உபாகமம் 8 : 1 (RCTA)
நீங்கள் வாழ்ந்து பெருகி, ஆண்டவர் உங்கள் மூதாதையருக்கு ஆணையிட்டுக் கொடுத்த நாட்டில் புகுந்து அதை உரிமையாக்கிக் கொள்ள, நான் இன்று உங்களுக்குக் கற்பிக்கிற கட்டளைகளையெல்லாம் அனுசரிக்கக் கவனமாய் இருப்பீர்களாக.
உபாகமம் 8 : 2 (RCTA)
உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னைப் படைத்து, உன்னைப் பரிசோதித்து, தம்முடைய கட்டளைகளை நீ அனுசரிப்பாயோ அனுசரிக்க மாட்டாயோவென்று உன் இதயத்திலுள்ளதை நீயே அறியும்படியாக, நாற்பதாண்டளவாய் பாலைவனத்திலே உன்னை நடத்திவந்த எல்லா வழிகளையும் நினைப்பாயாக.
உபாகமம் 8 : 3 (RCTA)
(உள்ளபடி) அவர் உன்னைப் பசியினால் வருத்தினார். பின்பு நீயும் உன் முன்னோரும் அறிந்திராத மன்னாவை உனக்கு அளித்தார். அதனால்: மனிதன் அப்பத்தினால் மட்டும் அன்று, கடவுள் வாயினின்று வரும் ஒவ்வொரு சொல்லினாலும் உயிர் வாழ்கிறான் என்று உனக்குக் காண்பித்தருளினார்.
உபாகமம் 8 : 4 (RCTA)
இந்த நாற்பதாண்டும் நீ உடுத்தியிருந்த ஆடை பழையதாகிக் கிழியவுமில்லை; உன் காலடி காயமுறவுமில்லை.
உபாகமம் 8 : 5 (RCTA)
ஆதலால் ஒருவன் தன் மகனுக்குக் கற்பிப்பதுபோல், கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கற்பித்தாரென்று நீ உன் இதயத்தில் உணர்ந்து அறிந்துகொள்வாயாக.
உபாகமம் 8 : 6 (RCTA)
நீ உன் கடவுளாகிய ஆண்டவருடைய கட்டளைகளைக் கைக்கொண்டு, அவருடைய வழிகளில் நடந்து, அவருக்கு அஞ்சும்படியன்றோ (அவர் அவ்வாறு உன்னைப் படைத்தார்).
உபாகமம் 8 : 7 (RCTA)
ஏனென்றால், உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னை நல்ல நிலத்திலே புகச்செய்வார். அது ஆறு, ஏரி, ஊற்றுகள் மிகுந்த நாடு. அதிலுள்ள பள்ளத்தாக்குகளிலும் மலைகளிலும் பல நதிகள் புறப்படுகின்றன.
உபாகமம் 8 : 8 (RCTA)
கோதுமை வாற்கோதுமை முந்திரிக்கொடிகளும், அத்திமரம் ஒலிவமரம் மாதுளஞ் செடிகளும் அதிலே வளரும். அவ்விடத்தில் எண்ணெயும் தேனும் மிகுதியாக உண்டு.
உபாகமம் 8 : 9 (RCTA)
அது எக்காலமும் நிறைவாக (நீ) அப்பம் உண்ணத்தக்கதும், ஒன்றும் உனக்குக் குறைவு வைக்காததுமான நாடு. அதில் கற்கள் இரும்பாய் இருக்கின்றன. அதன் மலைகளில் செம்பு வெட்டியெடுக்கப்படுகிறது.
உபாகமம் 8 : 10 (RCTA)
ஆகையால், நீ உண்டு நிறைவு கொண்டபோது உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுத்த சிறந்த நாட்டிற்காக அவரைப் போற்றக் கடவாய்.
