அதிக வல்லமையுற்றனர்.
யாத்திராகமம் 1 : 21 (RCTA)
மருத்துவச்சிகள் கடவுளுக்குப் பயந்து நடந்தமையால் அவர், அவர்களுடைய குடும்பங்களைத் தழைக்கச் செய்தார்.
யாத்திராகமம் 1 : 22 (RCTA)
அதன் பின், பாரவோன்: பிறக்கும் ஆண் குழந்தைகளையெல்லாம் ஆற்றில் எறிந்து விடுங்கள்; பெண் குழந்தைகளையெல்லாம் காப்பாற்றுங்கள் என்று தனது மக்கள் எல்லாருக்கும் கட்டளையிட்டான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22