உபாகமம் 7 : 1 (RCTA)
மேலும், நீ உரிமையாக்கிக் கொள்ளவிருக்கும் நாட்டிலே உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னைப் புகச்செய்து உன்னைக் காட்டிலும் மிகப் பெரிய, வலிமைமிக்க இனத்தாராகிய ஏத்தையார் ஜெற்கேசையர், அமோறையர், கானானையர், பெரேசையர், ஏவையர், ஜெபுசையர் என்னப்பட்ட ஏழு இனங்களையும் உனக்கு முன்பாக அழித்து,
உபாகமம் 7 : 2 (RCTA)
உன் கடவுளாகிய ஆண்டவர் அவர்களை உன் கைவயப்படுத்திய பின்பு நீ அவர்களை முறியடித்து அடியோடு அழிக்கக்கடவாய். அவர்களோடு நீ உடன்படிக்கை செய்துகொள்ளவும் வேண்டாம்; அவர்களுக்கு இரங்கவும் வேண்டாம்.
உபாகமம் 7 : 3 (RCTA)
நீ அவர்களோடு மணவுறவு கொள்ளாதே. உன் புதல்வியை அவன் புதல்வனுக்குக் கொடுக்காமலும், உன் புதல்வனுக்கு அவன் புதல்வியைக் கொள்ளாமலும் இருப்பாயாக.
உபாகமம் 7 : 4 (RCTA)
ஏனென்றால், நீ நம்மைப் பின்பற்றாமல் பிற கடவுளருக்குப் பணி செய்யும்படி அந்தப் பெண்கள் உன் புதல்வர்களைத் தீய போதனையால் கெடுத்து விடுவார்கள். அதனாலே ஆண்டவர் கோபம் கொண்டு விரைவில் உன்னை அழித்துவிடுவார்.
உபாகமம் 7 : 5 (RCTA)
ஆதலால், நீங்கள் அவர்களுக்குச் செய்ய வேண்டியது என்னவென்றால்: அவர்களுடைய பலிபீடங்களையும் இடித்து, அவர்களுடைய சிலைகளையும் உடைத்து, அவர்களுடைய சோலைகளையும் வெட்டி, கொத்து வேலையாகிய அவர்களுடைய விக்கிரகங்களையும் சுட்டெரிக்கக் கடவீர்கள்.
உபாகமம் 7 : 6 (RCTA)
உள்ளபடி நீ உன் கடவுளாகிய ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட குடியாய் இருக்கிறாய். மண்ணிலுள்ள எல்லா மக்களிலும் உன்னைக் கடவுளாகிய ஆண்டவர் தம் சொந்த மக்களாகத் தேர்ந்துகொண்டார்.
உபாகமம் 7 : 7 (RCTA)
மக்கள் அனைவரிலும் நீங்கள் திரளான மக்கள் என்பதற்காக ஆண்டவர் உங்களோடு சேர்ந்துகொண்டு உங்களைத் தேர்ந்துகொள்ளவில்லை. உள்ளபடி நீங்கள் மற்றுமுள்ள எல்லா மக்களிலும் கொஞ்சமாகவே இருக்கிறீர்கள்.
உபாகமம் 7 : 8 (RCTA)
அவர் உங்கள்மேல் அன்புகூர்ந்து, உங்கள் மூதாதையர்களுக்குத் தாம் இட்ட ஆணையைக் காக்க வேண்டுமென்பதை முன்னிட்டு தமது வலுத்த கையால் உங்களைப் புறப்படச் செய்து, அடிமைத்தன வீட்டினின்றும் எகிப்து மன்னனான பரவோனுடைய கையினின்றும் உன்னை மீட்டுக் கொண்டார்.
உபாகமம் 7 : 9 (RCTA)
ஆதலால், உன் கடவுளாகிய ஆண்டவர் வலிமையும் உண்மையும் பொருந்திய கடவுளென்றும், அவர் தமக்கு அன்பு செய்து தம்முடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர்களுக்கு ஆயிரம் தலைமுறைகள்வரையிலும் தமது உடன்படிக்கையையும் இரக்கத்தையும் காக்கிறவரென்றும்,
உபாகமம் 7 : 10 (RCTA)
தம்மைப் பகைக்கிறவர்கள்மேல் அவர் உடனே பழிவாங்கி, அவர்களுடைய தகுதிக்கு ஏற்றபடி அவர்களுக்குச் சரியான தண்டனை வழங்கச் சற்றும் தாமதியாமல் அந்நேரமே அவர்களை அழிக்கிற கடவுளென்றும் அறியக்கடவாய் ஆகையால்,
உபாகமம் 7 : 11 (RCTA)
நீ அனுசரிக்கும் பொருட்டு இன்று நான் உனக்குக் கருத்தாய்க் கற்பிக்கின்ற சட்ட ஒழுங்குகளையும் சடங்கு ஆசாரங்களையும் நீதி முறைமைகளையும் கைக்கொண்டு ஒழுகக்கடவாய்.
உபாகமம் 7 : 12 (RCTA)
இந்த நீதி நியாயங்களை நீ கேட்டு அவற்றைக் கைக்கொண்டு அனுசரிப்பாயாயின், உன் கடவுளாகிய ஆண்டவர் உன் மூதாதையர்க்கு ஆணையிட்டுக் கொடுத்த உடன்படிக்கையையும் காப்பார்; தமது இரக்கத்தையும் உன்மேல் வைப்பார்.
