உபாகமம் 17 : 1 (RCTA)
உருச்சிதைவும் யாதொரு பழுதுமுள்ள ஆட்டையேனும் மாட்டையேனும் உன் கடவுளாகிய ஆண்டவருக்குப் பலியிடலாகாது. அது உன் கடவுளாகிய ஆண்டவருக்கு வெறுப்பைத் தரும்.
உபாகமம் 17 : 2 (RCTA)
உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கவிருக்கும் நகரங்களின் வாயில்களுள் யாதொன்றில், ஓர் ஆடவனேனும் பெண்ணேனும் உன் கடவுளாகிய ஆண்டவரின் முன்னிலையில் அக்கிரமம் செய்து அவருடைய உடன்படிக்கையை மீறி,
உபாகமம் 17 : 3 (RCTA)
என் கட்டளைக்கு விரோதமாய்ச் சென்று பிற தேவர்களையேனும், சந்திரன் சூரியன் முதலிய வானசேனைகளையேனும் ஆராதிக்கிறதாகக் கண்டுபிடிக்கப்பட்டால்,
உபாகமம் 17 : 4 (RCTA)
அது உனக்கு அறிவிக்கப்பட்டபோது நீ கவனமாய்க் கேட்டு விசாரிக்கக்கடவாய். பிறகு, அது உண்மையென்றும், அப்படிப்பட்ட அருவருப்பு இஸ்ராயேலில் நடந்தேறியது மெய்யென்றும் நீ கண்டாயானால்,
உபாகமம் 17 : 5 (RCTA)
மிகப்பாதகமான அக்கிரமத்தைக் கட்டிக்கொண்ட அந்த ஆடவனையேனும் பெண்ணையேனும் உன் நகர வாயில்களுக்கு (வெளியே) கூட்டிக்கொண்டு போவாய். அப்படிப்பட்டவர்கள் கல்லால் எறியப்படுவார்கள்.
உபாகமம் 17 : 6 (RCTA)
சாவுக்கு உரியவனானவனுடைய குற்றம் இரண்டு அல்லது மூன்று சாட்சிகளுடைய வாக்குமூலத்தால் தெளிவிக்கப்பட்டபின்னரே, அவன் கொலை செய்யப்படக்கடவான். ஒரே சாட்சியுடைய வாக்கினாலே எவனும் கொலை செய்யப்படலாகாது.
உபாகமம் 17 : 7 (RCTA)
அவனை கொலை செய்யும்போது சாட்சிகளுடைய கை முன்னும், மற்றுமுள்ள மக்களுடைய கைபின்னும், அவன்மேல் இருக்கவேண்டும். இப்படிச் செய்தே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக்கடவாய்.
உபாகமம் 17 : 8 (RCTA)
இரத்தப் பழிகளைக் குறித்தும், வழக்குகளைக் குறித்தும், தொழு நோயைக் குறித்தும் வழக்கு நேரிட்டு, நியாயம் தீர்க்க வேண்டிய கடினமான காரியத்தில் உனக்குச் சந்தேகம் உண்டென்றும், நீதிபதிகளுடைய எண்ணங்கள் ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றனவென்றும் கண்டால், நீ எழுந்து உன் கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்துகொண்டிருக்கும் இடத்திற்குப் போய்,
உபாகமம் 17 : 9 (RCTA)
லேவி சந்ததியாராகிய குருக்களிடமும் அக்காலத்தில் உள்ள நீதிபதிகளிடமும் வந்து அவர்களுடைய ஆலோசனையைக் கேட்கக்கடவாய். அவர்கள் நியாயமான தீர்பை உனக்கு உணர்த்துவார்கள்.
உபாகமம் 17 : 10 (RCTA)
ஆண்டவர் தேர்ந்து தந்திருக்கும் பதவியிலே வீற்றிருக்கும் தலைவர்கள் கடவுளின் சட்டப்படி உனக்குச் சொல்லி உணர்த்தும்வண்ணமே நீ கேட்டு, அந்தப்படியெல்லாம் செய்து,
