உபாகமம் 6 : 1 (RCTA)
நான் உங்களுக்குப் படிப்பிக்க வேண்டுமென்றும், நீங்கள் உரிமையாக்கிக் கொள்ளவிருக்கும் நாட்டிலே கடைப்பிடிக்க வேண்டுமென்றும், ஆண்டவர் கற்பித்தருளிய கட்டளைகளையும் சமயச் சடங்குகளையும் நீதிமுறைமைகளையும் இதோ (தெரிவிக்கப்போகிறேன்).
உபாகமம் 6 : 2 (RCTA)
(ஆண்டவருடைய திருவுளம் என்னவெனில்: ) உன் வாழ்நாள் நீடிக்கும் பொருட்டு, நான் உனக்கும் உன் புதல்வர்களுக்கும் பேரர்களுக்கும் விதிக்கிற கடவுளின் கட்டளை சட்டங்களையேல்லாம் நீ கைக்கொண்டு, உன் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி உயிருள்ளவரை நிறைவேற்றவேண்டும் என்பதேயாம்.
உபாகமம் 6 : 3 (RCTA)
இஸ்ராயேலே, செவிகொடு. உன் தந்தையரின் கடவுளாகிய ஆண்டவர் பாலும் தேனும் பொழியும் நாட்டை உனக்கு அளிப்பதாக வாக்குறுதி கொடுத்ததினால், நீ ஆண்டவர் கட்டளையிட்டபடி நடக்கக் கவனமாயிருப்பாயானால் நன்மையையும் பெறுவாய்; அதனோடு மேன்மேலும் பெருகுவாய்.
உபாகமம் 6 : 4 (RCTA)
இஸ்ராயேலே, உற்றுக்கேள். நம் கடவுளாகிய ஆண்டவர் ஒருவரே ஆண்டவர்.
உபாகமம் 6 : 5 (RCTA)
உன் முழு இதயத்தோடும் உன் முழு ஆன்மாவோடும் உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவருக்கு அன்பு செய்வாயாக.
உபாகமம் 6 : 6 (RCTA)
இன்று நான் உனக்குக் கற்பிக்கிற இந்த வார்த்தைகள் உன் இதயத்திலே பதியக்கடவன.
உபாகமம் 6 : 7 (RCTA)
நீ அவைகளை உன் புதல்வர்களுக்கு விவரித்துச் சொல்லவும், நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கும்போதும் வழியில் நடந்து போகும்போதும் தூங்கும்வேளையிலும் விழித்தெழுந்திருக்கையிலும் அவைகளைத் தியானிக்கவும் கடவாய்.
உபாகமம் 6 : 8 (RCTA)
அவற்றை உன்கையிலே அடையாளம்போல் கட்டுவாய். அவைகளை உன் கண்களுக்கு நடுவே தொங்கியாடும்படி வைக்கவும்,
உபாகமம் 6 : 9 (RCTA)
உன் வீட்டின் வாயிற்படியிலும் கதவின் நிலைகளிலும் அவைகளை எழுதவும் கடவாய்.
உபாகமம் 6 : 10 (RCTA)
பின்னும், உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுப்போம் என்று ஆபிரகாம், ஈசாக், யாக்கோபு என்பவர்களாகிய உன் மூதாதையருக்கு ஆணையிட்டுக் கொடுத்த நாட்டில் உன்னைப் புகச் செய்யும் போதும், நீ ஏற்படுத்தாத வசதியான பெரிய நகரங்களையும்,
உபாகமம் 6 : 11 (RCTA)
நீ கட்டாத, எல்லாச் செல்வங்களாலும் நிறைந்த வீடுகளையும், நீ வெட்டாத கிணறுகளையும், நீ நடாத கொடிமுந்திரித் தோட்டங்களையும், ஒலிவத் தோப்புகளையும் அவர் உனக்குக் கொடுக்கும் போதும்,
உபாகமம் 6 : 12 (RCTA)
நீ உண்டு நிறைவு கொண்ட பின்னர்,
உபாகமம் 6 : 13 (RCTA)
உன்னை எகிப்து நாட்டினின்றும் அடிமை வாழ்வினின்றும் புறப்படச் செய்த ஆண்டவரை மறவாத படிக்கு மிகவும் எச்சரிக்கையாய் இருப்பாயாக. நீ உன் கடவுளாகிய ஆண்டவரை மறவாதபடிக்கு மிகவும் எச்சரிக்கையாய் இருப்பாயாக. நீ உன் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி, அவரொருவருக்கே பணிந்து, அவருடைய பெயரைக் கொண்டு ஆணையிடுவாயாக.