உபாகமம் 7 : 13 (RCTA)
அவர் உன்னை நேசித்து, உனக்கு அளிக்கப்படுமென்று உன் மூதாதையர்க்கு ஆணையிட்டுக் கொடுத்த நாட்டிலே உன்னைப் பெருகச்செய்து, உன் பிள்ளைகளையும் உன் நிலத்தின் கனியாகிய தானியங்களையும் கொடி முந்திரிப் பழச் சாற்றையும் எண்ணெயையும் ஆட்டு மந்தைகளையும் ஆசீர்வதிப்பார்.
உபாகமம் 7 : 14 (RCTA)
மற்றுமுள்ள மக்கள் அனைவரையும்விட நீ ஆசீர் பெற்றவனாய் இருப்பாய். உங்களுக்குள்ளேயும் உங்கள் மிருகவுயிர்களுக்குள்ளேயும், ஆணிலேனும் பெண்ணிலேனும் மலடு இராது.
உபாகமம் 7 : 15 (RCTA)
ஆண்டவர், நோயெல்லாம் உன்னை விட்டு நீங்கச்செய்வார். உனக்குத் தெரிந்துள்ள எகிப்தியரின் கொடிய நோய்கள் உன் பகைவருக்கு வருமேயன்றி உனக்கு வரா.
உபாகமம் 7 : 16 (RCTA)
உன் கடவுளாகிய ஆண்டவர் உன் கைவயப்படுத்த இருக்கும் எல்லா மக்களையும் அழிக்கக்கடவாய். உன் கண் அவர்களுக்கு இரங்காதிருப்பதாக, அவர்கள் வணங்கும் கடவுளரை நீ வணங்காதே, வணங்கினால் கெட்டுப்பொவாய்.
உபாகமம் 7 : 17 (RCTA)
நீ: அந்த இனத்தவர் என்னைக் காட்டிலும் பலமுள்ளவராய் இருக்கிறார்களே; அவர்களை அழிக்க என்னால் எப்படி முடியும் என்று மனத்தில் சொல்லிக்கொண்டாயாயின்
உபாகமம் 7 : 18 (RCTA)
உன் ஆண்டவர் பரவோனுக்கும் எகிப்தியர் அனைவருக்கும் செய்ததையும்,
உபாகமம் 7 : 19 (RCTA)
உன் கண்களே கண்ட கொடிய வாதைகளையும், உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னைப் புறப்படச் செய்யக் காண்பித்த அடையாளங்களையும் அற்புதங்களையும், அவரது வலுத்த கையையும் ஓங்கிய புயத்தையும் நினைத்துக்கொள். நீ பார்த்துப் பயப்படுகிற எல்லா மக்களுக்கும் அவர் அவ்வண்ணமே செய்வார்; பயப்படாதே.
உபாகமம் 7 : 20 (RCTA)
மேலும், அவர்களில் யார் யார் உனக்குத் தப்பி ஒளிந்து கொண்டிருப்பார்களோ, அவர்களை உன் கடவுளாகிய ஆண்டவர் வேரோடு அழித்தொழிக்கும் நாள் வரையிலும் அவர் செங்குளவிகளை அனுப்பி, அவர்களை வதைத்துத் துன்புறுத்துவார்.
உபாகமம் 7 : 21 (RCTA)
அவர்களுக்கு அஞ்ச வேண்டாம். ஏனென்றால், உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவிலே இருக்கிறார். அவரோ மகத்துவமும் பயங்கரமுமுள்ள கடவுள்.
உபாகமம் 7 : 22 (RCTA)
அவரே உன் முன்னிலையில் அந்த மக்கள் மெதுவாகவும் கொஞ்சம் கொஞ்சமாகவும் அழிந்துபோகச் செய்வார். உள்ளபடி அந்த இனத்தவரை ஒருமிக்க அழிப்பதாயிருந்தால் காட்டு மிருகங்கள் உன் பக்கம் பெருகிப்போகும்.
உபாகமம் 7 : 23 (RCTA)
உன் கடவுளாகிய ஆண்டவரோ அவர்களை உன் முன்னிலையில் விட்டுவைத்து, அவர்கள் முற்றிலும் அழியும் வரையிலும் அவர்களைச் சாகடித்துக் கொண்டே வருவார்.
உபாகமம் 7 : 24 (RCTA)
அவர்களுடைய அரசர்களையும் உன் கைவயப்படுத்துவார். நீ அவர்களுடைய பெயர் முதலாய் வானத்தின் கீழ் இராதபடிக்கு, அவர்களை அழிக்கக்கடவாய். நீ அவர்களை அழித்துத் தீரும் வரையிலும் ஒருவரும் உன்னை எதிர்த்து நிற்க மாட்டார்கள்.
உபாகமம் 7 : 25 (RCTA)
அவர்களுடைய சித்திரவேலைப்பாடுள்ள விக்கிரகங்களை நெருப்பால் சுட்டெரிக்கக்கடவாய். அவைகள் உன் கடவுளாகிய ஆண்டவருக்கு அருவருப்பானவைகளாகையால், நீ படுகுழியில் விழாதபடிக்கு, அவைகளில் இருக்கிற வெள்ளியையும் பொன்னையும் விரும்பாமலும், அவற்றில் கொஞ்சமேனும் எடுத்துக்கொள்ளாமலும் இருப்பாயாக.
உபாகமம் 7 : 26 (RCTA)
அந்த விக்கிரகங்களைப் போல் நீ சாபத்துக்கு உள்ளாகாதபடிக்கு, அவைகளில் யாதொன்றையும் உன் வீட்டிற்குக் கொண்டு போகத் துணியாதே. அது சாபத்துக்கேற்ற பொருளாதலால், நீ விக்கிரகத்தை அசுத்தமென்றும், தீட்டுள்ள அழுகலென்றும் வெறுத்து, அருவருத்துப் புக்கணிக்கக்கடவாய்.
❮
❯