எஸ்தர் 7 : 1 (RCTA)
இவ்வாறு அரசனும் ஆமானும் அரசியோடு விருந்து அருந்த வந்தார்கள்.
எஸ்தர் 7 : 2 (RCTA)
இந்த இரண்டாம் நாள் விருந்திலும் அரசன் மதுமயக்கம் கொண்டான். அப்பொழுது எஸ்தரை நோக்கி, "எஸ்தர், உனக்கு வேண்டியது என்ன? நீ விரும்புவது யாது? என் அரசில் பாதியை நீ கேட்பினும் நான் அதை உனக்குத் தருவேன்" என்றான்.
எஸ்தர் 7 : 3 (RCTA)
அவள் அவனுக்கு மறுமொழியாக, "அரசே, அடியாள் மீது கருணை கொள்ளத் தங்களுக்கு விருப்பம் இருந்தால் தாங்கள் எனக்கும் என் குலத்தவருக்கும் உயிர்ப்பிச்சை அளிக்க வேண்டும் என்று தங்களைக் கெஞ்சி மன்றாடுகிறேன்.
எஸ்தர் 7 : 4 (RCTA)
ஏனென்றால், நானும் என் குலத்தவரும் மிதிபட்டு வாளுக்கு இரையாகி அடியோடு அழியும்படி விற்கப்பட்டுள்ளோம். அடிமைகளாக நாங்கள் விற்கப்பட்டாலும் பரவாயில்லை; அதை எங்களால் தாங்கிக் கொள்ள முடியும்; நானும் அதுபற்றி மனம் வருந்தினாலும் ஒன்றும் பேசாமல் இருந்து விடுவேன். ஆனால், இப்பொழுது எம் பகைவனின் கொடும் செயலால் அரசரின் பெயருமல்லவா கெடுகின்றது!" என்றாள்.
எஸ்தர் 7 : 5 (RCTA)
அதற்கு அசுவேருஸ் அரசன், "ஆ! நீ கூறிய அம் மனிதன் யார்? இவ்வாறு செய்ய அவனுக்கு என்ன துணிவு?" என்று கேட்டான்.
எஸ்தர் 7 : 6 (RCTA)
அதற்கு எஸ்தர், "எங்கள் கொடிய எதிரியும் பெரும் பகைவனுமான அவன் வேறு எவனுமல்லன்; இதோ, இந்த ஆமானே தான்!" என்றனள். இதைக் கேட்டதும் ஆமான் திகிலடைந்தான். அரசனின் முகத்தையும் அரசியின் முகத்தையும் பார்க்க அவன் துணியவில்லை.
எஸ்தர் 7 : 7 (RCTA)
உடனே அரசன் கோபம் கொண்டு பந்தியை விட்டெழுந்து அரண்மனை அருகில் இருந்த சோலையில் புகுந்தான். அரசனால் தனக்குத் தீங்கு விளைவது திண்ணம் என்று உணர்ந்த ஆமான் தன் உயிருக்காக எஸ்தர் அரசியைக் கெஞ்சி மன்றாட எழுந்தான்.
எஸ்தர் 7 : 8 (RCTA)
அரசன் சோலையினின்று விருந்து நடந்த இடத்திற்குத் திரும்பி வந்த போது எஸ்தர் படுத்துக் கிடந்த படுக்கையில் ஆமான் விழுந்து கிடக்கக் கண்டு சினங்கொண்டு, "என் மாளிகையிலே, என் கண்முன்னே அரசியைக் கற்பழிக்க இவனுக்கு என்ன துணிச்சல்!" என்று கத்தினான். அரசன் இச்சொற்களைக் கூறி முடிக்கு முன்னே அங்கிருந்த ஊழியர் ஆமானின் முகத்தை மூடினர்.
எஸ்தர் 7 : 9 (RCTA)
அப்போது அரசனுக்கு ஏவல் புரிந்து வந்த அர்போனா எனும் ஓர் அண்ணகன் அரசனை நோக்கி, "அரசே, தங்கள் உயிரைக் காத்த மார்தொக்கேயைத் தூக்கிலிடுவதற்காக ஆமான் ஐம்பது முழ உயரமான தூக்குமரம் ஒன்று செய்துள்ளான். அது அவன் வீட்டிலே நாட்டப்பட்டிருக்கிறது" என்றான். உடனே அரசன், "அப்படியென்றால், அதிலேயே ஆமானைக் கட்டித்தொங்க விடுங்கள்" என்றான்.
எஸ்தர் 7 : 10 (RCTA)
எனவே மார்தொக்கேய்க்கென்று தான் தயாரித்திருந்த தூக்கு மரத்திலேயே ஆமான் தூக்கிலிடப்பட்டான். அப்பொழுது அரசனின் கோபம் தணிந்தது.
❮
❯