பிரசங்கி 1 : 1 (RCTA)
தாவீதின் மகனும் யெருசலேம் மன்னனுமாகிய சங்கப் போதகனின் வாக்கியங்களாவன:
பிரசங்கி 1 : 2 (RCTA)
வீணிலும் வீண் என்று உரைத்தான் சங்கப் போதகன். வீணிலும் வீண், எல்லாமே வீண் என்கிறான்.
பிரசங்கி 1 : 3 (RCTA)
சூரியன் முகத்தே மனிதன் உழைத்து மேற்கொள்ளும் எல்லா முயற்சியினாலும் அவனுக்கு வரும் பயன் என்ன?
பிரசங்கி 1 : 4 (RCTA)
ஒரு தலைமுறை போகிறது; மறு தலைமுறை வருகிறது. பூமியோ என்றைக்கும் நிலைத்திருக்கின்றது.
பிரசங்கி 1 : 5 (RCTA)
சூரியன் உதிக்கிறது; பின்னர் மறைந்து, தான் உதித்த இடத்திற்கே திரும்பச் சென்று, அங்கிருந்து மறுபடியும் உதயமாகி,
பிரசங்கி 1 : 6 (RCTA)
தெற்கே சாய்ந்து வடக்கே ஏறிப்போகும். காற்று சுழன்று சுழன்று அடித்துத் தான் சுற்றின இடத்துக்கே திரும்பவும் வருகிறது.
பிரசங்கி 1 : 7 (RCTA)
எல்லா ஆறுகளும் கடலில் ஓடி விழுந்தும் கடல் நிரம்பிக் கரைபுரளாது; ஆறுகள் தாங்கள் உற்பத்தியான இடத்திற்கு மறுபடி திரும்பி ஓடும்.
பிரசங்கி 1 : 8 (RCTA)
எல்லாக் காரியங்களும் கண்டுபிடிக்க அரியனவாய் இருக்கின்றன. அவை எத்தகையன என்று மனிதரால் சொல்ல முடியாது. காண்கிறதனால் கண் நிறைவடைவதுமில்லை; கேட்கிறதனால் செவி நிறைவு பெறுவதுமில்லை.
பிரசங்கி 1 : 9 (RCTA)
முன் இருந்ததே இனிமேலும் இருக்கும்; முன் செய்யப்பட்டதே இனிமேலும் செய்யப்படும்.
பிரசங்கி 1 : 10 (RCTA)
சூரியன் முகத்தே புதியது ஒன்றும் இல்லை. இதைப் பார்; இது நவீனம் என்று எவனும் சொல்ல இயலாது. ஏனென்றால், அது நமக்கு முன் சென்ற பழங்காலங்களிலும் இருந்தது.
பிரசங்கி 1 : 11 (RCTA)
முன் இருந்தவைகளின் ஞாபகம் இப்பொழுது இல்லை. அப்படியே பின்வரும் காரியங்களைப் பற்றியும் இனி இறுதிக் காலத்தில் இருப்பவர்களுக்கு ஞாபகம் இராது.
பிரசங்கி 1 : 12 (RCTA)
சங்கப் போதகனாகிய நான் யெருசலேமில் இஸ்ராயேலின் அரசனாய் இருந்தேன்.
பிரசங்கி 1 : 13 (RCTA)
அப்போது சூரியன் முகத்தே நிகழ்கின்றவற்றையெல்லாம் ஞானமுடன் விசாரித்து ஆராய எனக்குள் தீர்மானித்தேன். மனுமக்கள் இந்தக்கடும் தொல்லையில் அலுவலாய் இருப்பதற்குக் கடவுள் அதை மனிதர்களுக்கு நியமித்திருக்கிறார்.
பிரசங்கி 1 : 14 (RCTA)
சூரியன் முகத்தே உண்டாகின்ற காரியங்களை யெல்லாம் கவனித்துப் பார்த்தேன். இதோ, எல்லாம் விழலும் மனத்துக்குத் துயரமுமாய் இருக்கின்றன.
பிரசங்கி 1 : 15 (RCTA)
அக்கிரமிகள் மனந் திரும்புதல் அரிது. அறிவில்லாதவர்களுடைய கணக்கு எண்ணில் அடங்காதது.
பிரசங்கி 1 : 16 (RCTA)
நான் என் உள்ளத்திலே சொல்லிக் கொண்டது என்ன வென்றால்: இதோ, நான் பெரியவனானேன்; எனக்குமுன் யெருசலேமில் இருந்த எல்லாரையும்விட ஞானத்திலே தேர்ச்சி அடைந்தேன்; எத்தனையோ காரியங்களை ஆராய்ந்து பார்த்தேன்; எத்தனையோ கண்டுபிடித்தேன்;
பிரசங்கி 1 : 17 (RCTA)
இறுதியில், ஞானத்தையும் அறிவுக் கலையையும் மதியீனத்தையும் அறிய வேண்டுமென்று முயன்றேன்; ஆனால், அதுவும் வீண் தொல்லையும் மனத்துயரமுமாய் இருக்கின்றதென்று கண்டேன்.
பிரசங்கி 1 : 18 (RCTA)
ஏனென்றால், அதிக ஞானத்தால் அதிகச் சலிப்பு உண்டாகும். படிக்கப் படிக்கத் தொல்லையும் அதிகரிக்கும்.
❮
❯