பிரசங்கி 11 : 1 (RCTA)
ஓடும் தண்ணீரின்மேல் உன் அப்பத்தை விடு. ஏனென்றால், நெடுங் காலத்துக்குப்பின் அதைக் கண்டெடுப்பாய்.
பிரசங்கி 11 : 2 (RCTA)
அதை ஏழு பேருக்கும், எட்டுப் பேருக்கும் பங்கிட்டுக் கொடு. ஏனென்றால், வருங்காலத்தில் உனக்கு என்ன தீங்கு நேரிடுமோ, உனக்குத் தெரியாது.
பிரசங்கி 11 : 3 (RCTA)
கார்மேகங்கள் நிறைந்திருந்தால் பூமியின் மேல் மழை பெய்யும். மரம் தெற்கே விழுந்தாலும் வடக்கே விழுந்தாலும், விழுந்த இடத்திலேயே கிடக்கும்.
பிரசங்கி 11 : 4 (RCTA)
காற்றைக் கவனிக்கிறவன் விதை விதைக்கிறதுமில்லை; மேகங்களைக் கவனிக்கிறவன் அறுவடை செய்கிறதுமில்லை.
பிரசங்கி 11 : 5 (RCTA)
உயிர் உண்டாகும் விதம் இன்னதென்றும், கருவுற்றவளின் வயிற்றிலே எலும்புகள் உருவாகும் விதம் இன்னதென்றும் நீ அறியாதிருக்கிறது போலவே, எல்லாவற்றையும் உண்டாக்கின கடவுளின் செயல்களையும் நீ அறிவாய்.
பிரசங்கி 11 : 6 (RCTA)
விதையைக் காலையிலே விதை; மாலையிலேயும் கை சலிக்காமல் விதை; ஏனென்றால், இதுவோ அதுவோ எது வாய்க்குமென்று உனக்குத் தெரியாது. இரண்டும் வாய்க்குமானாலும் தாவிளை.
பிரசங்கி 11 : 7 (RCTA)
வெளிச்சம் இன்பமாயும் சூரியனைக் காண்பது விருப்பமாயும் இருக்கின்றன.
பிரசங்கி 11 : 8 (RCTA)
ஒரு மனிதன் பல ஆண்டு வாழ்ந்து அவைகளிலெல்லாம் களித்திருந்தாலும், அவன் இருளின் நாட்களை நினைக்க வேண்டியதுமன்றி, கணக்கற்ற நாட்களையும் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும். அவைகளால் அல்லவோ நிகழ்ந்த காலமெல்லாம் வீணென்று தெளிவாகும்!
பிரசங்கி 11 : 9 (RCTA)
ஆகையால், இளைஞனே, உன் இளமையிலே மகிழ்ச்சியாய் இரு; உன் வாலிப நாட்களில் உன் இதயம் மகிழட்டும்; உன் மனமும் கண்களும் போன வழியே நட. ஆனால், இந்த எல்லாக் காரியத்திலும் கணக்குச் சொல்லக் கடவுள் உன்னை நீதியாசனத்தின்முன் அழைத்துக்கொண்டு போய் நிறுத்துவாரென்பதை மறவாதே.
பிரசங்கி 11 : 10 (RCTA)
உன் இதயத்தினின்று கோபத்தையும், உன் உடலினின்று கெட்டவையாவையும் நீ விலக்கக்கடவாய். ஏனென்றால், இளமையும் வீண்; சிற்றின்பமும் வீணே.

1 2 3 4 5 6 7 8 9 10