உபாகமம் 6 : 14 (RCTA)
உங்களுக்கு நாற்புறத்திலுமிருக்கிற பிற மக்களின் கடவுளரைப் பின்பற்றாதிருப்பீர்களாக.
உபாகமம் 6 : 15 (RCTA)
பின்பற்றினால், உன் நடுவிலிருக்கிற கடவுளாகிய ஆண்டவர் பொறாமையுள்ள கடவுளாகையால், ஒருவேளை உன் கடவுளாகிய ஆண்டவருடைய கோபம் உன்மேல் பொங்கி, உன்னைப் பூமியின் முகத்திலிருந்து அழித்து விட்டாலும் விடலாம்.
உபாகமம் 6 : 16 (RCTA)
சோதனை என்னப்பட்ட இடத்திலே நீ சோதித்தது போல உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதனை செய்யாதிருப்பாயாக.
உபாகமம் 6 : 17 (RCTA)
உன் கடவுளாகிய ஆண்டவருடைய கட்டளைகளையும், அவர் உனக்கு கற்பித்த நீதிச் சட்டங்களையும், சடங்கு முறைகளையும் அனுசரிக்கக் கடவாயாக.
உபாகமம் 6 : 18 (RCTA)
நீ ஆண்டவருடைய பார்வைக்கு நலமும் இதமுமாயிருக்கின்றதையே செய்வாயானால் உனக்கு நன்மை உண்டாகும். ஆண்டவர் உன் முன்னோருக்கு ஆணையிட்டுக் கொடுத்த சிறந்த நாட்டிலே நீ புகுந்து அதை உரிமையாக்கிக் கொள்வதுமன்றி,
உபாகமம் 6 : 19 (RCTA)
அவர் திருவுளம்பற்றினபடி உன் பகைவரையெல்லாம் அவரே உன் முன்னிலையில் அழித்தொழிப்பார்.
உபாகமம் 6 : 20 (RCTA)
நாளைக்கு உன் புதல்வன் உன்னை நோக்கி: நம் கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கற்பித்த இந்தச் சடங்குகளுக்கும் ஆசாரங்களுக்கும் நீதிமுறைகளுக்கும் உட்கருத்து என்ன என்று கேட்கும்போது, நீ அவனை நோக்கி:
உபாகமம் 6 : 21 (RCTA)
நாங்கள் எகிப்திலே பரவோனுக்கு அடிமைகளாய் இருந்தோம். ஆண்டவரோ எகிப்திலிருந்து எங்களைத் தமது வலிய கையினாலே புறப்படச் செய்தார் என்றும்:
உபாகமம் 6 : 22 (RCTA)
எகிப்து நாட்டிலே அவர் எங்கள் கண்களுக்கு முன்பாகப் பரவோன்மேலும் அவனுடைய எல்லா வீட்டார்மேலும் அடையாளங்களையும் செய்தார் என்றும்:
உபாகமம் 6 : 23 (RCTA)
நம் முன்னோருக்கு அவர் ஆணையிட்டுக் கொடுத்த நாட்டிற்கு எங்களை அழைத்துக் கொண்டு போய், அதை நமக்குக்கொடுக்கும்படியாகவே எங்களை அவ்விடத்திலிருந்து புறப்படச் செய்தார் என்றும்:
உபாகமம் 6 : 24 (RCTA)
ஆகையால் நமக்கு இந்நாளில் இருக்கிறது போல் நமது வாழ்நாளெல்லாம் நன்றாகும் பொருட்டு இவ்வெல்லாக் கட்டளைச் சட்டங்களையும் அனுசரித்து, நம் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி நடக்கவேண்டுமென்று ஆண்டவர் நமக்குக் கட்டளையிட்டார் என்றும்:
உபாகமம் 6 : 25 (RCTA)
கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கட்டளையிட்டபடி நாம் அவர் முன்னிலையில் இந்தக் கட்டளைகளையெல்லாம் காத்துக் கடைப்பிடித்து வருவோமாயின், அவர் நமது பேரில் தயவாய் இருப்பார் என்றும் சொல்லுவாய் என்றார்.
❮
❯