பிரசங்கி 5 : 1 (RCTA)
(4:17) நீ கடவுளின் ஆலயத்தினுள் புகும்போது அமைதியாய் நடக்கவும், அண்மையில் போய்ச் செவி கொடுத்துக் கேட்கவும் கடவாய். தாங்கள் செய்து வருகிற பொல்லாப்பைப்பற்றி ஒரு சிறிதும் கருதா மூடர்கள் இடும் பலிகளைக் காட்டிலும் கீழ்ப்படிதலே சிறந்தது.
பிரசங்கி 5 : 2 (RCTA)
(1) உன் வாயினாலே துணிச்சலாய்ப் பேசாதே. கடவுளுடைய சமூகத்தில் மனம் பதறி ஒரு வார்த்தையும் சொல்லாதே. ஏனென்றால், கடவுள் வானகத்தில் இருக்கிறார்; நீ பூமியில் இருக்கிறாய். ஆதலால், உன் வார்த்தைகள் கொஞ்சமாய் இருப்பனவாக.
பிரசங்கி 5 : 3 (RCTA)
(2) அதிகமான கவலைகளாலே கனவுகள் பிறப்பதுபோல் அதிகமான வார்த்தைகளாலே மூடத்தனம் காணப்படும்.
பிரசங்கி 5 : 4 (RCTA)
(3) நீ கடவளுக்கு ஒரு நேர்ச்சை செய்து கொண்டிருப்பாயாகில் அதைச் செலுத்தத் தாமதியாதே. பொய்யாய் மூடத்தனமாய்க் கொடுக்கப்பட்ட வாக்குறுதியை அவர் வெறுக்கிறார். நீ நேர்ந்து கொண்டதைச் செய்.
பிரசங்கி 5 : 5 (RCTA)
(4) உள்ளபடி நேர்ந்து கொண்டதைச் செய்யாமல் போவதைக்காட்டிலும் நேர்ந்து கொள்ளாமலிருப்பதே நல்லது.
பிரசங்கி 5 : 6 (RCTA)
(5) உன் உடலைப் பாவத்துக்கு உள்ளாக்க உன் வாயைப் பேசவிடாதே. மேலும், தெய்வச் செயல் என்று ஒன்றும் இல்லை என்று வானவன்முன் சொல்லாதே. சொன்னால், சிலவேளை கடவுள் உன் வார்த்தைகளாலே கோபங் கொண்டு உன் கைகளின் செயல்கள் எல்லாவற்றையும் அழித்தாலும் அழிக்கலாம்.
பிரசங்கி 5 : 7 (RCTA)
(6) கனவுகள் அதிகரிக்க, வியர்த்தங்களும் பேச்சுகளும் கணக்கின்றிமிகும். நீயோ கடவுளுக்கு அஞ்சியிரு.
பிரசங்கி 5 : 8 (RCTA)
(7) ஒரு மாநிலத்தில் ஏழைகள் ஒடுக்கப்படுவதையும், நியாயமும் நீதியும் புறக்கணிக்கப்படுவதையும் நீ காண்பாயாகில் அதைப்பற்றி வியப்படையாதே. ஏனென்றால், உயர்ந்தவனுக்குமேல் அதிக உயர்ந்தவனும் உண்டு. இவர்களுக்குமேல் இன்னும் அதிக மேற்பட்டவர்களும் உண்டு.
பிரசங்கி 5 : 9 (RCTA)
(8) கடைசியிலே உயர்ந்தவர்கள் எல்லாருக்கும் மேலாக ஓர் அரசனும் உண்டு. அவன் தன் நாடெங்கும் ஆட்சி செலுத்தி வருகிறான்.
பிரசங்கி 5 : 10 (RCTA)
(9) கஞ்சன் பணத்தினால் நிறைவு கொள்வதில்லை. பணத்தின்மேல் ஆசையாய் இருக்கிறவன் அதனால் பலனைப் பெறுவதில்லை. அது வீண் காரியம் அன்றோ?
பிரசங்கி 5 : 11 (RCTA)
(10) செல்வம் அதிகரிக்க, அதை உண்பவர்களும் மிகுவர். அதை உடையவனோ தன் கண்களினாலே செல்வங்களைக் காண்பதன்றி அவனுக்கு வேறென்ன பயன்?
பிரசங்கி 5 : 12 (RCTA)
(11) வேலை செய்து உழைக்கிறவன் அதிகம் உண்டாலும் கொஞ்சம் உண்டாலும் இன்பமாய்த் தூங்குவான். செல்வனுடைய செல்வப் பெருக்கோ அவனைத் தூங்க விடாது.
பிரசங்கி 5 : 13 (RCTA)
(12) இன்னமும் சூரியன் முகத்தே நான் கண்ட வேறொரு தீங்கும் உண்டு. அது என்னவென்றால், செல்வந்தன் தனக்குக் கேடுண்டாகத் தன் செல்வத்தைக் காப்பாற்றுவதாம்.
பிரசங்கி 5 : 14 (RCTA)
(13) ஏனென்றால், அந்தச் செல்வம் அழிந்துபோகிறது; அழிந்து போகிறதைக் கண்டு (அவன்) மிகக் கொடிய துயரம் அடைகிறான். அவன் பெற்ற பிள்ளைக்கு ஒன்றும் இல்லை.
பிரசங்கி 5 : 15 (RCTA)
(14) அவன் தாயின் கருவிலிருந்து அம்மணமாய் வெளிப்பட்டதுபோல் அம்மணமாய்ப் போவான். அவன் செய்த உழைப்பினால் உண்டான பொருள் ஒன்றையும் கையில் எடுத்துக் கொண்டு போவதில்லை.
பிரசங்கி 5 : 16 (RCTA)
(15) இது மிக வருந்தத்தக்க செயலன்றோ? அவன் வந்ததுபோலவே திரும்பிப் போவான். அவன் இப்படி வீணில் உழைத்தனால், அவனுக்குப் பயன் என்ன?
பிரசங்கி 5 : 17 (RCTA)
(16) அவன் தன் வாழ்நாளெல்லாம் இருட்டில் பல கவலையோடும் துன்ப துயரங்களோடும் கஞ்சி குடித்தானே!
பிரசங்கி 5 : 18 (RCTA)
(17) ஆகையினால், ஒருவன் உண்டு குடித்து உயிரோடிருக்கும்படி கடவுள் அவனுக்கு அருளிய வாழ்நாள் முழுதும் (அவன்) சூரியன் முகத்தே வருந்திச் செய்த வேலையின் பயனை அனுபவிப்பது நலமென்று எனக்குத் தேன்றியது. இதுவே அவனுடைய பங்கு.
பிரசங்கி 5 : 19 (RCTA)
(18) கடவுள் செல்வங்களையும் சொத்துகளையும் எவனுக்குத் தந்தருளினாரோ அவன் அவற்றினின்று உண்டு, தன் பங்கென்று பெற்று இன்புற்று, தன் உழைப்பிலே மகிழ்ச்சியடைந்தால், அது கடவுளுடைய அருளேயாம்.
பிரசங்கி 5 : 20 (RCTA)
(19) கடவுள் அவனுடைய இதயத்திற்கு இன்பத்தைத் தந்தருளினபடியால் அவன் தன் வாழ்நாட்களை அதிகமாய் நினையான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20