உபாகமம் 9 : 1 (RCTA)
இஸ்ராயேலே, கேள். நீ இன்று யோர்தானைக் கடந்து, உன்னிலும் மக்கள் நிறைந்த வலிய இனத்தாரையும் வானளாவிய மதில் சூழ்ந்த நகர்களையும் வயப்படுத்தப் போகிறாய்.
உபாகமம் 9 : 2 (RCTA)
அவர்கள் ஏனாக்கின் புதல்வர்; வலுத்த இனம்; நெடிய ஆட்கள்; நீ அவர்களைக் கண்டிருக்கிறாய். அவர்களுக்கு முன்பாக எதிர்த்து நிற்கத்தக்கவர் ஒருவருமில்லையென்று நீ கேள்விப்பட்டிருக்கிறாய்.
உபாகமம் 9 : 3 (RCTA)
அப்படியிருக்க, உன் கடவுளாகிய ஆண்டவரே உனக்குமுன்பாக நடப்பாரென்பதை இன்று நீ கண்டறிவாய். அவர் எரிக்கும் நெருப்பைப்போல் அவர்களை அடித்து மடக்கி விரைவில் அழித்துவிடுவார். அவர் உனக்கு முன்சொல்லியிருப்பது போல், உன் கண்களுக்கு முன்பாகவே அவர்களை அழித்தொழிப்பார்.
உபாகமம் 9 : 4 (RCTA)
உன் கடவுளாகிய ஆண்டவர் அவர்களை உன் முன்னிலையில் அழித்த பின்னரோ, நீ: ஆ! இந்த மக்கள் தங்கள் அக்கிரமத்தின் பொருட்டு அழிவுண்டமையால், நான் நீதிமானென்று ஆண்டவர் இந்த நாட்டை உரிமையாக்கிக் கொள்ளும்படி என்னை அழைத்து வந்தார் என்று உன் இதயத்தில் நினைக்காதே.
உபாகமம் 9 : 5 (RCTA)
உள்ளபடி நீ அவர்களுடைய நாட்டை உரிமையாக்கிக் கொள்ளும் பொருட்டுப் புகுந்தது உன்னுடைய புண்ணியத்தாலும் அன்று; நேர்மையாலும் அன்று. அவ்வினத்தாருடைய அக்கிரமத்தைப் பற்றியும், ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு ஆகிய உன் மூதாதையருக்கு ஆண்டவர் ஆணையிட்டுக் கொடுத்த வார்த்தையை நிறைவேற்ற வேண்டியதை முன்னிட்டுமே, அவர்கள் உன் கண்களுக்குமுன் அழிக்கப்பட்டார்கள்.
உபாகமம் 9 : 6 (RCTA)
நீ வணங்காக் கழுத்துள்ள குடியாய் இருக்க, உன் கடவுளாகிய ஆண்டவர் அந்த நல்ல நாட்டை உனக்கு உரிமையாய்க் கொடுத்தது உன் புண்ணியத்தைப் பற்றி அன்று.
உபாகமம் 9 : 7 (RCTA)
பாலைவனத்திலே உன் கடவுளாகிய ஆண்டவருக்குக் கடும் கோபம் உண்டாக நீ காரணமாய் இருந்ததை நினை. எகிப்திலிருந்து புறப்பட்ட நாள்முதல் இவ்விடம் சேரும் வரையிலும் நீ எப்பொழுதும் கடவுளை எதிர்த்து முரண்டிக் கொண்டேயிருந்தாய்.
உபாகமம் 9 : 8 (RCTA)
ஓரேபில் முதலாய் நீ அவருக்குக் கோபம் உண்டாக்க, அவர் கோபம் கொண்டு உன்னை அழிக்க நினைத்தார்.