உபாகமம் 17 : 11 (RCTA)
அவர்களுடைய ஆலோசனைக்கிணங்கி, வலப்புறம் இடப்புறம் சாயாமல் நடக்கக்கடவாய்.
உபாகமம் 17 : 12 (RCTA)
செருக்குற்று உன் கடவுளாகிய ஆண்டவருக்கு அக்காலம் ஊழியம் செய்யும் குருவினுடைய கட்டளைக்கும் தலைவனுடைய தீர்புக்கும் அடங்காமல் மீறுகிறவன் சாகக்கடவான். இப்படித்தீமையை இஸ்ராயேலிலிருந்து விலக்கக்கடவாய்.
உபாகமம் 17 : 13 (RCTA)
அப்பொழுது மக்கள் எல்லாரும் கேள்வியுற்றுப் பயப்டுவதால், இனி இடும்பு செய்ய ஒருவனும் துணியமாட்டான்.
உபாகமம் 17 : 14 (RCTA)
உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கும் நாட்டில் நீ புகுந்து அதை உரிமையாக்கிக் கொண்டு அதில் குடியேறின பின்பு, நீ: உன்னைச் சுற்றிலும் இருக்கிற எல்லா இனத்தாரையும்போல நானும் எனக்கு ஓர் அரசனை ஏற்படுத்த வேண்டும் என்று தீர்மானிப்பாயாகில்,
உபாகமம் 17 : 15 (RCTA)
உன் கடவுளாகிய ஆண்டவர் உன் சகோதரரிலிருந்து தேர்ந்தெடுப்பவனை நியமிக்கக்கடவாய். உன் சகோதரருக்குள் ஒருவனை நீ அரசனாக வைக்கலாமேயொழிய அந்நியனைக் கண்டிப்பாய் வைக்கலாகாது.
உபாகமம் 17 : 16 (RCTA)
அவன் அரியணை ஏறின பின்பு, பல குதிரைகளைச் சம்பாதித்ததனாலும், திரளான குதிரை வீரரைச் சேர்த்ததனாலும் செருக்குற்று, மக்களை எகிப்துக்குத் திருப்பிக் கொண்டுபோகவே கூடாது. ஏனென்றால்: வந்த வழியாய் நீங்கள் ஒருகாலும் திரும்பிப் போகவேண்டாம் என்று ஆண்டவர் உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.
உபாகமம் 17 : 17 (RCTA)
அரசன் தன் மனத்தைக் கவரத் தக்க பல பெண்களைக் கொண்டிருக்கவும் வேண்டாம். வெள்ளியும் பொன்னும் அளவு மீறிச் சேர்க்கவும் வேண்டாம்.
உபாகமம் 17 : 18 (RCTA)
அவன் தன் அரியணையின் மேல் வீற்றிருக்கும்போது உப ஆகமம் என்னும் இந்த நீதி நூலின் ஒரு பிரதியை லேவி கோத்திரத்தாராகிய குருக்களிடமிருந்து பெற்றுக்கொண்டு, தனக்கு ஒரு பிரதி தானே எழுதக்கடவான்.
உபாகமம் 17 : 19 (RCTA)
அந்தப் பிரதியை, அவன் தன்னிடத்தே வைத்துக்கெண்டு, கடவுளாகிய தன் ஆண்டவருக்கு அஞ்சவும், மறையில் கற்பிக்கப்பட்ட அவருடைய நீதி வாக்கியங்களையும் சடங்கு முறைகளையும் அனுசரிக்கவும் வேண்டுமென்று கண்டுணர்ந்து, மேற்படி நூலை நாள்தோறும் வாசிக்கக்கடவான்.
உபாகமம் 17 : 20 (RCTA)
அவன் இறுமாப்படைந்து தன் சகோதரருக்கு மேலாகத்தன்னை உயர்த்திக் கொள்ளாமலும், வலப்புறம் இடப்புறம் சாயாமலும் இருப்பானாயின், இஸ்ராயேலின் நடுவே அவனும் அவன் புதல்வர்களும் நெடுநாள் ஆட்சிபுரிவார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20

BG:

Opacity:

Color:


Size:


Font: