உபாகமம் 20 : 1 (RCTA)
உன் பகைவர்களுக்கு எதிராக நீ போருக்குப் போகும்போது, அவர்களுடைய குதிரைகளையும் தேர்களையும் உன்னிலும் பெரிய கூட்டமாகிய போர்வீரர்களையும் கண்டாலும் அவர்களுக்கு அஞ்சாதே. ஏனென்றால், உன்னை எகிப்து நாட்டினின்று புறப்படச் செய்த உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னோடு இருக்கிறார்.
உபாகமம் 20 : 2 (RCTA)
மேலும், போர் தொடங்கு முன் குரு படை முகத்தில் வந்து நின்று மக்களை நோக்கி:
உபாகமம் 20 : 3 (RCTA)
இஸ்ராயேலரே, கேளுங்கள். இன்று உங்கள் பகைவர்களுடன் போர் செய்ய இருக்கிறீர்கள். உங்கள் இதயம் சோரவும் வேண்டாம்; அவர்களைப் பார்த்து நீங்கள் அஞ்சவும் முதுகு காட்டவும் மனம் கலங்கவும் வேண்டாம்.
உபாகமம் 20 : 4 (RCTA)
ஏனென்றால், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கள் நடுவில் இருக்கிறார். அவரே உங்களை ஆபத்திலிருந்து காப்பாற்றும்படி உங்களோடு நின்று உங்கள் பக்கத்தில் போராடுவார் என்பார்.
உபாகமம் 20 : 5 (RCTA)
அன்றியும் படைத்தலைவர்கள் தத்தம் படை முகத்திலே நின்று உரத்த குரலில் போர்வீரர்களை நோக்கி: புது வீட்டைக் கட்டி அதை நேர்ச்சி செய்யாதவன் தன் வீட்டிற்குத் திரும்பிப் போகக்கடவான். ஏனென்றால், அவன் போர்க்களத்திலே விழுந்து இறந்தால் வேறொருவன் அவன் வீட்டை நேர்ச்சி செய்ய வேண்டியதாகும்.
உபாகமம் 20 : 6 (RCTA)
கொடிமுந்திரித் தோட்டத்தை நட்டு அதன் பழங்களை யாரும் உண்ணத்தக்கதாகத் தான் செய்யவேண்டியதை இன்னும் செய்யாதவன் ஒருவேளை போர்க்களத்திலே இறந்தால் வேறொருவன் அவனுக்குப் பதிலாக அந்த வேலையைச் செய்யவேண்டியதாகும். (அதனால் மேற்சொல்லிய தோட்டத்திற்கு உரியவன்) தன் வீட்டிற்குத் திரும்பிப் போகக்கடவன்.
உபாகமம் 20 : 7 (RCTA)
ஒரு பெண்ணுக்குப் பரிசம் கொடுத்து இன்னும் அவளை மணந்து கொள்ளாதவன் போரில் இறந்தால் வேறொருவன் அவளை மணந்துகொள்ள வேண்டியதாகும்; (அதனால்) அவன் தன் வீட்டிற்குத் திரும்பிப் போகக்கடவான் என்றும்,
உபாகமம் 20 : 8 (RCTA)
இவைகளைச் சொல்லிய பிற்பாடு படைத்தலைவர்கள் மீண்டும் அவர்களை நோக்கி: உங்களுள் பயந்தவனும் திடமற்றவனுமாய் இருக்கிறவன் தன் சகோதரர்களுடைய மனவூக்கம் சோர்ந்து போவதற்கு ஒருவேளை காரணமாய் இருக்கலாம். (அதனால்) அவனும் வீட்டிற்குத் திரும்பிப் போகக்கடவான் என்றும் சொல்லக்கடவார்கள்.
உபாகமம் 20 : 9 (RCTA)
படைத்தலைவர்கள் மக்களோடு பேசி முடிந்த பிற்பாடு தத்தம் படைவீரர்களைப் போருக்கு ஆயத்தப்படுத்துவார்கள்.
உபாகமம் 20 : 10 (RCTA)
நீ ஒரு நகரத்தின்மீது போர் தொடுக்க நெருங்கும்போது முதல் அந்த நகரத்தாருக்கு (ஆளனுப்பிச்) சமாதானம் கூற வேண்டும்.