உபாகமம் 9 : 9 (RCTA)
ஆண்டவர் உங்களோடு செய்துகொண்ட உடன்படிக்கை கற்பலகைகளை வாங்கிக்கொள்ளும் பொருட்டு நான் மலையில் ஏறினபோது, அப்பம் உண்ணாமலும் தண்ணீர் குடியாமலும் நாற்பது நாள் இரவும் பகலும் மலையில் தங்கியிருந்தேன்.
உபாகமம் 9 : 10 (RCTA)
அப்பொழுது கடவுளுடைய விரலினால் எழுதியிருந்த இரண்டு கற்பலகைகளை ஆண்டவர் என்னிடம் கொடுத்தார். சபை கூடியிருந்த நாளில் அவர் மலையிலே நெருப்பின் நடுவில் இருந்து உங்களோடு பேசிய எல்லா வாக்கியங்களும் அவைகளில் எழுதப்பட்டிருந்தன.
உபாகமம் 9 : 11 (RCTA)
நாற்பது பகலும் நாற்பது இரவும் கழிந்த பின்பு, உடன்படிக்கைப் பலகைகளாகிய இரண்டு கற்பலகைகளையும் எனக்குக் கொடுத்தபோது, அவர் என்னை நோக்கி:
உபாகமம் 9 : 12 (RCTA)
நீ எழுந்து விரைவில் இவ்விடம் விட்டு இறங்கிப்போ. ஏனென்றால், நீ எகிப்தினின்று புறப்படச் செய்த உன் மக்கள் நீ காட்டிய நெறியை விட்டு விலகி, வார்க்கப்பட்ட ஓர் உருவத்தைத் தங்களுக்கு உண்டாக்கிக் கொண்டார்கள் என்றார்.
உபாகமம் 9 : 13 (RCTA)
மறுபடியும் ஆண்டவர் என்னை நோக்கி: இந்த மக்களைப் பார்த்தேன். அது வணங்காக் கழுத்துள்ள இனம்.
உபாகமம் 9 : 14 (RCTA)
நம்மை விட்டுவிடு. அவர்களை நாம் அழித்து அவர்கள் பெயரை வானத்தின் கீழிருந்து நீக்கிவிட்டு, அவர்களைக்காட்டிலும் மக்கள் நிறைந்ததும் வலிமையுள்ளதுமான இன்னொரு இனத்திற்கு உன்னைத் தலைவனாக்குவோம் என்றார்.
உபாகமம் 9 : 15 (RCTA)
பிறகு நான் எரிகிற மலையிலிருந்து உடன்படிக்கையின் இரண்டு பலகைகளையும் என் இருகைகளில் பிடித்துக்கொண்டு இறங்கிவந்து, பார்த்தேன்
உபாகமம் 9 : 16 (RCTA)
நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராகப் பாவத்தில் விழுந்து, வார்க்கப்பட்ட ஒரு கன்றுக்குட்டியைச் செய்து, அவர் உங்களுக்குக் காட்டின நெறியை அவ்வளவு விரைவில் விட்டுவிலகினீர்களென்று நான் கண்டபோது,
உபாகமம் 9 : 17 (RCTA)
என் கையிலிருந்த பலகைகளை எறிந்து, உங்கள் முன்னிலையில் அவற்றை உடைத்தேன்.
உபாகமம் 9 : 18 (RCTA)
பிறகு, நீங்கள் ஆண்டவருக்குக் கோபமுண்டாகுமாறு அவருக்கு எதிராகக் கட்டிக்கொண்ட பாவமனைத்திற்கும் நான் முன்போல ஆண்டவருடைய முன்னிலையில் விழுந்து, இரவு பகல் நாற்பது நாளும் அப்பம் உண்ணாமலும் தண்ணீர் குடியாமலும் இருந்தேன்.
உபாகமம் 9 : 19 (RCTA)
ஏனென்றால், உங்களை அழிக்கும்படி அவர் கொண்டிருந்த கோபநெருப்பிற்கும் சினத்திற்கும் நான் அஞ்சினேன். ஆண்டவரோ அம்முறையும் என் மன்றாட்டைக் கேட்டருளினார்.
உபாகமம் 9 : 20 (RCTA)
ஆரோன்மீதும் அவர் மிகவும் சினம் கொண்டு அவனை அழிக்க மனம் கொண்டிருந்தார். நானோ பரிந்து பேசி ஆரோனையும் காத்தேன்.
உபாகமம் 9 : 21 (RCTA)
உங்கள் பாவப்பொருளாகிய அந்தக் கன்றுக் குட்டியையோ நான் எடுத்து உடைத்து நொறுக்கித் தூளாக்கி நெருப்பில் எரித்து மலையினின்று இறங்கும் அருவியில் எறிந்து விட்டேன்.
உபாகமம் 9 : 22 (RCTA)
நீங்கள், எரிச்சல் இடத்திலும் சோதனை இடத்திலும், ஆசைகோரி என்னும் இடத்திலும் ஆண்டவருக்குக் கோப மூட்டினீர்கள்.
உபாகமம் 9 : 23 (RCTA)
இன்னும் அவர் உங்களைக் காதேஸ் பர்னேயிலிருந்து அனுப்பி: நீங்கள் போய், நாம் உங்களுக்குக் கொடுத்த நாட்டை உரிமையாக்கிக் கொள்ளுங்கள் என்று கட்டளையிட்டபோது, நீங்கள் கடவுளாகிய ஆண்டவரை நம்பாமலும், அவருடைய குரலொலிக்குச் செவிக்கொடாமலும், அவர் இட்ட கட்டளையை மீறி நடந்தீர்கள்.
உபாகமம் 9 : 24 (RCTA)
நான் உங்களை அறிந்த நாள் முதற்கொண்டு நீங்கள் இவ்விதமே மூர்க்கத்தனமாய்க் கலகம் செய்கிறவர்களாகவே இருந்தீர்கள்.
உபாகமம் 9 : 25 (RCTA)
ஆண்டவர் உங்களை அழிப்போமென்று சொல்லியமையால், நான் இரவு பகல் நாற்பது நாளும் அவர் திருமுன் பணிந்திருந்து, அவர் உங்களை அழிக்க வேண்டாமென்று கெஞ்சி விண்ணப்பம் செய்து, அவரை நோக்கி:
உபாகமம் 9 : 26 (RCTA)
கடவுளாகிய ஆண்டவரே, நீர் உமது மகத்துவத்தால் மீட்டு வலியகையால் எகிப்திலிருந்து கொண்டு வந்த உம்முடைய மக்களையும் உடைமையையும் அழிக்காதிருப்பீராக.
உபாகமம் 9 : 27 (RCTA)
ஆபிரகாம், ஈசாக், யாக்கோபு என்ற உம் ஊழியர்களை நினைத்தருளும். இம்மக்களின் மூர்க்கத்தனத்தையும் அக்கிரமத்தையும் பாதகத்தையும் பாராதீர்.
உபாகமம் 9 : 28 (RCTA)
(அவர்களை அழித்தால்) நீர் எங்களை மீட்டுப் புறப்படச் செய்த நாட்டில் வாழ்வோர் நிந்தையாய்ப் பேசி; ஓகோ! ஆண்டவர் அவர்களுக்கு வாக்குறுதி செய்திருந்த நாட்டில் அவர்களைப் புகுவிக்க இயலாமற் போனபடியாலும், அவர்களை வெறுத்துப் பகைத்ததனாலும் அன்றோ, பாலைவனத்தில் அவர்களைக் கொன்றுபோடுமாறு எகிப்திலிருந்து கொண்டுவந்தார் என்று சொல்லுவார்கள்.
உபாகமம் 9 : 29 (RCTA)
ஆண்டவரே, உமது மிகுந்த வலிமையினாலும் ஓங்கிய கையாலும் புறப்படச் செய்த இவர்கள் உம்முடைய மக்களும் உடைமையுமாய் இருக்கிறார்கள் என்று (விண்ணப்பம் செய்தேன். )
❮
❯