உபாகமம் 8 : 11 (RCTA)
நீ ஒருபோதும் உன் கடவுளாகிய ஆண்டவரை மறவாதே. நான் இன்று உனக்கு விதிக்கின்ற அவருடைய கட்டளைகளையும் சடங்கு ஆசாரங்களையும் நீதிமுறைகளையும் அசட்டை செய்யாதபடிக்கு எச்சரிக்கையாய் இருப்பாயாக.
உபாகமம் 8 : 12 (RCTA)
இல்லாவிட்டால், நீ உண்டு நிறைவு கொண்டு அழகிய வீடுகளைக் கட்டி அவைகளில் குடியிருக்கும்போதும், ஆட்டுமந்தைகளையும்
உபாகமம் 8 : 13 (RCTA)
மாட்டுமந்தைகளையும் சம்பாதித்துப் பொன்னையும் வெள்ளியையும் மிகுதியாய்க் கைக்கொண்டிருக்கும் போதும், ஒருவேளை நீ செருக்குற்றவனாய்,
உபாகமம் 8 : 14 (RCTA)
உன்னை எகிப்திலும் அடிமைத்தன வீட்டிலுமிருந்து புறப்படச் செய்த உன் கடவுளாகிய ஆண்டவரை மறந்தாலும் மறக்கலாம்.
உபாகமம் 8 : 15 (RCTA)
(அவரை மறவாதே.) அவரன்றோ கொள்ளிவாய்ப் பாம்புகளும் திப்சாஸ் என்னும் நச்சுப் பாம்புகளும் தேள்களும் உள்ள, பயங்கரமான பெரிய நீரில்லாப் பாலைவழியாய் உன்னை நடத்தி அழைத்து வருகையில், மிகக் கடினமான கல் மலையிலிருந்து நீரருவிகள் புறப்படச் செய்து,
உபாகமம் 8 : 16 (RCTA)
உன் முன்னோர்கள் அறிந்திராத மன்னாவைக் கொண்டு உன்னை உண்பித்து, உன்னைத் தாழ்த்திப் பரிசோதித்த பின்பு, இறுதியில் உன்மீது இரக்கமுள்ளவராய் இருந்தார்?
உபாகமம் 8 : 17 (RCTA)
( அவர் இப்படியெல்லாம் செய்ததன் உட்கருத்து ஏதென்றால்: ) என் திறமையினாலேயும், என் புய வலிமையினாலேயும் நான் அந்தச் செல்வமெல்லாம் சம்பாதித்தேன் என்று உன் இதயத்திலே நீ சொல்லாமல்,
உபாகமம் 8 : 18 (RCTA)
உன் கடவுளாகிய ஆண்டவரை நினைத்து, அவரே செல்வத்தைச் சம்பாதிப்பதற்கான ஆற்றலை உனக்குக் கொடுத்திருக்கிறாரென்று நீ அறியும்படியாகவேயாம். அவர் உன் முன்னோருக்கு ஆணையிட்டுக் கொடுத்த தம்முடைய உடன்படிக்கையை நிறைவேற்ற வேண்டுமென்று, அப்படிச் செய்தார். இந்நாளிலே (நடக்கிறது) அதற்குச் சான்று பகரும்.
உபாகமம் 8 : 19 (RCTA)
ஆனால், நீ உன் கடவுளாகிய ஆண்டவரை மறந்தவனாய், பிற கடவுளரைப் பின்பற்றி அவர்களை வணங்கித்தொழுது வருவாயாயின், நீ முற்றிலும் அழிந்து போவாயென்று இக்கணமே உனக்கு அறிவிக்கிறேன்.
உபாகமம் 8 : 20 (RCTA)
உங்கள் கடவுளாகிய ஆண்டவருடைய குரலுக்கு நீங்கள் கீழ்ப்படியாமல் போனால், உங்களுக்கு முன்பாக ஆண்டவர் அழித்த மக்களை போல் நீங்களும் அழிந்து போவீர்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20