உபாகமம் 20 : 11 (RCTA)
அவர்கள் உடன்பட்டுத் தங்கள் வாயிலைத் திறந்தார்களாயின், அதிலுள்ள மக்ககௌல்லாரும் அடைக்கலம் பெறுவார்கள். ஆயினும், அவர்கள் உனக்குத் திறை கொடுப்பவர்களாகி உனக்கு ஊழியம் செய்யக்கடவார்கள்.
உபாகமம் 20 : 12 (RCTA)
அவர்கள் உன்னோடு சமாதானம் செய்துகொள்ள இசையாமல் உன்னோடு போர் புரியத் தொடங்கினால், நீ அந்நகரை முற்றுகையிட்டு,
உபாகமம் 20 : 13 (RCTA)
உன் கடவுளாகிய ஆண்டவர் அதை உன் கைவயமாக்கிய பின்பு அதிலுள்ள ஆடவர் எல்லாரையும் கருக்குவாளினால் வெட்டி,
உபாகமம் 20 : 14 (RCTA)
பெண்களையும் குழந்தைகளையும் மிருகவுயிர்களையும் மட்டும் உயிரோடு வைத்து, நகரத்திலுள்ள எல்லாவற்றையும் கொள்ளையிட்டு, அவற்றை உன் போர்வீரருக்குள்ளே பங்கிட்டு, உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுத்த பகைவருடைய சொத்துகளை அனுபவிப்பாய்.
உபாகமம் 20 : 15 (RCTA)
நீ உரிமையாக்கிக் கொள்ளவேண்டிய நகரங்கள் தவிர உனக்கு வெகு தூரத்திலிருக்கிற எல்லா நகரங்களுக்கும் இவ்விதமே செய்வாய்.
உபாகமம் 20 : 16 (RCTA)
உனக்கு உரிமையாகக் கொடுக்கப்படும் நகரங்களிலோ ஒருவரையும் உயிரோடு விட்டு வைக்காமல்,
உபாகமம் 20 : 17 (RCTA)
உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கற்பித்தபடியே, ஏத்தையர், அமோறையர் கானானையர், பெறேசையர், ஏவையர், ஜெபுசேயர் என்பவர்களையும் கருக்குவாளினால் வெட்டக்கடவாய்.
உபாகமம் 20 : 18 (RCTA)
(இப்படிச் செய்யவேண்டிய காரணம் என்னவென்றால்) அவர்களை உயிரோடிருக்க விட்டால், அவர்கள் தங்கள் தேவர்களுக்குச் செய்து வந்த பற்பலவித வெறுப்புக்குள்ளான செயல்களை உங்களுக்குக் கற்றுக்கொடுப்பார்கள்; அதனாலே நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு விரோதமாய்க் குற்றவாளிகளாவீர்கள்.
உபாகமம் 20 : 19 (RCTA)
நீ ஒரு நகரத்தை நெடுநாளாய் முற்றுகையிட்டு, அதைப் பிடிக்கும் பொருட்டுச் சுற்றிலும் கொத்தளங்களைக் கட்டியெழுப்ப வேண்டும்போது, நீ கோடரியை ஓங்கிப் பழமரங்களை வெட்டவும் வேண்டாம்; சுற்றுப்புறத்திலுள்ள பலவகை மரங்களை அழிக்கவும் வேண்டாம். அது மரமேயொழிய வேறன்று. அது உன் பகைவரோடு சேர்ந்துகொண்டு உன்மீது போருக்கு வராதன்றோ ?
உபாகமம் 20 : 20 (RCTA)
ஆனால், உண்ணத்தக்க கனிதராத காட்டு மரங்களோ, அவை பற்பல விதமாகப் பயன்படக் கூடுமென்று காண்பாயேல், அவற்றை வெட்டிப் போர்க் கருவிகளைச் செய்து, உனக்கு அடங்காமல் எதிராக நிற்கும் அந்த நகரம் பிடிபடுமட்டும் அந்த போர்க் கருவிகளைப் பயன்படுத்துவாய்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20

BG:

Opacity:

Color:


Size:


Font: