உபாகமம் 25 : 1 (RCTA)
சிலருக்குள் வழக்கு உண்டாகி அவர்கள் நடுவர்களிடம் வழக்குக் கொண்டு வந்தால், நடுவர்கள் எவனை நீதிமானென்று கண்டு பிடித்தார்களோ அவன் பக்கமாய்த் தீர்ப்புச் சொல்லவும், எவனைத் தீயவனென்று கண்டுபிடித்தார்களோ அவனைக் குற்றவாளியென்று தண்டிக்கவும் கடவார்கள்.
உபாகமம் 25 : 2 (RCTA)
குற்றவாளி அடிபட வேண்டுமென்று தீர்ப்பளிப்பார்களாயின் நடுவர்கள் அவனை முகம் குப்புறப்படுக்கவைத்துத் தங்கள் முன்பாகவே அடிக்கச் செய்வார்கள். குற்றம் எவ்வளவு பெரியதோ அவ்வளவுக்கு அடிக்கச் செய்வார்கள்.
உபாகமம் 25 : 3 (RCTA)
ஆயினும், உன் சகோதரன் உன் கண்களுக்கு முன் கொடுமையாய்க் காயப்பட்டுப்போகாதபடிக்கு நாற்பது அடிக்கு மேல் அவனை அடிக்கக்கூடாதென்று அறிந்துகொள்.
உபாகமம் 25 : 4 (RCTA)
களத்தில் போரடிக்கிற மாட்டுக்கு வாயைக் கட்டலாகாது.
உபாகமம் 25 : 5 (RCTA)
இரண்டு சகோதரர் ஒன்றாய்க் குடியிருக்கையில், இருவரில் ஒருவன் மகப்பேறு இல்லாமல் இறந்தால், இறந்தவனுடைய மனைவிவேறொருவனை மணந்து கொள்ள வேண்டாம். கணவனுடைய சகோதரன் அவளைத் தனக்கு மனைவியாகக் கொண்டு, தன் சகோதரனுக்கு மகப்பேறு பிறப்பித்து,
உபாகமம் 25 : 6 (RCTA)
இறந்தவனுடைய பெயர் இஸ்ராயேலில் மறைந்து போகாதபடிக்கு அவன் பெயரையே அவள் பெறும் தலைபிள்ளைக்குச் சூட்டக்கடவான்.
உபாகமம் 25 : 7 (RCTA)
ஆனால், தன் சகோதரனுடைய மனைவி சட்டப்படி தனக்கே மனைவியாக வேண்டுமென்றிருந்தும், ஒரு வேளை அவன் அவளை மணந்து கொள்ளமனமில்லாதிருந்தால், அந்த விதவை நகரவாயிலில் கூடிய பெரியோர்களிடம் போய்: என் கணவனுடைய சகோதரன் தன் சகோதரனுடைய பெயர் இஸ்ராயேலில் நிலைக்கும்படி என்னை மனைவியாக வைத்துக் கொள்ள மனமில்லாதிருக்கிறான் என்று முறையிடுவாள்.
உபாகமம் 25 : 8 (RCTA)
அப்போது அவர்கள் உடனே அவனை வரவழைத்து: ஏன் என்று கேட்கையில், அவன்: அவளை மணந்து கொள்ள எனக்கு விருப்பமில்லை என்று மறுமொழி சொன்னால்,
உபாகமம் 25 : 9 (RCTA)
அப்பெண் பெரியோர்கள் முன்பாக அவனருகில் வந்து, அவன் காலிலிருக்கிற செருப்பைக் கழற்றி, அவன் முகத்திலே உமிழ்ந்து: தன் சகோதரனின் வீட்டைக் கட்டாதவனுக்கு இப்படியே செய்யப்பட வேண்டும் என்று சொல்லக்கடவாள்.
உபாகமம் 25 : 10 (RCTA)
மேலும், இஸ்ராயேலில் அப்படிப்பட்டவனுடைய வீடு: செருப்பு கழற்றப்பட்டவனுடைய வீடு என்று அழைக்கப்படும்.
உபாகமம் 25 : 11 (RCTA)
இரு ஆடவர் ஒருவரோடொருவர் வாயாடி, சண்டை போட ஆரம்பித்திருக்கையில், ஒருவனுடைய மனைவி தன் கணவனை அடிக்கிறவன் கைக்கு அவனைத் தப்புவிக்கும்படி வந்து, கையை நீட்டி அடிக்கிறவனுடைய மானத்தைப் பிடிக்கத் துணிவாளாயின்,
உபாகமம் 25 : 12 (RCTA)
நீ அவள்மேல் அணுவளவேனும் இரங்காமல் அவளுடைய கையைத் துண்டிக்கக்கடவாய்.
உபாகமம் 25 : 13 (RCTA)
உன் பையில் பெரிதும் சிறிதுமான பல எடைக் கற்களையும்,
உபாகமம் 25 : 14 (RCTA)
உன் வீட்டில் பெரிதும் சிறிதுமான மரக்கால்களையும் வைத்திருக்க வேண்டாம்.
உபாகமம் 25 : 15 (RCTA)
உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு அளிக்க விருக்கும் நாட்டில் நீ நெடுங்காலம் வாழும் பொருட்டு, உண்மையும் நேர்மையுமான எடைக் கல்லும் மரக்காலும் உன்னிடம் இருக்கவேண்டும்.
உபாகமம் 25 : 16 (RCTA)
ஏனென்றால், இவ்வாறு செய்பவனைக் கடவுளாகிய ஆண்டவர் வெறுக்கிறார். அக்கிரமமானதை அவர் வெறுக்கிறார்.
உபாகமம் 25 : 17 (RCTA)
நீ எகிப்திலிருந்து புறப்பட்டு வந்த வழியிலே அமலேக் உனக்குச் செய்ததை நினைத்துக்கொள்.
உபாகமம் 25 : 18 (RCTA)
அவன் உனக்கு எதிராய்ப் படையெடுத்து, நீ களைத்து விடாய்த்திருக்கையிலே அவன் உன் பாளையத்தின் படை வீரர்கள் பலவீனப்பட்டு நின்று கொண்டு இருந்ததைக் கண்டு, கடவுளுக்கு அஞ்சாமல் அவன் அவர்களை வெட்டி வீழ்த்தினான்.
உபாகமம் 25 : 19 (RCTA)
ஆகையால், உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னை இளைப்பாறச் செய்து, நீ உரிமையாக்கிக் கொள்ளுமாறு அவர் உனக்குக் கொடுக்கப்போகிற நாட்டின் சுற்றுப் புறத்தாராகிய இனத்தாரையெல்லாம் உனக்குக் கீழ்ப்படுத்தியபின், நீ அமலேக்கின் பெயரை மண்ணில் இராதபடிக்கு அழிக்கக்கடவாய். இதை மறவாதே, எச்சரிக்கை!
❮
❯