பிரசங்கி 3 : 1 (RCTA)
ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காலம் உண்டு; வானத்தின்கீழ் நிகழ்வனவெல்லாம் அதற்குக் குறிக்கப்பட்ட கெடுவின்படி நடக்கின்றன. பிறக்க ஒரு காலமுண்டு;
பிரசங்கி 3 : 2 (RCTA)
இறக்க ஒரு காலமுண்டு. நடுவதற்கு ஒரு காலமுண்டு; நட்டதைப் பிடுங்குவதற்கு ஒரு காலமுண்டு.
பிரசங்கி 3 : 3 (RCTA)
கொல்ல ஒரு காலமுண்டு; குணமாக்க ஒரு காலமுண்டு. இடிக்க ஒரு காலமுண்டு; கட்ட ஒரு காலமுண்டு.
பிரசங்கி 3 : 4 (RCTA)
கண்ணீர்விட ஒரு காலமுண்டு; சிரிக்க ஒரு காலமுண்டு. புலம்ப ஒரு காலமுண்டு; கூத்தாட ஒரு காலமுண்டு.
பிரசங்கி 3 : 5 (RCTA)
கற்களை எறிந்துவிட ஒரு காலமுண்டு; கற்களைச் சேர்ப்பதற்கு ஒரு காலமுண்டு. தழுவுவதற்கு ஒரு காலமுண்டு; தழுவாதிருப்பதற்கு ஒரு காலமுண்டு.
பிரசங்கி 3 : 6 (RCTA)
பொருட்களைத் தேட ஒரு காலமுண்டு; இழக்க ஒரு காலமுண்டு. காப்பாற்ற ஒரு காலமுண்டு; எறிந்துவிட ஒரு காலமுண்டு.
பிரசங்கி 3 : 7 (RCTA)
கிழிக்க ஒரு காலமுண்டு; தைக்க ஒரு காலமுண்டு. மௌனமாயிருக்க ஒரு காலமுண்டு; பேச ஒரு காலமுண்டு.
பிரசங்கி 3 : 8 (RCTA)
அன்பு செய்ய ஒரு காலமுண்டு; பகைக்க ஒரு காலமுண்டு. போர்புரிய ஒரு காலமுண்டு; சமாதானம் செய்ய ஒரு காலமுண்டு.
பிரசங்கி 3 : 9 (RCTA)
வருந்தி உழைப்பதனால் மனிதனுக்குப் பயன் என்ன?
பிரசங்கி 3 : 10 (RCTA)
மனுமக்கள் பாடுபட்டுப் பரிசோதிக்கப்படும்படி கடவுள் அவர்களுக்கு நியமித்துள்ள தொல்லையைக் கண்டேன்.
பிரசங்கி 3 : 11 (RCTA)
அவர் எல்லாவற்றையும் அதனதன் காலத்திலே நல்லதாய் இருக்கும்படி செய்திருக்கிறார். உலகத்தையோ அதைக் குறித்து அவர்கள் விவாதிப்பதற்கு விட்டுவிட்டார். உண்மையில் கடவுளுடைய செயலெல்லாவற்றையும் தொடக்கத்திலிருந்து முடியும் வரையிலும் கண்டுபிடிக்கிற மனிதன் ஒருவனுமில்லை.
பிரசங்கி 3 : 12 (RCTA)
என் வாழ்நாட்களில் மகிழ்வதையும் நன்மை செய்வதையும்விட நலமானது ஒன்றுமில்லை என்று அறிந்தேன்.
பிரசங்கி 3 : 13 (RCTA)
ஏனென்றால், ஒருவன் உண்டு குடித்துத் தன் உழைப்பால் உண்டான நன்மையைப் பார்ப்பது அவனுக்குக் கடவுள் தந்த வரம்.
பிரசங்கி 3 : 14 (RCTA)
கடவுள் செய்த செயலெல்லாம் என்றைக்கும் நிலைத்திருக்குமென்று அறிவேன். மனிதர் தமக்கு அஞ்சும்படி கடவுள் செய்தது எதுவோ, அதனோடு நாம் ஒன்றும் குறைக்கவும் இயலாது.
பிரசங்கி 3 : 15 (RCTA)
உண்டாயிருந்தது எதுவோ, அதுவே இப்பொழுது இருக்கிறது; இனி உண்டாகப் போவது எதுவோ, அது ஏற்கனவே இருந்திருக்கிறது; கடந்து போனதையோ கடவுள் புதுப்பிக்கிறார்.
பிரசங்கி 3 : 16 (RCTA)
சூரியன் முகத்தே நீதிமன்றத்தில் அநீதமும் நியாய மன்றத்தில் அக்கிரமும் இருக்கக் கண்டேன்.
பிரசங்கி 3 : 17 (RCTA)
ஆதலால், கடவுள் நீதிமானையும் நெறிகெட்டவனையும் நடுத்தீர்ப்பார் என்றும், அப்பொழுது எல்லாவற்றுக்கும் காலம் முடியுமென்றும் என் மனத்தில் உணர்ந்தேன்.
பிரசங்கி 3 : 18 (RCTA)
மேலும் மனுமக்களைக் கடவுள் சோதிப்பதற்காக அவர்கள் மிருகங்களைப்போல் இருக்கிறார்கள் என நான் மனிதருடைய நிலைமையைக் குறித்து என் உள்ளத்தில் எண்ணினேன்.
பிரசங்கி 3 : 19 (RCTA)
அதைப் பற்றியே மனிதனுக்கும் சரி, மிருகங்களுக்கும் சரி - ஒரே விதச் சாவு. அவனுக்கும் இவைகளுக்கும் ஒரே முடிவு. மனிதன் சாவது எவ்விதமோ அவ்விதமே மிருகமும் சாகும். உயிர்களுக்கெல்லாம் மூச்சு ஒன்றே. (இது காரியத்தில்) மிருகத்தைக் காட்டிலும் மனிதன் மேன்மையுள்ளவன் அல்லன். எல்லாம் வீணே.
பிரசங்கி 3 : 20 (RCTA)
எல்லாம் ஒரே இடத்துக்குப் போகின்றன. எல்லாம் மண்ணினால் உண்டானவை; எல்லாம் மண்ணுக்குத் திரும்பும்.
பிரசங்கி 3 : 21 (RCTA)
ஆதாமின் மக்களுடைய ஆன்மா உயர ஏறுகிறதென்றும், மிருகங்களின் ஆவி தாழ இறங்குகிறதென்றும் அறிகிறவன் யார்?
பிரசங்கி 3 : 22 (RCTA)
இப்படியிருக்கிறபடியால், மனிதன் தன் செயல்களில் மகிழ்வுறுதல் நலமேயொழிய அவனுக்கு வேறென்ன நலமாயிருக்கும்? இதுவே மனிதனுடைய பங்கு. தனக்குப்பின் நிகழப்போவது இன்னதென்று அவன் அறியும்படி அவனைத் திரும்பி வரச் செய்ய யாராலே கூடும்?

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22